'பூஜா தியானம்'
'பூஜா தியானம்'
- சுவாமி விமூர்த்தானந்தர்
பக்தர்களே, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பூஜை செய்யும் முன் வீணான எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி அதைப் பூஜ்யமாக்கிக் கொண்டு அவரைப் பூஜியுங்கள்.
தசோபசார (பத்து வகையான பொருட்களுடன் செய்யும் பூஜை) பூஜைக்கு வேண்டிய திரவியங்களைத் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். பத்து உபசாரம் என்பது பக்தியால் பன்னிரெண்டு பொருட்களாலும் இறைவனை வழிபடலாம். அவை:
1. பாத்யம் – பகவானின் பாதங்களை நீராட்டும் நீர்,
2. அர்க்கியம் – மனதை அர்ப்பணிக்கும் ஓர் உபசாரம்,
3. ஆசமனீயம் – திருவாய் துடைக்க நீர்,
4. ஸ்நானீயம் – நிர்மலனை நீராட்டும் நீர்,
5. வஸ்திரம்,
6. சந்தனம்,
7. நறுமணப் பூக்கள்,
8. வில்வ இலைகள்,
9. துளசிதளங்கள்,
10. ஊதுபத்தி,
11. தீபம்,
12. நைவேத்தியம்.
சில கணங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை ஆழ்ந்து நோக்குங்கள். உங்களது இதயத் தாமரையில் ஸ்ரீராமகிருஷ்ணர் மலர்ந்த முகத்துடன் வீற்றிருக்கிறார் என்பதாக பாவனை செய்யுங்கள்.
அவரை உங்களுக்குள் எழுந்தருளச் செய்வதற்கு, வாய் விட்டுச் சொல்லியோ அல்லது மனதிலோ இவ்வாறு வேண்டிக் கொள்ளலாம்.
‘பகவானே, என் மனதைத் தாங்கள் நிலைத்திடும் வகையில் அதைச் செம்மையாக்குங்கள் என்று நான் வேண்டித்தான் தாங்கள் எனக்குள் வர வேண்டுமா? இல்லை ஐயனே, என் கர்மத்தைப் பார்க்காமல், தங்கள் கிருபையை என் மீது பொழியுங்கள்! தங்களது தாசனாகிய நான் செய்யும் பூஜையை ஏற்றருளுங்கள்.
‘என் மனது எங்கு வேண்டுமானாலும் சுற்றட்டும். ஆனால் என் மனதின் ஆழத்தில் இருப்பது தங்களின் திருப்பாதங்களே.’
இவ்வாறு கூறிவிட்டு பகவானின் திருவுருவப் படத்திற்கு முன் ஒரு சிறு பீடத்தில் தாமரை ஒன்றை வைத்திடுங்கள். அதன் மீது பூஜைப் பொருள்களை ஒவ்வொன்றாகச் சமர்ப்பணம் செய்யுங்கள்.
குருதேவரின் திருமேனி மீது அல்லது திருப்பாதங்களின் மீது பூஜைப் பொருட்களை அர்ப்பிக்கும் பாவனையில் இந்தத் தாமரை மலர் மீது அர்ப்பணம் செய்யுங்கள்.
1. பாத்யம் – தெய்வத்தின் திருப்பாதங்களை அலம்புதல்
பகவானே, தாங்கள் என் உள்ளம் தேடியும் என் இல்லம் நாடியும் வந்ததும் தங்கள் திருப்பாதங்களை அலம்பிட பாத்யம் வழங்க விரும்புகிறேன்.
மூன்று பேர் புரிந்த பாத்ய ஆராதனை என் நெஞ்சில் தோன்றுகிறது.
முதலில், ஸ்ரீராமருக்கு பரதன் செய்த பாத்ய ஆராதனை. அது ஜீவாத்மா பரமாத்மாவுக்குச் செய்த பூஜை.
இரண்டாவது, ‘சர்வம் கிருஷ்ணனே’ என்று கிருஷ்ணருக்கு சகாதேவன் புரிந்த பாத்ய சேவை. ஞானி பகவானுக்கு ஆற்றிய வழிபாடு அது.
மூன்றாவது, அன்னை ஸ்ரீசாரதை, ஸ்ரீராமகிருஷ்ணராகிய தங்களுக்குப் புரிந்தது. அது ஆத்ம சமர்ப்பண பூஜை!
அன்னை தங்களுக்கு பாத்யம் அளித்த பிறகு, தமது திருக்கூந்தலால், தங்களது பாதத்தைத் துடைப்பாராமே! நெஞ்சை நெகிழ வைக்கும் அந்தச் சம்பவம் என் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கட்டும்.
தெய்வமே, இந்த மூன்று சரணாகதி நிலைகளையும் எனக்குள்ளும் ஏற்படுத்துங்கள். இந்தப் பிரார்த்தனையுடன் இதோ இந்த பாத்ய நீரை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு கூறி, பீடத்தில் உள்ள தாமரை மீது, அந்தப் பூவையே பகவானின் பாதங்களாகக் கருதி நீரை விடவும்.
2. அர்க்கியம்– பகவானுக்கு மனதை அர்ப்பணிக்கும் உபசாரம்
அர்க்கியம் என்பது நமது மனதைக் குறிக்கிறது. ஐம்புலன்கள் ஆறாயிரம் வழிகளில் நம் மனதை சிதறடிக்கின்றன. அவற்றை நல்வழிப்படுத்த ஐந்து பொருள்களைக் கொண்ட உபாயம் இது.
வில்வம், அருகம்புல், சந்தனம், அக்ஷதை (அரிசி), மலர் ஆகிய ஐந்தின் சேர்க்கையே அர்க்கியம் என்பது.
வில்வயிலை சத்வம் (சாந்தம்), ரஜஸ் (சுறுசுறுப்பு), தமஸ் (மந்தம்) ஆகிய முக்குணங்களைக் குறிக்கிறது. அந்த வில்வயிலையின் மீது அருகம்புல் வைக்கிறோம்.
சுத்தமான வில்வயிலையில் சந்தனம் தடவுங்கள்.
சந்தனம், தன்னைக் கரைத்துக் கொண்டு பிறருக்கு நறுமணத்தைத் தருகிறது. அதுபோல் நாமும் நமது அகங்காரத்தைக் கரைத்துக் கொண்டால் நம் வாழ்வும் மணக்கும். அதற்காகவே அர்க்கியத்தில் சந்தனத்தைப் பூசுகிறோம்.
சந்தனம் பூசிய வில்வயிலையில் அக்ஷதையை வையுங்கள். அரிசி அனைவரின் பசியைப் போக்குகிறது. அந்த மகத்தான பணியைச் செய்யும் அரிசியை அர்க்கியத்தில் வைப்பதால், பூஜிக்கும் நம் மனதிலும் பிறர் துன்பத்தை நீக்கும் அம்சம் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
சந்தன வில்வயிலை மீது அக்ஷதையை வைத்துவிட்டு, அதன் நடுவில் ஓர் அருகம்புல்லை வைத்திடுங்கள்.
அருகம்புல் பக்கவாட்டில் மூன்று நான்கு தளிர்களைக் கொண்டிருக்கும். நடுவே துளிர் இருக்கும். மெல்லிய அருகம்புல்லைப் பிடித்தபடி நடுவே உள்ள மிகவும் மெல்லிய இளந்துளிரை வெளியே எடுப்பது மிகச் சிரமமான காரியம்.
அதுபோல், உடல், மனம், புத்தி, பிராணன், இந்திரியங்கள் போன்றவற்றிலிருந்து ஆன்மாவைப் பிரித்தெடுக்க வேண்டும் என்கிறது உபநிஷதம்.
இவ்வாறு ஆன்ம லாபம் அடைவதுதான் பூஜையின் உயரிய நோக்கம். அது நிறைவேறுவதன் சின்னம்தான் மலர்ந்த பூவை அர்க்கியத்தின் மேல் வைப்பது.
இறைவனை அடைவதற்கு என்ன வேண்டும்; எப்படி மனம், மெய் போன்றவற்றைப் பேண வேண்டும்; அவற்றின் மூலம் இறைவனை அடைந்து நம் வாழ்க்கை மலர்வது ஆகியவற்றை அர்க்கியத்தின் மூலம் தெளிவாகுகிறது.
‘இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை யார் அன்புடன் சமர்ப்பிக்கிறார்களோ, அவரது பக்தியை ஏற்கிறேன்’ என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் உரைத்தார்.
ஸ்ரீகிருஷ்ணர் அன்று உரைத்ததை ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இன்று இந்த அர்க்கியம் மூலம் அர்ப்பணிப்போம்.
இப்படிப்பட்ட பொருள்மிக்க அர்க்கியத்தை வேத புருஷரான ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சமர்ப்பியுங்கள்.
‘என் நெஞ்சிலுள்ள புனிதருக்கு என் மனதை நிவேதிக்கிறேன் என்ற நம்பிக்கையுடன் ஸ்ரீராமகிருஷ்ண தேவருக்கு அர்க்கியத்தை அர்ப்பணிக்கிறேன்.
3. ஆசமனீயம் – தெய்வத்தின் திருவாய் துடைக்கும் நீர்
அனைவரும் ஆன்மிகத்தில் வளர்வதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அமுதமொழிகளை உரைத்து உரைத்து அவரது திருவாய் உலர்ந்திருக்கும். அல்லது லௌகீக மனிதர்களிடம் பேசிப் பேசி, அவர்களுக்குத் திரும்பத் திரும்பத் ‘தியாகம்தான் வாழ்க்கை’ என்பதைப் புரிய வைப்பதற்காக அவர் ஓயாமல் பேசினார். அதனாலும் அவரது திருவாய் உலர்ந்திருக்கும்.
உலர்ந்த அவரது திருவாயினை நமது அன்பெனும் நீரைக் கொண்டு ஆசமனீய உபசாரம் செய்வதாக பாவித்து, நீரைத் தாமரை மீது மெல்ல ஊற்றுங்கள்.
4. ஸ்நானீயம் – புனிதரை நீராட்டுதல்
‘பரிசுத்த வடிவான, சின்மயமான அதாவது உணர்வுமயமான தேகமுடைய ஸ்ரீராமகிருஷ்ணரை எந்த நீரால்தான் நாம் நீராட்ட முடியும்!
‘இருந்தாலும் எளியோர்க்கும் எளியனான பகவானை இதோ தூய இந்த நீரைக் கொண்டு நீராட்டுகிறேன்’.
பக்தர்களே, இவ்வாறு கூறித் தாமரை மீது நீரைப் பொழியுங்கள். இடது கையால் மணியை ஒலித்திடுங்கள். பரிச்சயமான ஒரு ஸ்தோத்திரத்தைக் கூறிக்கொண்டே பகவானை நீராட்டுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் லீலைகளை, கல்யாண குணங்களைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பதே அவரை நீராட்டுவதற்குச் சமம்.
நாம் நேசிக்கும் நேயனை, நினைவால் நித்தமும் நேசிக்கப்பட வேண்டியவனை நீராட்டுவோம்.
‘நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என ஆண்டாள் அழைத்தது சின்மய நீராட்டலுக்காகத்தான்!
5. வஸ்திரம்–தெய்வத்தின் திருமேனியை அலங்கரிப்பது
திக்குகளையே ஆடையாகக் கொண்டு சமாதியில் லயித்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு நாம் சார்த்தும் உயர்ந்த வஸ்திரம் ஒன்றாகத்தான் இருக்கும்.
‘பகவானே! உங்களது தெய்விக வாழ்க்கையெனும் பாவில் எங்களது வாழ்வின் ஒவ்வொரு நினைவும் ஊடிழையாக நெய்யப்படட்டும். அப்படி நெய்யப்பட்ட துணியையே உங்களுக்குச் சமர்ப்பிப்பதாக பாவித்து இந்தத் துணியைச் சமர்ப்பிக்கிறேன்.’
இவ்வாறு கூறி, ஒரு புதுத் துணியால் குருதேவரின் திருவுருவப் படத்தை அலங்கரியுங்கள்.
6. சாந்தசீலருக்கு சந்தன உபசாரம்
நம் வினைப்பயன்களான ‘வாசனா’க்களை (அதைத் தலையெழுத்து எனலாம்) மாற்றக்கூடிய குருதேவருக்குச் சந்தனத்தை எப்படி சமர்ப்பிப்பது?
தன்னை வெட்டிய கோடாரிக்கும் நறுமணத்தைத் தருவதல்லவா சந்தன மரம்! அது போல் ஆயிரம் குறைகளுடன் நாம் ஸ்ரீராமகிருஷ்ணரை அணுகினாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி நம்மைத் தம்மோடு அள்ளி அணைத்துக் கொண்டு, நமக்கு தமது அருளை மட்டுமே தருகிறார்.
அப்படிப்பட்டவரின் திருநெற்றியில் இதோ இந்தச் சந்தனத்தை இடுகிறேன் என்று எண்ணி நடு விரலால் குருதேவரின் திருவுருவப் படத்திலும் தாமரை மீதும் சந்தனத்தை இடுங்கள்.
7. மலரினும் மெல்லிய பகவானுக்குப் புஷ்ப ஆராதனை
வாசனை உள்ள, அன்றலர்ந்த, முகரப்படாத மலர்களை பகவான் மிகவும் விரும்புகிறார். அப்படிப்பட்ட பூக்களையே ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பதாக எண்ணிக் கொண்டு பூக்களைச் சமர்ப்பியுங்கள்.
பூக்களிடமிருந்து கற்க வேண்டியது ஒன்று முக்கியமானது. பூக்கள் செடியில் இருக்கும்போது, அந்தச் செடி மண்ணில்தான் உள்ளது. ஆனால் மண்ணாக மாறுவதில்லை. நீரை உறிஞ்சுகிறது, நீராவதில்லை. காற்றை ஏற்கிறது. ஆனால் காற்றாவதில்லை. வெப்பத்தை ஏற்றாலும் குளிர்ந்த மலர்களாகவே மாறுகிறது.
அதுபோல், உலகில் பல தரப்பட்ட சூழ்நிலைகளில் நாம் இருந்தாலும் இறைவன் ஏற்கும் வகையில் நாம் நமது இயல்பான நிலையில் இருக்க வேண்டுமென்பதைக் காட்டுவதுதான் பூக்கள். அப்படிப்பட்ட மனவமைப்புடன் பகவானுக்குப் பூக்களைச் சார்த்துவோம்.
8. வைராக்கியசீலருக்கு வில்வ தள உபசாரம்
சிவபெருமானுக்கு உகந்த மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைச் சமர்ப்பிப்பது மிக விசேஷம்.
‘எனது முக்குணங்களான சாத்விகம், ராஜசம், தாமசம் ஆகியவற்றை நெறிப்படுத்தி என்னை இறைவனுக்கு ஏற்றவனாக்கிக் கொள்ள இந்த வில்வத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
‘காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று எதிரிகளற்ற மனதை நான் பெற்றிட வில்வ இலையைச் சமர்ப்பிக்கிறேன்.
‘ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கி, நான் தெளிவு பெற வேண்டியே இறைவா, வில்வத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்.’
இவ்வாறு கூறி வில்வ இலைகளைச் சந்தனத்தில் தோய்த்து ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பியுங்கள்.
9. பக்தி நல்குபவருக்கு துளசி தள பூஜை
ராணி சத்யபாமா தனது ஆபரணங்கள் மற்றும் பல செல்வங்களை ஸ்ரீகிருஷ்ணருக்கு ஈடாகத் துலாபாரத்தில் வைத்துப் பார்த்தாள்.
பக்திமதி ருக்மிணியோ கிருஷ்ணரின் பேரன்பை ஒரே துளசி தளத்தால் பெற்றுவிட்டாள். ருக்மிணி ‘கிருஷ்ணா, கோவிந்தா’ என்று துளசியில் எழுதி துலாபாரத்தில் வைத்தாள்.
பக்தர்களே, அந்த நினைவுடன் நீங்களும், ‘ஸ்ரீகிருஷ்ணரை என்றும் தியானிக்கும் துளசி தேவியே! அடியேன் உன்னை குருதேவருக்குச் சமர்ப்பிக்கிறேன். பரமஹம்சரிடத்தில் எனக்கு உள்ள பக்தியைப் பெருக்கு’ என்று கூறிச் சந்தனத்தில் துளசி தளங்களைத் தோய்த்து ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பியுங்கள்.
10. உலக நாயக உத்தமருக்கு ஊதுபத்தி உபசாரம்
‘ஊதுபத்தி, நறுமணத்தை நல்கும். வேண்டாத நாற்றங்களை விரட்டி, தெய்வ சாந்நித்தியத்தைக் கூட்டும். இந்த அருமையான பணியில் தன்னையே சாம்பலாக்கிக் கொண்டு நறுமணத்தைப் பரப்புகிறது.
‘அதுபோல இறைவா, உனக்குப் பணி செய்வதிலேயே என் சரீரம் சாம்பலாகட்டும்; ன் மனதும் ஆன்மாவும் உனக்கே அர்ப்பணம் ஆகட்டும் என வேண்டி ஊதுபத்தியைக் காட்டுகிறேன். புனிதமான அந்தத் தூப வாசனையில் என் வினைப்பயன்களான தீய வாசனைகள் வேரோடு சாயட்டும்.’
இவ்வாறு வேண்டியபடி, மணியடித்துக் கொண்டே ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஊதுபத்தியை மூன்று முறை சுற்றிக் காட்டுங்கள்.
11. தெய்வத் தன்மை வழங்குவோனுக்குத் தீபாராதனை
‘இறைவா, உங்கள் முன் ஏற்றியுள்ள தீபம் அடியேனுக்கு ஞானதீபமாகட்டும். அஞ்ஞான இருளிலிருந்து என்னை மீட்டு, மெய்ஞான ஒளியான உங்களிடம் அழைத்துக்கொள்ள, இதோ இத்தீபத்தை ஏற்றி உங்களுக்குக் காட்டுகிறேன்.’
இவ்வாறு கூறி அல்லது எண்ணி, ஸ்ரீராமகிருஷ்ணருக்கு மணி ஒலியுடன் தீபத்தை மூன்று முறை சுற்றிக் காட்டுங்கள். அதனால் உங்களது மும்மலங்களும் சாம்பலாகட்டும்.
12. நானிலத்திற்கே உணவு படைப்பவனுக்கு நைவேத்தியம்
‘பகவானே, பக்குவமாகச் சமைக்கப்பட்டதையே உமக்குச் சமர்ப்பிக்கிறேன். என்னிடத்தில் இன்று பக்குவப்படாத உடலும் பக்குவப்படாத மனமும் அறிவும் உள்ளன.
‘ஆண்டவா, எனது இந்த மூன்றையும் பக்குவப்படுத்தி அவற்றை நீயே ஏற்றுக் கொள்.’
அன்பர்களே, இவ்வாறு பிரார்த்தனை செய்து உங்களால் முடிந்த பழங்களையோ, இனிப்புகளையோ அல்லது சமைத்த உணவுகளையோ பகவானுக்குப் படைத்திடுங்கள். அவர் அருந்த நீரையும் வைத்திடுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநயனங்களிலிருந்து ஓர் ஒளி வந்து நைவேத்தியத்தின் மீது பட்டுச் செல்லும். அதன் மூலம் அவர் அதை ஏற்றுக்கொள்கிறார் என்று அன்னை ஸ்ரீசாரதாதேவி தமது அனுபவத்தைக் கூறுகிறார்.
இதை மனதில் கொள்ளுங்கள். நான் படைக்கும் உணவை இறைவன் ஏற்கிறார்; அதை அவருக்கு நான் பரிமாறுகிறேன் என்ற பாவனையில் அவருக்கு விசிறுங்கள். ஸ்தோத்திரம் பாடுங்கள். பிரேமையுடன் அவரது திருநாமத்தை ஜபியுங்கள்.
பூஜையின் முடிவில் பலவித மலர்களைக் கையில் ஏந்தி பகவானின் திருவடியில் சமர்ப்பியுங்கள். பின் வீழ்ந்து வணங்குங்கள்.
‘ஜெய் ஸ்ரீகுருமகராஜ்ஜி கீ ஜெய்’ என்று முழங்கி நைவேத்தியத்தை எடுத்து உங்கள் வீடுகளில் இருப்பவர்களுக்கு விநியோகியுங்கள். அவர்களும் அதற்கு முன் குருதேவரை வீழ்ந்து வணங்கட்டும்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
சுவாமி விமூர்த்தானந்தர்
30 அக்டோபர், 2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்