பவித்ரா தேவியும் அவரது அக்காவும் - சிறுகதை
பவித்ரா தேவி கள்ளங்கபடமற்ற குழந்தைகளைப் பார்த்தாள். அது எப்படி..! மனிதனின் வயது ஏற ஏற ஏன் குழந்தைத்தனம் அவனிடம் குறைகிறது அல்லது காணாமலே போய்விடுகிறது என்று வருந்தினாள்.
“மனிதனின் விதியே அப்படித்தானடி” என்று கை கொட்டி கேலி செய்தது ஒரு கர்வமான குரல். திரும்பிப் பார்த்தாள் பவித்ரா தேவி.
சே..., இவள்தானா, இந்த ஆட்கொல்லிதான் இப்படிப் பேசுவாள் - அவள் அபவித்ரா தேவி, அவளது அக்கா. மனிதன் தவறு செய்வதற்கும் செய்த பாவத்தை மறைப்பதற்கும் மூல காரணமே - பாவத்தைத் தூண்டும் சக்தியே இந்த அபவித்ராதான்.
பவித்ரா தேவி - மனிதனின் பக்திக்கும் மனத் தூய்மைக்கும், புண்ணியத்திற்கும் புனிதத்திற்கும் ஆதாரம் இந்த தேவியின் அருளே.
இரண்டு சக்திகளும் சகோதரிகள்! ஸ்ரீதேவி, மூ....தேவி போல; ஐஸ்வர்யம் - அநைஸ்வர்யம்; புனிதம் - மலினம் போல....
“அக்கா, நீ உள்ள இடத்தில் நல்லவர்கள் இருப்பார்களா? நீ இருந்தால் நான் அங்கிருக்க முடியாதே?”
“ம்..., அப்படிப் பணிந்து விலகி ஓடு. நான் சர்வ வல்லமை உடையவள். எவனையும் என் காலடியில் விழச் செய்வேன்” கொக்கரித்தாள் அபவித்ரா.
“நீ மக்களிடம் தூண்டும் பாவமும் அதன் பிரபாவமும் உலகறியும். ஆனால் நல்ல மனம் படைத்தவர்கள் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது, தெரியாதா உனக்கு?”
“அடியே சின்னவளே, தீய மனம், வக்கிர சிந்தனை, மலின நோக்கம் - இவற்றையெல்லாம் மக்களிடம் தூண்டிவிடுவது என் ஆட்சியின் அலங்காரங்கள். அதனால்தான் என் பின்னே இந்த உலகம் நாயாக, பேயாக ஓடி வருகிறது.”
“ஆனால் அக்கா, நல்லவர்கள் பெருமைப்படும்படி உன்னவர்கள் யாராவது உள்ளார்களா? எங்காவது உனக்குப் பூஜை நடக்கிறதா? சொல்.” அக்கா மௌனமானாள்.
“மனித மனங்களை விகாரமாக்குவாய். நல்லவர்களை நாசம் செய்வாய். பொல்லாதவனைப் போற்ற வைப்பாய். இவற்றால்தானே உலகில் இவ்வளவு துன்பங்கள்...!”
“ஆனாலும் எனக்குத்தான் மக்கள் அடிபணிகிறார்கள். எவ்வளவோ நீ பாடுபட்டும் ஓரிருவர்தான் உன் பின்னே நிற்கிறார்கள்.” மீண்டும் அதே அகங்காரக் குரல் அவளிடமிருந்து.
அக்காவை உதாரணத்தால் உத்தாரணம் செய்ய நினைத்தாள் பவித்ரா தேவி.
“அக்கா, மகானான கபீர்தாசரை உனக்குத் தெரியுமில்லையா?”
“ஆமாம், இஸ்லாமியரான அவர் ஒரு ராமபக்தர். இந்து - முஸ்லீம் தகராறை கபீரின் சீடர்கள் மூலம் மூட்ட நானும் முன்பொருமுறை முயற்சித்தேன்” என்றாள் அபவித்ரா அலட்சியமாக.
“முடிந்திருக்காதே உன்னால்! கபீரின் புனிதம், பக்தி, இறைமை எல்லாம் இந்து - முஸ்லீம் வேற்றுமையைக் கடக்க வைத்துவிட்டது. கபீரின் பெருமையை நான் நாடறியச் செய்தேன். ஆனால் அவரது மனைவி ஜிஜ்ஜா பற்றிப் பலருக்கும் தெரியாது”
பவித்ரா தேவி கண்களை மெல்ல மூடிக் கூறினாள்.
“எனக்கே அவளைப் பற்றிச் சரியாகத் தெரியாது.”
“அப்படியா! உன் பார்வை அவள் மீது படாததால் ஜிஜ்ஜா உண்மையிலேயே மிக உத்தமிதான்.”
“அவளை ஏன் உத்தமி என்று கொண்டாடுகிறாய்?” ஒரு நல்லவளைப் பாராட்டுவது அபவித்ராவிற்கு எரிச்சலூட்டியது.
“ஜிஜ்ஜா நல்ல அழகி, பண்புள்ளவள். கபீரைக் கட்டாயப்படுத்தி அவளை மணமுடித்து வைத்துவிட்டனர் அவரது பெற்றோர். ஆனால், தேக ஸ்பரிசத்தைவிட தெய்வ ஸ்பரிசம் அந்தத் தம்பதிக்கு இயல்பாயிருந்தது.”
“அழகியான அவளை என் ஆட்கள் சீண்டியிருப்பார்களே?” அக்கா சிரித்தாள்.
“ஆம். பணக்காரர் ஒருவர் அவளை அடையத் துடித்தார். அந்த அற்புதச் சம்பவம் இப்போது நடந்தது போல் என் நெஞ்சில் நிற்கிறது” என்று கூறி மனக்கண்ணால் அதைப் பார்த்தாள்.
“ஜிஜ்ஜா, உன்னை அடையாமல் விட மாட்டேன்” என்றான் அவன். அவனோ பலசாலி. நாமோ ஏழை. எப்படியும் அவன் என்னை நிம்மதியாய் வாழ விட மாட்டான். ஜிஜ்ஜாவின் மனம் துடித்தது. ‘ராமா, என்னைக் காத்திடு’.
“ஜிஜ்ஜா, கவலைப்படாதே. அந்த சௌகார் ஏதோ உன்னிடம் தவறாகப் பேசிவிட்டான். நான் என் ராமரிடம் வேண்டிக் கொண்டேன், அவன் திருந்த வேண்டும் என்று”. கபீர்தாஸ் கபடமின்றிக் குழந்தை போல் கூறினார்.
ராமர் அருள ஆரம்பித்தார். வந்தார்கள் சாதுக்கள் அந்தக் கிராமத்திற்கு. கபீர் கூத்தாட ஆரம்பித்தார். ஆடல், பாடல், பூஜை, தியானம், ஒரே ராமமயம்.
பிறகு பரம ஏழையான கபீரிடம், ஓ மகாத்மா, நாம சங்கீர்த்தன விருந்து படைத்தீர்கள். “எங்கள் நூறு பேருக்கும் நீங்களே பிக்ஷையும் படைத்திடுங்கள்” என்றனர் சாதுக்கள்.
அப்போதுதான் கபீர் சுயநினைவுக்கு வந்தார். ‘கிருஷ்ணா, காட்டில் தனியாகத் தவித்த பாண்டவர்களிடம் துர்வாசரை அனுப்பியதுபோல் என்னிடம் இவர்களை அனுப்பிவிட்டாயே...’ கபீர் தவித்தார்.
ஜிஜ்ஜா யோசித்தாள். கிராமத்தில் நாம் கடன் வாங்காத வீடு எதுவுமில்லை. ஓரிருவர் வந்திருந்தால் ஓரிரு நாட்கள் நாமிருவரும் பட்டினி கிடந்து அதிதி போஜனம் செய்வித்திருக்கலாம். வந்துள்ளதோ நூறு பேர், அதுவும் மகாத்மாக்கள். என்ன செய்வது?
அபவித்ரா தேவி அப்போது அவளுக்கு யோசனை கூறினாள் போலும்.
ஆம், அப்படிச் செய்தால் என்ன? அந்த சௌகார் தன்னிடம் கேட்பதைத் தருவதாகக் கூறி சாது மகாத்மாக்களைப் பசியாற்றலாம். பாவம், நேற்றிலிருந்து அவர்கள் உபவாசம் இருக்கிறார்கள்.
ஜிஜ்ஜா கூறியதைக் கேட்டு கபீர் அதிர்ந்தார். பிறகு அந்தக் கள்ளமில்லாத உள்ளத்தில் சாது சேவை நடக்குமே என்ற மகிழ்ச்சி. ராமரிடம் உள்ள அனுராகத்தால் அவரது மனதில் சௌகாரின் விகாரம் வீழ்ந்தது.
ஜிஜ்ஜா சௌகார் வீட்டிற்குச் சென்றாள். பர்தா போடாத முஸ்லீம் பெண்ணான ஜிஜ்ஜாவைப் பார்த்ததும் சௌகாரின் கண்ணில் காமம். வாயால் கூற முடியாததைக் கண்ணால் உமிழ்ந்தான் வக்கிரமாக.
“ஜி, எங்களை நாடி சாதுக்கள் வந்துள்ளனர். நீங்கள் பணம் தந்தால், அவர்கள் பசியாறுவார்கள்” என்றாள் ஜிஜ்ஜா தலைகுனிந்து.
“நிச்சயம் பணம் தருகிறேன். ஆனால் நீ என்னோடு...?” நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேட்டான் சௌகார்.
“சாது போஜனத்தை முடித்துவிட்டு வருகிறேன்” நா வறண்டு போகக் கூறினாள். சௌகார் பணத்தைத் தந்தான் பெரிய எதிர்பார்ப்புடன்.
காய்கறி வாங்கியது, சமைத்தது, பரிமாறியது என்று எல்லா வேலைகளிலும் ஜிஜ்ஜா தன் பக்தியை வெளிப்படுத்தினாள். துறவிகளின் போஜனம் நன்கு நடந்தது.
சாதுக்கள் கிளம்பினார்கள். கிளம்பியது கபீருக்குள் பயம் என்ற பூதம். ஆனால் ஜிஜ்ஜா தெளிவாக இருந்தாள்.
“ஜி, சௌகாரிடம் தந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்.”
“ஜிஜ்ஜா, உனக்குப் பயமில்லையா?”
“ஜி, நான் இந்தக் கொடூர யோசனைக்குச் சம்மதித்தது, என் கண்கண்ட தெய்வமான உங்களது சிரமத்தைக் குறைக்கவும், சாதுக்களின் பசியாற்றுவதற்கும், ஸ்ரீராமரை மகிழ்விப்பதற்கும்தான். ஆனால் ஒன்று சுவாமி. சௌகாரின் விரல் என் மீது படும் நொடியில் என் உயிர் உடலை விட்டுவிடும்...” என்றாள் திடமாக.
இரவு. ஜிஜ்ஜாவைத் துணியால் மூடி ஒரு குழந்தை போல், பிறர் பார்க்காதபடி தோளில் வைத்துத் தூக்கிச் சென்றார் கபீர். வழியெல்லாம், ‘என் கற்பைக் காப்பாற்று ராமா’ என்று ஜிஜ்ஜா மன்றாடினாள்.
‘ராமா, பாவத்திலிருந்து சௌகாரைக் காப்பாற்று. உன் ஜிஜ்ஜாவைக் காப்பாற்று’ என வேண்டிக் கொண்டே சென்றார் கபீர்.
சௌகார் பரிதவித்துக் கொண்டிருந்தான். கபீரைப் பார்த்ததும் உயிரில் அவருக்கு ஊசி குத்தியது.
இவர் ஏன் இங்கே இப்போது? அவள் எங்கே?
கபீர், “சௌகார்ஜி, தங்கள் புண்ணியத்தால் பாகவத ஆராதனம் நன்கு நடந்தது. இதோ பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி ஜிஜ்ஜாவை சௌகார் முன்பு நிறுத்தினார்.
சௌகார் அதிர்ந்து போனார். தேவனும் தேவியுமாக கபீரும் ஜிஜ்ஜாவும் நிற்பதாக சௌகார் கண்டார். நா வறண்டது. அவர்கள் முன்பு ஓர் அற்பப் புழுவாக, தான் நெளிவதையும் உணர்ந்தார்.
கபீரைப் பார்க்கவும் ஜிஜ்ஜாவின் தாய்மைக் கண்களைக் காணவும் சக்தியற்ற ஜடமாக சௌகார் அவர்களின் பாதங்களில் வீழ்ந்தார்.
காமத்தின் பிடியிலிருந்து விடுபட்டுக் கிடந்த சௌகாரை கபீர்தாசர் மேலே எழுப்பினார். அதன் பிறகு சௌகார் சிறந்த பக்தராக மாறியது பவித்ரா தேவியின் அருள்தான்.
“பார்த்தாயா அக்கா. புனிதமான ஒருவரால் போகியும் திருந்தி வாழ்ந்ததை...?” என்றாள் பவித்ரா தேவி ஈரக் கண்களுடன்.
அபவித்ரா வெறுமையாகப் பார்த்தாள். சட்டென அவள், “உன் புனித சக்தியை எல்லாம் ஏதோ ஒரு சில பக்தர்கள்தான் உணர்வார்கள். என் பார்வை பெற்ற எவனும் உன் அருள் பெற்றவனை மதிக்க மாட்டான்” கூறி விட்டுப் பழைய குருடி ஆனாள்.
“அக்கா, உன்னால் உன் அல்ப சக்தியை மீறி யோசிக்க முடியாதா? சரி, உன் அறியாமையை விலக்க, என் அருள் பெற்ற ஒரு துறவியின் வரலாற்றை உணரும்படி செய்கிறேன். அதுவாவது, உன் அகங்காரத்தைக் குறைக்கிறதா, பார்க்கலாம்.”
பவித்ரா தேவி உணர்த்திய காட்சி விரிந்தது.
1893, பிப்ரவரி 13 அன்று சுவாமி விவேகானந்தர் ஹைதராபாத் சென்றார். அவரது ஒளி பொருந்திய முகம் பலரை ஈர்த்தது. அவர்களுள் ஒருவர், ஹைதராபாத் நிஜாமின் நிதியமைச்சரான பாபு மதுசூதன் சட்டர்ஜி. அவர் சுவாமிஜி, நிஜாமைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.
நிஜமான மகிழ்ச்சியை அதிகம் அறியாதவர் நிஜாம். போகம், மோகம் என்று வாழ்ந்துவிட்ட அவரது வாழ்வில் அவை இரண்டின் முதல் எழுத்து சோ என்று வேகமாக மாறிக் கொண்டிருந்தது.
இந்த இந்து சாமியார்களுக்கு சமஸ்கிருதமும், பிராந்திய மொழியும் தவிர வேறொன்றும் தெரியாது! எப்படி இந்த சாமியார் இங்கிலீஷ் பேசுகிறார்... சரி, வரச் சொல் என நிஜாம் சம்மதித்தார் வேடிக்கையாக.
விவேகானந்தர் வந்தார் புயலாக. துரும்பாக இருந்த இதயங்கள் எல்லாம் துள்ளி எழுந்தன. சிலர் வெளியே ஓடிவிட்டனர். பிரமுகர்கள் எழுந்து நின்றனர், புனிதரை மதிக்கும் விதமாக.
நிஜாம் நிமிர்ந்து சுவாமி விவேகானந்தரின் திருமுகத்தை ஒரு கணம் பார்த்தார். தாடி மீசையின் மேலே ஓடித் திரியாத யோகிக் கண்கள் என்று ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தார் அந்த அரசன்.
ஆண்டியானாலும் அவனியை அன்பால் ஆளும் அந்தத் துறவறச் சக்கரவர்த்தியின் முன்பு தான் ஓர் அடிமைச் சிற்றரசாக உணர்ந்தார். உடனே அவரது கால்களும் நிமிர்ந்து நின்றன.
ஆச்சரியம்! துறவி முன்பு நிஜாமா எழுந்தார்!
விவேகானந்தர் கை கூப்பினார். அனைவரும் அமர்ந்தனர். சிறப்பான ஆட்சி பற்றி சுவாமிஜி பேசினார். தர்பார் புனிதம் பெற்றது.
புயலாக வந்தவர் புறப்பட்டார். தியாகத்தை மதித்து எழுந்தவரிடத்தில் தானமோ, வேறு எதுவோ கேட்க மனமில்லை சுவாமிஜிக்கு.
சபை கலைந்தது. நிஜாமின் மனம் கலையவில்லை. துறவியின் கண்கள் மனதைத் துளைத்தெடுத்தன. சுவாமிஜியின் சிந்தனையிலேயே இருந்தார். திவான் மெல்லக் கேட்டார்: “வணங்காமுடியான நிஜாம் அவர்களே, தாங்களே அந்தத் துறவி முன்பு எழுந்தது ஏனோ?”
நிஜாம் புன்னகைத்தார். நெஞ்சின் மீது கைவைத்து, திவானின் கண்களைப் பார்த்து, ஆழ்ந்த உணர்ச்சியுடன் கூறினார்.
“திவான்ஜி, அந்தத் துறவியின் ஒளிமிக்க கண்கள், உயர் அறிவை உமிழும் நெற்றி, துயர் வென்ற உதடுகள், ஆ! என்னவொரு சுதந்திரமான, உலகை வென்ற முகம்..., அவற்றோடு என்னை நான் ஒப்பிட்டுக் கொண்டதும் என்னை அறியாமல் எழுந்து நின்றேன்.”
திவான் மௌனம் காத்தார்.
“அந்தத் துறவியைப் பார்த்த பின், என் கையில் பிறருக்குத் தெரியாத ஒரு பிச்சைப் பாத்திரம் இருப்பதாகத் தோன்றியது. அன்புக்காக, நிம்மதிக்காக, மெய்யான மரியாதைக்காக, புகழுக்காக, பிறர் என்னை நம்புவதற்காக சதா சர்வ காலமும் நான் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறேன் என்பது புரிந்தது.”
நிஜாமின் கண்களிலும் அறையிலும் இருள் கசிந்தது.
அட, இந்த வரலாற்றைக் கேட்டதும் அபவித்ரா தேவி மௌனமாகிவிட்டாளே! பொதுவாக, புனிதம், மனத்தூய்மை என யாராவது பேசக் கேட்டால், ஓடிவிடுவாளே! இன்று அவள் ஓடவில்லையே!
அவள் நிதானமாக, “என் அருமைத் தங்கையே, நீ சரியாகவே சொன்னாய். உன் அருள் பெற்ற மக்களால் உலகம் நெறிப்படுகிறது. என் பார்வை பட்ட மாக்களால் உலகம் கூறுபடுகிறது” என்றாள்.
“அக்கா, புனிதர்கள் அதிகம் பேர் இல்லாவிட்டாலும் அவர்களது சக்தி வலிமையானது. அவர்கள் தரும் நம்பிக்கை சிறந்தது. இந்த உலகம் எண்ணிக்கையால் அல்ல, நம்பிக்கையால்தான் நடக்கிறது.”
இவ்வாறு பவித்ராதேவி கூறியதைக் கேட்டபின், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் உள்ள இடத்தில் அபவித்ராதேவி அண்டுவதில்லை என்பதால் புறப்பட்டுவிட்டாள்.
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
26.03.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்