சிக்னல்
‘ஆறு மணிக்கு மேடத்தைச் சந்திப்போம்’.
இந்த எஸ்.எம்.எஸ். வந்ததும் அந்த இளைஞர்களுக்கு ஒரே குஷி.
5.58-க்கே அனைவரும் மேடத்தின் அறையில் ஆஜர்.
தஞ்சையில், கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் அந்த எட்டுப் பேரும் சேர்ந்தால், பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வர்.
ரத்ததான முகாம் மூலம் பலருக்குப் புது ரத்தம் ஊறும்; பல ஏழை மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்படும். எல்லாம் கிரிஜா மேடத்தின் பயிற்சிதான். அந்த எட்டுப் பேரும் அவரது மாணவ - மாணவிகள்தாம்.
“ராதா, இன்னிக்கி எந்த சர்வீஸ் பற்றி பேசப் போறோம்? புதுசு புதுசா மேடம் எப்படித்தான் சிந்திக்கிறாங்களோ!” என்றான் சங்கர்.
“நமக்குப் படிப்பு சுமையா இல்லாம சுகமாப் போறதுக்கு மேடம் தர்ற சர்வீஸ் பயிற்சிதான் காரணம்” என்றான் சேது.
“பவித்ரா, இன்னக்கி நீ மீட்டிங் குறிப்புகளை எடு” என்று சங்கர் சொன்னதும் பவித்ரா, தனது லேப்டாப்பைத் திறந்தாள் மகிழ்ச்சியாக.
“அட, என்ன? இன்னிக்கு ஸ்க்ரீன், எல்.சி.டி. மானிட்டர், எல்லாம்? ஏதாவது வீடியோவா?" என்று கேட்டாள் ராஜா.
“ஆமா, ஒனக்காக லேட்டஸ்ட் சினிமா காட்டப் போறாங்க” என்றாள் பவித்ரா.
பிறகு சில ஆரோக்கியமான அரட்டைகள். இந்தச் சலசலப்புக்கு நடுவே சங்கீதமாய் வந்தார் மேடம்.
என்ன, மேடத்தின் கண்களில் கருணைக்குப் பதில் இன்று ஆதங்கம் தெரிகிறதே? அவரது நாற்காலிக்குப் பின்னே சுவாமி விவேகானந்தரின் கம்பீரமானப் படம்.
“மேடம், எதுக்கு இந்த மீட்டிங்?" - பாண்டியன்.
“இந்த ‘க்ளிப்பிங்’கைப் பாருங்க" என்றார் மேடம் சற்றுக் கலங்கியவாறு. ராதா விளக்கை அணைத்தாள்.
“இத விஜய் டி.வி-யில காட்டினாங்களே!” - சேது.
திரையில்... அது ஒரு டிராஃபிக் சிக்னல். பரபரப்பான சாலை. இரு புறமும் வாகனங்கள் பேய்களாய்ப் பறந்து கொண்டிருக்கின்றன. வாகனம் ஓட்டும் பல வறட்டு மனிதர்கள் சிவப்பு, பச்சை, எண்கள், போலீஸ் இவற்றில் மட்டுமே கவனம் கொண்டிருந்தார்கள்.
சிக்னல் விழுந்தது. சே, முந்திக்கொள்ள முயன்ற எல்லா வாகனங்களும் வெறுப்புடன் நின்றன.
சிக்னலில் 60.
ஆட்டோக்கள், கார்கள், பஸ்கள் என்று 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள். ஓரத்தில் போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். ஓரிரு பிச்சைக்காரர்கள் ஓடோடி, மூடப்பட்ட ஏசி கார்களின் கதவுகளைப் பிராண்டினார்கள்.
சிக்னலில் 52.
முன் வரிசையில் ஒரு டூ-வீலர்க்காரர் எரிச்சலுடன் எண்களைப் பார்த்தார். முன்னுள்ள கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டார். மொபைலைக் குடைந்தார். பாட்டு கேட்டார். ஹெல்மெட்டைக் கழற்றித் தலையைத் துடைத்துக் கொண்டார். எச்சில் துப்பினார்.
சிக்னலில் 45.
திடீரென ஆ, ஐயோ என்ன இது? “கொல்லுடா அவன” என்று கத்தியபடி ஒரு கும்பல்
25 வயதுள்ள ஓர் அப்பாவியைத் துரத்துகிறது. அவர்களின் கைகளில் உருட்டுக்கட்டை, கத்தி.
ஓட முடியாமல், அவன் விழுந்தான். மக்கள் கூட்டம் ஊமையாக வேடிக்கை பார்த்தது!
“போட்டுத் தள்ளுடா, அந்த..." ஒருவன் அவன் மண்டையில் ஓங்கி அடித்தான். ரத்தம் தெறித்தது.
சிக்னலில் 35.
ஒருவன் கத்தியை எடுத்தான். மற்றவன் மிதித்தான். ‘விட்டுடுங்கடா என்னை’ என்ற அவனது பரிதாபமான அலறல் பலவித ஹார்ன் ஒலிகளில் தேய்ந்து போனது.
நான்கு பேரும் அவனைப் புரட்டியெடுத்தபோது ஓர் ஆட்டோ டிரைவர் ஓடி வந்தார்.
“அவன விடுங்கப்பா" என்று டிரைவர் கூறுவதற்குள், அவருக்கும் அடி விழ அவரும் கவிழ்ந்தார். அவருக்கு உதவ ஒருவரும் இல்லை.
“குடிச்சுட்டுச் சண்டை போடறாங்க, டாமிட்" என்று யாரோ ஒரு ‘பார்வையாள’ரிடமிருந்து குரல் வந்தது.
சிக்னலில் 25.
அடிபட்ட அந்த அப்பாவி ஊர்ந்து, சாலையின் ஓரத்தில் முனகியபடி கிடந்தான். பிச்சைக்காரர்களும் ஓடிவிட்டனர். கொலைகாரக் கூட்டத்தில் லுங்கி கட்டிய ஒருவன் கீழே கிடந்தவனின் கழுத்தில் காலால் தேய்த்துவிட்டு ஓடினான். முனகலும் முடிந்தது.
சிக்னலில் 13.
அந்தக் கூட்டம் எதிர்த் திசையில், சுற்றி நின்றவர்களைக் கேலி செய்தபடி ஆடிக் கொண்டே ஓடியது.
முன் வரிசையில் நான்கைந்து டூ-வீலர்கள், கார்க்காரர்கள் எல்லோரும் சிகப்பு விளக்கில் எண் 0-க்காக வெறுப்புடன் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களது முகங்களில் பரபரப்பில்லை.
‘இதெல்லாம் சாலையில் சகஜமப்பா’ என்பதுபோல் கவனத்தைத் திருப்பிக் கொண்டார்கள். ஒருவர் அடிபட்டவனை மொபைலில் புகைப்படம் எடுத்தார்.
சிக்னலில் 0.
மீண்டும் ஹார்ன் சத்தம் பலமானது. பரபரப்பு. புகை, எரிச்சல். எந்திரங்களுடன் பழகிப் பழகி எந்திரமாகவே மாறிவிட்ட மக்கள். சிந்தியிருந்த ரத்தத் துளிகளை டூ-வீலரின் டயர்கள் தேய்த்துவிட்டன.
விளக்கைப் போட்டார் கிரிஜா மேடம். அந்த எட்டுப் பேரின் கண்களிலும் தார்மீகக் கோபம் கொப்பளித்தது. வெடிக்கும் கணத்திற்காகக் காத்திருக்கும் எரிமலைபோல் அக்கணத்தை அவர்கள் உணர்ந்தனர்.
“மேடம், இந்தச் சம்பவம் நம் தஞ்சையில்தான் நடந்தது” என்றான் ரமேஷ் மெல்ல.
மேடம் கண்களைத் துடைத்தபடி, “தம்பி தங்கைகளா, நம்ம ஜனங்க இப்படி உணர்ச்சிகளே இல்லாத சுட்ட செங்கற்களாக மாறி வர்றாங்களே...? நாம இதற்கு ஏதாவது செய்யணும்" என்றார் கோபத்துடன்.
“மேடம், இந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் வந்தது. ஆனா மறுநாள் அந்த ஆள் செத்துட்டான்" என்றான் ரமேஷ்.
“அந்தக் கொலைகாரக் கும்பல் அந்த அப்பாவிய அடிச்சப்போ, அங்கிருந்த மக்கள நெனச்சாதான் அருவருப்பா இருக்கு. சே, என்ன ஜென்மங்க. மக்கள் இப்படி மனிதநேயம் இல்லாம ஜடங்களா போறது நம்ம நாட்டுக்கு வர்ற மோசமான நிலை. அதற்கான ‘சிக்னல்’தான் இந்த சம்பவம்”.
அங்கிருந்த சூட்டைக் குறைக்க ராதா, “நாம நம்ம ‘சுவாமி விவேகானந்தர் உணர்வு மையம்’ மூலம் இந்தச் சம்பவத்தைக் கண்டிச்சு மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தலாமா?" என்று கேட்டாள்.
“அதோட, ஒரு மீட்டிங் போட்டு, கோழைகளான, டோண்ட் கேர் பாலிஸி மனிதர்களைப் பற்றிக் கிழிகிழியென்னு கிழிக்கணும்" என்றான் சேது.
நிர்மலா மெல்ல, “சாரி, நான் இப்படிக் கேக்கறதுக்கு. இப்படி குடிகாரங்க சண்டை போட்டா யார்தான் என்ன செய்ய முடியும்? டாஸ்மாக்கை மூடினாதான் இந்த முரட்டுத்தனங்கள் ஓயும்" என்றாள்.
மேடம் உடனே, “ நிர்மலா வெறும் சண்டைன்ன நாம விட்டுடலாம். ஆனா அநியாயமா பட்டப்பகலில், முச்சந்தியில ஒரு உயிரத் துடிக்கத் துடிக்கச் சாகடிக்கும்போது ஜனங்க செத்தவுங்க மாதிரி சும்மா நின்னாங்களே! அதான் வருத்தமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு” என்றார்.
பவித்ரா டைப் செய்தபடி இருந்தாள்.
மீண்டும் மேடம், “நாம என்ன பேசுறோம் என்பது முக்கியமில்ல. இந்த உணர்ச்சியற்ற செயல்களைக் கண்டிக்கிற மாதிரி நாம ஏதாவது செய்யணும்” என்றார்.
சங்கர் அமைதியாக, “நாம என்ன செய்ய முடியும் மேடம்?” என்று கேட்டான்.
“என்னப்பா இப்படிக் கேட்கற? விவேகானந்தர் நூலைப் படிச்சுப் பாரு. நம் நாடு எப்படிப்பட்ட புண்ணிய பூமி என்பதெல்லாம் அப்ப உனக்குத் தெரியும். அந்தப் புண்ணிய பூமியில் பிறந்தவங்க, நடைப்பிணங்களாக, அக்கிரமம் நடக்கும்போது தைரியமா எதிர்த்து நிக்க வக்கற்றவர்களாக இருக்கறத நெனச்சாக் கேவலமா இருக்கு. ‘பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா;’ ” என்று பொரிந்து தள்ளினார் மேடம்.
இறுக்கமான அமைதி. பவித்ரா டைப் அடிக்கும் மெல்லிய ஒலி மட்டும் கேட்டது.
சற்று எரிச்சலடைந்த மேடம் பவித்ராவிடம், “பவி, ஒனக்கு இந்தச் சம்பவம் உறுத்தலியா? ஒண்ணும் சொல்லாம, சும்மா ஏதோ டைப் பண்றே?" என்று கேட்டார்.
“மேடம், முதல்ல பாஸ்கருக்கு ஒரு மெயில் அனுப்பிடுறேன்” என்றாள் பவித்ரா.
எல்லோருக்கும் எரிச்சல். இவ்வளவு பெரிய பிரச்னையைப் பற்றி யோசிக்கையில் இவள் தன் வருங்காலக் கணவனைப் பற்றியா நினைக்கிறாள்?
எல்லோரும் தன்னையே பார்ப்பதைக் கண்ட பவித்ரா, “மேடம், நா ஒரு முடிவு எடுத்துட்டேன்" என்றாள்.
“என்ன முடிவுடீ?" நிர்மலா விரைந்தாள்.
“மேடம், நான் அவருக்கு எழுதின மெயிலை வாசிக்கட்டுமா?” என்றதும், பவித்ரா இவ்வளவு விவரங்கெட்டவளா என்று பார்வையிலேயே எல்லோரும் கேட்டனர்.
“மேடம், ப்ளீஸ் கேளுங்க. ‘அன்பு பாஸ்கர், நான் நன்கு யோசித்து விட்டுத்தான் எழுதுகிறேன். உங்களுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. ஆனால் நான் இன்று உங்களைப் பற்றி ஆதாரப்பூர்வமாக அறிந்த பிறகு, என் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டேன்.
“நிச்சயம் நான் உங்களுக்கு மனைவியாக மாட்டேன்.
‘சக மனிதன் படும் துன்பத்தைக் கண்டு இரக்கப்படாதவன் மனிதனே அல்ல’ என்பார் சுவாமி விவேகானந்தர்.
உங்களைப் போன்ற இதயமே இல்லாத ஒருவரை, குறைந்தபட்சம் நல்லது செய்வதற்குக்கூட ஒரு சிறிதும் முயலாத உங்கள் போன்றவரை நான் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொள்ளவே முடியாது.”
இப்படிக்கு
இதயமுள்ள பவித்ரா
பவித்ரா படித்து முடித்தாள். “என்னடி என்னாச்சு ஒனக்கு?” என்று ராதா அவள் தோளை உலுக்கினாள்.
பவித்ரா, மேடத்திடம் அந்த சிக்னல் ‘க்ளிப்பிங்’கை மீண்டும் ஓட்டச் சொன்னாள். எல்லோரும் குழப்பத்துடன் அவளையே பார்த்தனர். மீண்டும் அதே காட்சி.
டிராஃபிக் லைனுக்கு முன்பாக, டூ-வீலரில், ஹெல்மெட்டைக் கழற்றி, தலையைத் துடைத்து, சினிமா பார்ப்பது போல், ஒருவன் சாவதை வேடிக்கை பார்த்த அந்த இளைஞன் திரையில் வந்ததும்,
“நிறுத்து...., மேடம், இவர் பாஸ்கர். எனக்கும் இவருக்கும்தான்...” என்றாள் பவித்ரா.
“ ... "
“சொல்லுங்க மேடம், பாஸ்கருக்கு மெயில் ரெடி. ‘எண்டர்’-ஐத் தட்டி விடட்டுமா?" - பவித்ரா.
கிரிஜா மேடம் கணத்தில் புரிந்துகொண்டு, பூரிப்புடன், “நீயே ‘எண்டரை’த் தட்டிவிடு பவி. நம் சமுதாயத்தின் தீமைகளைத் தரைமட்டமாக்குவதற்கான முதல் அடியாக இது இருக்கட்டும்” என்று கூறி பவித்ராவை அணைத்துக் கொண்டார்.
உடனே அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். மேடத்தின் அன்புப்பிடியிலிருந்து பவித்ரா மெல்ல கண்ணைத் திறந்த போது, ஒரு ஜோடிக் காந்தக் கண்கள் அவளைக் கனிவுடன் நோக்கி ஆசீர்வதித்தன.
அவை சுவாமி விவேகானந்தரின் கருணைக் கண்கள்!
சுவாமி விமூர்த்தானந்தர்
12 நவம்பர், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்