'ஸ்திரமானவன் நான்' -
ஒரு தியானப்பயிற்சி
ஓர் உயர் பொருள் அல்லது கடவுள் மீது நமது எண்ண ஓட்டம் தொடர்ந்து இருப்பது தியானம் ஆகும்.
அன்பர்களே! ஆசைகள், உணர்ச்சிகள், உத்வேகங்களிலிருந்து சற்று நேரத்திற்காவது உங்களை நீங்கள் விடுவித்துக்கொள்ளுங்கள். உங்களது மனம் புறப்பொருட்களில் ஈடுபடாதவாறு செய்த பின் தியானம் செய்வதற்கு முடிவெடுங்கள்.
நீராடிவிட்டு, உங்களது சமயச் சின்னங்களைத் தரியுங்கள்.
அமைதியான இடத்தில் அமருங்கள்!
கைகளைக் கூப்பி நெஞ்சின் மீது வைத்திருங்கள்.
அடிவயிறு நிறையும் வரை மூச்சை உள்ளே இழுத்து வெளி விடுங்கள். 30-40% வரை மட்டுமே பயன்படுத்தப்படும் உங்களது சுவாசப்பையில் இப்போது முழு மூச்சு நிறையட்டும்; அதனால் உங்கள் ஆயுளும் ஆற்றலும் கூடும்.
கண்களை மெல்ல மூடுங்கள். பரம்பொருளான உங்களது இஷ்டதெய்வத்தை உணர்வுபூர்வமாக நினையுங்கள்.
‘பகவானே, தாங்கள் என் உணர்விலும், மனதிலும் புத்தியிலும் கலந்து அருளுங்கள்’ என்று உங்கள் இஷ்டதெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் தத்துவமான ஓங்காரத்தை மும்முறை முழங்குங்கள்.
உடல் - மனம் - புத்தி - பிராணன் - ஆன்மா ஆகியவை இறைவன் நமக்குத் தந்த வரப்பிரசாதங்கள். இவை யாவும் ஒன்றோடொன்று இணக்கமாக இருக்க வேண்டும்.
முன்னது பின்னதின் ஆளுகைக்கு உட்பட வேண்டும். அதாவது உடலை மனதால் ஆள வேண்டும்.
மனதைப் புத்தியால் ஆள்வதற்குப் பிராணனின் போக்கைச் சீர் செய்யுங்கள்.
மீண்டும் ஒருமுறை வயிறு நிறையும் வரை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
இப்போது உங்களது உடலிடம், ‘உடலே, நீ என் மனம் கூறும் நல்ல கட்டளைக்குப் பணிந்து போவாய்’ என்று உடலுக்கு மெல்ல அன்புடன் உணர்த்துங்கள்.
பிறகு விவேக புத்தியுடன் மனதிடம், ‘இறைவனின் அம்சமாக என்னுள் இருக்கும் மனமே, நீ என்றும் என்னுள் ஒருமுகப்பட்டு இருந்திடு’ எனக் கேட்டுக் கொள்ளுங்கள்.
இதனால் உங்கள் உடல், மனம், புத்தி ஆகியவை ஸ்திரமாகியுள்ளன.
கயிலாயத்தில் கடுங்குளிரில் வீற்றிருக்கும் சிவபெருமானின் தியான நிலை திருவுருவம் போல் நீங்களும் இருப்பதாக பாவியுங்கள்.
சிவபெருமான் ஆழ்ந்த தவம் புரிந்தாலும் அவரது திருப்பாதம் வெப்பமாக இருக்கும்; அந்தப் பாதங்கள் போல் உங்களது கால்களும் வலுவாகவும் சூடாகவும் இருக்கட்டும்.
சிவபெருமானின் இதயம் பேரமைதியில் ஆழ்ந்திருந்தாலும் அவரது திருவயிறு போல் உங்களது வயிறும் மிருதுவாகவும், இருப்பதே தெரியாதது போலும் விளங்கட்டும்.
ஆழ்ந்த தியானம் செய்தும் சிவபெருமானின் சிரசுப் பகுதி எப்போதும் சூடாகாமல் குளிர்ந்தே விளங்கும். அதுபோல், நீங்கள் எது செய்தாலும், எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும் உங்களது தலை குளிர்ச்சியாக இருக்கட்டும்.
அதனால் உங்களுக்குப் பரபரப்பு இல்லை; டென்ஷன் துளியுமில்லை. உங்களது உடலில் எந்தத் தளர்வும் இல்லை. உங்களுக்கு நோயே இல்லை; இதயம் சீராக இயங்குவதாக நினையுங்கள்.
மீண்டும் ஓங்காரத்தை உச்சரியுங்கள்; அப்படிச் செய்யும்போது ‘நான் திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறேன்’ என எண்ணி அதே பாவனையில் சற்று நேரம் நில்லுங்கள்.
அந்த பாவனாபலத்துடன் மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளுங்கள். பின் மெல்ல மூச்சை வெளிவிடுங்கள்.
‘சரீரமாத்யம் கலு தர்ம சாதனம்’ – தரும காரியங்களுக்குப் பயன்படுவது உடல்’ என்ற மகனீயர்களின் வாக்கிற்கேற்ப ‘இனி நான் இந்த உடலை முறையாகப் பேணுவேன்’ என்று உறுதிமொழி மேற்கொள்ளுங்கள்.
உங்கள் உடலில் எந்தப் பகுதி உங்களுக்குத் தொந்தரவு தருகிறதோ, அதன் மீது கவனம் செலுத்துங்கள். அப்பகுதி ஆரோக்கியமாகி ஆண்டவனின் சேவைக்குப் பயன்படட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு மெல்ல கவனத்தை மனதின் மீது செலுத்துங்கள்.
கணக்கற்ற எண்ணங்கள் மனதில் கண்ணாமூச்சி காட்டலாம். மனம் சஞ்சலப்படலாம். துக்கங்கள், துயரங்கள், ஆசைகள், அவமானங்கள் போன்றவை வந்து உங்கள் நெஞ்சங்களில் அலை மோதலாம்.
அதற்கெல்லாம் அசையாதீர்கள்.
சில ஆறுகளின் நடுவில் மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கும். அதைக் கவனித்து பாருங்கள், அதே போன்று நீங்களும் இருக்க வேண்டும்.
ஆம், வாழ்க்கை எனும் நதி உங்களைச் சுற்றிக் கரைபுரண்டு ஓடுகிறது. அதன் நடுவே நிற்கும் ஸ்திரமான ஒரு மண்டபமாக உங்களை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
கவலை, வீண் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், வருத்தம், வெறுப்பு, ஆசைகள், பிறர் உங்களைக் குறை கூறியது, பிறர் உங்களை அலட்சியப்படுத்தியது, பிறர் உங்களை வதைத்தது, வாழ்த்தியது என எதுவானாலும் அவற்றைச் சற்றுத் தள்ளி வையுங்கள்.
அவை எல்லாம் மனம் எனும் ஆற்றில் வந்து உங்கள் மீது மோதும் நுரைகளே; நீங்களோ அசையாத மண்டபம்!
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி பிரம்மானந்தர் கூறுவார்:
‘தியானம் செய்யும்போது, நினைத்ததை அருளும் கல்பதருவாக இறைவன் உங்கள் முன் நிற்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். தியானத்தின்போது நீங்கள் ஒரு கடலின் நடுவில், மலை உயரமுள்ள அலைகள் சூழ இருப்பதாகவும், உங்கள் முன்பு இறைவன் உதவி புரியத் தயாராக இருப்பதாகவும் கற்பனை செய்யுங்கள்.’
இந்தச் சிந்தனையில் ஒரு 10 நொடிகள் நிலைத்திருங்கள்.
பிறகு ‘என் மனதின் ஸ்திரத்தன்மையே என் வாழ்வின், என் உடலின், மனதின், ஆரோக்கியத்திற்கு ஆணிவேர்’ என்று வாய் விட்டு உரக்க ஓரிரு முறை கூறிக் கொள்ளுங்கள்.
இப்போது கவனத்தை உங்களது புத்தியில் செலுத்துங்கள்.
காயத்ரி மந்திரம் நம்முள் உயர் புத்தியை விழித்தெழச் செய்கிறது. அதை ஐந்து முறை ஓதுங்கள்.
ஓம் பூர்புவஸ்ஸவ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் ॥
பொருள் : யார் நமது மேலான அறிவைத் தூண்டி விடுகிறாரோ, அச்சுடர்க்கடவுளின் ஒளியை தியானிப்போமாக!
காயத்ரி மந்திரத்தை நம்பிக்கையுடன் ஓதினால் உள்ளொளி வெகு விரைவில் மலரும்.
ஆதிசங்கரர் தமது ‘உபதேச ஸாஹஸ்ரி’யில் உரைப்பது போல், கடவுள் படைத்த உலகில், அவர் எனக்காக ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையான ஈசுவர சிருஷ்டியில் வாழ்வேன்.
மாறாக, கடவுளை மறந்து என் சிற்றறிவு, பக்குவமற்ற அகங்காரம் ஆகியவை படைக்கும் சாதாரண உலகமான, ஜீவ சிருஷ்டியில் நுழைய மாட்டேன். இதைப் புரிந்து கொள்வதற்காக ஓர் உதாரணம்.
ஒரு நாடகத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். இயக்குனர் காட்டிய நடிப்பையும் வசனத்தையும் நன்கு செய்தால்தான் உங்களுக்குப் பெருமை. ஆனால், மேடைக்கு வந்த பிறகு உங்கள் வசனத்தை மறந்து விட்டீர்கள். மேடையில் பார்வையாளர் முன்பு என்ன செய்வதென்று புரியாமல் நிற்கிறீர்கள்.
பிறகு எப்படியோ சமாளித்துக் கொண்டு சம்பந்தமில்லாத வசனங்களைப் பேச ஆரம்பிக்கிறீர்கள். அவற்றில் சில எடுபட்டு, பார்வையாளர்களின் கைத்தட்டல்களைப் பெற்றும் விடுகிறீர்கள்.
பிறகு அதன்படி மக்களிடம் எதையெல்லாம் கூறினால், அவர்களைச் சிரிக்க வைக்க முடியுமோ, அதில் கவனம் சென்றுவிடுகிறது.
இயக்குனரான இறைவன் சொன்னபடி உரைக்காமல், உங்கள் இஷ்டத்திற்கு எல்லாமே மாறிவிடுகிறது.
அதன் விளைவாக கதாநாயகனாக விளங்க வேண்டிய நீங்கள் ஜோக்கராக மாறிவிடுகிறீர்கள். அந்த அவல நிலை உங்களுக்கில்லை என மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
அன்பர்களே, இப்போது பின்வருவனவற்றைக் கூறி உங்கள் புத்திக்கு அறிவுறுத்துங்கள்.
எனக்குள் பல தெளிவின்மைகள் வந்து சென்றாலும்,
குழப்பங்கள் என்னைக் குறி வைத்துத் தாக்கினாலும்,
இறைசக்தி எனக்குள் புத்திசக்தியாக, விவேக சக்தியாக விளங்குவதால், இனி நான்,
என்னை உடல் என்று கருதிக் கொள்ள மாட்டேன்.
‘மனமே நான்’ என்று கருதி மயங்கி விட மாட்டேன்.
சிலவற்றைக் கற்றதாலேயே என்னை நான் ஒரு பெரிய அறிவாளி என்று எண்ணி ஏமாற மாட்டேன்.
தளர்ந்து போன உடலல்ல நான்;
குழம்பித் தவிக்கும் மனமுமல்ல நான்;
ஓர் இலக்கும் ஓய்வுமின்றி எப்போதும் எதை எதையோ யோசிப்பவனும் அல்ல நான்.
இவை யாவும் கடந்த புனிதமான, பிரகாசமான ஒளி நான். தூய்மையே வடிவானவன் நான்; சக்தி சொரூபமானவன் நான்; ஆனந்த வடிவே அடியேன் இயல்பு.
‘சிதானந்த ரூப சிவோஹம், சிவோஹம்’ என்று கம்பீரமாகக் கூவுங்கள்.
இனி, அந்த உண்மையான எனது இயல்பு நிலையிலிருந்து இந்த உலகைப் பார்ப்பேன். என் புனித நிலையிலிருந்து எல்லாவற்றையும் செய்வேன்.
இனி, எத்தனை முறை எனது இயல்பான புனித உணர்வை இழந்தாலும் அத்தனை முறையும் நான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வேன், ‘என் இஷ்டதெய்வத்தின் குழந்தை நான்’ என்று.
இந்த உறுதியான பாவனையில் எவ்வளவு கணம் நிலைக்க முடிகிறதோ, அவ்வளவு கணம் நில்லுங்கள். அதுவே இந்த தியானப் பயிற்சியின் பலன்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
சுவாமி விமூர்த்தானந்தர்
02 ஏப்ரல், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்