கண்ணன் கண்ணில் கண்ணீர் - சிறுகதை
இன்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி. கிருஷ்ணன் உதித்த தினம். கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இந்தத் தினத்தைத் தங்களது பிறந்த தினத்தைவிட மிக சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பூஜை, பாராயணம், நாம சங்கீர்த்தனம், உறியடி திருவிழா, பாகவதப் பிரவசனம், நாட்டியம், தேர் திருவிழா என்றெல்லாம் கொண்டாடி கண்ணனைப் போற்றிப் பக்தர்கள் பாடுவார்கள்.
பாலகிருஷ்ணனின் பெரும் பக்தரான சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மேற்கூறிய பக்தியை மேம்படுத்துவதற்காகத் தோன்றியவர். சுவாமிஜியின் கருத்துகளைப் போற்றும் வகையில் இதோ ஒரு வித்தியாசமான கற்பனை கதை.
நண்பர்களே! கிருஷ்ண கானம் நாம் பாடுவோம். அதோடு, கிருஷ்ணர் நம்மைப் பாராட்டுகிறாரா என்று பார்ப்போம்.
கண்ணனின் கண்ணில் கண்ணீர் ஏன்?
"நம் குருநாதர் காலையிலிருந்து கவலையாக இருக்கிறாரே, ஏன் என்று தெரியவில்லையே?'' என்றார் ஒரு பக்தர்.
“பிருந்தாவனத்திலுள்ள 3000 கோவில் களையும்விட மிகப் பிரம்மாண்டமான கோவில் ஒன்று கட்ட உள்ளோம். அதற்காக நம் சுவாமிகள் கவலைப் படுகிறாரோ?" என்றார் இன்னொரு நிர்வாகி.
அந்த 'விஸ்வ கிருஷ்ண மந்திர் குழு' அங்கத்தினர்கள் பத்து பேரும் இவ்வாறு பேசியபடி தங்களது ஆச்சாரியருக்காகக் காத்திருந்தனர்.
அதோ, கிருஷ்ணதாஸ் என்ற அந்த மடாதிபதி வருகிறார். எப்போதும் கிருஷ்ண தியானத்திலேயே திளைக்கும் அவரது முகத்தில் ஏன் இன்று இப்படி ஒரு சோகம்? என்று சீடர்கள் கூர்ந்து அவரையே கவனித்தார்கள். சீடர்கள் தங்களது ஆச்சாரியரை வணங்கினர்.
''மகராஜ், ஏன் உங்களது திருமுகத்தில் ஒரு வட்டம் தெரிகிறது?"
கிருஷ்ணதாஸிடமிருந்து பதில் இல்லை.
"மகராஜ், மந்திர் கட்டுவது பற்றி நீங்கள் எந்தத் தயக்கமும் கொள்ள வேண்டியதில்லை. பணம், பொருள் என்று எல்லா வகையிலும் ஆதரவுகள் நமக்குக் குவிகின்றன'' என்று கூறிய குழுத் தலைவரை நோக்கினார் கிருஷ்ணதாஸ் மகராஜ்.
ஆச்சாரியரின் அமைதி அனைவரையும் கவ்வியது. அவர் அந்தர் முகமாக இருப்பது அனைவரையும் வியக்க வைத்தது.
ஒரு சில நிமிட ஆழ்ந்த அமைதிக்குப் பிறகு ஆச்சாரியார்,
"அன்பர்களே, பிருந்தாவனத்தின் மகிமையைக் கூட்டுங்கள் என்று என் குருதேவ் கூறினார். அதனால்தான் இவ்வளவு பெரிய கோவில் கோடிக்கணக்கான பொருட்செலவில் கட்டத் துணிந்தோம். ஆனால்...''
"ஆனால் என்ன சுவாமிஜி சொல்லுங்கள்?"
"ம்.... கிருஷ்ண பகவான் பலமுறை அடியேனுக்கு தரிசனம் தந்து அருளி இருக்கிறார். குழல் ஊதும் கண்ணனாக, பசுக்களை மேய்க்கும் பாலனாக, கோபிகைகளுடன் நர்த்தனம் புரிபவனாகப் பல வடிவங்களில் தரிசனம் தந்த ஸ்ரீகிருஷ்ணன் நேற்று ஏன் அவ்வாறு தரிசனம் தந்தார்?'' என்று கூறும்போதே அவரது கண்களில் பிரவாகமெடுத்தது கண்ணீர். அந்தப் பக்திக் கண்ணீர் தூய யமுனை நீரோ!
கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்தனர்.
சில நொடிகளில் கிருஷ்ணதாஸ் மெல்ல கூறினார், "பக்தர்களே, கிருஷ்ணர் நேற்று என் கனவில் தோன்றினார். நாம் கட்டப் போகும் கோவிலுக்கு ஆசி வழங்குவார் என்று ஆவலுடன் அவரைப் பார்த்தேன். ஆனால் நான் கண்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், என் கண்ணனின் கண்ணிலோ கண்ணீரைக் கண்டேன்...'' என்று விம்மினார்.
"பகவானின் கண்ணில் கண்ணீரா?" நிர்வாகிகள் ஒருசேர கேட்டனர் அதிர்ச்சியுடன்.
"ஆம், அதைவிடக் கொடுமை, கண்ணனின் கையில் புல்லாங்குழல் இல்லை. மாறாக, துடைப்பம்..., ஆம், அன்பர்களே, விளக்குமாறு இருந்தது. அதைக் கொண்டு
பிருந்தாவனத்துத் தெருக் களை அவரே சுத்தம் செய்து கொண்டிருந்தார்.''
சீடர்கள் சஞ்சலமுற்றனர். என்ன, கண்ணன் கையில் துடைப்பமா? என்று முகம் சுளித்தனர்.
“கண்ணனின் கண்ணில் கண்ணீருக்கான காரணம் என்ன என்று நான் காலையிலிருந்து கண்ணீருடன் அவரையே கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போதுதான் எனக்குப் புரிகிறது...” என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.
மகராஜின் கண்கள் அகமுகமாயின.
''சீடர்களே, பக்தர்களாகிய நம்மிடம் கிருஷ்ணர் சில கேள்விகளைக் கேட்பதாக அடியேனின் உள்ளுணர்வு உரைக்கிறது. அந்தக் கேள்விகள் இதோ:
“கிருஷ்ணனாகிய நான் பால லீலை புரிந்த பிருந்தாவனம் இன்று ஏன் இவ்வளவு புறக்கணிக்கப்பட்டுள்ளது?
''கோபிகைகளுடன் நான் ராஸலீலை செய்த புனித யமுனையையும், அதன் கரைகளையும் இன்று உங்களது குப்பைக் கிடங்குகளாக மாற்றிவிட்டீர்களே?
"ஐயகோ! நான் பசுக்களை மேய்த்த பிருந்தாவனப் புல்வெளிகளில் இன்று பன்றிகள் அல்லவா மேய்கின்றன?
"என் மீது பக்தியுள்ள நீங்கள், என் உயிர் போன்ற பிருந்தாவனத்தை இவ்வளவு அசுத்தமாக வைத்திருக்க எப்படி முடிகிறது? இதுதானா உங்கள் பக்தி?”
இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணனின் கேள்விகளாக கிருஷ்ணதாஸ் உணர்ச்சியுடன் கூறினார்.
ஆண்டவனின் வார்த்தைகளைக் கேட்டு அனைவரும் மௌனமாயினர். முடிவில், அன்று அந்தக் கூட்டத்தில் ஒன்று தீர்க்கமாக முடிவானது.
இனி, பிருந்தாவனத்துக் கோவில்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதல்ல, அங்கு குவிந்துள்ள குப்பைகளைக் கூட்டுவதே இப்போது அவசியம் தேவையான பக்தி. அதையே உடனடியாகச் செய்வோம் என்று அனைவரும் முடிவு செய்தார்கள்.
பகவானுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்வது தானே மெய்யான பக்தி?
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
19.08.2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்