RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 24

27.07.22 03:21 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 24

நாம் இருக்குமிடம் நம் இந்தியா - சிறுகதை

ஜோலார்பேட்டை சந்திப்பில் ரயில் நின்றது. ஒரே இரைச்சல். S8 கம்பார்ட்மெண்டில் ரவி ஏறினான். லேசான அழுக்குச்சட்டை, பேண்ட். கையில் பிரஷ். ஓ, இவன் ரயிலில் குப்பை கூட்டிக் காலம் தள்ளுபவனா?

            

நாளைக் காலை மைசூர் போய்ச் சேரும்வரை இந்தத் துர்நாற்றத்தில் போக வேண்டுமே என்று பயணிகள் குமைந்தபோது ரவி ஏறியிருக்கிறான்.

            

ரவி பிரஷ்ஷால் ரயில் பெட்டியின் தரையைப் பெருக்கினான். ஒரு தாடிக்காரர் கடலையைத் தின்றபடி துடைத்த இடத்திலேயே தோலைப் போட்டார். அதையும் ரவி எடுத்துப் போட்டான்.

            

3-வது பெட்டிக்குப் போனபோது “இங்க தொட” என்று ஓர் அதட்டும் குரல். ரவி சுத்தப்படுத்திய தும் அந்த மீசையாள் ஒரு ரூபாயை வீசினார். ரவி அதை அமைதியாக எடுத்து, மீசையாளரிடமே தந்தான்.

            

அவர் கோபத்துடன், “பார்ரா, இவன் செய்ற இந்த வேலைக்கு ஒரு ரூபா பத்தாதாம். அதான் துரை திருப்பித் தர்றாரு...'' என்று தன் நண்பனிடம் கூறுவது போல் வீம்பு வளர்த்தான். ரவி பேசவில்லை.

            

“நீ மரியாதையா அவனுக்கு ரூபாயைத் தந்திருக்கணும்” என்று அவனது நண்பன் கூறுவதற்குள், ரவி 5-வது பெட்டியில் கூட்டிக் கொண்டிருந்தான்.

            

அங்கு ஓர் இளம்பெண் கணவனிடம், “இந்தத் தம்பி நல்லா க்ளீன் பண்றான்... பாவங்க” என்றாள்.

            

“சும்மா இரு. இந்த மாதிரி நாம காசு குடுத்துப் பிச்சைக்காரர்களை ஆதரிக்கக் கூடாது'' என்று கூறி விட்டு செல்போனில் பாட்டு கேட்டார்.

            

ரவி 6-வது பெட்டிக்குப் போனான்.

            

“சார், நாட்டுல ஊழல் பெருகிடுச்சி. டாஸ்மாக் பணத்தை நம்பித்தான் அரசே இருக்கு. இனி இந்த நாட்டை எவனாவது காப்பாத்த முடியுங்குறீங்க?”

            

“நான் ஸ்வீடன் போயிருந்தேன். அங்க எங்கே யுமே ஒரு தூசி இருக்காது. ஆனா இங்க.... என்னால இந்த அசிங்கமான இடத்துல இருக்க முடியாது. நான் டி.டி.ஆரைப் பாக்கப் போறேன்.''

            

இவ்வாறு பேசி வந்தவர்களின் கால்களுக்கடியில் இருந்த தூசிகளை ரவி சுத்தம் செய்தான். அவர்களுள் ஒருவர் ரவியிடம் ஒரு ரூபாய் தந்தார். அவன் சிரித்தபடி அதை மறுத்துவிட்டான்.

            

பெட்டி 7-இல் இருந்த ஒரு சிடுமூஞ்சி, “எனக்கு ‘டஸ்ட் அலர்ஜி'. இங்க ஒண்ணும் செய்யாதே” என்று கூவி விட்டுத் தூங்கினாள்.

            

பெட்டி 8. ரவி போனபோது, “இந்தா, டீ குடி” என்று ஐந்து ரூபாய் தர முன் வந்த ஒருவரை அவரது மனைவி முறைத்தாள். கணவன் தலை கவிழ்ந்தான்.

            

“இந்தப் பசங்கள்லாம் வேலை செய்ற மாதிரி செஞ்சி நம்ம லக்கேஜைத் திருடிட்டுப் போயிடுவாங்க” என்றாள். அதைக் கேட்டும் ரவி கண்டு கொள்ளவில்லை.

            

இவன் யார்? பிச்சைக்காரனா? பார்த்தால் அப்படி இல்லை. ஊமையா? செவிடா? கிறுக்கனா? ரவியையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டி, “இங்க வாய்யா, இந்தா, இந்த ரெண்டு இட்லிய சாப்பிடு” என்றாள். அதற்கும் சிரிப்பு.

            

“நீ என்ன ஊமையா?” என்று பாட்டி கேட்டாள்.

            

ரவி சிரித்தான். பிறகு, “பாட்டி, நாங்க மூணு பேரும் காலேஜ்ல படிக்கிறவங்க. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இது மாதிரி ரயிலில் எங்களால் முடிஞ்ச தைச் செய்யறோம்...” என்றான்.

            

அதற்குள் அங்கு வந்த இன்னொருவன், “ரவி, நான் முடிச்சிட்டேன்டா...” என்றான்.

            

69-வது சீட்டிலிருந்த ஒரு மாணவி, “நீங்க இதை ஏன் செய்றீங்க?” என்று கேட்டாள் அக்கறையுடன்.

            

“சிஸ்டர், நம்ம மக்கள் வாழற இடம்தாங்க நம்ம இந்தியா. இப்படி நினைச்சுதான் நாங்க நாட்டுக்காகச் சேவை செய்றோம். தயவு செய்து நீங்க எங்க போனாலும் பொது இடத்த சுத்தமா வச்சுகிட்டு, எல்லாருக்கும் பயன்படுற மாதிரி இருக்கணும்னு உங்கள கேட்டுக்கறேன்” என்றான் ரவி எல்லோரிடமும்.

            

“அதோட இந்த வருடம் சுவாமி விவேகானந்தர் மேலைநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய 125 -ஆவது ஆண்டு. சுவாமிஜி கும்பகோணத்தில் தங்கி “எழுந்திருங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல்லுங்கள்” என்று அவர் முழங்கி 125 ஆண்டுகள் ஆகின்றன. அந்த முக்கியமான நிகழ்ச்சியை நாங்கள் இப்படி சேவை செய்து கொண்டாடுகிறோம்” என்றான் அங்கு வந்த நண்பன்.

            

அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த 72 பேருக்கும் அவரவர் தூக்கம் திடீரென்று கலைந்தது.

            

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

27.07.2022

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur