'மகிழ்ச்சிக்காக தியானியுங்கள்!'
'மகிழ்ச்சிக்காக தியானியுங்கள்!'
தியானம் செய்வதற்கு எது நல்ல சமயம்?
இன்று,
இப்போது,
இக்கணமே தியானிக்க ஏற்ற நேரம். இந்தக் கணத்தில் தியானம் செய்தால்தான் நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதற்கான பயிற்சிதான் மகிழ்ச்சி தியானம்.
சமயம் என்றாலே மதம், ஆன்மிகம்தான். சமயம் என்பது சமைப்பதையும் அதாவது பக்குவப்படுவதையும் குறிக்கிறது.
அதோடு, சமயம் என்பது நேரத்தையும் குறிக்கிறது. ‘நல்ல சமயம் இது’ என்றாலே நல்ல நேரம் என்று பொருள்.
நேரத்தை முறையாகப் பார்ப்பவன் தியானத்தின் மூலம் தெய்வத்தைத் தரிசிப்பான்.
‘இன்று என் நேரமே சரியில்லை. எல்லாம் என் பொல்லாத நேரம்’ என்று புலம்புவதை நிறுத்த வேண்டுமா? வாருங்கள், இன்று நேரத்தின் மீதே தியானிப்போம்.
கடிகாரம் உங்களுக்கு நேரம் தவறாமை என்பதை மட்டும் கற்றுத் தந்தால், கடிகாரத்திலிருந்து நீங்கள் கற்க வேண்டிய பாடம் இன்னும் பல உண்டு என்று அர்த்தம்.
நேரம், காலம் தெரிந்து எதையும் செய்ய வேண்டும், சொல்ல வேண்டும் என்றார்கள் மூத்தோர்கள்.
நாம் ஏன் நேரத்திற்கும் காலத்திற்கும் மிக முக்கியத்துவம் தருகிறோம்? நேரம் என்பது என்ன? காலம் என்பது என்ன?
ஆம், காலமும் நேரமும் தனித்தனிதான். ஆங்கிலத்தில் Time என்று மட்டுமே உள்ளது. ஆனால் நம் பாரம்பரியமோ கால: என்றும் சமய: என்றும் சம்ஸ்கிருதத்தில் கூறும்.
இப்போது கண நேரம் கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
உங்கள் மனத்திரை விரியட்டும்.
உங்களது வாழ்க்கையில் நடந்த நற்செயல்கள், நெகிழ்ச்சியான தருணங்கள், வெற்றிச் சம்பவங்கள் எல்லாவற்றையும் எண்ணிப் பாருங்கள். அவை நடந்த அந்த நேரத்தை நன்றியுடன் நினைத்திடுங்கள்.
‘செல்வம், நண்பர், இளமை பற்றிக் கர்வமடையாதே. கண நேரத்தில் இவை மறைந்துவிடும்’ என்கிறார் பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர்.
காலத்தைச் சரியாகக் கடைப்பிடித்தால் காலா காலத்தில் நம் வாழ்க்கை மேம்படும். காலத்தைப் புரிந்து கொள்ளாது அதைப் பேணாதவன் காலனுக்கே இரையாகிறான்.
காலத்தைத் தவறவிட்டவன், அதைப் பேணாதவன் – காலத்தைக் கடக்க வேண்டியவன் என்பதை மறந்து அவன் காலகதியில் சிக்கிக் காலமாகிறான்.
தமது ‘நிலையாமை’ அதிகாரத்தில் வள்ளுவர், ஒவ்வொரு நாளும் காலம் எனும் வாள் உயிரை அறுக்கிறது என்பார்:
‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.’
அதனால்தான் காலத்தை மதிக்கும் வகையில் பூஜையின்போது ‘ஓம் பூர்ணிமாயை நம:, ஓம் அமாவாஸ்யாயை நம:’ என்று ஓதி, பூவினால் அர்ச்சிக்கிறோம்.
காலத்தின் சக்தி அளவற்றது; ஆற்றல் தருவது.
நேரம் என்பது இறைவன் மனிதனுக்குத் தந்த வரத்தை நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்வது.
காலம் என்பது பரமாத்மா தத்துவம். காலசரீரி என்றே பகவானுக்கு ஒரு பெயருண்டு. அழிவற்ற காலமும் நானே’– ‘அஹமேவ அக்ஷய: கால:’ என்றார் கீதையில் கிருஷ்ணர்.
அன்பர்களே, காலத்தில் நாமும் லயமாக வேண்டும் என வேணுகானலோலனை வேண்டிக் கொண்டு முன்கூறிய சுலோகத்தை வாய்விட்டு உச்சரியுங்கள்.
நேரம் என்பது ஜீவாத்மாவுக்காக இறைவன் தந்த ஓர் அவகாசம். அதாவது இத்தனை ஆண்டுகள் உயிர் வாழலாம், இத்தனை ஆண்டுகள் பால பருவம், இவ்வளவு காலம் இளமைப் பருவம் என்றெல்லாம் இருக்கும் அளவாகும்.
நம்மைச் சுற்றி வெளியில் விரவிக் கிடப்பது காற்று. அந்த வெளிக்காற்று, நம் மூக்கினுள் புகும்போதுதான் நம்மால் உயிர் வாழ முடிகிறது.வெளிக் காற்றின் மீது நம்மால் அதிகம் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆனால் உள் காற்றை ஒழுங்காகப் பயன்படுத்தினால் நம் சிற்றுயிர் பேருயிராகும்.
அதுபோல், மனிதனுக்குக் கிடைத்த நேரத்தின் அருமை தெரிந்து அதைப் பயன்படுத்துபவனுக்குக் காலத்தின் அபரிமிதமான ஆற்றல், காலத்தின் அளவு யாவும் கை கூடும்.
‘சுறுசுறுப்பாக உள்ளவனுக்கு எல்லாவற்றுக்கும் நேரமிருக்கும்’ என்பார் சுவாமி ரங்கநாதானந்தர்.
அன்பர்களே, இப்போது ஒருமுறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். இந்த மூச்சின் மூலம், காலம் எனப்படும் தெய்வ சக்தி, நேரம் எனப்படும் மனித நிலையில் உங்களுக்குள் புகுந்ததாக நம்புங்கள்.
காலம் என்ற அந்தப் பரம்பொருள் தத்துவம், அந்த பராசக்தி உங்களுக்குள் புகுந்து உங்களது ஒவ்வோர் அங்கத்திலும் மனம், புத்தியிலும் விரவி நிற்பதாக பாவனை செய்யுங்கள். அந்த எல்லையற்ற சக்தி உங்களைச் சூழ்ந்து உங்கள் உள்ளும் புறமும் கலப்பதாக எண்ணுங்கள். அந்த நிலையில் சில கணங்கள் மௌனமாக இருங்கள்.
பிரியமானவர்களே, பேச்சு, மூச்சு, நேரம், மகிழ்ச்சி ஆகிய நான்கும் நெருங்கிய தொடர்புடையவை.
மனிதர்களின் மகிழ்ச்சி எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும்?
சிலருக்கு ஆண்டுக்கு ஒருமுறை – திருமண நாளுக்குத் துணி எடுக்கும்போது, அல்லது தன் பிறந்த நாளைத் தானே கொண்டாடும்போது மட்டுமே மகிழ்ச்சி இருக்கிறது.
பலருக்கு மாதம் ஒருமுறை – சம்பளம் வாங்கும்போது.
வேறு பலருக்கு வாரம் ஒருமுறை – விடுமுறை நாளன்று மட்டுமே மகிழ்ச்சி. பிற நாட்களில் ஓயாத அலைச்சல்தான்.
இன்னும் பலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுந்தான் – ஓடி ஓடி உழைத்து ஓடாய்ப் போய் – உறக்கத்தில் கிடக்கும்போது மட்டுந்தான் நிம்மதி. இப்படி...,
ஆண்டுக்கு ஒருமுறை,
மாதத்திற்கு ஒருமுறை,
வாரத்திற்கு ஒருமுறை,
தினம் ஒருமுறை என்று ஒருவரது மகிழ்ச்சி இருந்தால் அவரது வாழ்க்கை பரிதாபகரமானது. ஆபத்தானது, சரிசெய்து கொள்ள வேண்டியது.
நேர மேலாண்மை நம்மை மேலான மனிதர்களாக்குகிறது. ஒருவர் நேரத்தைச் சரியாகக் கவனிக்கும்போது அவரது உயர் வாழ்க்கை ஆரம்பமாகிறது.
சுவாமி ரங்கநாதானந்தர் ஒருமுறை ஒரு பக்தைக்குக் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்து, “Keep watch; more than that keep time” என்றார்.
நொடிகளில் கவனம் செல்லும்போது நெஞ்சு விரிகிறது. கடிகாரத்தை விழிப்புணர்வுடன் கவனிக்க, கவனிக்க நமக்குள் உள்ள சக்தி ஊற்றெடுக்கும்.
நம் மகிழ்ச்சி, ஆண்டிற்கொரு முறை அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறை என்று இல்லாமல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நாம் ஆனந்தமாக, நம்மைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கிறோமா என்று கவனியுங்கள்.
ஒவ்வொரு நொடியும் ஆனந்தமாக விளங்கும் அருளாளர்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.
‘குருதேவரை நான் சந்தித்த நாள் முதல் என் இதயத்திற்குள் ஓர் ஆனந்த கலசத்தை அவர் வைத்துவிட்டார்’ என்று அன்னை ஸ்ரீசாரதா தேவி கூறுவார்.
அந்த இருவரிடமும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கண நேர இன்பத்திற்காக அல்ல; கணத்திற்குக் கணம் உங்கள் வாழ்வில் ஆனந்தமும் உற்சாகமும் கூடுவதற்காக!
இந்தப் பிரார்த்தனையால், ஆண்டுக்கொரு முறை வரும் உங்கள் பிறந்த தினம் இனி பிறரால் போற்றப்பட வேண்டும்.
‘மாதமொரு முறை நான் மகிழும் என் சம்பள தினத்தில் இனி ஓரிரு ஏழைகளுக்காவது சேவை செய்வேன்’ என்று வாய் விட்டுக் கூறி சங்கல்பம் மேற்கொள்ளுங்கள்.
‘வாரமொரு முறையாவது கோயிலில் கைங்கர்யத்திற்காகவோ, உழவாரப் பணிக்காகவோ என் நேரத்தைச் செலவழிப்பேன்’ என்று திடசித்தம் கொள்ளுங்கள்.
தினமொரு முறை மகிழ்வது, ஆத்மார்த்தமாக ஆண்டவனுக்குப் பூஜை செய்வது, அதிக ஜப தியானங்களில் ஈடுபடுவது, சாஸ்திரங்கள் படிப்பது, மனைவி–மக்களை, உடனுள்ளவர்களை மகிழ்விப்பது என்பதில் கழிந்தால் அது ஓர் உன்னதமான வாழ்க்கைக்கு உங்களை இட்டுச் செல்லும்.
அவை போன்ற விழிப்பு நிலைகளில் ‘Present is Paramatman’–’இக்கணமே இறைவன்’ என்று சுவாமி யதீஸ்வரானந்தர் கூறியது விளங்கும்.
‘Power of Now’ என்ற நிலையான நிகழ்கால அருமையின் வலிமை புரியும். நிகழ்காலத்தில் வாழக் கற்பது தெய்விக வாழ்க்கை மட்டுமல்ல, வெற்றியாளர்களின் ரகசியமும்கூட. இந்தச் சிந்தனைகளுடன் உங்களது இஷ்ட மந்திரத்தை இனிமையாக உச்சரியுங்கள்.‘எண்ணெய் ஒழுக்கு’ போன்று மனம் தொடர்ச்சியாக இறைநாமத்தை ஜபிக்க வேண்டும்; இறையுருவைச் சிந்திக்க வேண்டும்’ என்கிறார் ஆசார்ய ஸ்ரீராமானுஜர்.
உங்கள் மனம் இனி
கடந்த காலத்தைக் கவ்விக் கொள்ளாமலும்,
வருங்காலத்திற்காக வியப்பில் வாய் பிளவாதிருக்க,
நிகழ்காலத்தில் ஒவ்வொரு நொடியையும் – மைக்ரோ கணத்திலும் வாழ்வதற்காக நெஞ்சமுருகி ஜபியுங்கள்.
நொடிக்கணக்கில் உங்கள் மகிழ்ச்சி பெருக வேண்டுமா?
வலது கையை உங்கள் இதயத்தின் மீது வையுங்கள்.
60 நொடிகளுக்கு 72 முறை துடிக்கும் இதயத் துடிப்பு ஓயாமல் ஒலி எழுப்பித் துடிப்பதைக் கவனியுங்கள்.
அதே வேகத்தில் உங்களது இஷ்டதெய்வத்தின் நாமத்தை உச்சரியுங்கள். எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரத்திற்கு இந்தப் பயிற்சி தொடரட்டும்.
நொடிகளுக்கெல்லாம் நம் நெஞ்சு நெகிழுமா என்று சந்தேகப்படாமல், உங்களைப் பார்த்துப் பலர் புரிந்த புன்னகை, கனிவான பார்வை, மனம் நெகிழ்ந்த பாராட்டு, உங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள், படித்த நூல், நீங்களே எழுதிய கவிதை போன்றவற்றை நினைத்துப் பாருங்கள்.
ஒவ்வொரு மூச்சினையும் கவனியுங்கள். உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக விளங்கும். டென்ஷன் இருக்காது; எப்போதும் உங்கள் மனதில் துணிவு இருக்கும்.
ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துப் பேசுங்கள்; உங்கள் நண்பர்கள் உங்களுடன் என்றும் சுமுகமாக விளங்குவார்கள். ஒவ்வொரு கணத்தையும் கவனித்து வாழுங்கள். கடவுள் உங்களை ஆசை ஆசையாய் கவனிப்பார்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ❖
சுவாமி விமூர்த்தானந்தர்
20 மார்ச், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்