RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 16

22.11.21 07:46 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 16

செல்போனும் ஒரு துறவியும்

ஐ-போனுடன் அலையும் ஓர் இளைஞனும், I - என்ற அகங்காரத்தைத் துறந்த ஒரு துறவியும் சந்தித்ததை ஒரு கடித வடிவில் சிறுகதையாக நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள். அதற்கு முன்பு உங்கள் செல்போனை மௌனமாக்குங்கள்.

     அன்பு விஜய், வணக்கம்.

உன் எல்லாவித வளர்ச்சிக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துகள். அடியேனது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் உனக்காக என்றும் உண்டு.

நான் உன்னோடு ஒரு நாள் முழுவதும் தங்கி இருக்க வேண்டும் என்ற உனது பல வருடக் கனவு நிறைவேறிவிட்டதில் உனக்குச் சந்தோஷம்தானே?

எங்கள் கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் ஏழைச் சிறுவனாகப் படிக்கச் சேர்ந்த நீ இன்று ஒரு பெரிய கம்பெனியின் சி.இ.ஓ!! பெருமையாக இருக்கிறது.

எங்கள் பள்ளியின் விஜய் வேறு; பரபரப்பான இன்றைய கார்ப்பரேட் விஜய் வேறு.

அந்த விஜய், என்னோடு ஆசிரம பிரார்த்தனைக்கூடத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு பக்தியுடன் பாடுவான்; ஜபம் செய்வான்; அயராமல் சேவை செய்வான். தெய்விக நூல்களைப் படிப்பான், பள்ளிப் படிப்பிலும் படு சமர்த்தன்.

போகட்டும், நீ இப்போது எப்படி உள்ளாய்? என்பதை நான் கூற வேண்டும் என்பதுதானே உன் கேள்வி. உனது இக்கேள்வியேநீ வளரத் துடிப்பவன் என்பதைக் காட்டுகிறது.

தம்பி, உனது வீட்டின் மதிப்பு இன்று ஐந்து கோடியாவது இருக்கும். உனது கம்பெனியின் லாபமே பல நூறு கோடிகள் என்றாயே! எங்கள் விஜய் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறான் என்று பலரிடமும் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டேன்!

ஆனால், நான் உன்னைக் கவனித்ததில் எனக்குத் தோன்றியது ஒன்றுதான். அது என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது.

கடவுளின் கையில் கருவியாக இருந்து கொண்டு காரியங்களைச் செய்ய வேண்டிய நமது கையில், இன்று, கடவுளுக்குத் தர வேண்டிய கவனத்தைக் களவாடுகிறதே ஒரு கைக்கருவி...!

உனது ஐ போனைத்தான் செப்புகிறேன்.

துறவியாகிய எனக்கு இறைவனே பிரதானம். மற்ற எல்லாம் அடுத்த நிலை கவனமே பெறும் என்பது உனக்குத் தெரியும்.

நீ உன் செல்போனுக்கு - அதன் ஒவ்வோர்ஆப்ஸ்க்கும் தரும் கவனம், அதைப் பயன்படுத்தும் விதம் எல்லாம் என்னைச் சிந்திக்கத் தூண்டியது.

அந்த ஆழமான, ஆர்வமான, வேகமான கவனம் எனக்கு இறைவன் மீது வந்துவிட்டால், நானும் நிறைநிலையை அடைந்த ஒருவனாகிவிடுவேனே!

விஜய், நீ படிக்கும் காலத்தில் காலையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தைப் பார்த்த பிறகே எழுந்திருப்பாய்.

ஆனால் உன்னுடன் நான் இருந்த அன்று, நீ விழித்ததும் மிஸ்டு அழைப்புகள் எத்தனை வந்துள்ளன என்று பார்த்தாய்! பிறகு பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களை முடித்து விட்டு மறு வேலை பார்த்தாய். அப்ப ட்ரீட் கவனிப்பது தான் உன் காலைக்கடன் போல் தெரிந்தது.

அதன் பிறகே ஸ்க்ரீன் சேவரிலுள்ள உன் இஷ்டதெய்வத்தை வணங்கினாய். லைப்சேவரை, ஸ்க்ரீன் சேவராக மட்டும் மாற்று வைத்துள்ளா யே, தம்பி?

காலையில் அடிக்கடி பரபரப்புடன் போனைப் பார்த்தாய். ஒருவேளை உன் சேர்மனிடமிருந்தோ, உன் மனைவியிடமிருந்தோ அழைப்பை எதிர்பார்த்திருந்தாய் போலும்.

சைலண்டில் போட்டிருக்கிறாயா? சார்ஜ் இருக்கிறதா? டவர் இருக்கிறதா? என்றெல்லாம் சோதித்தாய்.

இதையெல்லாம் பார்த்த நான், ஸ்ரீராமகிருஷ்ணருக்காக என் அகத்தில் அவரது வரவுக்காக இவ்வாறு ஆவலுடன் காத்திருப்பேனா, அவரைத் தரிசிப்பதற்கு விடாமல் இப்படி முயற்சிக்கிறேனா, குறைந்தபட்சம் குருதேவரிடமிருந்து எனக்கு ஏதாவது ஓர் ஆன்மீக உந்துதல் வருமா என்று ஏங்கினேன்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள் கிடைத்திருந்தும், அதை நான் முழுவதுமாக அனுபவிக்காமல், என் உணர்வைசைலண்டில்போட்டிருக்கிறேனா என்று கலங்கினேன்.

போனில் சார்ஜ் உள்ளதா என்று நீ பார்த்தபோது, எனக்கு ஓர் எண்ணம் வந்தது. கடவுளின் கிருபையைப் பெற எனக்கு இருக்க வேண்டிய தகுதிகளைப் பூரணமாக அடைந்துள்ளேனா என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொண்டேன்.

மற்றவரின் போன் அலறியபோதுகூட, உன்னை அறியாமல் உன் போனை அடிக்கடி நீ கவனித்தாய்.

இறைவனது அருளில் நிற்க வேண்டும் என்ற என் லட்சியத்திற்காக, உன்னைப் போல் நானும் அடிக்கடி ஏங்குகிறேனா? எனக்கு உனது வேகம் இல்லையே தம்பி!

நாம ஜபம் செய்கிறேன். எப்போது ஜபித்தாலும் அந்தந்த நேரத்தில் ஏதோ ஓர் ஆன்மிக அனுபவம் - குறைந்தபட்சம் ஆழ்ந்த பக்தியுணர்வாவது எனக்கு வருகிறதா.....? இல்லையே தம்பி!

அப்படி ஏதும் வராதபோது, ‘எனக்கு இன்று அவ்வளவுதான் நாமருசி கிடைத்தது, ஜபானந்தம் இன்று எனக்குக் கிடைக்கவில்லை, நாளை கிடைக்கலாம்என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு வேறு வேலை பார்க்க ஆரம்பித்து விடுகிறேன்.

ஆனால் நீயோ, காலையில் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு, பொறுமையின்றி உன் மனைவிக்கு மெசேஜ் அனுப்பினாய். வாட்ஸ் ஆப்பில் படங்களுடன் கூடிய செய்திகளைத் தட்டி விட்டாய். நீ அவளுக்காக ஏங்கியிருப்பதை, பேசத் தவிப்பதைவாய்ஸ் ரெகார்ட்செய்து அனுப்பினாய்.

எப்படியாவது அவளிடமிருந்து பதிலைப் பெற்ற பிறகே அடுத்த காரியம் செய்தாய்.

உனக்கு வந்தமிஸ்டு கால்களைக் கவனித்தாய். எவற்றைத் திருப்பிக் கூப்பிடுவது, எவற்றை எல்லாம் ஒதுக்குவது என்று டக்டக்கென்று முடிவெடுத்தாய். உனக்குத்தான் அதில் என்ன ஒரு துல்லியம்!

நானும் என் தியான நேரத்தில் வந்து போகும் சம்ஸ்காரப் பதிவுகள் அல்லது வேண்டிய - வேண்டாத எண்ணங்களை எப்படி விவேகத்தோடு எந்த வேகத்தில் பிரித்துப் பயன்படுத்துவது அல்லது உடனுக்குடன் தள்ளுவது என்பதை உன் மூலம் கற்றேன்.

பிறகு நாம் இருவரும் உன் வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலுக்குப் போனோம். கோவிலில் செல்போனைசைலண்ட் மோடில்போட்டாய்.

கடவுளை நினைத்து உள்ளே சென்றாய். சிறிது நேரத்திலேயே போனில் ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்று உன் கை அடிக்கடி போனின் பக்கம் சென்றது. உன் மனம் அலைந்ததை உணர்ந்தேன்.

கோவிலை விட்டு வெளியே வந்ததும் கை உன் செல்போனை உயிர்ப்பித்தது. யாராவது உன்னைக் கூப்பிட்டிருக்கிறார்களா என்று பரபரத்தாய். உன் கம்பெனியின் வேலைப்பளு அப்படி இருக்குமோ என்னவோ!

அத்தகைய ஈடுபாடு கடவுளைத் தேடுவதில்,

ஞானத்தை வளர்த்துக் கொள்வதில்,

பக்தியைப் பெருக்குவதில், 

மக்களுக்காகச் சேவை செய்வதில் எனக்கு வர வேண்டுமே!

சுவாமிஜி, வேறு யாருக்கோ ரிங்டோன் அடித்தால்கூட அனிச்சையாக நான் என் செல்போனைப் பார்க்கிறேன்என நீயே ஒருமுறை கூறினாய் வேடிக்கையாக.

அப்போது பக்திமதி சபரிதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தாள். காட்டில் அவள் ஏகாந்தமாக வசித்து வந்தாள், ராமரை ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தாள்.

மரத்திலிருந்து சிறு இலை விழுந்தாலும், அந்த ஒலியைக் கேட்டு, ராமர் வந்துவிட்டாரோ என்று தவிப்பாளாம்.

வேண்டியவர்களின் போனை எதிர்பார்த்து நீ தவிப்பதை நினைத்தால், ‘எப்போ வருவாரோஎன ஈசனைக் குறித்து கோபாலகிருஷ்ண பாரதி பாடியது நினைவிற்கு வந்தது.

நான் ஸ்ரீராமகிருஷ்ண தரிசனத்திற்காக அவ்வாறு காத்திருக்கிறேனா என்று எண்ணிப் பார்த்தேன். சோகத்தில் என் தலை கவிழ்ந்தது.

கோவிலுக்குப் போய் வந்த பின் நீயே எனக்குச் சிற்றுண்டி பரிமாறினாய். அப்போது சிலர் உனக்கு போன் செய்தனர். முதலில் நீ அவர்களைப் பொருட்படுத்தவில்லை.

சிலரின் எண்களைப் பார்த்ததும் ஒதுக்கிவிட்டாய். ஒருவரிடம் நீ இப்போது மிகவும் முக்கியமான வேலையில் இருப்பதாகச் சொன்னாய்.

திரும்பத் திரும்பச் செய்தவர்களிடம் சற்று கறாராகப் பேசி வேறு நேரத்தில் அழைக்கச் சொன்னாய்.

அதைப் பார்த்து நான் கற்றது முக்கியமானது.

தியானம் செய்யும்போது எண்ண அலைகளை எப்படியெல்லாம் தவிர்க்க வேண்டும்; எதையெல்லாம் நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும்;

எப்படிச் சிலவற்றைத் தள்ளிட வேண்டும், வேறு சிலவற்றைத் தூக்கியடிக்க வேண்டும் என்பதைக் கற்றேன்.

நீ கூட்டங்களில் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வெளி உலகத் தொடர்பை நிறுத்திக் கொள்வது எனக்கு ஆழ்நிலை தியானத்தை நினைவுபடுத்தியது.

வெளிப்புற ஓசை காதுகளில் புகாமல், வெளிப்புறக் காட்சிகள் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளொளியைத் தரிசிக்கும் கலைக்கு இது ஒத்திகையோ என்று எண்ணத் தோன்றியது.

பிறகு நீ செல்போனை சார்ஜில் போட்டாய்.

சுவாமிஜி, நமக்குச் சாப்பாடு மாதிரி செல்லுக்கு சார்ஜ் வேணும். சார்ஜ் இருந்தாதான் எல்லாக் காரியங்களையும் நல்லா செய்ய முடியும்என்றாய் என்னிடம்.

நீ சொன்னது சரியாகத் தோன்றியது. நான் ஒரு பக்தன், ஒரு துறவி என்ற வகையில், ஒவ்வொரு நாளும்மந்திர சார்ஜுடன் இருக்கிறேனா?

மந்திர பலத்தில் இருந்து நான் ஆற்ற வேண்டிய சேவைகளையும் செய்கிறேனா என்று சிந்தித்தால்...

மந்திர சார்ஜரைச் சொருகிவிட்டாலும், ஸ்விட்ச் போடாமல் போனவன் நிலையில் அதாவது பக்தி இல்லாமல் ஜபிக்கிறேனோ என்று அச்சப்படுகிறேன்.

இப்படி 24 x 7 நாளும் நீ செல்போனை உன் நினைவிலும் நெஞ்சிலும் நிறுத்தியுள்ளதைக் கவனிக்கும்போது இதில் சிறிதாவது இறைவனை என் மனதில் நிலைநிறுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என என் மனம் ஏங்குகிறது.

தம்பி, நீ எனக்கு இப்போது உபகுருவாக ஆகிவிட்டாய். உன்னிடமிருந்து இன்னும் நிறைய கற்றேன். செல்போன் மூலம் நீ செயலாற்றுவதைக் கொண்டு, நான் பார்த்த சில விஷயங்களை உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் உனக்கு எல்லா நலன்களையும் அருளட்டும்!

இப்படிக்கு,

உன் நலம் விரும்பும் அன்பு சுவாமி.

 

thanjavur