RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

எளிய தியானப் பயிற்சி - 5

29.09.21 05:01 PM By thanjavur

எளிய தியானப் பயிற்சி - 5

'நேர தியானம்'

அன்பர்களே, அடிக்கடி நேரத்தைப் பார்க்கும் நீங்கள், நேரம் உங்களுக்குக் கற்றுத் தரும் பாடத்தைக் கற்றுள்ளீர்களா?

உங்களுக்குத் தெரியுமா, நிமிடங்களுக்கு எல்லாம் சக்தி உண்டு என்று?

நொடிகளுக்கு எல்லாம் நம் நெஞ்சுக்கு மகிழ்ச்சி தரும் சக்தி உண்டு என்று சொல்லித் தருகிறது நேர தியானம்.

அன்பர்களே! நீங்கள் நம்பும் கடவுளின் திருவுருவப் படங்கள் முன்பு ஜபம் செய்ய அமருங்கள்.

உங்களுக்குப் பிடித்த இறைநாமங்களை வாய்விட்டுச் சொல்லுங்கள், அதனால் மனநோய் விட்டுப்போகும்!

ஆனால்...,

ஒரு சில நிமிடங்கள் ஜபம் ஒழுங்காகத்தான் நடக்கிறது.

ஒரு கட்டத்தில் நீங்கள் மனதைக் கவனித்து நின்றால்..., 

அது கடந்தகால நல்ல நிகழ்வுகளில் குளிர்காய்கிறது.

அல்லது நேற்றைய வெற்றி தோல்விகளில் சிக்கித் தவிக்கிறது அல்லது குதித்துக் கொண்டாடுகிறது.

மீண்டும் சில கணங்கள் மனதை இழுத்து ஜபம் செய்யுங்கள். இப்போது மனம் எதிர்கால வீண் கற்பனைகளிலோ, எதிர்பார்ப்புகளிலோ, புரியாத, புதிரான பயங்களிலோ, ஆசைகளிலோ மூழ்கிவிடுகிறது.

‘எனக்கு என்னவாகிவிடுமோ’ என்ற பரபரப்பு உங்களது மனதின் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. அல்லது இதெல்லாம் நடக்க வேண்டும் என்ற ஆழ்ந்த யோசனையற்ற அதிக எதிர்பார்ப்புகள். அவை நிகழாவிட்டால், ஏமாற்றம்தான்.

ஆக மனம், ஒன்று சுகமான கற்பனைகளில் திளைக்கிறது அல்லது துக்க நினைவுகளில் லயித்து நெஞ்சு விம்முகிறது. மனம் ஒன்று ஆடுகிறது அல்லது ஓலமிடுகிறது.

கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் கவ்விக் கொண்டு அலைவதுதான் மனமா?

‘போன நாட்டு இரங்குவதே தொழில்....’ என்று கதறுவார் தாயுமானவர்.

மனம் அமைதியாக இருக்கிறதா? இருக்க முடிகிறதா?

‘இந்திரியாணாம் மனச்சாஸ்மி’ - இந்திரியங்களில் நான் மனமாக உள்ளேன்’ என்றார் பகவான் கீதையில்.

ஆம், ஸ்ரீகிருஷ்ணரின் ஆசனம் என்பது நம் மனம்தான். ஆனால் அந்த ஆசனத்தை பகவான் அமர்வதற்குத் தயாராக்க வேண்டுமே! இதனைச் செய்வதற்கான முயற்சியே இந்த தியானப் பயிற்சி.

அன்பர்களே! இப்போது நீங்கள் உங்கள் ஆசனத்தில் நேராக அமருங்கள்.

எதன் மீதும் சாய்ந்து கொள்ளாதீர்கள். கடந்த காலக் கஷ்டம் - சுகம், லாபம் - நஷ்டம், வசதி - அசதி போன்றவற்றில் மனம் ஈடுபடாமல் இருப்பதுபோல அது உங்களை நினைக்க வைக்கும்.

தலையைத் தொங்கவிட்டு முன்பக்கம் சாயாதீர்கள்.

இது மனம் எதிர்காலத்தை, நல்லது கெட்டதற்கான விருப்பு வெறுப்புகளில் மூழ்கிவிடாமல் இருப்பதுபோல உங்களை எண்ண வைக்கும்.

இன்பம் - துன்பம், மகிழ்ச்சி - தளர்ச்சி போன்ற இருமைகளைக் கடந்து ஆனந்தம் என்ற பெருநிலையை, இயல்பான நிலையை அடைவதுதான் தியானத்தின் முதல் நோக்கம்.

முன்னே பூட்டப்பட்ட குதிரையும், மூட்டைகள் சுமத்தப்பட்ட வண்டி பின்னேயும் இருப்பதாக எண்ணுங்கள். வண்டி கடந்த காலம் என்றால், குதிரை எதிர்காலத்தைக் குறிக்கிறது.

குதிரையையும், வண்டியையும் இணைத்த இடத்தில், நடுவில் வண்டிக்காரன் இருக்கிறான்.

கடந்த காலமான சுமை உள்ள வண்டியையும், எதிர்காலத்தில் நம்பிக்கை என்ற குதிரையையும் இணைக்கும் இடத்தில் நீங்கள் அமர்ந்தால்தான் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்.

ஆனால், பொதுவாக மனிதனுக்கு நடப்பது என்ன?

ஒன்று, கட்டுக்கடங்காத குதிரை மிரள்கிறது. அல்லது,

சுமை ஏற்றப்பட்ட வண்டி சாய்கிறது.

இந்த இரண்டு விபத்துகளும் ஏற்படாமல் வண்டிக்காரன் இரண்டையும் கட்டி ஆண்டால், அதுவே சாதனையாகிவிடும்.

இப்போது பாரதப் போரில் ஸ்ரீகிருஷ்ணர் திறமையாக ரதத்தை நடத்தியதை ஒரு கணம் எண்ணிக் கொள்ளுங்கள். நீங்களும் ஸ்ரீகிருஷ்ணரின் அருள் பெற்றவர் என நம்பி அவராகவே மாறிவிட்டதாக பாவனை செய்யுங்கள்.

குதிரையுடனும் மூட்டைகளுடனும் அமர்ந்து பயணம் செய்வதுபோல நீங்கள் தெய்வத்தின் திருமுன்பு அமர்ந்திருப்பதாக பாவியுங்கள்.

அடுத்து, இன்னொரு சிந்தனை.

குழந்தைகள் ஆடி ஓடி விளையாடுகின்றன. எவ்வளவு திரிந்தாலும் அவர்களுக்குச் சோர்வில்லை, தளர்வில்லை. நீங்கள் பார்த்த சிறார்களின் இந்த அம்சத்தை அரைக் கணமாவது எண்ணிப் பாருங்கள்.

ஆனால் வயது ஏற ஏற, சிறு செயல்கள் செய்வதுகூட உங்களைச் சோர்வைத் தருகின்றன. நீங்கள் சோம்பலை வெறுத்தாலும் சுலபத்தில் அது எப்படி உங்களுக்கு வருகிறது?

மனதை வீணாக, இலக்கின்றி அல்லது இலக்கு இருந்தும் அதைத் தவற விட்டு அலைய விடுவதுதான் மனஉளைச்சலுக்கு முக்கிய காரணம்.

மனதைப் பயன்படுத்துவது ஒன்று. மற்றவை இழுத்த இழுப்புக்கெல்லாம் மனம் அலைவது வேறொன்று.

குதிரையை வண்டிக்கு முன்னே பூட்டுவது மனதை ஆள்வது போன்றது; அப்போது அது நம் பணியாள்.

குதிரைக்குப் பின்னே வண்டியை இழுத்து வரச் செய்தால் அது பயணம். வண்டியிலுள்ள பொதி நம் மீது விழுந்தால், நாம் போவது பிரயாணம் அல்ல, மயானம்.

நிகழ்காலம் என்பது கடவுளின் பரிசு. Present = பரிசு.

அடுத்து மற்றொரு சிந்தனை. ஒரு கடிகாரத்தை மனதில் கொண்டு வாருங்கள். அதிலுள்ள பெரிய முள் வருங்காலத்தையும் சிறிய முள் இறந்த காலத்தையும் குறிக்கிறது.

பெரியது ஓடுகிறது. சிறியது ஊர்கிறது. இரண்டையும் சீராக இயக்க வேண்டுமென்றால், விநாடி முள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

கவலைகளிலும் சோகங்களிலும் ஊறிப் போயிருந்த ஒருத்திக்கு அன்னை ஸ்ரீசாரதாதேவி கூறியது இது:

‘மகளே, கடிகாரத்து விநாடி முள் ஓயாமல் இயங்குவது போல், நீயும் பிரார்த்தனையுடன் இறைநாமத்தை ஜபி.’

அன்பர்களே! இவ்வாறு நீங்கள் இறைநாமத்தை ஓதினால், உங்கள் அகத்தில் ஓயாமல் ஓசைப்படுத்தும் உங்களது சாதாரண பெயர் மங்கி, இறைநாமம் உங்களுக்குள் உதிக்கும்.

நம் பெயருக்கு அல்ப சக்திதான் உண்டு. ஆண்டவனின் திருநாமத்திற்கு அனந்த சக்தியல்லவா! அவரது நாமத்தை ஆர்வத்தோடு ஓதினால், அந்தச் சக்திக்கு நாமும் சொந்தக்காரர் ஆவோம். ஆகவே, மீண்டும் நன்கு நிமிர்ந்து அமருங்கள்.

இறந்த கால மற்றும் வருங்கால நினைவுகள் இல்லாமல் சில கணமாவது நிகழ்காலத்தில் ஆனந்தமாகத் திகழுங்கள்.

கவலையுள்ள, இறந்த கால மற்றும் எதிர்காலச் சிந்தனைகளோ, ஆசையுள்ள எதிர்பார்ப்புகளோ, வீண் கற்பனைகளோ அற்ற நிலையே நம் ஆழ்ந்த உறக்க நிலை. அது ஆனந்தமானது.

ஆழ்ந்த உறக்கம் தினமும் சில கணங்களாவது இல்லையெனில், உங்களது ஆரோக்கியம் கெடும்; மன உளைச்சல் கூடும்; சிந்தனை தடுமாறும்.

அதனால்தான் ஸ்ரீரமண மகரிஷி, ‘Bring sushupti into waking state' - ‘ஆழ்ந்த உறக்க நிலையை விழிப்பு நிலைக்குக் கொண்டு வா’ என்கிறார்.

ஆழ்ந்த உறக்கத்தில் கிடைக்கும் அந்த ஆனந்தமான மன நிலையைப் பெறத்தான் நீங்கள் மந்திரத்தை ஜபிக்கிறீர்கள். இப்போது, இங்கேயே, இந்தக் கணத்தில் வாழும் நிலையைப் பெறத்தான் நமக்கு மந்திர ஜபம் தரப்பட்டிருக்கிறது.

Power of Now - ‘இக்கணத்தின் சக்தி’ என்பது மிக ஆழமானது. Now என்றாலே Narayana Over the World - ’உலகின் மீதான இறையாண்மை’ என்று கற்றவர்கள் புரிந்து கொள்வர்.

பக்தர்களே, நீங்களும் அதைப் புரிந்துகொள்வதற்கு, வண்டிக்காரன் போல வசதியான நிலையில் அமருங்கள்.

விநாடி முள் போல ஓயாமல், நிகழ்கால கணத்தில் கவனம் வைத்துச் செயல்புரியுங்கள்.

வருங்காலம் என்ற பெரிய முள்ளும், கடந்த காலம் என்ற சிறிய முள்ளும் தரும் உற்சாகமோ, உபத்திரவமோ உங்களை அசைக்கக் கூடாது என்ற சங்கல்பத்தோடு ஜபியுங்கள்.

‘எது செய்தாலும் அது அது அந்தந்த நேரத்திற்கான பூஜை ஆகட்டும்’ என்பார் சுவாமி விவேகானந்தர்.

இனி எதைச் செய்தாலும் அதை ஒரு வழிபாடு செய்வதற்குரிய சிரத்தையுடன் செய்ய சபதம் ஏற்றுக் கொள்ளுங்கள்; சங்கல்பம் மேற்கொள்ளுங்கள்.

நீங்கள் ஆனந்தத்தில் திளைப்பீர்கள். 

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

சுவாமி விமூர்த்தானந்தர்

29 செப்டம்பர், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இந்த தியானத்தை கேட்க:

thanjavur