அன்னையின் அருளால் ரத்தான விவாகரத்து!
இந்தக் கதையைப் பற்றி நீதிநாயகம் சந்துரு கூறுகிறார்:
இச்சிறுகதையில் கொல்கத்தாவில் குடியிருந்த இரு தமிழ் குடும்பத்தினரின் வாரிசுகளான ராகவ்வும், ஷீலாவும் காதலித்து மணம் புரிந்துகொண்ட போதிலும் அவர்களது மணவாழ்க்கையில் ஏற்பட்ட ஊடல்கள் அவர்களை விவாகரத்து கோரும் நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தியது.
இரு மனம் ஒத்த உடன்படிக்கையில் ஏற்படும் உறவுதான் திருமணம். மணம் என்றால் தமிழில் வாசனை (நாற்றம்) என அர்த்தம். நமது சம்பிரதாயத்தில் அதை ஆயிரம் காலத்துப் பயிர் என்று அழைப்பர். மனிதர்களின் மன சங்கமத்தில் ஏற்படும் மணத்திற்கு திருவைக் கூட்டி அதற்கொரு தெய்வாம்சத்தை உண்டாக்கி திருமணம் என்று அழைக்கின்றனர்.
திருமணங்கள் ஒரு காலத்தில் இரு ராஜ்யங்களிடையே உறவைப் புதுப்பித்தன. பின்னர் அது இரு குழுக்களிடையே அல்லது இரு குடும்பங்களுக்கிடையே ஏற்படும் உறவின் பந்தமாகியது.
அவ்வாறு ஏற்பட்ட உறவில் விரிசலோ, பிளவோ ஏற்படாவண்ணம் கூட்டுக் குடும்ப முறைகளில் தம்பதியினரிடம் தக்க ஆலோசனைகள் கூறி இணைத்து வைக்கும் ஏற்பாடுகள் இருந்தன.
ஆனால் இன்று குடும்பங்கள் தனிக்குடித்தனங்களாக மாறிய பின் கணவன் மனைவியரிடம் ஏற்படும் சிறிய பிணக்குகளும் பூதாகரமான வடிவம் எடுக்கும்பொழுது அதைத் தடுத்து ஒட்ட வைக்கும் ‘பெவிகால்’கள் சந்தையிலில்லை.
எனவே அனைத்துப் பிணக்குகளும் சமரசம் காணாமல் சட்டத் தீர்வுகளை நாடுகின்றன. சென்னை நீதிமன்றங்களில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்களால் தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்குகள் இன்று 60 விழுக்காடுகளையும் தாண்டி நிற்கின்றன.
அதனால்தான் சட்டத்திலேயே பிணக்கு கொண்ட தம்பதியினரை ஆலோசனை மையத்திற்கு அனுப்பி அறிவுரை வழங்கிய பின்னரும் சமரசம் காணாமல் போனால்தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சிறுகதையில் வரும் நீதிபதி கங்குலி, ஷீலா–ராகவ்வின் ஈகோ பிரச்னையைக் கண்டுபிடித்து அவர்கள் தங்களுக்குள் மனம் விட்டு பேச வழிவகை செய்யும் வகையில் அவர்களை அன்னை ஸ்ரீசாரதா தேவியின் ஜன்ம பூமியான ஜெயராம்பாடிக்கு அனுப்பி வைக்கிறார்.
நகர சூழ்நிலையில் வாழ்ந்த தம்பதியினர் கிராமத்தையும் அதன் சுற்றுச் சூழலையும் ரசித்து, தங்களது வறட்டுத்தனத்தை மறந்து, தங்களைத் தாங்களே அறிந்துகொண்டபின் நகரத்திற்குத் திரும்புகின்றனர்.
பின்னர் அவர்களது மணவிலக்கு கோரும் வழக்க என்னவாயிற்று? என்பதைச் சுவைபடக் கூறியுள்ளார் கதாசிரியர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிபதியான கங்குலியின் அமைதியான இல்லம்.
மேஜை மீதிருந்த அன்னை ஸ்ரீசாரதாதேவியின் படத்தை அவர் உற்றுப் பார்த்தார். எதிரே இளந்தம்பதியான ஷீலாவும் ராகவும் அமர்ந்துள்ளனர்.
இருவரும் விவாகரத்து பெற்று வெளிநாட்டிற்குப் பறந்திட என்னமாய் துடிக்கிறார்கள்.
‘‘விவாகரத்து தர அதிக நேரமாகாது. ஆனால்...’’ என்று நீதிபதி கங்குலி சொன்னதும் ராகவ் அவசரமாக, ‘‘இல்லை, இனி இவளுடன் வாழ முடியாது. என்னை எவ்வளவு அவமானப்படுத்தி இருக்கிறாள், தெரியுமா?’’ என்று கூறி ஷீலாவை முறைத்தான்.
‘‘இவன்கூட வாழ்ந்ததே ஒரு அவமானம்தான் சார்’’ என்றாள் ஷீலாவும்.
இருவரும் நீதிபதியிடம் மன்றாடியது, அழுதது – எல்லாமே விவாகரத்து வேண்டித்தான். ஆனால் நீதிபதி சட்டரீதியான அணுகுமுறையைப் பின்னுக்குத் தள்ளி, அவர்களின் குடும்ப நலனையே கண்டார்.
ராகவும் ஷீலாவும் கொல்கத்தாவில் வாழும் தமிழ்க் குடும்பத்தினர். காதலித்தனர். கல்யாணம் ஆயிற்று. ஒன்றாக இருந்தனர், சில காலம்.
காலப்போக்கில் அன்பு இருக்க வேண்டிய இடத்தில் வம்பு, அதுதான் ஈகோ - அகங்காரம் வந்துவிட்டது.
‘நானும் எம்.பி.ஏ., நீயும்தான். நான் ஏன் அடிமையாய் உனக்குச் சமைத்துப் போட வேண்டும்?’ என்ற அகங்காரம் ஆரம்பித்து, ‘உன் யோக்கியதை எனக்குத் தெரியும்’ என விரிந்து,
‘நாம் இனி சேர்ந்து வாழவே முடியாது’ என்று ராகவ் முடிக்கும் வரைக்கும் வந்துவிட்டது.
பிறகு வக்கீலிடம் விழுந்து, கோர்ட் ஏறி, குடைந்தெடுத்த கேள்விகளில் கிறங்கி, ஒருவர் மீது ஒருவர் கோபத்தை உமிழ்ந்து – இதெல்லாம் ஒரு வருடத்துச் சில்லறைச் சம்பவங்கள்.
நீதிபதி கங்குலி நினைத்தால், ஒரே வாரத்தில் விவாகரத்து தர முடியும் என்று வக்கீல்கள் சொல்ல, இதோ அவர் முன்னே நிற்கும் நிலையில் இருவரும்.
ஆனால் மனிதர் ஒரே அறிவுரையாக அள்ளி வீசுகிறார். ‘சே, பொரிகளை உண்ணும் இந்த வங்காளிகளே வழவழாப் பேர்வழிகள்’ என ராகவும் ஷீலாவும் நொந்து நூடுல்ஸ் ஆனாலும் ‘விவாகரத்துதான் வேண்டும்’ என்பதில் ஓர் அசுரத்தனம் இருந்தது இருவருக்கும்!
‘‘சரி, நீங்கள் விரும்புவதை நான் அவசரமாகத் தர வேண்டுமென்றால்... நான் சொல்லும் ஒன்றை நீங்கள் கேட்க வேண்டும்’’ என்றார் நீதிபதி.
‘‘சொல்லுங்கள் சார்’’
‘‘இருவரும் பிரிவதற்கு முன் நான் கூறும் ஓரிடத்தில் நீங்கள் சென்று மூன்று நாட்கள் தங்க வேண்டும்...’’
‘‘அப்படித் தங்கி வந்துவிட்டால், விவாகரத்து உடனே தந்து விடுவீர்களா?’’ இருவரும் பரபரத்தனர்.
அதன்படி, கொல்கத்தாவிலிருந்து 65 மைல் தூரத்திலுள்ள ஜெயராம்பாடிக்கு அவர்களை அனுப்பினார் நீதிபதி.
அன்னை ஸ்ரீசாரதாதேவியின் ஜன்ம ஸ்தானம் ஜெயராம்பாடி. அங்கிருக்கும் மாத்ரு மந்திரில் உள்ள பக்தர்கள் விடுதியில் ஷீலாவும் ராகவும் தனித்தனியாகத் தங்க நீதிபதி ஏற்பாடு செய்தார்.
கொல்கத்தாவாசிகளாகப் பரபரப்பாக வாழ்ந்தவர்களுக்கு ஜெயராம்பாடியின் அமைதி.... ஏதோ அவர்கள் காட்டிற்கு வந்துவிட்டதாகப் பயந்தனர்.
முதல் நாள். இதென்ன, இந்த இடத்திற்கு இவ்வளவு பேர் நாடு முழுவதிலுமிருந்து வருகிறார்கள். வெளிநாட்டினரும் வந்து இங்குள்ள கோவிலில் தியானிக்கிறார்கள். ஜபம் செய்பவர்களும் பலர். இந்த இடமே ஆனந்த நிலையமாக இருக்கிறதே!
ஆனால் கொல்கத்தாவின் அல்லல்களிலும் ஓயாமல் ஓட்டமெடுக்கும் பிழைப்பிலும் ஒரே சந்தையாக, வாழப் பழகிவிட்ட ஷீலாவிற்கும் ராகவிற்கும் அந்தச் சூழ்நிலை முதலில் எரிச்சலாக இருந்தது.
யார் இந்த சாரதாதேவி! பார்த்தால், ஒரு கிராமத்துப் பெண்ணாக இருக்கும் இவரையா கும்பிடுகிறார்கள் என்று நினைத்தனர். நீதிபதி கங்குலியைக் கரித்துக் கொட்டினார்கள்.
அங்கிருக்கப் பிடிக்காமல் கோவிலின் வெளியே ஜெயராம்பாடி கிராமத்தில் காலாற நடந்தார்கள் இருவரும் – தனித்தனியேதான்.
நடந்தார்கள் வயல்வெளிகளில். சுத்தமான காற்றையும் பச்சை பசேலென்ற, உருளைக் கிழங்கு விளைச்சலையும் கண்டார்கள். இதுவரை உருளை சிப்ஸைச் சுவைத்தவர்கள் இப்போதுதான் அதன் விளைச்சலைப் பார்க்கிறார்கள்.
‘ஐயோ கடவுளே, இங்கு செல்போன் டவர் கிடையாதா? சிக்னல் வரவில்லையே’ என்ற எண்ணமே இருவரையும் எரிச்சலடையச் செய்துவிட்டது.
காலையிலிருந்து ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தனர். யாரிடம் பேச? ஒருத்தரும் இல்லை. பிறகு 12 மணி அளவில் பிற பக்தர்களுடன் சேர்ந்து ஆசிரமத்தில் மதிய உணவுப் பிரசாதம் உண்டார்கள்.
பின் இருவரும் தங்கள் அறைக்குச் சென்றனர். ஒரு மணிக்குப் படுத்ததுதான் தெரியும், மாலை 6 மணிக்குத்தான் இருவராலும் எழ முடிந்தது.
அட, எத்தனை நாளாயிற்று இப்படி உறங்கி என இருவரும் மகிழ்ந்தனர் - தனித்தனியாகத்தான்.
குளித்தனர். என்ன இது மணியடிக்கிறதே? பக்தர்கள் தீபாராதனைக்காக விரைந்தார்கள்.
ராகவ் மந்தமாக, கல்லூரியில் ‘எகனாமிக்ஸ்’ வகுப்புக்குப் போவது போல் எழுந்து போனான். தூரத்தில், வெளியில் ஷீலா தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தான். ‘தனியாகத் தத்தளி’ என்று மனதுக்குள் கோபமாகச் சொல்லிக் கொண்டான்.
தூக்கம் தந்த அமைதியைக் குலைத்துக் கொள்ள இருவரும் விரும்பவில்லை.
‘உன்னை இனி ஜென்மத்துக்கும் பார்க்க மாட்டேன்’ என்றல்லவா இருவரும் உளறியிருந்தனர்.
ஸ்ரீசாரதாதேவியின் கோவிலில் தீபாராதனை முடிந்தது. அடுத்து ஓர் இளந்துறவி அன்னை ஸ்ரீசாரதாதேவியின் தெய்விக வாழ்வு பற்றி உரையாற்றினார்.
அதில் ஒன்றும் விருப்பமில்லை ஷீலாவிற்கு.
அவள் மொபைலைப் பலமுறை பார்த்தாள். சே, டவர் கிடைக்கவில்லையே!
துறவி தொடர்ந்தார்: ‘மனிதனின் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் அவன் கடவுளை மறந்ததுதான். கடவுளை மறக்கக் காரணம் அவனது அகங்காரமே. அந்த அகங்காரம் கடவுளைப் பற்றிக்கூட நினைக்க விடாது! பிறரது உயர்வையும் பொருட்படுத்தாது; அவ்வளவு ஏன், தான் யார், தான் என்ன செய்தால் வாழ்வில் முன்னேற முடியும் என்பதையும் புரிந்து கொள்ள விடாது’.
ஷீலாவுக்குக் கொசு கடித்தது. எதிரே இருந்த ராகவ் கொட்டாவிவிட்டான். இருந்தாலும் ‘அகங்காரம்’ என்ற சொல் அவன் காதில் ரீங்காரமிட்டது.
அந்தத் திமிர் பிடித்தவள் எங்கே என்று திரும்பிப் பார்த்தான். காணவில்லை. தேடிப் பார்த்தான். அதோ, புத்தகக் கடையில் இருக்கிறாளே.
‘புக்கெல்லாம் படி, ஆனா லைப்லே ஒண்ணையும் கொண்டு வராதே’ என்று புழுங்கினான் ராகவ்.
முதல் நாளை எப்படியோ ஓட்டியாகிவிட்டது. இன்னும் இரு தினங்களைத் தொலைக்க வேண்டும்!
மறுநாள் அதிகாலை. அருமையான தெய்விகச் சூழ்நிலை. பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
ராகவ் மொபைலைக் குடைந்து கொண்டிருந்தான். ‘என்னடா இது, ஒரு மெசேஜ்கூட போக மாட்டேன் என்கிறதே!’
கோயிலில் ஷீலா வாழ்வில் முதன்முதலாகக் கீழே அமர்ந்து கண்ணை மூடினாள். தியானம் வருமா? முயற்சித்தாள். நீண்ட நேரம் யார் யார் முகங்களோ வந்தன. ராகவ் திட்டினான், வக்கீல்கள் பேசினார்கள், அப்பா அம்மா வருந்தினார்கள், நண்பர்கள் பரிதாபப்பட்டனர் - என்றெல்லாம் வந்து முடிவில் நீதிபதி கங்குலி சொன்னது நினைவில் ஓடியது. தலை வலித்தது.
சில பக்தர்கள் கும்பிடுவது போல் இவளும் தயக்கத்துடன் கும்பிட்டாள். ‘அம்மா, எனக்கு நிம்மதி கொடு, வழிகாட்டு’ என்று வேண்டினாள்.
ராகவ் கோயிலை போட்டோ எடுத்தான். என்ன செய்து நேரத்தைப் போக்குவது? தெரியவில்லை.
இருவரும் மீண்டும் காலாற நடந்தார்கள் - தனித்தனியேதான். நடந்தார்கள், தங்கள் நடத்தையை - நடவடிக்கைகளை நினைத்தபடியே.
இந்த ஒரு வருடத்தில் இருவருக்கும் எத்தனை எத்தனை சிக்கல்கள். எத்தனை வாய்ச் சண்டைகள். எல்லாவற்றையும் எண்ணி எண்ணி – ஒரு சூன்யம் நெஞ்சுக்குள் வருவதை உணர்ந்தார்கள். ஷீலாவிற்கு எடை குறைந்தது. ராகவிற்கு வயிறு பெருத்தது.
பிற்பகல். அன்று சனிக்கிழமை. ஆசிரமத்தில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தார்கள். ஒரு துறவி ராகவிடம், ‘‘நீங்கள் இங்கு தங்கியிருக்கிறீர்கள்தானே? இன்று கூட்டம் அதிகமாக உள்ளது. பிரசாதம் பரிமாற ஆளில்லை. வர முடியுமா, ப்ளீஸ்?’’ என்று கேட்டார்.
‘வாட், நானா இந்த அல்ப வேலை செய்வது?’ என்று ராகவின் ரத்தம் லேசாகக் கொதித்தது. ஆனாலும் ‘இப்போது எதுவும் செய்யாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும்’ என எண்ணி கூச்சத்துடன் பரிமாறத் தொடங்கினான். ஓடியாடி உழைத்தான்.
அட, பரிமாறுவதில் இவ்வளவு சுகமா என்று அவனே வியக்கும் - வியர்க்கும் அளவிற்கு அன்று பணி செய்தான். அவன் பரிமாறியது பக்தர்களோடு உணவருந்த அமர்ந்திருந்த ஷீலாவுக்கும்தான்.
ஷீலா வியந்தாள். முன்பென்றால், ‘ராகவ், கிரேட்யா’ என்று பாராட்டியிருப்பாள். இன்று முடியாதே!
ஆனாலும் ‘ஏன் முடியாது?’ என இதயத்தில் எங்கோ ஒரு மெல்லிய குரல் அவளுக்குக் கேட்டது.
மாலை மீண்டும் நடை. வழியில் இருவரும் ஓரிடத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
எங்கோ பார்த்தபடி ராகவ், ‘‘ஃபீலிங் கம்பர்டபிள்?’’ என்று கேட்டான். ‘‘ம்’’ என்றாள் ஷீலா தலைகுனிந்து.
ஒரு பத்தடி போன பிறகு ஒரே சமயத்தில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
வேகமாகத் தலையைத் திருப்பிக் கொண்டனர்.
அன்றிரவு. ஷீலாவின் அறையில் அன்னை சாரதையின் படத்துடன் கூடிய ஓர் உபதேசம் இருந்தது.
‘இறைவா, நிலவில்கூட களங்கம் இருக்கலாம். ஆனால் என்னிடம் ஒரு சிறிதும் களங்கம் இருக்க வேண்டாம்’ என்று எழுதியிருந்தது.
அதையே சற்று நேரம் பார்த்தாள். ஓ, இப்படித்தான் பிரார்த்திக்க வேண்டுமோ என்று நினைத்து அதை மொபைலில் டைப் செய்து கொண்டாள்.
டவர் வேலை செய்திருந்தால் அதை Forward போட்டுப் பலருக்கும் அனுப்பியிருப்பாள். அது செய்ய முடியாததால், அச்செய்தி அவளுக்குள் Inward ஆனதோ!
இரவில், சரியான நேரத்தில் வந்து பரிமாறியதற்காக ராகவை அந்தத் துறவி பாராட்டினார். ‘‘நாளையும் நான் வந்து பரிமாறலாமா?’’ என்று ராகவே கேட்டான்.
அட, அவனா இப்படி!
மொபைல், இண்டர்நெட், டி.வி., பேஸ்புக், டுவிட்டர் என்று எதுவும் இல்லாததால் அந்த இருவராலும் முறையாகச் சிந்திக்க முடிந்ததோ!
எதையும் யோசிக்காமல் அவசரமாகப் பதில் பேசிவிடவோ, மெசேஜ் அனுப்பிவிட்டுப் பிறகு பிறரை வருத்தப்பட வைக்கவோ வாய்ப்பற்ற இடம் இது.
இரவு தூங்கும் முன்பு ‘பாவம் அவள், தனியாகப் பேச்சுத் துணையில்லாமல் அவதிப்படுகிறாளோ என்னவோ! நாளைக்கு வாக்கிங் போவதற்குக் கேட்டுப் பார்ப்போம்’ என்று ராகவ் எண்ணினான்.
மூன்றாம் நாள் காலை. அட, அதிசயமாக ஷீலா காலையிலேயே குளித்துச் சேலை கட்டிக் கொண்டு, நெற்றி வகிட்டில் குங்குமம்... மங்களகரமாக!
அவளைப் பார்த்து ராகவ் புன்னகைத்தான்.
‘‘ஹாய்’’, ‘‘ஹலோ’’ நடந்தது.
பிறகு ஆச்சரியமாக ஷீலா, ‘‘வாக் போகலாமா?’’ என்று கேட்டாள். போனார்கள்.
வானம் தெளிவாக இருந்தது. அதை ரசித்தார்கள்.
‘‘சுத்தமான காற்று’’ என்றான்.
‘‘இங்கு நீர் ரொம்ப டேஸ்ட்’’ என்றாள்.
‘‘மதர் கோவில்லே ஏதோ ‘வைப்ரேஷன்’ இருக்கு’’
‘‘இல்லேன்னா இவ்வளவு பேர் வருவாங்களா?’’
இருவரின் பேச்சும் வெளியில் சுற்றிச் சுற்றிப் பிறகு ஒரு தலைப்பு பற்றியே நெருங்கி வர ஆரம்பித்தது.
‘‘நேத்து நைட் ஹோலி மதர் லைப் படிச்சேன்... நமக்கு ரொம்பவும் வேண்டிய மேட்டர் அதில் இருக்கு’’ ஷீலா வானத்தைப் பார்த்துச் சொன்னாள்.
‘‘ஆமா, மொத நாள் ஒரு சாமி பேசினாரு, ஏன் மனுஷன் கஷ்டப்படுறான்னு...’’ என்று இழுத்தான் ராகவ் தரையைப் பார்த்து.
‘‘எனக்கு இப்ப தோணுது. நாம வாழ்க்கையை வாழவே ஆரம்பிக்கலேன்னு...’’
‘‘ஒனக்குத் தோணுது, எனக்கு இந்த ரெண்டு நாளில் அது நிச்சயமே ஆயிடுச்சு...’’
இருவரும் சிரித்துவிட்டனர்.
ஓ, எத்தனை மாதங்களாகிவிட்டன, அந்த நான்கு கண்களும் ஒன்றை ஒன்று அன்புடன் நோக்கி!
‘‘இப்படி வந்து உட்காரு, வெயில் படுது’’.
மௌனம். ஷீலா மெல்ல, ‘‘சாரி, நான் உங்களோட ரொம்பவும் ‘ரூடா’ பேசிட்டேன்...’’ என்றாள்.
ஆச்சரியம், ராகவ் ஆச்சரியத்தைக் காட்டாமல், ‘‘நான் அப்படி ரூடா நடந்துகிட்டா, யாராயிருந்தாலும் நீ பேசின மாதிரிதான் பேசியிருப்பாங்க....’’ என்றான்.
‘‘என்ன பெரிசா இருக்கு நம்ம இந்த லைப்ல! ஒன்னுமே இல்லாதபோது எதுக்காக முட்டாள்தனமாக நாம சண்டை போட்டோம். அதெல்லாம் நெனச்சா வெக்கமா இருக்கு...’’
‘‘நம்மால ஏன் ஒருத்தரோட ஒருத்தர் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச முடியல...?
‘‘அதான் அந்த சாமி சொன்னதா சொன்னீங்களே...’’
இந்த ரீதியில் உரையாடல் தொடர்ந்தால், என்ன நடந்திருக்குமோ அது நடந்தது.
பின் இருவருமே ஸ்ரீசாரதாதேவியின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.
சற்று மௌனம். பின் எச்சிலை விழுங்கியபடி, ‘‘நான் ஒரு முடிவிற்கு வந்துட்டேன் ஷீலா’’ என்றான்.
ஷீலா புன்னகையுடன், ‘‘அதை கங்குலி சாரிடம் நானே கூறட்டுமா?’’ என மொபைலை எடுத்தாள்.
‘‘டவர் சுத்தமா இல்லியே’’
‘‘என் மொபைல்ல ட்ரை பண்ணு. டவர் இங்கேயாவது கெடைக்குதா பாரு.’’
ஷீலா பேசினாள்: ‘‘வணக்கம் சார்...’’
‘‘ஷீலாவா! அவரோட நம்பரிலிருந்து நீயா?’’– நீதிபதி எதிர் போனிலிருந்து.
‘‘அதுவும் இனி என் நம்பர்தான் சார்’’ என்றாள் ஷீலா நாணத்துடன்.
தமது மேஜை மீதிருந்த அன்னை ஸ்ரீசாரதாதேவியின் திருப்பாதங்களைத் தொட்டு, தமது தலையில் வைத்துக் கொண்டார் நீதிபதி கங்குலி.
சுவாமி விமூர்த்தானந்தர்
03 அக்டோபர், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்