RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 20

04.05.22 02:16 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 20

வாங்கப்படுகிறான் மனிதன் - சிறுகதை

ஞாயிறு காலை 6 மணி. அப்பாவுடன் சந்தைக்குப் போனால் எனக்கும் பலர் வணக்கம் சொல்வார்கள். அரசுப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் பெண் ஆயிற்றே! அதோடு, பெங்களூரில் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் இளம்பொறியாளர் நான்! 

ஓய்வு பெற்ற பிறகு அப்பா கோவிலுக்குப் போவதும், இலவச டியூசன் சென்டர் நடத்துவதும், சந்தைக்குப் போய் வருவதுமாகச் சந்தோஷமாக உள்ளார். அவருக்கு இப்போதெல்லாம் உடம்பு முடிவதில்லை, மூச்சிறைக்கிறது.

நான் ஒருமுறை சொன்னேன்.‘‘அப்பா, அம்மாவோட நீங்க பெங்களூருக்கு வந்து என்னோடயே தங்கி விடுங்க’’ என்று. 

அப்பா சிரித்தபடி, ‘‘வேணாம்மா, ஏழு லட்சம் வாகனங்கள் இருக்க வேண்டிய பெங்களூரிலே சுமார் 30 லட்சம் வாகனங்கள் ஓடுதாம். அந்தக் கும்பலில் நானும் சேரணுமா?’’ என்று அவர் கேட்டபோது, அந்த நகரில் ஒரு சிறு ஜந்துவாக நான் அலைவதாக எனக்குத் தோன்றியது.

2 வருடங்களுக்குப் பின் இன்று இந்தச் சந்தைக்குள் நுழைகிறேன். ஒரே புழுக்கம். அனைவரும் கூச்சலாகப் பேசியபடி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

திறந்த வெளியில் காய்களை, கீரைகளைப் போட்டு விற்கிறார்கள். சுத்தம் என்றால் கூறு என்ன விலை என்பார்கள்? சே, என்ன ஜென்மங்கள்....!

பெங்களூர் குளுகுளு மல்டி சூப்பர் மார்க்கெட் ஞாபகம் வந்தது. ஆஹா.... அது தனிதான்!

‘‘ராஜி, ஏம்மா தயங்கித் தயங்கி வர்றே?’’ 

என் தயக்கம் அப்பாவுக்கு எப்படிப் புரிந்தது?

‘‘வாங்க ஐயா’’ என இந்த மக்கள் நம்மை அழைப்பது உதட்டிலிருந்து அல்ல, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருவதை உணரலாம். இது எனது ‘கார்ப்பரேட் கைய்ஸ்’ பேசிக் கொள்வதைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.

முதலில் பொக்கைப் பாட்டி வரவேற்றாள்: ‘‘வாத்தியாரைய்யா, போன வாரம் நீங்க கேட்ட மரவள்ளிக் கிழங்கு. இந்தாங்க...’’.

‘‘மாப்பிள்ளை குடிச்சிட்டு வந்து ஒண் பொண்ண அடிக்காம இருக்கானா பாட்டி?’’ என்று அப்பா விசாரித்தார். பாட்டி கூறியதை நான் கேட்கவில்லை. ஊர்க்கதை எனக்கு எதற்கு?

அப்பா இந்தச் சிறு வியாபாரிகளிடம் ஏனோ பேரம் பேசுவதில்லை.  எதிர்ப்புறம் சென்றோம்.

‘‘வாங்க ஐயா, நம்ம பாப்பாவா இது! நல்லா வளர்ந்துடுச்சு.... ஐயா, மொடக்கத்தான் கீரை இருக்கு. அம்மாகிட்டே கொடுத்துச் சமைக்கச் சொல்லுங்க. மூட்டுவலி கொறையும்’’ என்றார் கீரை விற்பவர்.

அப்பாவிற்கு மூட்டுவலி இருப்பது இவருக்கு எப்படித் தெரியும்? அப்பா, இப்படி ஒவ்வோர் இடமாகச் செல்வது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.

‘‘அப்பா, மேட்டூர்லேயே மினி சூப்பர் மார்க்கெட் வந்திடுச்சு. நாம அங்கேயே ஒரே இடத்திலேயே எல்லாத்தையும் வாங்கிடலாமில்ல?’’ என்றேன் அமைதியின்றி. அப்பா என்னை உற்றுப் பார்த்தார்.

‘‘இல்லப்பா..., இதெல்லாம் ‘ஹைஜீனிக்கா’ இருக்குமா?’’ என்றேன் சம்பந்தமே இல்லாமல்.

அப்பா சிரித்தபடி, ‘‘நான் இந்தச் சந்தையில வாங்குற காய்கறிகளை 50 வருஷமாச் சாப்பிட்டு வர்றேன். எனக்கு ஒடம்புக்குப் பெரிசா ஒண்ணுமில்லை. நீ சூப்பர் மார்க்கெட் சாமான்களை ரெண்டு வருஷமா சாப்பிடுறே. ஆனா ஒனக்குத்தான் அடிக்கடி சளி பிடிக்குது, தலைவலி வருது’’ என்றார்.

நான் அப்பாவின் கையிலிருந்த காய்கறிப் பையை வாங்கிக் கொண்டேன்.

‘‘ராஜி, இந்தச் சந்தை சிஸ்டம் வெறும் வியாபாரம் மட்டுமில்லே. இந்தச் சிறுவியாபாரிங்க பொருளை விற்கும்போது, பொருளோட அன்பையும் பரஸ்பர மனிதநேயத்தையும் சேர்த்துத் தர்றதைக் கவனிச்சியா?’’

‘‘ம்’’ என்றேன் புரியாமல். அந்தக் கூட்டத்திலும் அப்பா என்னிடம் தனி கவனம் தந்து பேசினார்: 

‘‘ஒரு முக்கிய விஷயம் என்னன்னா, ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் நடுவே உணர்வைப் புகுத்தி, அதைப் பரிமாறிக்கிறதுதான் நமது பாரதப் பண்பாடு. அதை இந்தப் பாமர ஜனங்க வியாபாரத்துலகூட செய்றதைக் கவனிச்சியா?.’’ 

‘‘ராஜி, அதோட எது செய்தாலும் ஒவ்வொரு பொருளிலும் மனித உணர்வைப் புகுத்தி, அதிலிருந்து தெய்விக உணர்வை வெளிப்படுத்துறதைத்தான் நம்ம பெரியவங்க ஆன்மிகம்னு சொல்றாங்க.’’

அப்பா வியர்வையைத் துடைத்தபடி, ‘‘இப்படியான உயர்ந்த சிந்தனைகளும் எளிய ஜனங்களும் நெறைஞ்ச பூமிமா இது. நீ சொல்ற சூப்பர் மார்க்கெட் பொருள்கள் பாக்கெட்ல அழகழகா இருக்கும். ஆனா பொருளை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் நடுவுல பணம் மட்டும்தான் இருக்கு. மனிதத்தன்மை இருக்குமா?’’ என்றார்.

‘‘புரியற மாதிரி சொல்லுங்கப்பா’’ என்றேன். அவர் தொடர்ந்தார்:
"அன்புடன் குடும்பநலன் விசாரிப்பு, இரவு நேரத்திலும் அவசரம் என்றால் கடையைத் திறந்து நம் தேவையைப் பூர்த்தி செய்றது, ‘‘அடடே, ‘பர்சு’ கொண்டு வர மறந்துவிட்டேன்’’ என்று நாம் சொன்னால், ‘‘அதனாலென்ன சாமி, நாளைக்குக் கொடுங்க’’ என நம்பித் தருவது..... இதெல்லாம் நீ சொல்லும் மாலில் கிடைக்குமா மகளே?"

அப்பாவின் சிந்தனைக்கு எதிராக என்னால் சிந்திக்க முடியவில்லை.
"தனது லாபத்தில் ஒரு பகுதியைத் தனது ஊரிலோ, தனது பகுதியிலோ, ஒரு மாரியம்மன் கோவிலுக்கோ செலவு செய்வார் நம்ம ஊர் வியாபாரி. வால்மார்ட், பெப்சி, கொகோ கோலா, அமேசான் போன்றவை நம்மிடம் சுரண்டுவதைத் தங்கள் நாட்டுக்குத்தானே கொண்டு செல்வார்கள்!

"தொண்டு நிறுவனங்கள், உள்ளுர் கோவில் திருவிழாக்களுக்காகக் கடைகடையாகப் போய் நன்கொடை கேப்பாங்க!ஆனா வால்மார்ட் கடை வாட்சுமேன் பொருள் வாங்காட்டா உன்னை உள்ளே விடுவானா?"

வாட்ச்மேன் சாதாரணமாக உடை அணிந்து வந்தவர்களைப் புறம் தள்ளுவதை நானே பார்த்திருக்கிறேன்.

"ஏம்பா, ஒரே இடத்துல எல்லாம் கிடைக்கிறது நமக்கு வசதிதானே.....?" என்று கேட்டவுடனேயே.... எனக்கே புரிந்தது எனது சிறுபிள்ளைத்தனமான கேள்வி.

அப்பா கண்ணாடியைக் கழற்றி அதைத் துடைத்துக்கொண்டே, ‘‘காய்கறி உற்பத்தி செய்யுற இடத்தில அடிமாட்டு விலைக்கு வாங்கி, இந்த கம்பெனிக்காரங்க இஷ்டத்துக்கு விலை வச்சு விக்கிறாங்க. அதோட, இவங்க நம்ம நாட்டுல இருக்குற நான்கு கோடி சிறு வியாபாரிகளையும் அவங்களுக்கு வர்ற சொற்ப லாபத்தையும், அவங்களோட வாழ்வாதாரத்தையும் கெடுத்து, அவங்களயே நம்பி இருக்கிற அவங்க குடும்பத்தினர் 12 கோடி பேரோட வயித்திலேயும் அடிக்கிறாங்க. தெரியுமா ஒனக்கு?’’

எனக்கு நாக்கு வறண்டது. அப்பா மேலும் விவரங்கள் கூறி என்னை மலைக்க வைத்தார்:

‘‘ராஜிகண்ணு, நீ பொருள்களை வாங்கச் சொல்றியே அந்த இடத்து வியாபாரத்துல எல்லாம், ஒண்ணு ரெண்டு பகாசுர கம்பெனிகளுக்கே மொத்த லாபமும் போய் குவியுது. இந்தியப் பொருளாதாரத்தில் இச்சிறு வியாபாரிகளோட பங்கு 14%. நீ சொல்ற பெரிய கம்பெனிகளின் பங்கு வெறும் 4%தான். நான் சொல்றது பல வருஷத்துக்கு முன்னாடி வந்த தகவல் இது. இப்போ நிலைமை அதைவிட மோசமா இருக்கு’’.

நானும் வாதம் புரிந்தேன்: ‘‘வளரும் நாடான நமக்கு இம்மாதிரி வெளிநாட்டு முதலீடுகளாலே நம் நிலை வளருமே?’’ 

‘‘ராஜி, எந்த வளர்ச்சியானாலும் ஏற்கனவே இருக்கிற ஒன்றைச் சீரழிக்குதுன்னா அது எப்படி வளர்ச்சியாகும்? வெளியிலிருந்து நம்ம வீட்டுக்கு மருமக ஒருத்தி வந்ததும் அவ நம்ம அம்மாவைத் துரத்தினா, அதை நீ ஏத்துக்குவியா?’’

இல்லை என்றேன் தலையாட்டி. 

‘‘இன்னொண்ணும் கேளு. ஏதோ சில பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் லாபம் போனா, சில காலத்திற்குப் பிறகு அவங்க வைக்கிறதுதான் விலையாகிவிடும். அந்த கம்பெனிகளுக்கு நோக்கம் சேவையா என்ன...?’’ 

‘‘இல்லப்பா’’ என்றேன் பூம்பூம் மாடு போல.

‘‘நம் சிறு வர்த்தகத்துறை ஆண்டுக்கு 8-10% வரை வளருது. அந்த வியாபாரத்தை, அதில் வர்ற லாபத்தைத்தான் அன்னிய கம்பெனிகள் கண் வைக்குது’’.

அப்பாவின் புள்ளிவிவரங்களுக்கு முன்னே என் வாதம் ஒரு புள்ளியானது. 

அப்பா சற்று அமைதியாகி, ‘‘முன்னெல்லாம் நாய்களுக்கு ராஜபாளையம், கோம்பை பிரபலம். இப்பல்லாம் வீடுகளிலே அவை இல்ல; வெறும் உயிருள்ள பொம்மைகள் போன்ற அருவருப்பான விதேசிக் கலப்பு நாய்களே உள்ளன."

அதைக் கேட்டதும் நான் அவசரமாக "எஸ் டாட், நீங்க சொல்றது கரெக்ட்" என்று கூறினேன்.

உடனே அவர், "நீயே பாத்தியா, வாயில் தாய்மொழி கொறஞ்சி, கலப்படமான தங்லீஷ் வந்துடுது? பாகற்காய், புடலை, அவரை போன்ற காய்கறிகளைவிட புதுப்புது காய்கறிகளும் பழக்கத்துக்கு வந்துடுச்சு. இவற்றின் நடுவே வாழும் இந்தியனது ரத்தத்திலும் சுதேசித் தன்மை குறையத்தானே செய்யும்?"

நான் விக்கித்து நின்றேன்.

"ஒரு விஷயத்தை நாம மறந்திடக் கூடாது மகளே. வியாபாரம் செய்ய வந்தவங்கதான் நம்ம நாட்டை 250 வருஷம் அடிமையா வச்சிருந்தாங்க’’ என்றார். 

எனக்குத் திக்கென்றது. இப்போதும் நம் நாட்டை அபகரிக்க ஒரு பெரிய வியாபாரத் தந்திரமா, அதுவும் வெளிநாட்டிலிருந்து?

திடீரென்று பாரததேவி குட்டி கவுன் போட்ட ஒரு பெண்ணாக, தாடி வைத்த ஒருவர் வரைந்த ஓவியம் என் மனதில் தோன்றியது. ஆடிப்போனேன் நான்.

அப்பா சற்று களைத்துப் போனார். அங்கு ஒருவர் பதநீர் விற்றுக் கொண்டு வந்தார். அவரிடம் அப்பா, ‘‘நல்லாயிருக்கியா கதிரு?’’ என்று விசாரித்தார். கதிர் மகிழ்ந்தார்.

பதநீரைப் பனை ஓலையில் வாங்கிக் குடித்தோம். லேசான சுண்ணாம்பு நெடி. ஆனாலும் சுவை. அப்பா சந்தைச் சிந்தனையை விடுவதாக இல்லை. 

‘‘ராஜி, காய்கறியும் பொருள்தான், காசும் பொருள்தான். இரண்டுக்கும் நடுவில வாங்குறவர் மற்றும் விற்பவரின் சமுதாய அக்கறையும் பரஸ்பர நம்பிக்கையும் என்ற உணர்வுகள் இல்லாம போனா, நம்ம சமுதாயம் இன்னும் மோசமாயிடும் கண்ணு’’.

‘‘என்னடா, அப்பா மார்கெட்டிலேயே கிளாஸ் எடுக்கிறார்ன்னு பாக்குறியா?’’ என்று அப்பா கேட்டார்.

‘‘இல்லப்பா. இந்த வியாபாரிங்களை நீங்க நேசிக்கிறதுக்குக் காரணம் என்னன்னு யோசிக்கிறேன்’’ 

‘‘மகளே, விவேகானந்தரைப் படிச்சதாலே வந்த சிந்தனைகள் இவை.’’

‘‘விவேகானந்தர் பொருளாதாரச் சிந்தனைகள் பற்றியும் சொல்லியிருக்கிறாரா?’’

‘‘ஆமா, நான் இப்படி சந்தைக்கு வந்து போறதுக்கு சுவாமிஜி யின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவம்தான் காரணம்’’.

‘‘ப்ளீஸ், சொல்லுங்கப்பா, அந்தச் சம்பவத்தை.’’ 

‘‘சுவாமி விவேகானந்தரும் அவரது சீடர் ஒருவரும் ஒரு முறை கொல்கத்தாவில் ரயில்ல பயணம் செஞ்சாங்க. சுவாமிஜி எல்லாத்தையும் கூர்மையா நோக்குவாரில்லையா....?’’

‘‘அவரோட பார்வையே ‘பவர்புல்’லாச்சே!’’

‘‘அப்போ, ஸ்டேஷன்ல வேக வச்ச சோளத்தை விற்கும் ஒரு சிறுவியாபாரி சுத்திச் சுத்தி வந்தார். அவருக்கு வியாபாரம் ஆகாததைப் பார்த்த சுவாமிஜி, சீடரிடம் சோளம் வாங்கச் சொன்னார். 

‘‘அப்புறம் சுவாமிஜியே, ‘அந்த வியாபாரிக்குக் குழந்தைக் குட்டிகள் இருக்கும். அவங்க எல்லோரும் சாப்பிட வேண்டாமா? வியாபாரி பொழைக்க வேண்டாமான்னு?’ கேட்டு ஒரு ரூபாய்க்குச் சோளத்தை வாங்கி எல்லோருக்கும் விநியோகிச்சார். வியாபாரி சந்தோஷமா போனாரு’’. 

அப்பா இதை உணர்ச்சியுடன் கூறினார்.

‘‘அந்தக் காலத்து ஒரு ரூபான்னா, இப்ப 100 ரூபாய்க்குச் சமமா இருக்குமில்லே? கிரேட்பா!’’ என்றேன் நான் அப்பாவின் கரங்களைப் பிடித்தபடி. 

அப்போது எனது அலைபேசியில் ஒரு செய்தி வந்தது. அவசரத்தில் அது என்ன என்று மட்டும் பார்த்தேன். லூலூ- கவனி இந்தியனே! என்ற ஒரு கட்டுரை வந்திருந்தது.

அப்பா ஆழ்ந்த உணர்வுடன், ‘‘ராஜிமா, இன்னிக்கு இந்தச் சிறு வியாபாரிகளோட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருது. இப்படியெல்லாம் நாடு போகும்னுதான் நம்ம நாட்டோட ராஜரிஷியான விவேகானந்தர் அப்பவே யோசிச்சு சொல்லி இருக்கார். ம்..., இதெல்லாம் நம்ம ஆட்சியாளர்கள் படிக்க வேண்டிய ஒண்ணு’’ என்றார் அப்பா பெருமூச்சுடன். 

நாட்டில் சந்தை இருப்பது மாறி, நாடே ஒரு சந்தைப் பொருளாகிவிடுமோ? நாம் ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் நம்மை நாமே விற்றுக் கொள்கிறோமா என்ற பீதி எனக்குள் கிளம்பியது.

இனி நான் செய்யும் ‘ஷாப்பிங்’ என் நாட்டுக்கு நல்லதா என்று யோசித்துத்தான் செய்வது என்று  தீர்மானித்தேன். 

சந்தையின் வாசலுக்கு வந்தோம். கொய்யாப்பழம் விற்ற கிழவரிடம் கேட்டேன்: ‘‘தாத்தா, இந்தக் கொய்யா வயித்துக்கு நல்லதா?"

‘‘ஆமா பாப்பா, நீ வாங்கினா, எங்க வயித்துக்கு நல்லது’’ என்றார் தாத்தா சிரித்து. 

அது எப்படி? அவர் சிரித்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதே!

* * *

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

04.05.2022

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur