RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 28

17.11.22 01:10 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 28

அன்பு - சிறுகதை

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அந்தத் துறவி தம் உரைகள் மூலம் கூறி வந்தார். கீதை, பாகவதம் என்று தொடங்கி இன்றைய ஸ்டீபன் கோவே வரைக்கும் அவர் மேற்கோள் காட்டாத நூல் இல்லை.

 

அவரது உரை முடிந்த பிறகும் பக்தர்கள் அவர் கூறிய கதைகள், சிரிக்க வைத்த, கண்ணீர் வரவழைத்த நிகழ்ச்சிகள் - இவற்றைப் பற்றியே பேசுவார்கள்.

 

துறவியின் தொடர் சொற்பொழிவு அன்று ஆரம்பமானது. சுவாமி அரங்கில் நுழையும் முன் அவரது அமைதியான மனதில் பல குரங்குகள் ஆட்டம் போட்ட ஒரு காட்சி தோன்றியது. காரணம்?

 

ஹாலுக்கு வெளியே செருப்புகள் தாறுமாறாகக் கிடந்தன. 'மனதை முறையாக வைக்கச் சொல்கிறேன். ஆனால் இவர்கள் தங்கள் செருப்புகளைக்கூட ஒழுங்காக விடுவதில்லையே' என்ற வருத்தம் சுவாமிக்கு.

 

அன்றைய தலைப்பு 'அன்பு'.

 

சொற்பொழிவு கேட்டுப்பலர்தலையசைத்தனர்; சிலர் குறிப்புகள் எழுதிக் கொண்டனர்.

 

அரங்கத்திற்கு வெளியே வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி கால் நீட்டி அமர்ந்திருந்தார். உள்ளே வந்து உரை கேட்பதற்கு அவரது உடல் ஒத்துழைக்க வில்லை. மேலும் மொழி புரியாது. சுவாமியையும் பக்தர்களையும் பார்ப்பது அவருக்குப் பிடிக்கும்.

 

பாட்டி தனது சொந்த கிராமத்தில் இருந்தபோது அங்குள்ள கோவிலில் தினமும் எலிகளுக்கு அன்புடன் பால் வார்ப்பாள். அது அந்தப் பாட்டிக்கு மிகவும் பிடித்தமானது. இங்கு அதைச் செய்யாதது அவருக்கு ஓர் ஏக்கமாக இருந்தது.

 

அவரது ஏக்கத்தைப் போக்கும் வகையில் இந்த உரையிலிருந்து அடிக்கடி காதில் வந்து விழும் 'பிரேம்' என்ற வார்த்தையைப் பற்றிப் பாட்டி யோசிப்பாள்.

 

அன்று சொற்பொழிவு முடியும் முன்பே அவர் புறப்பட்டார். வழியில் அரங்கின் வெளியில் ஒரே செருப்புக் குவியல், குப்பையாக!

 

'சுவாமியின் அக அமைதிக்கு முன் இப்படி ஓர் அலங்கோலமா?' என நினைத்துப் பாட்டி புறப்பட்டார்.

 

இரண்டாம் நாள். அன்பு பற்றி சுவாமி இன்றும் பல புதிய விஷயங்களைக் கூறினார். பக்தர்களிடம் வழக்கம் போல் தலையசைப்பு, கைதட்டல்.... எல்லாம்.

 

தூரத்தில் பாட்டி அமர்ந்திருந்தார். அவருக்குள் ஓர் எண்ணம். 'இன்றும் இவர்கள் செருப்பை அங்கும் இங்குமாகப் போட்டிருப்பார்களோ!' என்று எழுந்து போய் பார்த்தார். ஆம், அது அப்படித்தான் இருந்தது!

தமது முக்காட்டைச் சரி செய்தவாறே செருப்புக் களை வரிசையாக வைத்துவிட்டு அமர்ந்தார். உரை முடிந்தது. தங்களது காலணிகள் ஒழுங்காக இருப்பதை யாரும் கவனிக்கவில்லை . களிப்புடன் கலைந்தனர்.

 

மூன்றாம் நாள். பக்தர்கள் செருப்பை விட்ட விதம் பழைய பல்லவிதான். பாட்டி அன்று பக்தர்களின் காலணிகளை முறையாக வைத்தபோது அவருக்கு ஒரு புது யோசனை தோன்றியது. 'செருப்பைத் திரும்பப் போட்டுக் கொள்ளும்போது ஆண்களும் பெண்களும் இடித்துக் கொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம்?'

 

உடனே ஆண்கள் மற்றும் பெண்களின் செருப்பு களைத் தனித்தனியாக வைத்தார் பாட்டி.

 

உரை முடிந்ததும் சிலர் தங்கள் காலணிகள் சரியாக வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்தனர். யாரோ அவ்வாறு செய்திருப்பதைப் பாராட்டினர்.

 

நான்காம் நாள். காலணிகளை ஒழுங்காக வைத்தது யார் என்று பலரும் விசாரித்தனர். இச்செய்தி சுவாமிக்கும் தெரிய வந்தது. அவர் மகிழ்ந்தார்.

 

ஐந்தாம் நாள். அன்று பலரின் கவனம் பேச்சில் இல்லாமல் 'யார் அந்த நபர்?' என்பதைக் காண்பதி லேயே இருந்தது. சொற்பொழிவு தொடங்கிச் சிறிது நேரத்திற்குள் பாட்டி பெருமூச்சு விட்டபடி மெல்ல எழுந்து தமது பணியை ஆரம்பித்தார்.

 

பக்தர்கள் பாட்டியைக் கவனித்தார்கள். மறுநாள் சுவாமியின் முன்பு அழைத்து அவரைக் கௌரவிக்க லாம் என்று பக்தர்கள் முடிவு செய்தனர்.

அவரை எப்படிப் பாராட்டலாம் என்று பலரும் பேசினார்கள். 'வாக்கிங் ஸ்டிக்' வாங்கிக் கொடுக்கலாம் என்றனர் சிலர். மற்றும் சிலர் அவருக்கு சுவாமியின் ஹிந்தி நூல்களைப் பரிசளிக்கலாம் என்றனர்.

 

ஆறாம் நாள். அன்று சுவாமியின் உரை ஆரம்பிப்பதற்கு முன் அந்தப் பாட்டியைக் கௌரவிப்பதாக ஏற்பாடானது. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தனித்தனியே பாட்டியைப் பாராட்ட நினைத்தனர்.

சிறந்த முறையில் பாட்டியைப் பாராட்டுவதற்கு என்ன செய்யலாம் என யோசித்த அனைவரும் அன்று தங்களது காலணிகளை வரிசையாக வைத்தார்கள்!!

 

பாட்டிக்காகக் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் அவருக்கு இதைக் காட்டிய பின் அவரைக் கௌரவிக்க லாம் என்று இருந்தார்கள்.

 

நேரமானது. சுவாமியும் பக்தர்களும் காத்திருந் தார்கள். நேரம் அதிகரிக்கவே சுவாமி தமது சொற்பொ ழிவை ஆரம்பித்தார். அவர் பேசியதெல்லாம் பாட்டி யைப் பற்றியேதான்.

 

ஆனால் அன்று பாட்டி ஏனோ வரவே இல்லை.

மற்றவர்கள் மொழியையும் கதைகளையும் பிடித்திருக்க, பாட்டியோ உரையின் சாரத்தைக் கிரகித்து, அதைப் பிறருக்கும் உணர்த்திவிட்டாரே!

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

17.11.2022

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur