'திட சங்கல்பம் பெற ஒரு தியானப் பயிற்சி'
'திட சங்கல்பம் பெற ஒரு தியானப் பயிற்சி'
- சுவாமி விமூர்த்தானந்தர்
அன்பானவர்களே, நீங்கள் நினைத்த நல்லவை யாவும் ஏன் நத்தை வேகத்தில் நகர்கின்றன என்று சிந்திப்பதற்கு சங்கல்ப தியானம் தேவை.
நமது பிரியமான இஷ்டதெய்வத்தை ஆத்மார்த்தமாகப் பூஜிக்க நினைக்கிறோம். ஆனால் முடிகிறதா?
ஏகாந்தமாக இறைநாமத்தை இறைவனுக்காக ஏக்கத்துடன் ஜபிக்க நினைக்கிறோம்.
ஆனால் அதைச் செய்வதற்குள் நமக்கு வரும் தடைகள்தான் எத்தனை எத்தனை!
நாம் பலருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் நம் நல்லெண்ணத்தைப் பிறர் புரிந்து கொள்கிறார்களா?
நம்மை நாடி வருபவர்களுக்கு ஏதாவது உதவ முடியாதா என்ற ஆசை நமக்கும் உள்ளது.
நான்கு பேர் மெச்சும்படி கோப தாபங்களை விட்டு பிறர் மதிக்கக்கூடியவனாக இருக்க யாருக்குத்தான் ஆசையில்லை?
‘பொய் பேச மாட்டேன்’, ‘புறங்கூற மாட்டேன்’, ‘பிறர் பழிக்கும் செயலைச் செய்ய மாட்டேன்’ என்றெல்லாம் கூற எல்லோருக்கும் எப்போதும் ஆசை இருக்கிறது.
ஆனால் பாவம், பல சமயங்களில் மனிதன் சூழ்நிலைக்குப் பணிய வேண்டி இருக்கிறதே!
உங்களது நல்லாசைகள் எல்லாம் ஏன் நிராசைகளாகப் போகின்றன? நீங்கள் நினைப்பது ஒன்று; நடப்பது மற்றொன்று என்ற துயர நிலை ஏன் தொடர்கிறது?
எண்ணங்கள் உங்களது மனவானில் வந்து செல்லும் ஒரு மேகமாக இருந்தால் அது மறையவே செய்யும்.
உங்கள் எண்ணம் என்பது ஒரு மேகமல்ல, அது ஒரு விண்மீன் என்று ஆவதற்கு, முதலில் நீங்கள், ‘என்னால் எதையும் சாதிக்க முடியும்’ என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். அது மனித சங்கல்பம்.
பாரதப் போரில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டுமென விரும்பினான். ஈசனைக் குறித்துத் தவமியற்றினான். சிவனே வந்து போரிட்ட பின்னே சிவனருளால் பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவர்களை முறியடித்தான்.
நம் நோக்கத்தை நிறைவேற்றிட, வெற்றி தோல்விகள் எது வந்தாலும் அர்ஜுனனைப் போன்று நம் மனதை ஸ்திரப்படுத்த முயல வேண்டும்.
என் உயர்வான ஆசை நிறைவேற, நான் ஈடுபாட்டுடன் பாடுபடுகிறேனா? சிரத்தையோடு செயல்படுகிறேனா போன்ற கேள்விகளால், நம் ஆழ்மனதில் எண்ணங்கள் வேர் பிடிக்கின்றன. எனது பெயர், புகழுக்காக இந்த நல்லெண்ணத்தைச் செயல்படுத்த ஆசைப்படுகிறேனா? அல்லது நான் அகங்காரம் பிடித்து ஆசைப்படுகிறேனா? போன்ற சுய ஆராய்ச்சிகளால் நம் எண்ணம் எனும் விதை உடைகிறது. முளை வருகிறது.
அதனால் ‘நான் ஒன்றுக்கும் உதவாதவன்’ என்ற பலவீனமான அகங்காரமும், ‘என்னைப் போல் எவன் இருக்கிறான்?’ என்ற திமிரான அகங்காரமுமின்றி என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற திட மனது வளரத் துடிக்கிறது.
பூமியில் புதைந்த விதை மேலே எழுகிறது, உறங்கிக் கொண்டிருந்த மனது விழிப்புணர்வு பெறுவது போல.
விதை வளர்வதற்கு நீர், வெப்பம், காற்று, மண் போன்றவை எப்படி தேவையோ, அதுபோல் ஆசை முளைத்தெழ நல்ல சிந்தனைகளும், பெரியோர்களின் ஆசிகளும் தேவை.
ஆசையிலிருந்து மனித சங்கல்பம் முதலில் உங்களது நல்ல ஆசைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். நேற்று மனதில் இருந்த ஆசை இன்று காணாமல் போனால் அதை விட்டு விடுங்கள்.
மனதில் எழும் நல்ல ஆசைகளை – அது திரும்பத் திரும்ப வந்தால், அந்த ஆசைகள் உங்கள் மூலமாக நடந்திட உங்களை அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன என்று நம்புங்கள்.
இந்த நல்ல ஆசைகளை நிறைவேற்றிட உங்களுக்குத் தகுதி உள்ளதா இல்லையா, உங்களது திறமை போதுமா, போதாதா? உங்களுக்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்று கவலை கொள்ளாதீர்கள். அதைரியப்படாதீர்கள்.
இவ்வாறு மனம் பக்குவப்படும்போது உங்கள் விருப்பங்கள் அடுத்த கட்டத்திற்கு வேகமாகத் தாவுகின்றன. திடமான, சாதித்தே தீர வேண்டுமென்ற உறுதியுடன் இருக்கும் மனநிலையைப் பெறுகிறீர்கள்.
இப்போது உங்கள் விருப்பம் சங்கல்பமாகிறது. நல்ல ஆசைகளை சங்கல்பங்களாக மாற்ற வேண்டும் என்று முதலில் உறுதி கொள்ளுங்கள்.
மனித சங்கல்பமும் தெய்வ சங்கல்பமும் பூஜை செய்யும்போது நாம் நாள், நட்சத்திரம், திதி என்பவற்றைக் கூறி சங்கல்பம் எடுத்துக் கொள்கிறோம்..
இதனால் அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதில் நம் மனம் ஒருமைப்படுகிறது. எப்படியாவது நடத்தியே தீர்வது என்று திடப்படுகிறது. தெய்வத்தின் துணையை நாட ஆரம்பிக்கிறது.
பூஜையில் சங்கல்பம் முடிந்ததும் சொல்லும் மந்திரத்தைச் சற்று நினைவு கொள்வோம்.
யஜ்ஜாக்ரதோ தூரமுதைதி தைவம் ததுஸsப்தஸ்ய ததைவேதி தூரங்கமம் ।
ஜ்யோதிஷாம் ஜ்யோதிரேகம் தன்மே மன: சிவ ஸங்கல்பமஸ்து ॥
பொருள் : ‘ஒளிப்பொருளான எந்த ஆன்மா விழிப்பு நிலையில் வெளியில் செல்கிறதோ, அதுவே தூக்கத்தில் அகமுகமாகச் செல்கிறது. தொலைதூரங்களை எட்டுவதும், ஒளிக்கெல்லாம் ஒளியாக இருப்பதும், ஒன்றேயானதுமான அந்த ஆன்மா, திட சங்கல்பத்துடன் என் மனம் செயல்படுமாறு தூண்டட்டும்!’
அடுத்து, நாம் ஒரு செயலைச் செய்து முடிக்க நம் அல்ப சக்தியை மட்டுமே பயன்படுத்தினால் பலனும் அற்ப பலனாகத்தானே இருக்கும். ஒரு கதை கேளுங்கள்:
ஒரு சிறுவனின் அருகில் ஒரு பாறாங்கல்லை அவனது தந்தை வைத்தார். “மகனே, உனது எல்லாப் பலத்தையும் கொண்டு இந்தக் கல்லைத் தள்ளிவிடு, பார்க்கலாம்” என்று கூறினார்.
சிறுவன் உடனே அதைத் தன் பலம் கொண்ட மட்டும் தள்ளினான். பாறை அசைந்தது, நகரவில்லை. எப்படியும் இந்தப் பாறையைக் கீழே தள்ளி விடுவேன் என்று தீர்மானித்தான்.
கம்பியால் நெம்பினான். பல்லைக் கடித்தபடி முக்கினான், முனகினான், தள்ளினான்.
“முடியவில்லை அப்பா” என்று துவண்டான். அவனது அப்பாவோ முதுகில் தட்டி, “நீ உனது எல்லா பலத்தையும் கொண்டு கல்லைத் தள்ளினாயா?” என்று கேட்டார்.
“ஆம், நீங்கள்தான் பார்த்தீர்களே!” என்றான் சிறுவன்.
“இல்லை, நீ எல்லா பலத்தையும் பயன்படுத்தவில்லை” என்றார் தந்தை. “எப்படி?” என்றான் சிறுவன்.
“நீ கல்லைத் தள்ள என் உதவியைக் கேட்டாயா? உன் எல்லா பலம் என்பது என்னிடமிருந்து வந்ததல்லவா? மூலபலத்தை விட்டுவிட்டு முனகுகிறாயே மகனே?” – தந்தை.
அன்பர்களே! இந்தச் சிறுவன் தனது எல்லாச் சக்தியையும் பயன்படுத்தாதது போலன்றி நம் மூலசக்தியான தெய்வ சக்தியைப் பயன்படுத்துவேன் என்று உங்கள் மனதிற்குச் சொல்லிக் கொள்ளுங்கள். அந்த மனநிலையிலேயே கண்ணை மூடி அமர்ந்திருங்கள்.
ஆசைகளைச் சங்கல்பம் ஆக்குவற்குத் தீவிரமான சிந்தனையும் சான்றோர்களின் சிந்தனைகளை உள்வாங்கும் சக்தியும் நமக்கு வேண்டும்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், ‘உலகம் பொய், அதனால் வீணாக உலக சுகங்களுக்காக ஆசைப்படாதே’ என்பதை மட்டுமா சொன்னார்?
அந்த உண்மை அனைவருக்குமானது அல்ல என்பதால், அவர் தமது பக்தர்களின், அன்றாட அத்தியாவசிய விருப்பங்களையும் நிறைவேற்றவே செய்கிறார்.
குருதேவரின் இல்லறச் சீடர் உபேந்திரநாத், குருதேவரிடம் பணம் வேண்டினார், புகழ் நாடினார். தம் விருப்பத்தில் உபேந்திரர் தீவிரமாக இருந்ததால் தெய்வ அருளால் ‘பசுமதி’ பதிப்பகத்தை நடத்திப் பெரும் பணக்காரர் ஆனார்.
விளைவு? பிற்காலத்தில் ராமகிருஷ்ண மிஷன் நடத்திய தெய்வ காரியங்களுக்காக, தெருவில் திரிந்த சிறுவனான உபேந்திரர் திருவை (செல்வத்தை) வாரி வழங்கினார். இன்னோர் உதாரணம். ‘நான் எது உண்டாலும் அது செரிக்க வேண்டும்’ என்று ஓர் ஆசையை புரி ஜெகந்நாத் கோவிலில் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வேண்டினார் லாட்டு மகராஜ் என்ற சுவாமி அத்புதானந்தர். அவர் நேரங்காலம் பார்க்காமல் எப்போதும் ஜப, தியானங்களைச் செய்வதற்குத்தான் அவ்வாறு பிரார்த்தித்தார்.
ஆண்டவனான குருதேவருக்கு அந்த ஆசையில் சம்மதம் என்பதால் ஆயுள் வரை லாட்டு மகராஜ் உண்டதை எல்லாம் செரித்தார். உணவை மட்டுமா அவர் செரித்தார்?
பக்தர்களின் வினைப்பயன்களையும் உண்டு ஜீரணித்து அவர்களைப் பக்திப் பாதையில் பீடு நடைபோடச் செய்தார்.
நமது முயற்சியும் அந்த முயற்சியில் அயர்ச்சியில்லாத முனைப்பும் கொண்டால் பகவான் தன் தண்ணருளால் நம் விருப்பங்களை ஒரு நாள் நிச்சயம் நிறைவேற்றுகிறார்.
சக்தியில்லாதவர்கள் மட்டுமல்ல, எதையும் சாதிக்கும் சக்தி உடையவர்கள்கூட கடவுளிடம் இயல்பாகவே சரணடைகிறார்கள். சக்தியும் தகுதியும் உடையவர்கள் தங்களைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் தெளிவாக உணர்ந்தவர்கள், தங்கள் பலத்தையும், பலவீனத்தையும் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதே அதற்குக் காரணம்.
எதுவரை தனிமனித முயற்சி இருக்க வேண்டும்? எங்கிருந்து இறைவனின் கருணை தொடங்குகிறது? என்ற கோட்டைச் சரியாகக் கண்டு கொண்டவர்கள் அவர்கள்.
மனிதமுயற்சி எப்படியிருந்தால், தெய்வ அருள் உதிக்கும் என்பதையும், தெய்வ அருளால்தான் மனிதமுயற்சி ஈடேறும் என்பதையும் ஒவ்வொரு கணமும் அனுபவித்தவர்கள் அவர்கள். உதாரணம் ஒன்று பார்க்கலாமே!
‘நரேன் உலகிற்குப் போதிப்பான்’ என்று கையால் எழுதியே காட்டினார் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அவ்வாறு எழுதி, நரேனின் இதயத்தில் தேச சேவை மற்றும் பகவத் கைங்கர்யம் செய்யும் விருப்பத்தைத் தூண்டினார்.
‘குருதேவர்தான் கூறிவிட்டாரே, இனி எல்லாம் நடந்துவிடும்’ என்று நரேன் சும்மா இருந்தாரா?
குருதேவரின் விருப்பமே என்றாலும் அது திட சங்கல்பம் ஆக வேண்டும். சீடனின் திடசங்கல்பம், தெய்வ சங்கல்பமாக ஆவதற்கு நரேனான சுவாமி விவேகானந்தர் நாடு முழுவதும் பரிவ்ராஜகராக யாத்திரை மேற்கொண்டார்.
மக்களின் நன்மைக்காகச் சிந்தித்தார், ரத்தம் சிந்தி உழைத்தார். அதனால் இன்று நாட்டின் முன்னேற்றத்திற்கான அவரது கனவுகள் ஒவ்வொன்றும் நனவாகி வருகின்றன.
நாம் மனித சங்கல்பத்திலே நிலைத்தால்தான் அது திடமாகிறது. அந்த நினைவிலேயே நிலைத்திருந்தால் மனித சங்கல்பம் தெய்வ சங்கல்பமாகி, நாம் தெய்வத்தின் அம்சங்களாகவே மாறுகிறோம்.
வெறும் ஆசை என்பது பருத்தி விதை போன்றது. அது திக்கற்றுப் பறக்கும். அதனால் எந்தப் பயனும் இல்லை.
மனித சங்கல்பம், காற்றடித்த பலூன் போல் உயரே பறக்கும்; ஆனால் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்.
ஆனால் தெய்வ சங்கல்பமோ ராக்கெட்டைப் போன்றது. நமது பிரயத்தனமும் பிரார்த்தனையும் ராக்கெட்டினை விண்ணில் பறக்கச் செய்யும் ‘பூஸ்டர்’கள் ஆகும்.
ஆசையைச் சங்கல்பமாக்க மனவுறுதி தேவை. மனித சங்கல்பத்தைத் தெய்வ சங்கல்பமாக்குவதற்கு நாம் பொறுமையையும் பிரார்த்தனையையும் பூஷணமாக அணிய வேண்டும்.
“சுவாதி நட்சத்திரம் உச்சத்திலிருக்கும்போது மண்டையோட்டில் படும் நல்ல பாம்பின் விஷத்துடன் மழைத்துளியும் சேர்ந்தால் அதுவே உன் குழந்தையைப் பிழைக்க வைக்கும் மருந்து” என்றார் அந்த சாது.
மரணப் பிடியிலிருந்த குழந்தையின் தந்தையோ, ‘இறைவா! சாத்தியமே இல்லாத இதை நடத்தித் தருவது உன் பொறுப்பு....’ என்று வேண்டினான்.
அன்று சுவாதி நட்சத்திரம். மண்டையோட்டை எதேச்சையாக மரத்தடியில் கண்டான் அவன். மழை பெய்ய ஆரம்பித்துச் சில துளிகளும் அதன் மேல் விழுந்தன. ‘பாதியைப் பூர்த்தி செய்த இறைவா, மீதியையும் பூர்த்தி செய்தருள்வீர்’ என்று பிரார்த்தித்தான். சட்டென்று ஒரு தவளை மண்டையோட்டின் மீது தாவியது! அப்போது பாய்ந்து வந்த பாம்பு அதைப் பிடிக்க முயல, அதன் விஷம் மண்டையோட்டில் இருந்த மழைநீரில் கலந்தது.
இவ்வாறு நடக்க முடியாதவை எல்லாம் பிரார்த்தனையால் நிறைவேறின. தெய்வ சங்கல்பத்தால்தான் இது சாத்தியமாயிற்று என்று வியந்த அந்தத் தந்தை, அந்த விஷம் கலந்த மழைத்துளியுடன் ஓடினான் தன் சிசுவைக் காப்பாற்ற.
நமது சங்கல்பமும், பிரார்த்தனையும் சேரும்போது என்ன நடக்கிறது?
‘நீ இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் உன்னை நோக்கி இறைவன் பத்து அடி எடுத்து வைக்கிறான்’ என்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் அபயவாக்கின் மூலம் ஆண்டவன் நமக்காகக் காத்திருக்கிறார் என்று உணர்வோம்.
ஆகவே இனி, உங்களது எந்த ஓர் எண்ணத்தையும் நிறைவேற்றிக் கொள்ள உங்களது பிரயத்தனத்துடன் பிரார்த்தனையும் செய்யுங்கள். தெய்வ சங்கல்பத்தால், உங்கள் உயரிய எண்ணங்கள் நிறைவேறட்டும்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ❖
சுவாமி விமூர்த்தானந்தர்
11 நவம்பர், 2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்