RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 19

02.04.22 12:34 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 19

மிஸ், என்னை மன்னிப்பீங்களா? - சிறுகதை

பரட்டை தலையாக முடி வெட்டாமல் ரவுடி போன்று ஒரு மாணவன் வந்தான். வகுப்பில் இப்படி வராதே என்று கூறிய ஆசிரியையின் தலையில் கத்தியால் அவன் வெட்டினான். இது சென்ற மார்ச் மாதம் 2022 விருத்தாசலத்தில் நடந்தது.

                

செங்கல்பட்டில், மாணவிகள் குடித்துவிட்டு பஸ்ஸிலும் பொது இடங்களிலும் அரட்டை அடிக்கிறார்கள். ஒன்றும் செய்ய இயலாத நிலையில் ஆசிரியர்கள்.

                

பக்குவப்படுத்தவே மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். இன்று அவர்களில் பலரும் பள்ளியிலிருந்து நேராகச் சீர்திருத்தப்பள்ளிக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ செல்லத் தயாராவது போல் தெரிகிறது. பள்ளியில் மாணவ- மாணவிகளின் கொட்டம் கூடிவிட்டது. அவர்களைக் கண்டித்தால் ஆசிரியர்களின் வேலைக்கும், மானத்திற்கும், உயிருக்கும்கூட உத்தரவாதம் இல்லை.

                

கொரோனாவிற்குப் பிறகு மாணவ- மாணவிகளின் மனநிலை  மாறிவிட்டது என்பது சமுதாயத்தை மேம்போக்காகப் பார்ப்பவர்களின் வார்த்தைகள்.

                

பிள்ளைகளை மதிப்பெண் பெறும் எந்திரமாகவே பள்ளிகள் பார்க்கின்றன. பணத்தின் பின் ஓடும் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேச நேரம் இருப்பது இல்லை. 

                

கல்வி மாணவர்களுக்குச் சுவைக்காமல், சுமையாகிவிட்டது. குழந்தைகளிடமிருந்து அவர்களின் பிள்ளைப் பிராயத்தைப் பலரும் திருடி விடுகிறார்கள். அன்பும், கருணையும் வற்றிப் போன வறண்ட உள்ளங்களைத் தயாரிக்கும் பட்டறைகளாகப் பள்ளிகள் மாறுவதைத் தடுக்கப் பெற்றோரும் ஆசிரியரும் அரசும் முனைய வேண்டும்.

                

இன்று அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் உயர்ந்துவிட்டது; ஆனால் ஊழியத்தின் மரியாதை தாழ்ந்துவிட்டது. மாணவர்களைப் பண்புடன் வளர்ப்பதற்கு அவர்களுக்கென்று அதிகாரமோ, வாய்ப்போ, நேரமோ, உற்சாகமோ இல்லாமல் போய்விட்டது. ஒவ்வோர் ஆசிரியரின் முகத்திலும் தொங்கிக் கொண்டிருப்பது.... வாய்ப்பூட்டு.

                

இத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்தச் சிறுகதையை சுவாமி விமூர்த்தானந்தர் படைத்துள்ளார். அதனை அக்கறையுடன் உங்களுக்காக வாசிப்பது ஆசிரியரான திரு கி. தத்தாத்ரேயன். வாருங்கள் அன்பர்களே, ‘மிஸ், என்னை மன்னிப்பீங்களா?’ என்ற கதையைக் கேட்கலாம் வாருங்கள்.

"ஏம்மா கொழந்த, ஒன்னைப் பாத்தா நல்ல பொண்ணா இருக்கே. போயும் போயும் டீச்சரை அடித்தவனையா பாக்க வந்தே?” 

                                                                                                                                

"அவன் எங்க ஃபிரண்ட் பிரேம் சார்” என்றாள் ரமா வேகமாக.

                                                                                                                                

சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி எனப்படும் கூர்நோக்கு இல்லத்தின் அதிகாரி, 15 வயது ரமாவின் கண்களை நோக்கினார். அதிலிருந்த அன்பைக் கண்ட அவர், "ஏய், அந்த முரட்டு முட்டாளக் கூப்பிடு” என்றார் உதவியாளரிடம்.

                                                                                                                                

மதுரையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லம். அங்கிருக்கும் பிரேம், இரண்டு வார மனஉளைச்சலுக்குப் பிறகு இன்று தன் நண்பர்களைச் சந்திக்க இருக்கிறான்.

                                                                                                                                

அந்த இல்லத்தில் ஒரே புழுக்கம். திட்டாக அழுக்கு. அங்குள்ளவர்களின் முகங்களில் ஒரு வெறுமை. தூரத்தில் பிரேம் கூச்சத்துடன் வருகிறான். பள்ளியில் படித்தபோது தினமும் விதவிதமான ஆடைகளில்  கலக்கியவன், இன்று இப்படி வெள்ளை டிரவுசருடன், முடி வெட்டப்பட்டு, முகம் வாடி... பாவம் பிரேம்.

                                                                                                                                

ரங்கனும் ரமாவும் பிரேமைப் பார்த்ததும் கைகளை விரித்து அவனை அழைத்தனர்.

                                                                                                                                

ஓடி வந்த பிரேம், "ரங்கா..., ரமா...”  என்றான். இவ்வளவுதான் அவனால் கூற முடிந்தது. அந்த மூவரில் யார் அதிகம் அழுகிறார் என ஜெயிலர் பார்த்துக் கொண்டிருந்தார். 

                                                                                                                                

சில நிமிடங்களுக்குப் பின், "பிரேம், ஏண்டா இப்படி செஞ்சே? உன் கஷ்டத்தை எங்ககிட்டே முன்னமே கூறியிருக்கக் கூடாதா?” என ரங்கன் கேட்டான்.

                                                                                                                                

கடந்த மார்ச் மாதத்தில் உஷா டீச்சரின் தலையில் இதே பிரேம் அடித்து மண்டையை உடைத்தான். இன்று கூர்நோக்கு பள்ளியில் கிடக்கிறான்.

                                                                                                                                

"ரங்கா, நம்ம டீச்சருங்க எல்லாரும் எப்போ பாத்தாலும் படி, படின்னு என்னை ஏன்டா வெரட்டினாங்க? நான்தான் 'டல்'ன்னு அவங்களுக்குத் தெரியுமில்லே? நான் படிச்சி என்ன செய்யப் போறேன்னு யாருமே எனக்குப் புரிய வைக்கல்லே...” என்று கூறி அழுதான் பிரேம்.

                                                                                                                                

ரங்கன் பிரேமின் தோளைப் பிடித்தான்.

                                                                                                                                

"ஸ்கூல்ல மார்க், மார்க்னு பொலம்பினாங்க. வீட்டிலேயும் அதையே கூறி வெறுப்பேத்துனாங்க”.

                                                                                                                                

"அதுக்காக நீ நம்ம டீச்சருக்குச் செஞ்சது குரு துரோகம்டா, மகா கேவலம்” என்றாள் ரமா கோபமாக.

                                                                                                                                

ரங்கன் அமைதியாக இருந்தவன் சட்டென்று, "இவன் செஞ்சது 100% தப்புதான் ரமா. ஆனா இப்ப இவன் சொன்னதிலே 1% கூடத் தப்பில்லே” என்று தீர்மானமாகச் சொன்னான்.

                                                                                                                                

"ரங்கா, நீயாடா இப்படிப் பேசுற?” என்றாள் ரமா.

                                                                                                                                

"ஆமா, கிளாஸ்ல எவ்வளவு டீச்சருங்க அன்பா பாடம் நடத்துறாங்க? பந்தயக் குதிரை மாதிரிதான் ஸ்கூல்ல பலரும் நம்மை ஓட்றாங்க?” என்றான் ரங்கன் முகம் சிவக்க.

                                                                                                                                

பிரேம் சற்று நிதானமாக, "ரமா, எல்லோரும் என்னைத் திட்டுனாங்க, சபிச்சாங்க, அடிச்சாங்க. ஆனா என் தப்பு என்னன்னு யாருமே எனக்குக் காட்டல.... புரிய வைக்கல” என்றான் கையைப் பிசைந்தபடி.

                                                                                                                                

"நீ எவ்வளவு பெரிய தப்பு பண்ணேன்னு ஒனக்கே தெரியாதா?” – ரமா படபடப்புடன் கேட்டாள்.

                                                                                                                                

"சத்தியமாத் தெரியலே. நான் செஞ்சது எல்லோருக்கும் தெரியும். ஆனா நான் ஏன், எந்தச் சூழ்நிலையில அப்படி நடந்துகிட்டேன்னு இங்க, ஜெயிலுக்கு வந்த ராமகிருஷ்ண மடத்து ஒரு சாமிஜி வந்து சொன்னபோதுதான் புரிஞ்சது.” 

                                                                                                                                

"என்னடா அது?” -ரங்கன் ஆர்வத்துடன் கேட்டான். 

                                                                                                                                

"எங்களுக்கான பண்பு பயிற்சியில சாமி ஒரு சம்பவம் சொன்னாரு. விவேகானந்தர் ஸ்கூல்லே படிச்சப்போ, பூகோள டீச்சர் ஒருத்தர் ஒரு 'பர்ட்டிகுலர்' நாடு எங்கே இருக்குன்னு கேட்டாராம். விவேகானந்தர் பதிலைச் சரியா சொன்னாரு. ஆனா, அந்த சார் அத தப்புன்னு கூறி அவர அடிச்சுட்டாராம்.” 

                                                                                                                                

"ஓ, அந்தக் காலத்திலேயும் விஷயம் தெரியாத டீச்சருங்க இருந்தாங்களா?” 

                                                                                                                                

ரமாவின் கேலியைப் பொருட்படுத்தாமல் பிரேம், "சார் எப்படி இருந்தாலும் மாணவன் ஆசிரியரிடம் மரியாதை காட்டணும் என்பதற்காக, விவேகானந்தர் அமைதியா அடி வாங்கினாரு; ஆனா கம்பீரமாவும் பொறுமையாவும் நின்னாரு” என்றான்.

                                                                                                                                

"ஓ, ரியல் ஹீரோடா அவரு”

                                                                                                                                

"அதோட, வீட்டுக்குப் போய் விவேகானந்தர் தன் அம்மாகிட்ட இதச் சொன்னப்போ அவங்க, 'மகனே, நீ எப்போவும் தைரியமா இருக்கணும். உண்மையா நீ இருக்குறப்போ கொஞ்சம் கஷ்டம் வரலாம். அதுக்கெல்லாம் கலங்காம இருந்தால்தான் நீ வீரன், அப்படின்னாங்களாம்” – பிரேம்.

                                                                                                                                

"இப்படியெல்லாம் யார்ரா நமக்கு வீட்டிலே சொல்றாங்க?” என்றான் ரங்கன் பெருமூச்சுடன்.

                                                                                                                                

"அதோட, மறுநாள் அந்த சாருக்கு, தான் சொன்னது தப்புன்னு புரிஞ்சப்போ, விவேகானந்தரிடம் தன் தப்பை ஒத்துக்கிட்டு, அவரைப் பாராட்டினாராம்”. 

                                                                                                                                

சில நொடிகள் அங்கு ஓர் இனிய மௌனம். மெல்ல காற்று வீசியது.

                                                                                                                                

தனது ட்ரவுசரைச் சரி செய்தபடி பிரேம், "ரங்கா, விவேகானந்தர் எப்படி தனக்கு வந்த கஷ்டத்தைத் தாங்கி நின்னாரு. டென்ஷனாகாம இருந்ததால அவரு ஒரு சிறந்த வீரனா மாறினாரு, இல்லியா? அவங்க அம்மாவும் அவருக்கு எப்படி தைரியம் தந்தாங்க! ம்..., எங்கம்மாவா இருந்தா, கலாட்டா பண்ணி ஆளைக் கூட்டி வந்து டீச்சரை அடிச்சிருப்பாங்க” என்றான்.

                                                                                                                                

பிரேம் பேசப் பேச அவனது கண்கள் பளிச்சிடுவதைக் கவனித்தாள் ரமா.

                                                                                                                                

"ஆனா, சில டீச்சருங்க என்னைப் பொருட்படுத்தாத காரணத்தால, நான் இப்படி கோழையா, கிரிமினல் மாதிரி தப்பு செஞ்சிட்டேன்டா” என விசும்பினான்.

                                                                                                                                

"அழாதேடா. ஏதோ நடந்துடுச்சு. எங்களால முடிஞ்ச எதையும் ஒனக்காகச் செய்றோம். தைரியமா இரு”.

                                                                                                                                

"தாங்க்யூ ரமா, உங்க ரெண்டு பேரையும் நா கிளாஸ்ல வெறுத்திருக்கேன். உங்களோட என்னை ‘கம்பேர்’ பண்ணி பண்ணி டீச்சருங்க பேசியதால எனக்கு உங்க மேல பொறாமையா இருந்தது. ஆனா இப்பத்தான் உங்களப் பத்தி எனக்குப் புரியுது."

                                                                                                                                

"உனக்காக நா பெருமாள் கிட்ட வேண்டிக்கிறேன் பிரேம்..." ரமா அவனது தோளைத் தட்டினாள்.

                                                                                                                                

பிரேம் இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு, "எனக்காக ஒரு 'ஹெல்ப்' செய்யுறியா?” என்று கேட்டான்.

                                                                                                                                

"நிச்சயமாடா”

                                                                                                                                

"சரி, இதோ வரேன்” என்று உள்ளே சென்றவன் வேகமாக ஏதோ எழுதினான். பிறகு ரங்கனிடம் தந்து, "இதை நம்ம டீச்சர்கிட்ட கொடு” என்றான்.

                                                                                                                                

"யாரு? உஷா டீச்சர் கிட்டயா...? ” என்றாள் ரமா பயந்தபடி.

                                                                                                                                

"பிரேம், டீச்சர் நம்ம கிளாஸ் பசங்களக் கண்டாலே எரிஞ்சு விழுறாங்களாம். வேண்டாம்டா இந்த ஐடியா” என்று ரங்கன் கெஞ்சினான்.

                                                                                                                                

"ப்ளீஸ்டா, எனக்காக நீ இதக் கட்டாயம் செய்யணும்”. 

                                                                                                                                

பிரேமின் கெஞ்சலைக் காண முடியாத இருவரும், "சரி, உன்னோட நிம்மதிக்காகச் செய்றோம்” என்றனர்.

                                                                                                                                

சிறையின் கதவு அடைக்கப்பட்டது.

                                                                                                                                

மறுநாள் ரங்கனும் ரமாவும் டீச்சரைச் சந்திக்கத் தவித்தனர். 

                                                                                                                                

'என் தலையைக் கோரமாக்கிய ராஸ்கலின் நண்பர்களை நான் பார்க்கவே மாட்டேன்' என்று டீச்சர் தீர்மானமாக இருந்தார். அடுத்த நாளும் டீச்சரைப் பார்க்க இருவரும் அலைந்தனர். 

                                                                                                                                

முடிவில், "டீச்சர், எங்க தவறுகளை மன்னிச்சி, எங்கள நீங்க 'விஷ்' பண்ணினாத்தான் நாங்க பத்தாவதிலே நல்ல ரேங்க் எடுக்க முடியும்” என்றான் ரங்கன். 

                                                                                                                                

அதனால் உஷா டீச்சரின் கோபம் ஓர் ஒண்ணே கால் கிராம் குறைந்தது. 

                                                                                                                                

வாசலில் அவர்களை நிற்க வைத்தே டீச்சர், "சொல்லித் தொலைங்க. உங்களப் பாக்கவே அவமானமா இருக்கு” என்று படபடத்தார்.

                                                                                                                                

"சாரி மிஸ், பிரேம் ஏதோ வேகத்திலே செஞ்சுட்டான்...” என்றாள் ரமா.

                                                                                                                                

"ஓ, அந்த வெறிபிடிச்சவனுக்கு நீ வக்காலத்தா? ”

                                                                                                                                

"மிஸ், நாங்க எங்க மொத்த க்ளாஸ் சார்பிலே இப்ப மன்னிப்பு கேக்குறோம்” என்றான் ரங்கன்.

வெறுமையான மௌனத்திற்குப் பிறகு, "மன்னிப்பு கேக்குறது ரொம்ப சுலபம்பா. என் தலையைப் பாரு. இந்த அவதியோட, அவமானத்தோட நா இனி ஆயுசு பூராவும் வாழணுமில்லே?” என்று கூறிக் கலங்கினார்.

                                                                                                           

தொண்டையைக் கனைத்தபடி ரங்கன், "இந்த நாலு மாசமா எல்லாரும் எங்களப் பாத்து, 'டீச்சர அடிச்சவன் கும்பல்தானே'ன்னு சொல்லும்போது, அவமானமா இருக்கு மிஸ்....” என்றான்.


"ஒனக்கே இப்டின்னா, எனக்கு எப்படி இருக்கும்? டி.வி.காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் என் தலையைக் காட்டிக் காட்டி, அதப் பத்தியே பேசி ..., என்ன ஒரு நரக வேதனை தெரியுமா?” 


இதற்குள் ரமா 'லெட்டர எடு' என்றாள் சைகையால்.


ரங்கன் மெல்ல, "டீச்சர், இது கஷ்டப்படுற ஒருத்தனோட கண்ணீர்க் கடிதம். நீங்கதான் அந்தக் கண்ணீரை நிறுத்த முடியும். ப்ளீஸ், படிங்க மிஸ்” என்றான்.

                                              

டீச்சர், "யாருடையது?” என்றபோது ரங்கனுக்கு வியர்த்தது. எச்சிலை விழுங்கிவிட்டு, "மிஸ், நாங்க பிரேமைப் பாத்தோம்...” என்பதற்குள், 

                                              

"அந்தப் பாவியைப் பாத்துட்டு, எங்கிட்டே வர என்ன தைரியம்?” என்றார் டீச்சர் வேகமாக.

                                                                                                                                                                                                                                        "அவன் தான் செஞ்சதற்காக இப்ப ரொம்ப கவலப்படுறான். உங்கள நெனச்சி அழுவுறான் டீச்சர்!” ரமா கூறிக் கலங்கினாள்.

                                                                                                                                                                                                                                        "நோ, அவனோட பேச்ச எங்கிட்ட எடுக்காதே. அவன் ஒரு மிருகம்” என்று கூறிவிட்டு டீச்சர் கதவை வேகமாகச் சாத்திவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார்.

                                              

சிறுவனாக சுவாமி விவேகானந்தர், ஆசிரியர் முன்பு நடந்து கொண்ட விதம் ரமா மற்றும் ரங்கனின் மனங்களிலும் ஊறிவிட்டதால் இருவரும் தீர்மானமாக வாசலிலேயே உட்கார்ந்துவிட்டனர்.

                                              

சற்று நேரம் கழித்து டீச்சர் வாசலில் பார்த்தபோது, அந்த 'இரண்டும்' போகாமல் அங்கேயே சத்தியாகிரகிகள் போல் இருந்தன.

                                              

டீச்சர் எரிச்சலாக வாசலுக்கு வந்ததும், "பிரேமை மன்னிச்சிடுங்க மேம்” என்று ரமா கெஞ்சினாள். டீச்சர் கடிதத்தை வெடுக்கென வாங்கிப் பிரித்தார். வாசித்தார்.

                                              

டியர் மிஸ்,என்ன எழுதுறதுன்னு புரியல்லே. உங்களுக்குக் காயம் பெரிசுன்னு சொன்னாங்க. இப்ப நீங்க ஓகேவா? ஐயம் ரியலி சாரி மிஸ். என்னை நம்புங்க மிஸ். நான் எப்படி, இந்த மாதிரி கொரங்குத்தனமா செஞ்சேன்னு தினமும் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.

                                              

இப்படி இருக்குமோன்னு தோணுது. மக்கான எங்கிட்ட சில டீச்சருங்கப் படி, படின்னு சொன்னது என்னை மட்டம் தட்டுன மாதிரி இருந்தது. அந்த எரிச்சல்ல நான் இருந்தப்போ, நல்லா படிக்குற ரங்கனை என் முன்னாடி, எப்பவும் ஓவரா பாராட்டிகிட்டே இருப்பாங்க. வீட்டிலேயும் இதையே சொல்லிக் குத்திக் காட்டுவாங்க.

                                              

கேர்ள்ஸ் முன்னாடி என்னை மக்குன்னு சொன்னப்போ, நான் யாரையாவது பழிவாங்க நெனச்சேன். என்னிக்கு நா ரொம்பவும் 'டிஸ்டர்ப்டா' இருந்தேனோ, அன்னிக்கி நீங்க மாட்டினீங்க.

                                              

எங்க மார்க்காலே எங்களுக்கு டென்ஷன் வருது. அது மாதிரி, எங்க ஸ்கோரால டீச்சர்களான உங்களுக்கும் டென்ஷன் இருந்ததுன்னு எனக்கு அப்ப புரியல்லே டீச்சர். பிரின்ஸிபாலிடம் நீங்க ஏச்சு வாங்குறதைப் பார்த்திருக்கேன். அது எனக்காகத்தான் இருந்திருக்கும்.

                                              

சாரி மிஸ், நான் பொய் சொல்லல. என்னால முடியல்ல, அழுகை அழுகையா வருது. இத்தனை நாளா நா என் அம்மாவைக்கூட அவ்வளவு முறை நெனச்சிப் பார்க்கல்லே. உங்களத்தான் பலமுறை நெனக்கிறேன். கனவிலேயும் வர்றீங்க.

                                              

நான் இப்போ திருந்தி நல்லவனா மாறி வர்றேங்கறது சத்தியம்தான்னு எனக்கு எப்போ தெரியும்?

                                              

'பிரேம், உன்னை நான் மன்னிச்சுட்டேன்'னு நீங்க ஒரு வரி எழுதினாத்தான், அது எனக்குத் தெரியும். 

                                              

என்னை, என் மடத்தனத்தை மன்னிப்பீங்களா மிஸ்? 

                                              

இப்படிக்கு, 

யூஸ்லெஸ் பிரேம்

                                              

டீச்சர் படித்து முடித்தார். தன் கண்ணில் கண்ணீரா என அவரே வியந்தார். கண்ணீருக்குத் தெரியாதே, யோசித்துச் செயல்பட! கிடுகிடுவென்று டீச்சரின் கன்னங்களிலிருந்து அது இறங்கி 'மன்னிப்பீங்களா மிஸ்?' என்ற வார்த்தையின் மீதே விழுந்தது.

                                              

கடிதத்தைக் கிழித்து வீசுவார் என்று நினைத்த ரங்கனிடம், "தம்பி, நான் சீக்கிரம் பிரேமைப் பாக்கணும். எப்ப போகலாம், சொல்லு?” என டீச்சர் கேட்டதும் இருவரும் டீச்சரைக் கட்டிக்கொண்டனர். 

                                              

டீச்சரின் காயம் ஆறத் தொடங்கியது.

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

02.04.2022

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur