RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 18

27.03.22 05:28 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 18

கலங்கரை விளக்கம்

நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி ஐயா அவர்களுக்குக் கலங்கரை விளக்கமாய் நின்று வழிகாட்டிய மகான் ஒருவர், அவரது மனக் கப்பலுக்கும் மாலுமியாய் இருந்து திசை காட்டினார்.

 

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின்  கப்பலுக்குக் கலங்கரை விளக்கமாய் நின்று வழிகாட்டிய மகான் ஒருவர், அவரது மனக் கப்பலுக்கும் மாலுமியாய் இருந்து திசை காட்டினார்.

அந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? என்பதை அவரே சொல்கிறார்....

 

1930-ஆம் ஆண்டு கால கட்டம். ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்த இந்தியா.

சென்னப்பட்டினத்தின் மெரீனா கடற்கரையில் ஒரு ஜட்கா வண்டியிலிருந்து பெரியவர் ஒருவர் மெல்ல இறங்கினார்.

அவர் முதலில் கடலைப் பார்த்தார். அவரது முகம் பிரகாசித்தது. ஆனால் அரைக்கணம்தான் அந்த மகிழ்ச்சி. உடனே முகம் வாடிவிட்டது.

பின் பையிலிருந்து பெரியவர் ஆறு அணாவை எடுத்து, தம்பி, இதோ வண்டி வாடகை" என்றார்.

வண்டிக்காரர் கும்பிட்டு, சாமி, அத நீங்களே வச்சிகோங்க. சாமிகிட்டேயிருந்து பணம் வாங்கக் கூடாதுன்னு வரும்போதுதான் முடிவெடுத்தேன்" என்றான்.

பெரியவர், நீங்கதானே தம்பி, ஐந்தணா போதாது. ஆறணா வேண்டுமென்று கேட்டீர்கள்" என்றார்.

அப்போ கேட்டேன் சாமி. ஆனா நம்மயெல்லாம் அநியாயமா ஆண்டு வர்ற வெள்ளக்காரன ஓட்டுறதுக்

காக, கப்பலோட்டிய ஒருத்தர வச்சிகிட்டு, இன்னக்கி நா ஜட்கா ஓட்டுனது என்னோட பாக்கியம் சாமி" என்று காலில் விழுந்தார் வண்டிக்காரர்.

யார் அந்தப் பெரியவர்?

தூரத்தில் இக்காட்சியைக் கண்ட மாணிக்கம்பிள்ளையும் மணி ஐயரும் ஓடி வந்து, அதோ, நம்ம வ.உ.சி. ஐயா வந்துட்டாங்க" என்று கூவினார்.

இருவரும் அவரது பாததூளியை ஏற்றனர். என்ன இது! இந்த வயதில் வ.உ.சி. ஐயா  80 வயதாகத் தோன்றுகிறாரே என வருந்தினார் மாணிக்கம்பிள்ளை.

ஐயா, சொல்லியிருந்தால் நாங்களே உங்களைக் காண பெரம்பூர் வந்திருப்போமே?" என மணி ஐயர் என்ற இளைஞர் கூறினார்.

பிள்ளை  அவருக்காகப் பலகாரம் கொண்டு வந்திருந்தார். பசியுடன் இருந்த வ.உ.சி. அதைச் சுவைத்தபடி,

மணி தம்பி, இன்று இந்த ஐஸ் ஹவுஸை ஒருமுறை தரிசிக்க ஆவல் பிறந்தது. அதுதான்... ஆமாம், என்னைச் சந்திக்க விரும்பி நீங்கள் கடிதம் எழுதியதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.

உங்களைப் பற்றி ஒரு நூல் எழுதி வருகிறேன். அதன் ஒரு பகுதியை உங்களிடம் காட்டி ஆசி பெற வேண்டும் என்றுதான் ஐயா...." என்றார் மணி ஐயர்.

வ.உ.சி அதில் அக்கறை காட்டவில்லை.

அதைக் கவனித்த மாணிக்கம் பிள்ளை, ஐயா, உங்க வரலாற்றை மணி ஐயர் உணர்ச்சியோடு எழுதியிருக்காரு. குறிப்பா, நம்ம சனங்க உங்களக் கைவிட்டதக் கண்டிச்சி

ருக்காரு பாருங்க, ஒரே சாட்டையடிதான் சாமி" என்றார் கோபத்துடன். சில நொடிகள் மௌனம்.

ஐயா, வாசிக்கட்டுமா?" என்ற ஐயரின் ஆர்வத்திற்காகத் தலையாட்டினார் வ.உ.சி.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஐயர் கம்பீரமாக வாசித்தார்:

‘தமிழா, கப்பலோட்டி ஆங்கிலேயனின் அடிவயிற்றைக் கலக்கியவரின் அருமையை நீ அறிவாயா? ‘மண்ணை மீட்டெடுக்கப் போராடியவரை இன்று மண்ணெண்ணெய் விற்க வைத்துவிட்டாயே!

‘சே, தமிழனே! வெள்ளைக்காரனாவது வ.உ.சி.யைச் செக்கிழுக்க வைத்து எண்ணெய் எடுக்க வைத்தான். ஆனால் நன்றியில்லாத நீயோ இன்று அவரைக் கடை வைத்து எண்ணெயை அல்லவா விற்க வைத்துவிட்டாய்!

‘அட, போடா தமிழா, உன்னைப் போன்ற நம்பிக்கைத் துரோகிகள் உலகில் வேறு எங்குமில்லை. ‘கப்பலோட்டிய தமிழரும், அவரையே ஓட்டிய தமிழர்களும்’ என்ற தலைப்பில் ஒரு நூலே எழுதலாம். அந்த அளவிற்கு அவரைப் புறக்கணித்து அவரது தியாகத்தை மதிக்காதவன் நீ!

‘பாரத மாதாவின் விலங்கொடிக்க இந்த மறத்தமிழன் வ.உ.சி. போராடினார், வீரனாகத் துணிந்தெழுந்தார்; வெள்ளையனை எதிர்த்துச் சிறை சென்றார். 

‘ஆனால் சிறையிலிருந்து விடுதலையானதும், அவரை வரவேற்க அவரது பெயரில் உள்ள அந்த மூன்று அக்ஷரங்கள் கணக்கில்தானே உன் ஆட்கள் இருந்தார்கள்!

ஐயர் இவ்வாறு உணர்ச்சியுடன் படிக்க, பிள்ளை கண்கள் சிவக்க, ஐயா, இப்படி எழுதினாத்தான் நம்ம சனங்களுக்கு ஒறைக்கும்" என்றார்.

எல்லாவற்றையும் கேட்ட வ.உ.சி., தம்பி, சுதந்திரத்திற்காகப் போராடியபோது என் பின்னால் எவ்வளவு பேர் வந்தனர் என்பதிலல்ல, யார் பின்னே நான் செல்கிறேன் என்பதில்தான் என் கவனம் இருந்தது" என்றார்.

பிள்ளை கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அவரது பையில் சாத்துக்குடி இருந்தது.

ஐயா, இதை ஏத்துக்கணும். வீட்டில் குழந்தைகளுக்குச் சுகமில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வருமானம்கூட..." என பிள்ளை இழுக்க, வியர்வையைத் துடைத்துக்கொண்டே, ஆம் தம்பி, வருமானம் கூடவே மாட்டேங்கிறது. மானம் போகிறது, இப்படிப்பட்ட நிலையை நினைத்தால்..." என்றார் வ.உ.சி. விரக்தியாக. 

ஒரு கணம் கடலையே உற்றுப் பார்த்தார் அவர்.

‘வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம். அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்ற மகா கவி பாரதியின் பாட்டு அவருக்குக் கேட்டதோ! 

கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் வ.உ.சி. திரும்பி ஐஸ் ஹவுஸைப் பார்த்தபடி,தம்பி, நம் வாழ்க்கையில் வரும் வெற்றி, தோல்விகளைப் பற்றி எழுதுவதில் எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. மாறாக, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நாம் லட்சியப்பிடிப்புடன் எப்படி முன்னேறுகிறோம்; அவ்வாறு முன்னேறுவதற்கு உந்துசக்தியாக எது உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்" என ஒரு ஞானி போல் பேசினார்.

ஐயரும் பிள்ளையும் வ.உ.சி.யின்  உந்துசக்தி எதுவாக இருக்கும் என யோசித்தனர்.

வ.உ.சி. மெல்ல இருமிவிட்டு, தம்பிகளா, என் சரிதத்தை நான் எழுதி வருவது உங்களுக்குத் தெரியும். யான் யாத்த‘மெய்யறிவு’ என்னும் கவிதை நூலிலே ‘அறிஞரோடு நட்புச் செய்தலும் அருள்; அறிவிலார்க்கு அறிவை அளித்தலும் அருள்; கடவுளை உய்த்து உணரும் ஞானிகளுக்கு உதவிகள் செய்வதும் அருள்’ என்று குறித்துள்ளேன்.

அக்கூற்றுக்கு உகந்த பலருள் அடியேனை ஆளாக்கியவரைத் தரிசித்தது இந்த ஐஸ் ஹவுஸில்தான்" என்றார்.

யார் சாமி அந்த மகான்?" என மாணிக்கம்பிள்ளை கேட்டார். நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில் சொல்ல ஆரம்பித்தார் வ.உ.சி..

அந்தக் காட்சி விரிந்தது.

1900-ஆம் ஆண்டில் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞராக வ.உ.சி. பணி புரிந்து வந்தார். பெரும் செல்வந்தரான அவர் ‘தெய்வப் பேரவை’ உறுப்பினர்.

சிவநெறிச் செல்வருமான அவர் துறவிகளின் செல்வமான வைராக்கியத்தையும் பெற விரும்பினார்.

வள்ளிநாயகம் என்ற துறவி, அவருக்கு கைவல்யம், விசார சாகரம் ஆகிய வேதாந்த நூல்களைப் படிப்பித்தார்.

ஆனால் ‘சாரமற்றது உலக வாழ்க்கை’ என்ற சக்கைக் கருத்து அவரின் மனதில் புகுந்துவிட்டது. அதனால் அவருக்கு வந்தது வறட்டு வைராக்கியம்.

‘எதைக் கொண்டு வந்தோம், எதைக் கொண்டு செல்ல?’ என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் அவரது பக்கத்துணையாயினர்.

வேதாந்தம், சித்தாந்தம் எது கற்றாலும் அந்தம் அவருக்கு ஆறுதலைத் தரவில்லை. முடிவில், ஊர் மாற்றம் அக மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதால் தமது அத்தையுடன் சென்னப்பட்டினத்திற்குச் சென்றார் வ.உ.சி.

ஒரு நாள் இளைஞர் வ.உ.சி மெரினா கடற்கரையில் உலவி வந்தபோது,மிஸ்டர் சிதம்பரம், இதோ இந்த ஐஸ் ஹவுஸில்தான் சுவாமி விவேகானந்தர் 9 நாட்கள் தங்கியிருந்தார், தெரியுமா?" என்று ஒரு நண்பர் கேட்டார்.

ஓ, அந்த வேதாந்தச் சிங்கத்தைத் தரிசிக்காதது அடியேனின் தவக்குறைவு" என்றார் வ.உ.சி அத்திசை நோக்கிக் கைதொழுதபடி.

இப்போது அவரது சக சீடர் ஒருவர் இங்குள்ளார்"

அப்படியா? விவேகானந்த அடிகளாரைப் போல் இவரும் வேதாந்தச் சிங்கமோ?"

இல்லை பிள்ளைவாள்! இவரது திருநாமம் சுவாமி ராமகிருஷ்ணானந்தர். இவர் கர்ஜிப்பதில்லை. ஆனால் நம் அகத்தில் ஓயாமல் ஒலிக்கும் கர்ஜனையை அடக்குபவர்".

பலே, அவர் சூரியன், இவர் சந்திரனோ! சரி, இன்றே நான் சுவாமிகளைத் தரிசிக்கிறேன்" .

தத்துவச் சிக்கல்களில் மனமும் மூளையும் கொதிப்படைந்திருந்த வ.உ.சி. அந்தக் கட்டிடத்தினுள் மெல்ல நுழைந்தார். அட, அவரது உஷ்ணம் உடனே குறைந்து விட்டதே! ஐஸ் ஹவுஸ் அல்லவா! அங்கு வாழ்பவர் சசி (நிலவு) மகராஜ் (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்) அன்றோ!

பூஜையறையில் சசி மகராஜின் சேவைகளைப் பார்த்து வியந்த வ.உ.சி. அவர் முன் தண்டனிட்டார்; பிறகு சுவாமிகளை நம்பித் தமது மனதைத் திறந்து காட்டினார்.

பேச்சிடையே சசி மகராஜ், தம்பி, சுதேசியம் பரவி வரும் நம் பூமியில் கைத்தொழில் வளர்க்க எத்தகைய முயற்சி செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.

சுவாமிகள் சிந்தாந்தமோ, வேதாந்தமோ  பற்றிச் செப்புவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தார் வ.உ.சி.

அதனால் சற்று அலட்சியமாக, இவ்வுலகமோ கனவாகும். இதைப் பற்றிய நினைவு எதற்கு? நெடிய முயற்சி ஆற்றுவதற்கு என்ன இருக்கிறது? கீழ்க்கோடோ, மேல்கோடோ எது உயர்ந்தால் என்ன? வாழ்வும் - தாழ்வும் மாயையின் விளையாட்டல்லவோ?" என்றார்.

உடனே சசி மகராஜ், சூரிய மகராஜ் ஆகி மொழிந்தார்:

என்ன தம்பி இது! மாயையைப் பற்றியும் திண்ணை வேதாந்தத்தைப் பற்றியும் இப்படி வீணாகப் பேசிப் பேசியே நாம் நம் பூமியை அந்நியனுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டோம். நீங்கள் இந்த வெற்று மாயை வாதத்தை விட்டுவிடுங்கள்.

‘Maya is a statement of fact of this universe’ ‘பிரபஞ்சத்திலுள்ள நிஜங்களின் ஒரு சித்திரமே மாயை’. அவ்வளவுதான். இதற்கு மேல் அதற்கு மதிப்பில்லை’ என்பார் சுவாமி விவேகானந்தர்."

......எல்லா உயிர்களும் கடவுளின் படைப்பு. அவற்றுக்கு ஆற்றும் சேவை அவனுக்கே ஆற்றுவதாகும். மாயையைப் புரிந்து கொண்டு, அதே சமயம் உலகிலிருந்து ஒதுங்காமல் உயர்வதற்கு நாம் முயல வேண்டும். நம்முடன் உள்ளவர்களையும் உயர்த்த வேண்டும். இப்படிச் சிந்தித்தால் உங்களுக்குள் ஆன்மிக அக்னி எழும்; ஆண்டவன் என்ற ஜோதி மலரும்".

பின்பு சசி மகராஜ் விவேகானந்தரின் ‘செயல்முறை வேதாந்தத்தை’ விளக்கினார். அவற்றின் முன்பு வ.உ.சி. யின் மாயை பற்றிய போக்கு போக்கற்றுப் போனது.

‘அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாரத மாதாவே உங்களது வழிபடும் கடவுளாக இருக்கட்டும்’ என்பதல்லவா  விவேகானந்தர் ஒவ்வோர் இந்தியனுக்கும் காட்டிய தேசிய - ஆன்மிக விடுதலைக்கான மார்க்கம்!

அந்த மார்க்கத்தில் பயணித்த தலைவர்கள் பலரும் தத்போதத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு, ‘தாய் நாட்டின் அடிமை விலங்கை உடைப்பதுதான் முதல் பணி’ என்று முடிவெடுத்தனர்.

அதுவே அவர்களுக்கு ஆன்மபோதத்தை விரைவில் வழங்கும் என்று நம்பினர். அப்படிப்பட்ட தலைவர்களுள் முக்கிய ஒருவரான வ.உ.சி.யும் அந்த உபதேசத்தை ஏற்றதில் வியப்பென்ன!

சசி மகராஜை வீழ்ந்து நமஸ்கரித்த அவர் தமது உடையில் ஒட்டியிருந்த தூசுகளை உதறிக் கொண்டு எழுந்தார் வேதாந்த வீரனாக. அதன் பின்னரே அவர் கப்பலோட்டிய தமிழன் ஆனார்.

சசி மகராஜ் பற்றி வ.உ.சி. கூறி முடித்தார்.

மணி தம்பி, மாணிக்கம். அடியேனது வரலாற்றில் ராமகிருஷ்ணானந்த அடிகளாரைத் தரிசித்ததை இவ்வாறு பதிவு செய்திருக்கிறேன், பாருங்கள்..." என்று கூறிச் சில காகிதங்களைக் காட்டினார்.

ஐயா, அதை உங்க திருவாயாலேயே வாசிக்கணும்" என மாணிக்கம் பிள்ளை வேண்டினார்.

ஓ, நான் வசித்த விதத்தை என்னை வைத்தே வாசிக்க வைப்பதா? பேஷ்" என்று புன்னகைத்த பிறகு வாசித்தார்:

‘சுதேசியம் ஒன்றே சுகம்பல அளிக்கும். இதே என் கடைப்பிடி என்றனன். அவனுரை வித்தென விழுந்தது. மெல்லிய என்னுளம் சித்தம் அதனைச் சிதையாது வைத்தது!’

மிக அருமை ஐயா. அந்தத் துறவி உங்கள் அகத்தில் விதைத்தது வீரிய வித்துதான். அதனால்தான் வாழ்வில் கடும் புயலையும் கொடும் வெப்பத்தையும் தாங்கி இன்றும் நீங்கள் நிற்கிறீர்கள்" என்றார் மணி ஐயர்.

வ.உ.சி. அவர்கள் தாம் பட்ட கஷ்டங்கள், இன்றும் பட்டு வரும்  இன்னல்கள், புறக்கணிப்புகள் - அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சேர்ந்தவர்களுக்கும் வந்த இடர்கள் யாவற்றையும் தாங்கி நிற்க முடிவது எதனால்? ‘இது நிச்சயம், மன வலிமை மட்டுமல்ல! இறையருளால் இவருக்கு வாய்த்த ஆன்ம பலமே’ என மணி ஐயர் சிந்தித்தார்.

என்றாலும் வ.உ.சியின் இன்றைய வறுமையை நினைத்ததும், கடலில் ஒரு பேரலை எழுந்தது போல் அவர் ஆத்திரப்பட்டார். யார் யாரையோ சாடினார்.

வ.உ.சி. அமைதியாக, தம்பி, நம் மக்களை நாமே தூற்றுவதா? அது நம் சுதேசிக் கப்பலை நாமே விற்ற அதே தவற்றுக்கு ஒப்பல்லவா?" என்றார்.

மாணிக்கம் பிள்ளை, எப்படி சாமி இந்த சனங்கள உங்களால மன்னிக்க முடியுது? வெள்ளைக்காரனவிட இந்தத் தேசத் துரோகிங்களத்தான் நாட்டைவிட்டு முதலில் அடிச்சுத் தொரத்தணும்" என்றார் கோபமாக.

உங்கள் இருவரின் அன்பிற்கும் நன்றி. தேசத்திற்காக உழைப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விவேகானந்தப் பெருமான் கூறியிருக்கிறார். அதோடு, எனது அரசியல் குருவான திலகர் பெருமான் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார். ‘சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதி, செயல்களை ஈசுவரார்ப்பணமாகப் புரிந்திடு’ என்பதுதானே அதன் சாரம்?"

அது எப்படியோ சாமி, தாங்க முடியாத கொடிய அக்னியில் நீங்க இருந்தாலும், அப்பர் சுவாமிகள் போல, ‘மாசில் வீணையும், மாலை மதியமும் வீசு தென்றலும்...’ என்று பாடுகிறீர்கள்" என்றார் பிள்ளை.

வ.உ.சி. புன்னகையுடன், சரியாகச் சொன்னீர்கள். சசி மகராஜைத் தரிசித்த பின், ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற இரு சீடர்களான சுவாமி பிரம்மானந்தரையும் அபேதானந்தரையும் தரிசித்தேன். அதனால்தான் நீங்கள் கூறும் நிலை அடியேனுக்கு வந்துள்ளது என எண்ணுகிறேன். அதை

யும் அடியேன் பதிவு செய்திருக்கிறேன். படிக்கிறேன்:

‘வானில் ஒளிரும் மதியென விளங்கி

வானுறத் திசையுற வளர்ந்து பரந்து,

தபோதன ராகித் தாரணி அளிக்கும்

அபேதா னந்தன் பிரமானந்தனாம்

சீரிள வேனிலும் தென்றலும் வந்தன.’

நீண்ட நேரம் பேசியதால் களைப்பால் வ.உ.சி. சற்று கண்ணயர்ந்தார். பிள்ளையின் மடியில் வ.உ.சி.யின் சிரசு, பாதத்தைப் பிடித்தபடி மணி ஐயர். பலத்த காற்று அடித்ததும் இருமிக் கொண்டே எழுந்தார் வ.உ.சி.

பிறகு மெல்லக் கூறினாலும் சொல்ல வந்ததைத் தெளிவாகச் செப்பினார்:

தம்பிகளே, விடுதலை வீரர்களான எங்களுள் பலரும் தெய்வ பக்தி மிக்கவர்கள். தேச விடுதலைக்காக உழைப்பது, தியாகங்கள் புரிவது எல்லாம் ஆன்ம விடுதலைக்காகத் துடித்துக் கொண்டிருந்த எங்களுக்குப் பெரும் ஆன்மிகப் பயிற்சியானது.

பொது வாழ்வில் ஈடுபட்ட நாங்கள் ஒவ்வொருவரும் ஆன்ம பலம் கொண்டிருந்ததால், அரசியல் களத்திலும் எங்களால் எல்லாச் சிரமங்களையும் எதிர்கொண்டு சமாளிக்க முடிந்தது" என்று கூறி வந்த அவர் சட்டெனக் கண் மூடினார்; கை கூப்பினார்; நிமிர்ந்து அமர்ந்தார்.

பின் கம்பீரமாக, என் அருமை பாரதமே, இன்று நீ அடிமை. விரைவில் நீ விடுதலை பெறுவாய். தெய்வ பக்தியும் தேச பக்தியும் ஒருங்கே கொண்டவர்களால்தான் தாயே, உன்னை நன்கு பாதுகாக்கவும், பராமரிக்கவும் முடியும். இறைவா...,இறைவா..., என் பாரதத்தை அவ்வாறு மேம்படுத்து..." என்றார் வ.உ.சி கண்ணீருடன்.

சிதம்பரனார் சிந்திய கண்ணீரைத் துடைக்க அந்தக் காலத்துத் தமிழன் மறந்தான். இந்தக் காலத்துத் தமிழ் மகனாவது அந்தக் கண்ணீரை நிறுத்துவானா?

                

சுவாமி விமூர்த்தானந்தர்

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இதனை கேட்க...

thanjavur