'ஞாயிறு லாக்டவுனில் ஒரு தியானம்'
ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பது எதிர்மறை சிந்தனையாகப் போய்விடுகிறது. அதைச் சற்று நேர்மறையாக மாற்றி சிந்தித்துப் பார்க்கலாமா?
அதுதான் வாக்கு தியானம்.
வாருங்கள், வார்த்தைகளின் சக்தியை மட்டுமல்லாமல், அதன் மகிமையை அறிவோம்.
முதலில், வளவள என்று பேசும், எழுதும், பார்க்க வைக்கும் வானொலி, செல்லொலி, மின்னொளி என்று எவையெல்லாம் உங்கள் கவனத்தை - ஆர்வத்தைப் புறவுலகிற்குத் துரத்துகின்றனவோ, அவற்றையெல்லாம் சற்று அணைத்து வையுங்கள்.
‘பேசு முன் யோசி; ஏன் இப்படி பேசிவிட்டோம் என்று பிறகு யோசிக்காதே’ என்பது பலருக்குப் பலரிடமும் அடி வாங்கிப் பெற்ற அனுபவமாக இருக்கும்!
பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வது, ‘க்ரீம்’ ஒழுக கதைத்துக் கேட்பவரைக் கவர்ந்திழுப்பது - இவையெல்லாம் சாதாரண வாழ்க்கையில் வெற்றியையும் புகழையும் தரலாம்.
‘வார்த்தைகளின் பலம் மௌனத்திலிருந்தும் புனிதத்திலிருந்தும் பிறக்கிறது’ என்பார் சுவாமி விவேகானந்தர்.
இது ஆன்மிகத்தில் உள்ளவர்களுக்கு மிக அவசியம்.
வாக்கு தியானம் தனியறையில், வீட்டில் பூஜையின்போது மட்டும் செய்ய வேண்டியதல்ல. எல்லா நேரங்களிலும் இந்த வாக்குத் தவம் உங்களோடு இருக்கட்டும்.
சனகாதி முனிவர்களுக்கு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி, மௌனத்தினாலேயே தெய்விகத் தத்துவத்தை முழங்கினார்.
‘மௌனமான மகாபிரசங்கமே’ ஸ்ரீரமணரின் உபதேச சாரம் அல்லவா?
பேசுவதில் கவனத்துடன் இருந்தாலே ஒருவர் தெய்விகத்தில் முன்னேற முடியும் என்பதற்காகத்தான் இந்த ‘வாக்குத் தவப்’ பயிற்சி.
அன்றாடம் வார்த்தைகளை நிர்வகிக்கும் விதத்தில்தான் நமது மகிழ்வும் நிம்மதியும் அடங்கியுள்ளன. தகுதியான நட்பும் தொடர்கின்றன.
‘யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத: - யோகத்தின் முதல்படி வாக்கைக் கட்டுப்படுத்துவது’ என்று விவேக சூடாமணியில் ஸ்ரீசங்கரர் கூறுகிறார்.
கொடிய மிருகம் எது என்று கேட்ட சீடனுக்கு, “நாக்குதான் கொடிய மிருகம். ஒருமுறை அதை அவிழ்த்துவிட்டால் திரும்பக் கட்டுவது கஷ்டம்” என்றார் குருநானக்.
பக்தர்களே, ஒரு கணம் உங்கள் கவனத்தை உங்களது பேச்சில் கொண்டு வாருங்கள். இப்போது நீங்கள், சென்ற கணத்தில் பேசியது, இப்போது பேசுவது, இனி பேசப் போவது ஆகியவற்றில் கவனம் கொள்ளப் போகிறீர்கள்.
யாராவது துயரத்தில் உள்ளபோது, ஆறுதலாக, அதுவும் அந்த ஆறுதல் நல்ல மனதிலிருந்து வந்தால், அதைக் கேட்பவரின் மனம் எவ்வளவு ஆனந்தம் அடையும் என்பதை யோசியுங்கள்.
நீங்கள் யாருக்காவது அது போன்ற ஓர் ஆறுதலை வழங்கியதை எண்ணிப் பாருங்கள்.
அந்த நினைவின் மூலம் இறுக்கமாக இருந்த மனம் இப்போது லேசாகிவிட்டதை உங்களால் உணர முடிகிறதா?
அடுத்து, நீங்கள் ஒரு சங்கடத்தில், சஞ்சலத்தில் இருந்தபோது உங்களிடம் பரிவான வார்த்தைகளைப் பேசியவர்களின் முகங்களை நன்றியுடன் நினைத்துப் பாருங்கள்.
‘இறைவா, கடுஞ்சொற்கள் என் வாயிலிருந்து வரக் கூடாது; தைரியமும் சந்தோஷமும் தரும் வார்த்தைகளையே என்னிடமிருந்து எப்போதும் வரவழையுங்கள்’ என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
சாந்தமான சொற்கள் உங்களைச் சங்கடங்கள் பலவற்றிலிருந்து காப்பாற்றி உள்ளன. முரட்டுச் சொற்களை உதிரவிட்டு, பட்டுப் போன மரமானவர்கள் பலர்.
புண்படுத்தும் வார்த்தைகள் பேசியதால் சிதைந்த உறவுகள் எத்தனை எத்தனை!
‘குருடனின் மகன் குருடன்’ என்று துரியோதனனைக் கேலி செய்த திரௌபதி பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமா!
அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ।
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே ॥
‘பிறர் மனதை நோகச் செய்யாத, உண்மையான, இனிய, இதமான வார்த்தைகளைப் பேசுவதும் வேதம் ஓதுவதற்குப் பயிற்சி செய்வதும் வாக்கினால் செய்யப்படுகின்ற தவம்’ என்கிறது கீதை (17:15).
அந்தத் தவத்தை எவ்வாறு செய்வது?
ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம் ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: ஸனாதன:॥
‘உண்மை பேச வேண்டும், இனிதாகப் பேச வேண்டும்; இனியதல்லாத உண்மையைப் பேசக் கூடாது. உண்மையற்ற இனியதையும் பேசக் கூடாது. இதுவே சான்றோர்கள் காலம் காலமாகக் கடைப்பிடிக்கின்ற தர்மம்’ என்கிறது மனுஸ்ம்ருதி.
‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ என்றார் வள்ளுவர்.
வேண்டாத வாதம் புரிந்து பண்டிதர்களை வென்று வந்த, அந்த வெற்றிக் களிப்பில் திளைத்து வந்த சதாசிவ பிரம்மேந்திரரை, “சதாசிவா, உன் வாய் மூடாதோ?” என்று கூறி, அந்தச் சீடரை ஆத்மஞானியாகவும் மகா பக்தனாகவும் மாற்றியது அவரது குருவான பரமசிவேந்த்ர சரஸ்வதி சுவாமிகளின் கடுமையாகத் தோன்றிய ஒரு பரிவான சொல்தானே!
‘அன்யா வாசோ விமுஞ்சத’ – ‘வீண் வார்த்தைகளை விடு’ என்று முண்டக உபநிஷதம் கூறுவதைக் கூறி, ஆன்மாவில் கவனம் கொள், ‘வார்த்தைகள் எனும் காட்டில் சிக்கிக் கொண்டு சஞ்சலம் அடையாதே’– ‘சப்தஜாலம் மஹாரண்யம் சித்த ப்ரமண காரணம்’ (விவேக சூடாமணி) என்று புரிய வைத்ததும் அந்தக் குருவின் பரம கருணைதான்!
அந்தக் குருமார்களைப் போன்றோரை எண்ணி ஒரு கணம் உங்களது சிரம் குனிந்து, கரம் குவியட்டும்.
காட்டில் கொள்ளைக்காரனுக்கு முன், அழகான யுவதியான அன்னை ஸ்ரீசாரதாதேவி தனியே சிக்கிக் கொண்டார்.
அப்போது, “அப்பா, நீங்கள் வந்ததால் நான் தனியாகப் போகிறேன் என்ற என் பயமெல்லாம் போய்விட்டது” என்று கூறி ஒரு கணத்தில் கொள்ளையனின் மனதையே கொள்ளையடித்து அவரைத் தன் தந்தையைப் போலாக்கிக் கொண்டது அன்னையின் ஓர் அன்புச் சொல்!
‘முரடன், பைத்தியம், குடிகாரன், அகங்காரி – இது போன்றோர் உன் முன் வந்தால், அண்ணா, மாமா என்று கூறி அவர்களிடமிருந்து தப்பித்துவிடு’ என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அருவி கொட்டுவதுபோல் பிறருக்கு அறிவுறுத்தும்போதோ அல்லது ஓயாமல் பேசுவதற்கு முன்போ பேரறிஞர் சாக்ரடீஸ் மூன்று சல்லடைகளைப் பயன்படுத்தச் சொல்கிறார்.
நீங்கள் கூறும் விஷயங்கள் அல்லது அறிவுரைகள், உண்மையானவைதானா என்று பார்ப்பது முதல் சல்லடை.
இரண்டாம் சல்லடை, நீங்கள் உரைப்பது, கேட்பவருக்குத் தீமை தருவதாக இல்லாமல் பார்த்துக் கொள்வது.
நீங்கள் சொல்வது - பிறருக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சியும் நன்மையும் தருமா என்று பரிசீலித்த பின் பேசுவது மூன்றாம் சல்லடை.
அன்பு பக்தர்களே, ‘இனி நான் பேசும்போது இந்த மூன்றிலும் கவனம் கொள்வேன்’ என்ற உறுதி உங்களுக்குள் உதிக்கட்டும்.
இளம் வயதில் யாரையோ திட்டிவிட்டு வந்த மகனிடம், “சரஸ்வதிதேவி வீற்றிருக்கும் பீடம் நாக்கு. அந்த இடத்தை எப்போதும் நல்லதாகவும் தூயதாகவும் வைத்திரு, மகனே” என்று சுவாமி ரங்கநாதானந்தரிடம் அவரது தாய் கூறினார்.
தாயின் சொல்லைத் தட்டாததால்தான், சுவாமிகளின் சொற்களுக்கு உலகம் முழுவதும் மதிப்பிருந்தது. அப்படிப்பட்ட சுவாமி ரங்கநாதானந்தரின் வாக்கு வன்மையை, ஆயிரக்கணக்கான மக்களிடம் அது தூண்டிவிட்ட அற்புத சக்தியை ஒரு கணம் தியானிப்போம்.
வார்த்தைக்குப் பலம் உண்டு. ஒருவரைத் திடீரென்று மற்றொருவர் கடிந்து பேசிவிட்டாலோ அல்லது முட்டாளே என்று கூறிவிட்டாலோ, உடனே அவர் கோபத்துடன் அடிக்கக்கூட சென்று விடுகிறார்.
‘முட்டாள்’ என்ற ஒரு பதமே முரட்டுத்தனத்தை ஒருவருக்குள் தூண்டிவிட்டால், உத்தமர்களின் உபதேசங்கள் மற்றும் தெய்வத் திருநாமங்கள் மூல சக்தியையே தூண்டி விடும் அல்லவா!
இவ்வாறு யாரேனும் கடிந்து கொண்டபோது நீங்கள் அவசரப்பட்டு உங்கள் நிலை மறந்ததை எண்ணிப் பாருங்கள்.
உங்களுக்கே இப்போது சிரிப்பு வருகிறதா, இல்லையா?
‘மந்திரம் போன்று வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் மகாகவி பாரதியார். மந்திரத்தை முறையாக ஓதினால், நம் மனமும் அந்த மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு, நமக்குப் பலவித நன்மைகள் புரிந்திடும். ஆகவே ஒரு கணம் உங்கள் இஷ்டமந்திரத்தை உள்ளன்புடன் உங்கள் அகத்தில் ஓதுங்கள்.
சொல் எப்படி இருக்க வேண்டும்?
‘தேவசக்திகளை நம்முள்ளே நிலை பெறச் செய்யும் சொல் ஒன்று வேண்டும்’ என்று பாரதியார் கூறியதை நினைவில் கொள்ளுங்கள்.
அடுத்து, ‘பிறரைப் பேச அனுமதியுங்கள்; தேவையெனில் பேசுங்கள்’ என்பது ஆரோக்கியமான உரையாடலுக்கு உயிரூட்டும். காதால் அதிகம் கேட்பவனே அதிகமாகவும் நன்கும் கற்கிறான்; வாயை அதிகம் திறப்பவன் குறைவாகவே கற்பான்.
‘இனி இந்த வாக்குத் தவத்தை நான் செய்வேன்’ என்று உங்கள் வலது கையை நெஞ்சின் மீது வைத்து ஒரு சங்கல்பம் ஏற்றுக்கொள்ளுங்கள்.
எப்போதும் நாம்தான் அதிகம் பேச வேண்டும் என்றில்லை. ஏற்கனவே புனிதர்கள் நம் மேன்மைக்காகப் பேசிவிட்டுச் சென்ற மொழிகளைச் சிரத்தையுடன் கேட்பதே நாம் புரிய வேண்டிய முதல் ‘வாக்குத் தவம்’.
ஏனெனில் பகவானின் அமுதமொழிகள்
‘நமது துன்பங்களைத் துடைப்பவை,
ஞானிகள் போற்றுபவை,
நமது பாவங்களைப் போக்குபவை,
நாம் கேட்பதற்கு இனியவை,
நமக்குச் செல்வங்களை அளிப்பவை.’
மேலும், கண்ணன் முழங்கிய கீதை, ரிஷிகள் போதித்த உபநிஷதங்கள், ஸ்ரீராமகிருஷ்ண அமுதமொழிகள் போன்றவற்றைக் கேட்டபின் ஒருவர் அடைய வேண்டிய முக்கியமான பலன், இறைவனின் Spokesman - பிரதிநிதியாக மாறுவதுதான்.
‘என் பவதாரிணிதேவி எப்படி என்னைப் பேச வைக்கிறாளோ, அப்படி நான் பேசுவேன்’ என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
சிகாகோவில், சர்வ சமயப் பேரவையில் உரையாற்றும் முன் சுவாமி விவேகானந்தர் சரஸ்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்த பிறகே உரைத்தார். அதனால்தான் அந்த உரை உலக மக்களின் உள்ளத்தில் இன்றும் ஒலிக்கிறது.
அன்பர்களே, இனி நீங்கள் ஒன்றைப் பேசும் முன்பு உங்கள் இஷ்டதெய்வத்திடம் அனுமதி பெறுங்கள்:
‘இறைவா, இதை நான் பேசுவதில் உனக்குச் சம்மதமா?’ என்ற பிரார்த்தனையில் உங்களது நேரம் சிறிது செலவாகட்டும். அது செலவல்ல, ஆன்மிக முதலீடு என்பது பயிற்சி செய்யச் செய்யப் புரியும் உங்களுக்கு.
ஒருவருக்கு ஒன்றை எடுத்துத் தரும்போது கையை அலம்பிக் கொண்டு கைச் சுத்தத்துடன் கொடுக்கிறீர்கள்.
அதுபோல், ஒவ்வொரு சொல்லையும் சொல்வதற்கு முன்பு, ஓரிரு நாம ஜபத்தைச் சொல்லிவிட்டு ஆரம்பியுங்கள். அதுவே உங்களுக்கு மந்திர பலத்தைத் தந்திடும்.
‘நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே’ என்ற புனித நிலைக்கு உங்களைக் கொண்டு செல்லும்.
ஆகவே சொற்களில் கவனம் வையுங்கள்;
சொர்க்கத்தை இங்கேயே படைத்திடுங்கள்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ❖
சுவாமி விமூர்த்தானந்தர்
23 ஜனவரி, 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்