RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 27

29.08.22 08:12 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 27

ஒரு துளி தந்த பாடம் - சிறுகதை

சுட்டெரிக்கும் பாலைவனம். வாய் எச்சிலைக் கூட காய வைக்கும் உஷ்ணம்.

 

'சன் ஸ்ட்ரோக்' வந்துவிடுமோ என்ற பயத்துடன் உடலெல்லாம் அனலால் தகிக்க, நடக்க முடியாமல் வேலு திணறினார்.

 

கையிலிருந்த காலி நீர்பாட்டிலைத் தூக்கி எறிந்தார். உடன் வந்தவர்களும் அங்கங்கே தவித்தபடி வருகிறார்கள். வேலு தன் மகன் குமார் பின்னே வருவதை மங்கலாகக் கண்டார்.

 

திடீரென்று உஷ்ணக் காற்றுடன் கருப்பாக ‘மணற்புயல்’ வீசியது. வேலுவின் கண்ணிலும் மூக்கிலும் மணற்துகள்கள் புகுந்தன.

 

'ஆ, இனி என்னால் ஓர் அடியும் எடுத்து வைக்க முடியாது' என எண்ணியபடி வேலு தொப்பென்று சுடுமணலில் மயங்கிச் சாய்ந்தார்.

 

சக பயணிகள் அவரை எழுப்பினார்கள். காதில் பலமாகக் கத்தினார்கள். அவர்களுக்கும் மூச்சிரைத்தது.

 

ஓடோடி வந்த குமார் தன் தந்தையைத் தாங்கிக் கொண்டார். வேலுவின் நாக்கு வறண்டிருந்தது. உதடுகள் ஏங்கின ஈரத்துக்காக.

 

குமார், “யாராவது கொஞ்சம் தண்ணீரை இவர் முகத்தின் மீது தெளியுங்கள். ஒரு வாய் நீர் அருந்தினால், மயக்கம் தெளிஞ்சுடும்...” என்று கேட்டார், கெஞ்சினார்.

 

உடனிருந்த இருவரும் கைகளைச் சட்டென்று பின்னே இழுத்துக் கொண்டனர், அவர்களது பாட்டில்களில் மிகக் குறைவாகவே நீர் இருந்தது.

 

குமார் கெஞ்சியும் அவர்கள் தலைகுனிந்தபடி நின்றார்கள். ‘இதை இவருக்குத் தந்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது? இன்னும் இரண்டு கி.மீ. நடக்க வேண்டுமே?’ என்று நினைத்தார்கள்.

 

ஒரு துளி நீர் கிடைக்காத அவலத்தைப் பார்த்து, குமார் 'ஓ'வெனப் புலம்பினார்:

 

''அப்பா, ஊர்லே தண்ணீர்ப்பந்தல் வச்சி எல் லோருக்கும் தந்த நம் பரம்பரைக்கா இந்தக் கஷ்டம்? உங்கள காப்பாத்த ஒரு துளி தண்ணிகூட இல்லியே...''

 

அப்போது அவனது கண்ணீரும் நெற்றி வியர்வையும் சேர்ந்து துளித் துளியாக வேலுவின் முகத்தில் சிந்தின.

“அப்பா... எழுந்திருங்கப்பா...''

 

“மகனே, மகனே... என்னால முடி...ய...ல...'' என்று கூறியதும் அவரது தலை சாய்ந்தது.

 

சட்டென்று தலை தூக்கி எழுந்த வேலு 'நங்' என்று இடித்துக் கொண்டார். அவர் ரயிலில் நடுபர்த்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இரவு 12 மணி.

 

'சே, என்ன ஒரு கெட்ட கனவு'. அந்த ஏ.சி. கோச்சிலும் வேலுவுக்கு வியர்த்தது. தலையைத் தேய்த்தபடி, சுய நினைவுக்கு வந்தார் வேலு.

 

மெல்லிய இருட்டு. சிரமப்பட்டு இறங்கினார். சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தார். ஏதோ குற்றவுணர்வு.

 

'ஒரு துளி நீர்கூடக் கிடைக்காத கொடுமையான கனவு எனக்கு ஏன் வந்தது?'

 

அவருக்குச் சட்டென ஏதோ தெளிவானது. உடனே இருட்டில் செருப்பைத் தேடினார்.

 

வேகமாகச் செல்லும் ரயிலில் தட்டுத் தடுமாறி பாத்ரூமில் நுழைந்தார்.

 

அங்கே நீர்க்குழாயைச் சரியாக மூடாததால் நீர் வீணாகக் கொட்டிக் கொண்டிருந்தது.

 

அதை அவர் 10 மணிக்கே கவனித்திருந்தார். ஆனால் அப்போது 'இது என் வீட்டு நீரில்லையே, நான் ஏன் இதை நிறுத்தணும்' என அலட்சியமாக இருந்துவிட்டார்.

 

அதனால் வந்த விளைவோ அந்தக் கனவு?

 

வேலு யோசித்து குழாயைச் சரியாக மூடினார். ஓர் அழும் குழந்தையின் கண்ணீரைத் துடைத்த திருப்தி அவருக்கு.

 

பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் கண்ணை மூடினார்.

 

ஆனால் அந்த நீர் விரயத்தைக் கண்டும் காணாமலும் இருந்த மற்றவர்கள் தூங்கிக் கிடந்தார்கள்,

 

வேர்களற்ற மரங்களாக! காய்ந்த கட்டைகளாக!

 

வேலுவுக்குக் கனவில் நடந்தது வேறு மனிதர் களுக்கு நேரில் நடக்க வாய்ப்பு உள்ளதுதானே?

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

29.08.2022

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur