'நோய் நிவாரண தியானம்'
'நோய் நிவாரண தியானம்'
மெய்யன்பர்களே, வாழ்க்கையில் நம்மால் தவிர்க்க முடியாத பலவற்றுள் ஒன்று, நோய்.
யாருக்கும் எந்த நோயும் வர வேண்டாம். ஒரு வேளை நோய் வந்துவிட்டால் அதைச் சமாளிப்பது எப்படி?
வாருங்கள், இதோ நோய் நிவாரண தியானம் என்ற எளிய வழி உள்ளது.
ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களும் துறவிகளும் நோயுற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டால், அங்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவப் படத்தை வைப்பது வழக்கம்.
பூஜையறையில், வீட்டில், படிப்பறையில், பள்ளியில், அலுவலகத்தில், கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில், வரவேற்பறையில் என்று பல இடங்களிலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தைப் பக்தர்கள் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அங்கெல்லாம் வைப்பதற்கும், நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் முன்பு குருதேவரின் படத்தை வைப்பதற்கும் வித்தியாசம் உண்டு; விசேஷமும் உண்டு.
ஐந்து விசேஷங்களைக் குறிப்பிடலாம்.
1. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை நோயாளி பார்ப்பார்!
சஞ்சலமும் பயமும் வந்து துன்புறுத்தும் நேரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவைப் பார்க்கும் பக்தரின் மனதில் நம்பிக்கை பிறக்கும்.
குருதேவர் தமது அந்திமக் காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோதும் அன்னை பராசக்தியைக் கணமும் பிரியாது இருந்தார்; அவளது நினைவு ஒன்றினாலேயே தமது எல்லாக் கடமைகளையும் நிறைவாக நிறைவேற்றினார். உடல் துன்பப்பட்டாலும் மனம் உயரே உயரே சென்று கொண்டிருந்தது.
‘நோயும் உடலும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளட்டும். மனமே! நீ எப்போதும் ஆனந்தமாக இரு’ என்று குருதேவர் அடிக்கடி பாடும் பாடல் துன்புறும் பக்தரின் நினைவிற்கு வரும்.
அப்படிப்பட்ட குருதேவரின் உன்னத நிலையை நினைக்கும் பக்தர்கள் அவரது அருளால் தங்களது துன்பத்தை மறக்கிறார்கள். துன்பத்தைக் கடக்கிறார்கள்.
2. ஸ்ரீராமகிருஷ்ணர் தமது கருணை பொங்கும் கண்களால் நோயாளியைப் பார்ப்பார்!
அவதியுறும் பக்தர் குருதேவரைக் கண்டு ஆறுதலும் தைரியமும் அடைவார். அப்போது குருதேவரும் நோயாளியைப் பார்ப்பார், அல்லவா?
அவரது திருப்பார்வையால் பக்தரின் மனம் அங்குமிங்கும் அலையாது அவரிடமே தஞ்சம் பெறும்.
நோயுற்றவரது மனம் இயல்பாக ‘இறைவா, நான் உன்னைச் சேர்ந்தவன், என்னைக் காப்பது உன் கடமை’ என்று எண்ணி நிம்மதியும் தைரியமும் பெறும்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அமுதமொழிகளில் ஆறுதலாகக் கூறியதெல்லாம் ஒவ்வொன்றாகப் பக்தரின் நினைவிற்கு வரும். ‘உன்னை நான் கைவிட மாட்டேன்’ என உணர்த்தும் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய சம்பவங்கள் துன்பப்படும் ஒவ்வொருவருக்கும் துணை வந்து துணிவு தரும்.
3. ஸ்ரீராமகிருஷ்ணரைச் செவிலியரும் மருத்துவர்களும் காண்பர்!
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவியான சுவாமி உத்தவானந்தர் ஒருமுறை சென்னையில் ஒரு மருத்துவமனையில் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு முன் சுவாமிகளுக்கு மயக்க மருந்து தரப்பட்டது.
அதுவரை அமைதியாக இருந்து வந்த சுவாமிகள் கம்பீரமானார். மயக்க நிலையிலேயே எதையோ முணுமுணுக்க ஆரம்பித்தார்.
அது என்ன? ஆம், சுவாமி உத்தவானந்தர் மயக்க நிலையிலும் தமது குருவான சுவாமி யதீஸ்வரானந்தர் வழங்கிய இஷ்டமந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். உடன் இருந்த ஒரு மருத்துவர் மடத்தின் பக்தர். அவர் சுவாமிகளின் இறைமையில் மூழ்கிய நிலையை மற்றவர்களுக்குக் கூறினார்.
அதை அறிந்த மருத்துவர்கள் சுவாமிகளின் உடலைத் தொட்டு வணங்கிய பின்னரே சிகிச்சையை ஆரம்பித்தார்கள்.
அதுவரை அந்த மருத்துவர்கள் சுவாமிகளின் அறையில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தைப் பார்த்து ‘இவர் ஏதோ ஒரு மகான் அல்லது இந்த சுவாமிக்கு வேண்டியவர்’ என்று மட்டுமே நினைத்து வந்தார்கள்.
மெய்மறந்த நிலையிலும் ஸ்ரீராமகிருஷ்ணரது திருநாமத்தை சுவாமிகள் ஜபித்ததால், அந்த மருத்துவர்கள் அவரது பக்தியை உணர்ந்து அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டார்கள்.
நோயாளியின் அறையில் செவிலியரும் மருத்துவர்களும் குருதேவரைக் காணும்போது ‘இவர் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சேர்ந்தவர்; இவருக்கு நான் கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிப்பேன். அதுதான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு நான் செலுத்தும் பக்தி’ என்று எண்ணக்கூடும்!
அல்லது ஸ்ரீராமகிருஷ்ணரே அந்த மருத்துவர்களின் மனங்களில் புகுந்து தமது பக்தருக்கு எது நன்மையோ, அதை விரைவாகச் செயல்படுத்தச் செய்வார், அல்லவா?
4. பார்வையாளர்கள் பார்ப்பார்கள்!
பல நேரங்களில் நோயாளிகள் சிரமப்படுவது நோயைவிட, வந்து செல்லும் பார்வையாளர்களின் வீண் அறிவுரைகளால்தான்! ஏற்கனவே நோயாளியின் மனமும் உடலும் சோர்ந்திருக்கும்போது என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் நோயாளியை மேன்மேலும் தன் உடலைப் பற்றியே கவலைப்பட வைப்பது ஒரு நல்ல பழக்கமல்ல.
ஆனால் சிறந்த பக்தர்கள், துறவிகள் பார்வையாளராக நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது, என்ன நடக்கும்?
அவர்கள் நோயாளியின் உடல் வலியைப் போக்கும் வகையில் கடவுளின் அருள் வரலாற்றைப் பேசுவார்கள்; வலியிலிருந்து மனதை எப்படி உயர் நிலையில் வைத்திருப்பது என்பதைப் புரிய வைப்பார்கள். ஓர் உதாரணம்:
ஒரு சமயம் கிரீஷ்பாபு பல வியாதிகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது உடலும் உள்ளமும் களைத்துவிட்டன. எதிலும் அவருக்குச் சூன்யம், அவநம்பிக்கை, வெறுப்பு. 'ஏன் வாழ வேண்டும்?' என்ற கேள்வி அவரது மனதைக் குடைந்தது.
கிரீஷ்பாபுவின் பல நலம்விரும்பிகளும் வந்து சென்றார்கள். ஆனால் எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
முடிவில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி பிரம்மானந்தர் கிரீஷ்பாபுவைக் காண வந்தார்.
“சகோதரா, நான் நரகத்தில் சிக்கியுள்ளேன். அதிலிருந்து தப்பிக்க வழி சொல்” என்றார் கிரீஷ்பாபு சோகமாக.
சுவாமி பிரம்மானந்தர் சிரித்தபடி, “ஏன் இப்படிக் கவலைப்படுகிறீர்கள்? கடலில் அலைகள் உயரே எழும்புவதும் தாழ்வதுமாக உள்ளன. அதுபோல்தான் மனமும். இப்போதுள்ள தாழ்வான மனநிலைதான் இன்னும் சிறிது நாட்களில் உயர்வான நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறது. மனதின் அலையானது வலிமையைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது. குருதேவரை நம்பித் தைரியமாக இருங்கள்” என்றார்.
ஆச்சரியம்! சுவாமி பிரம்மானந்தர் சென்ற பின் கிரீஷின் வெறுமை உணர்ச்சிகள் நீங்கின. இழந்த நம்பிக்கையையும் பக்தியையும் அவர் திரும்பப் பெற்றார்.
சுவாமி பிரம்மானந்தரின் வருகை என்பதே குருதேவரின் சாந்நித்தியம்தானே?
5. யமனும் பார்ப்பான்!
காமனை எரித்துக் காலனை ஓட வைத்தவர் சிவபெருமான்.
சிறுவனாக இருந்தபோது சிவவேடம் தரித்தவுடன் சிவனாகவே மாறியவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.
மதுர்பாபுவிற்கு காளியாகவும் சிவனாகவும் ஒரே சமயத்தில் காட்சி அளித்தவர் அவர்.
அப்படிப்பட்டவர் வீற்றிருக்கும் – அவரது பெருமைகள் பாடப்படும் – அவரது திருநாமஜபம் நடக்குமிடத்தில் எம தூதர்கள் வர முடியுமா?
அருள் உள்ள இடத்தில் இருளா?
ஸ்ரீராமகிருஷ்ணரின் சாந்நித்தியம் உள்ள இடத்தில் எமன் எட்டிப் பார்க்கக்கூட அஞ்சுவான். மரண பயம் பக்தர்களை அண்டாது. அந்தப் பயம் சென்றுவிட்டால் வேறு எந்தப் பயம்தான் என்ன செய்துவிடும்?
குருதேவரின் திருவுருவப்படத்தை, துன்பப்படுபவர்கள் தங்களுடன் வைத்துக்கொள்ளும்போது பயமின்மை, ஆரோக்கியம், ஆறுதல், அமைதி ஆகியவை இயல்பாகக் கிடைக்கின்றன. இது பலரது சொந்த அனுபவம். பலரும் அவசியம் பெற்றிருக்க வேண்டிய அனுபவம்.
ஸ்ரீராமகிருஷ்ணர் – ஸ்ரீசாரதாதேவி – சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவப்படங்கள் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், சிறைச்சாலைகளிலும் குறிப்பாக, சிறைவாசிகளின் அறைகளில் வைக்கப்பட்டால், சிறைச்சாலைகளே தேவையில்லாத சமுதாயம் மலரும். இது நிச்சயம்.
ஒரு சம்பவம்.
சுவாமி வாசுதேவானந்தர் ஒருமுறை மேற்கு வங்காளத்தில் வெள்ள நி`வாரணப் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு பலவிதச் சிக்கல்கள், பிரச்னைகள், பயம் போன்றவை அவரைத் திக்குமுக்காட வைத்தன. அது பற்றி ஸ்ரீசாரதாதேவியிடம் அவர் குறைப்பட்டுக் கொண்டார்.
அதற்கு அன்னை, “குருதேவரின் படம் ஒன்றை எப்போதும் அருகில் வைத்துக்கொள். அவர் உன்னோடு உள்ளார், உன்னை எப்போதும் பார்த்து வருகிறார் என்று கருது. எந்தக் கேள்வி எழுந்தாலும் அவரிடமே பிரார்த்தனை செய். அதற்கான விடையை உன் மனதிலேயே அவர் தருவதைக் காண்பாய். அவர் அகத்தில் அல்லவா உள்ளார்!”
“ஆனால் மனம் எப்போதும் புறமுகமாக இருப்பதால் அது அகத்தை நாடுவதில்லை. நீ எதைப் பிரார்த்தித்தாலும் அது உண்மையாகவே உனக்குக் கட்டாயமாகத் தேவை என்றால், அதற்கான பதில் உன்னுள்ளிருந்து சட்டென்று தானாக வருவதைக் காண்பாய். உடல், மனம், சொல் மூன்றும் சேர்ந்து பிரார்த்தித்தால் அவர் அதைக் கேட்கிறார், வேண்டியதைச் செய்கிறார்.
“நல்லவர்களிடம் ஒரு விஷயத்தை நூறு முறை சொல்ல வேண்டுமா என்ன?” என்று கூறினார்.
அன்னை கூறும் எளிய, இனிய சீரிய வழி இது. ஆகவே நாம் இருக்கும் இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை வைக்கும் அதே ஆர்வத்துடன் நம் இதயங்களிலும் அவரது திருவுருவைப் பிரதிஷ்டை செய்வோம்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
சுவாமி விமூர்த்தானந்தர்
29 ஜனவரி, 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்