RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

எளிய தியானப் பயிற்சி - 3

23.05.21 05:28 PM By thanjavur

எளிய தியானப் பயிற்சி - 3

'ஆனந்த தியானம்'

அன்பான பக்தர்களே, இன்று நீங்கள் மூழ்க இருப்பது  ஆனந்த தியானத்தில். 

அமைதியான இடம் ஒன்றில் அமருங்கள்.

சநாதன புருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் சங்கடங்களைத் தீர்த்து நம் நெஞ்சில் என்றும் நிலைபெற வேண்டும் என்று முதலில் வேண்டிக் கொள்ளுங்கள்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகிய இறைவனின் முத்தொழில்களைக் குறிக்கும் ஓங்காரத்தை உரக்க உச்சரியுங்கள்.

ஓங்காரத்தை முதல் முறை கூறும்போது காற்று உள்ளே செல்ல, உங்களது சிந்தனையும் உள்ளமும் சுத்தமானது என்று நம்புங்கள்.

ஓங்காரத்தை இரண்டாம் முறை உச்சரியுங்கள்.

உங்களது சோகங்கள் என்ற மேகங்கள் காற்றோடு காற்றாகப் பறந்துவிட்டதாக எண்ணுங்கள்.

மூன்றாம் முறை ஓங்காரத்தை உச்சரியுங்கள்.

உங்களது தோல்விகள், அவமானங்கள் அனைத்தையும் ஆண்டவனிடம் விட்டுவிட்டதாக நம்புங்கள்.

நிமிர்ந்து அமர்ந்து உங்கள் மனதைக் குவியுங்கள். நெஞ்சின் மீது கரம் குவித்துக் கூறுங்கள்.

‘பகவானே ஸ்ரீராமகிருஷ்ணரே, இன்பமும் துன்பமும் கடந்த ஆனந்தம் பெறுவதற்காகத்தான் உங்கள் முன் அமர்ந்துள்ளேன். உங்களது இயல்பான நிலை அமைதியானது. அந்த நிலையை அடியேனும் பெற்றிட அருளுங்கள்’.

ஆனால் அன்பர்களே, இன்று நம் நிலை எப்படி உள்ளது?  

தினமும்...

உண்பதில் இன்பம், உறங்குவதில் ஓயாத இன்பம்,

பார்ப்பதில் பேரின்பம், கேட்பதில் மகிழ்ச்சி,

தொடுவதில் கிளர்ச்சி, பேசுவதில் எழுச்சி

- என இப்படி கண், காது, மெய், வாயால் அனுபவிக்கும் விஷய சுகங்களையே உண்மையான சுகங்கள் என்று எத்தனை காலம்தான் நம்புவது!

‘இந்த வெளிப்புற இன்பங்களே எனக்கு வேண்டியவை என்று எத்தனைக் காலம்தான் நம்பி ஏமாறுவது?

‘துன்பம் என்னைத் தொடர்வதை எத்தனைப் பிறவிகளில்தான் நான் தொடர்வது?

‘இன்பமும் - துன்பமும் இல்லாத,

‘சுகமும் - துக்கமும் இல்லாத,

‘எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும் இல்லாத,

‘பசியும் - தாகமும் துன்புறுத்தாத என் இயல்பான ஆனந்த நிலையை நான் மீட்டெடுப்பது எப்போது?’ என்று நீங்கள் ஆழ்ந்து யோசியுங்கள்.

இந்திரியங்கள் மூலமாக வரும் விஷயானந்த சுகம்தான் சுகம் என்று ஆணி அடிக்கப்பட்டவர்களாக, அசைய முடியாமல் மனதளவில் மயங்கித் தவிக்கிறோம்.

‘ந அல்பே சுகமஸ்தி’ - ‘மலினமானவற்றில் இன்பமில்லை’ என்கிறது உபநிஷதம். ஆனால் நம் மனமோ ஒவ்வொரு கணமும் இந்திரியங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடுகிறது. புலன்கள் ஒவ்வொன்றும் நம் உள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல் வீணாக அலைகின்றன.

ஐந்து புலன்கள் என்ற ஐந்து திருடர்கள், ஆனந்தம் என்ற நம் ஆன்மிக நிதியை அபகரிக்கக் கூடாது என்பதால் இறைவனிடம் இவ்வாறு வேண்டுங்கள்:

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது

அகத்தினில் நீ இலையோ அருணாசலா!

தியானத்தின் முதல் அடையாளமே உற்சாகமாக இருப்பதுதான். யோகிக்கு எல்லாமே ஆனந்தம்தான்.

‘உங்கள் மனதில் கவலை இருந்தால் அன்று அறையை விட்டு வெளியில் வராதீர்கள். கவலை என்ற நோயை உலகில் பரப்புவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை’ என்பார் சுவாமி விவேகானந்தர்.

பின் இந்தச் சிலவற்றை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.

1. புத்துணர்வு தரும் காலைச் சூரியன்,

2. வெள்ளித் தட்டென மின்னும் பௌர்ணமி நிலவு,

3. மலை நடுவே முகிழும் அருவி,

4. வெள்ளையுள்ளம் படைத்த பிள்ளை முகம்.

இவை தரும் மகிழ்ச்சியை உணருங்கள்.

‘ஆனந்தமாக வாழுங்கள்’ என்று மனதார உங்களை வாழ்த்திய மகனீயர்களை மானசீகமாக வணங்குங்கள். உங்கள் நன்மைக்காகப் பாடுபடுபவர்களை நன்றியுடன் நினையுங்கள்.

உங்கள் பெற்றோரின் பாதங்களைத் தொட்டுப் பணிந்ததை நினைவில் கொள்ளுங்கள். உங்களது குருவின் புனித கரம் உங்கள் சிரசின் மீது இருப்பதாக நம்புங்கள்.

இவர்களை எல்லாம் ஆழ்ந்த உணர்வுடன் நினைத்தால் மௌனமாகிவிடும் உங்கள் மனக்கிலேசங்கள்.

உங்களது வலது கை விரல்களை மடக்கி, முஷ்டியாக்கிக் கொள்ளுங்கள். இதனால் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவை நன்கு அடக்கப்பட்டதாக பாவியுங்கள்.

‘ஸ்ரீராமகிருஷ்ண பக்தனான நான், எதைக் காணச் சொல்கிறேனோ, அதை மட்டும் என் கண்கள் இனி காணட்டும்.

‘ஸ்ரீராமகிருஷ்ண பக்தையான நான், எதைக் காதால் கேட்க விழைகிறேனோ, அதையே என் காதுகள் கேட்கட்டும்’. இவ்வாறு ஒவ்வொரு புலனுக்கும் அன்புக் கட்டளையிடுங்கள்.

‘சிங்கம் கர்ஜித்தால் காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் அடங்கி ஒடுங்கிவிடும்’ என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

நம் மனமான காட்டில் வீண் ஆசைகள், உடலிலும் உள்ளத்திலும் சோம்பல், உயர்நோக்கமின்மை, தொண்டில் சுறுசுறுப்பின்மை, மனிதநேயமின்மை, கடவுளிடத்தில் பக்தியின்மை போன்றவற்றால் நாம் விலங்கிடப்பட்டிருக்கிறோம்.

அந்த விலங்குகள் யாவும் ஓடி ஒளிந்துவிடவும் - ஒழிந்து போகவும் - நம்முள் பக்தி எனும் சிங்கம் கர்ஜிக்கட்டும்.

‘ஸ்ரீராமகிருஷ்ணர் சோகமாக இருந்து ஒருமுறைகூட நான் அவரைப் பார்த்ததில்லை’ என்றார் ஸ்ரீசாரதாதேவி. அப்படிப்பட்ட அந்த நித்ய ஆனந்தமூர்த்தியை உங்கள் அகத்தில் எழுந்தருளச் செய்வதற்குச் சற்று நேரம் தியானியுங்கள்.

இப்போது உங்கள் அகத்தில் சாந்தமும் நிம்மதியும் இருக்கிறதா? என்று கவனியுங்கள். உங்களது நெஞ்சம் எந்த ஒலியை எழுப்புகிறது என்று உற்றுக் கேளுங்கள்.

நீங்கள் தீக்ஷை பெற்றவர் என்றால், உள்ளுக்குள் உங்கள் இஷ்ட மந்திரம் எங்கிருந்தோ ஒலிக்கும்.

அவ்வாறு ஒலிப்பது கேட்காவிட்டால், மும்முறை மந்திரத்தை மௌனமாக முழங்குங்கள். உங்கள் முழு மனதையும் மந்திர ஒலியால் நிரப்புங்கள்.

புலன்களால் பெறும் விஷயானந்தத்தைவிட உயர் சுகங்களைக் காட்டச் சொல்லி இறைவனிடம் வேண்டுங்கள்.

‘சர்வேஷாம் சாந்திர் பவது’ (எல்லா உயிர்களும் அமைதியாக இருக்கட்டும்) ‘சர்வேஷாம் பூர்ணம் பவது’ (எல்லா உயிர்களும் நிறைவுடன் வாழட்டும்) என்று பிரார்த்தியுங்கள். 

இதனால் உங்கள் மனம் மெல்ல விஷயானந்தத்திலிருந்து உயரே எழும்புகிறது.

பக்தி மலர்ந்தால் அடுத்து நம்முள் புலனடக்க இன்பம் அதாவது ‘சம சுகம்’ உதிக்கும்.

சம சுகத்தில் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உள்ளம் நல்லவற்றில் நிலைபெறும்.

தெய்வ நினைவு திடமாகும்.

நமது உண்மை நிலையான தெய்வீகத்தை என்றும் உணர்வதற்கு நம் இந்திரியங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சேரமான் பெருமானின் பாடல் மூலம் அறிவோம்.

சிந்தனை செய்ய மனம் அமைத்தேன்

செப்ப நா அமைத்தேன்

வந்தனை செய்யத் தலை அமைத்தேன்

கை தொழ அமைத்தேன்

பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன்

மெய் அரும்ப வைத்தேன்

வெந்தவெண்ணீறணி ஈசற்கு

இவை யான் விதித்தனவே.

‘திருநீறு அணியும் பெருமானே! என் மனம் உன்னையே சிந்தனை செய்யட்டும். நாக்கு உன்னையே பாடட்டும். தலை உன்னையே வணங்கட்டும். உள்ளத்தில் உன்னைக் கட்டுவதற்கு அன்பு வைத்தேன். மனம் மொழி மெய்யால் உன்னையே வணங்கி மகிழ்கிறேன். எனது கவலைகள் எல்லாம் அகலுவதை நான் உணர்கிறேன்.’

இந்த வேண்டுதலால் விஷயானந்தத்திலிருந்து உங்களது புத்தியும் மனமும் ஏற்படுத்திய வீணான சங்கல்பம் விடுபடும்.

உங்களது பாவம் எப்படியோ அந்த அளவிற்கு பவசாகர சம்ஸ்காரத்தின் தாக்கம் குறையும்.

‘ஆழ்ந்த தியானத்தில் பொறிகளின் எல்லாச் செயல்களும் அடங்கிவிடுகின்றன. மனம் புறமுகமாக இருப்பதில்லை - வீட்டின் வெளிக்கதவைத் தாளிட்டதுபோல் மாறிவிடும். பொறிகளுக்கு ஐந்து விஷயங்கள் - உருவம், சுவை, மணம், ஸ்பரிசம், ஒலி - இவை யாவும் வெளியே நின்று விடுகின்றன.

‘தியான வேளையில் முதலில் ஐம்பொறிகளின் விஷயங்களெல்லாம் முன்னால் வரும். ஆழ்ந்த தியானத்தில் அவை வருவதில்லை; வெளியிலேயே வீழ்ந்து கிடக்கும்.’

இவ்வாறு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தியானம் செய்யும் சாதகர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கிறார்.

இந்தச் சிந்தனையினால் உங்கள் மனம் பவித்திரமாகிவிட்டது. பஜனானந்தம் உங்கள் உணர்வில் ஏற்படுகிறது.

உங்களுக்கு எதிரிலுள்ள அருள்வடிவ அண்ணல் ஸ்ரீராமகிருஷ்ணரை அன்புடன் கவனியுங்கள்.

‘ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்தித்தபோதே, என் அகத்தில் ஓர் ஆனந்தக் கலசத்தை அவர் வைத்துவிட்டார்’ என அன்னை ஸ்ரீசாரதாதேவி கூறுவார். இப்போது இவ்வாறு வேண்டுங்கள்.

(உரக்கக் கூறுங்கள்) ‘பகவானே! ஸ்ரீராமகிருஷ்ணரே, எனக்கு உண்மையில் வேண்டியதை எல்லாம் தரும் கல்பதரு நீங்கள்! அன்னை ஸ்ரீசாரதைக்குத் தாங்கள் அளித்த ஆனந்தக் கலசத்திலிருந்து ஒரு துளியாவது எனக்கும் தாருங்கள்.

விஷயானந்தத்திலிருந்து என்னை விடுவித்துத் தங்களது திருநாமத்தை ஓதுவதையும், தங்களுக்கான இறைத்தொண்டினையும் நடத்திடும் பஜனானந்தத்தை அருளுங்கள். பிரம்மானந்தத்தை நோக்கி என்னை அழைத்துச் செல்லுங்கள்.

மெய்யன்பர்களே, பிறகு இந்த உபநிஷத மந்திரத்தை முழங்குங்கள்:

ஓம் தேஜோஸி தேஜோ மயி தேஹி ।

(இறைவா) நீ ஆன்ம சக்தி; எனக்கு ஆன்ம சக்தியைத் தருவாய்.

வீர்யமஸி வீர்யம் மயி தேஹி ।

நீ ஒழுக்க சக்தி; எனக்கு ஒழுக்க சக்தியைத் தருவாய்.

பலமஸி பலம் மயி தேஹி ।

நீ உடல் சக்தி; எனக்கு உடல் சக்தியைத் தருவாய்.

ஓஜோஸி ஓஜோ மயி தேஹி ।

நீ தெய்விக சக்தி; எனக்கு தெய்விக சக்தியைத் தருவாய்.

மன்யுரஸி மன்யும் மயி தேஹி ।

நீ தைரியம்; எனக்குத் தைரியத்தைத் தருவாய்.

ஸஹோஸி ஸஹோ மயி தேஹி ஓம் ॥

நீ பொறுமையின் உரு; எனக்குப் பொறுமையைத் தா.

பக்தர்களே, எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் இந்தப் பிரார்த்தனையை உரைத்திடுங்கள். ஆனந்தம் வருவதை அனுபவியுங்கள்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: 

சுவாமி விமூர்த்தானந்தர்

23 மே, 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இந்த தியானத்தை கேட்க:

thanjavur