'ஜப தியானம்'
'ஜப தியானம்'
- சுவாமி விமூர்த்தானந்தர்
அந்தக் குறுநில மன்னர் மிகவும் நல்லவர்; தமது மக்கள் மனநிறைவுடன் வாழ்கின்றார்களா என்று கவனித்துக் கொள்வதில் அவர் ஒரு மாமன்னர்தான்.
அவரது குடிமகன்களுள் ஒருவர் நேர்மையாளர். மக்கள் கவிஞர். ஆனால் ஏழை. அவர் மன்னரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்து தனது கவிதைகளை வாசித்துக் காட்ட வேண்டும் என மிகவும் விரும்பினார்; ஏங்கினார்.
பலமுறை முயன்றும், அரசனை அவர் சந்திக்கவே முடியவில்லை. முடிவில் அவரது சமுதாய நலக்கவிதைகளைப் படித்த அரசர், அவரை அவரது இல்லத்திலே சந்திக்கச் சம்மதித்தார்.
ஏழைக் கவிஞர் தன் சக்திக்கும் மீறி செலவு செய்து, தெருமுனையில் ‘மாமன்னரே வருக’ என்று உரக்க முழங்கி அமர்க்களமாக மேளதாளங்களுடன் வரவேற்பு கொடுத்தார்.
மன்னர் வீட்டிற்கு அருகில் வர வர, மேளங்களின் ஒலி குறைந்தது. மன்னரை வாசலில் நிற்க வைத்து, வரவேற்புரை வாசித்தார் கவிஞர்.
பிறகு இருவரும் மெல்லப் பேசிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தனர். இப்போது அந்த இருவரைத் தவிர வீட்டில் வேறு யாருமில்லை. கவிஞர் கவி பாடினார். அரசன் அவரது கருத்துகளைக் கேட்டு மெய்மறந்தார்.
பின், வள்ளலான அரசர் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் ஏழைக் கவிஞர் மௌனமானார். கவிஞனின் பிரச்னைகள் மட்டுமல்ல, அவரது பகுதியில் இருந்த அத்தனை பேரின் நன்மைக்காகவும் மன்னர் நிரந்தரமாக நல்வழி செய்தார்.
பக்தர்களே, இப்படித்தான் தூரத்தில் எட்ட முடியாத இடத்தில் உள்ள இறைவனைத் தமது மனதிலும் இதயத்திலும் வரவழைக்க ஒவ்வொரு பக்தனும் முயல்கிறான்.
அதற்காகவே பல ஆன்மிகச் சாதனைகள் உள்ளன. அவற்றுள் மிக எளியது, ‘வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான்’ என ஆண்டாள் கூறும் அருமையான ஜப சாதனைதான்.
மனிதனுக்கு உள்ள பல ருசிகளுள் மிக இயல்பானது, வாயால் பெறும் ருசி. உணவின் ருசியால் மட்டுமல்ல, ஒருவன் தானே பேசுவதாலும், பிறரது வாயால் தன்னைப் பற்றிப் பேசப்படுவதைக் கேட்பதாலும் ஆனந்தமடைகிறான்.
அதே சமயத்தில், மனிதனின் துன்பத்திற்கு முக்கிய காரணமும் வாய்தான். அவன் எதையாவது பேசி மாட்டிக் கொள்வான், அல்லது அதிகம் உண்டுவிட்டு அல்லல்படுவான்.
வாயால் கிடைக்கும் ருசியை மேலான ருசியாக மாற்ற முடியுமா? முடியும். அதற்குத்தான் மிக எளிய ஆன்மிகச் சாதனையாக நாமஜபத்தை நம் முன்னோர் கூறினர்.
‘வாயைக் கட்டுப்படுத்து, மனம் கட்டுப்படும்’ என்று யோக சாஸ்திரங்கள் கூறும். நாமஜபம் கூறும்போது வாய் தானாகவே கட்டுப்படுகிறது.
யாராவது எதையாவது தன்னைப் பற்றிப் பேசினால், தியானத்தின் போதோ, ஜப வேளையிலோ ‘என்னை இப்படிக் கூறிவிட்டாரே’ என அதுவே அவனது நினைவிற்கு வருகிறது.
ஜபத்தைப் பக்தன் சரியாகச் செய்தால் மற்ற யாவும் அவனுக்கு அனுகூலமாகவே அமையும்.
வங்காளத்தில் தோன்றிய விஜயகிருஷ்ண கோஸ்வாமி என்ற மகானின் சீடர் ஒருவர் தமது குருவைப் பற்றி இவ்வாறு கூறினார்:
‘எங்களது குரு எங்களைப் பார்த்ததும் வங்கமொழியில், “நாம் சொல்ச்சே?’– இறைநாமம் சொல்கிறீர்களா?” என்றுதான் கேட்பார். சாப்பிட்டாயா? தூங்கினாயா? என்றெல்லாம் கேட்க மாட்டார். ஏனெனில் ஜபம் சரியாக நடந்தால் மற்ற யாவும் சரியாகவே நிகழும் என்பார் எங்கள் குரு.’
வாசிக ஜபம் – ஐந்து நிலைகள்
வாய், வாழ்வதற்கு முக்கியமானது என்றால், அந்த வாயைக் கொண்டு ஜபம் என்ற ஆன்மிகச் சாதனையை மிக நேர்த்தியாகச் செய்யலாம்.
வாயால் செய்யக்கூடியது வாசிக ஜபம். பகவானிடம் பக்தி பெருகப் பெருக, ஜபத்தில் கவனம் கூடக் கூட வாயை நன்கு பயன்படுத்தலாம். வாசிக ஜபத்தை,
1. உரக்கச் சொல்வது,
2. ஜபிப்பவருக்கு மட்டுமே கேட்கும்படிக் கூறுவது,
3. உதடுகளால் மெல்ல உச்சரிப்பது,
4. நாக்கு அண்ணப்பகுதியில் படும்படி கூறுவது,
5. வாய் திறக்காமல் அடித்தொண்டையிலிருந்து உற்சாகமாக உரைப்பது என்று வகைப்படுத்தலாம்.
மேற்கூறிய அரசன் மற்றும் கவிஞன் கதையை நினைத்துப் பாருங்கள். அதுபோல் இறைவனை நம்முள் வரவழைக்க வாயைக் கொண்டு ஒவ்வொரு நிலையிலும் ஜபிக்கலாம்.
ராம–ராவண யுத்தத்தின்போது ராமரது படையினர் ‘ஹர ஹர மகாதேவா’ என்று உரக்கச் சொல்வார்கள். வீரர்கள் போரிடும்போது இது போன்ற உற்சாகமூட்டும் மந்திரங்களால் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்வார்கள்.
மந்திரத்தை உரக்க உச்சரிக்கும்போது அது இயல்பாக மனதிற்குச் செல்லும்.
ஆப்ரகாம்லிங்கன் உரக்கப் படிப்பார். ஏன் என்று கேட்டதற்கு ‘அவ்வாறு படிப்பது என் வாய் மூலம் என் காதுக்குப் போய் கேட்கும். காதிலிருந்து மனதில் நன்கு பதியும்’ என்றார் அவர்.
பக்தர்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது ‘ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா’ என உரக்கக் கூவி அழைத்தால், தாங்கள் தனிமையில் இருப்பதை உணராதிருக்க முடியும்.
உடன் யாரும் துணைக்கு இல்லை என்றாலும், மந்திரத்தின் துணை இருக்கும். மந்திரத்தை உரக்கக் கூறும்போது தைரியம் வரும். அதோடு வாய் விட்டுச் சொன்னால் நோய் விட்டுப் போகும் அல்லவா?
இந்நிலை ஏழைகளாகிய நம் வீட்டிற்கு ராஜாதிராஜனான இறைவனை வரவழைக்க வாத்தியம் வாசிப்பது போல!
இரண்டாம் நிலை, மந்திரத்தை ஜபிப்பவரின் காதுக்குக் கேட்குமளவிற்கு மெல்லக் கூறுவது. அரசனுக்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பதுபோல, வாசிப்பவருக்கும் வாழ்த்து பெறுபவருக்கும் கேட்குமளவு உரைக்கும் நிலை இது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் தந்தை காமார்புகூர் குளத்தில் குளிக்கும்போது காயத்ரி மந்திரத்தை உள்ளன்போடு உச்சரிப்பார். அப்போது அவரது முகமும், நெஞ்சும் சிவந்து விடும்.
அதைப் பார்ப்பவர்கள் அவரைத் தொந்தரவு செய்யாது அகன்று விடுவார்கள். வாயால் ஒழுங்காக ஜபம் செய்யும்போது ஊர்வம்பு நம்மிடம் வராது. வெளியிலிருந்து மட்டுமல்ல, நம் மனதில் உள்ள கர்மவினை வம்புகளும் மேலே வராது.
மூன்றாவது, உதடுகளால் மெல்ல ஜபிப்பது.
ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருவரிடம், “ராக்காலைப் (சுவாமி பிரம்மானந்தர்) பார். அவனது உதடுகள் அசைந்தபடியே இருக்கும், எப்போதும் அவன் ஜபித்துக் கொண்டிருக்கிறான்” என்று கூறியதை அமுதமொழிகளில் நாம் காண்கிறோம்.
உதட்டால் ஜபிப்பது எவ்வளவு முக்கியமென இதன் மூலம் குருதேவர் கூறுகிறார்.
நான்காவதாக, மனம் ஒருமைப்பட்டு மந்திரத்தில் கவனம் அதிகமாகி, நாக்கினால் மேல் அண்ணப் பகுதியைத் தொட்டபடி ஜபிப்பது.
இதனால் அலையும் மனம் அடங்கும். இந்தப் பயிற்சி தீவிரமானால், உபாசனா வேளை மட்டுமின்றி, மற்ற நேரங்களிலும் ஜபிப்பது இயல்பாகும்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தந்தை உறங்கும்போதும் அவரது கை ஜபத்தை எண்ணிக் கொண்டிருக்கும் என்று அவரது சரித்திரம் கூறும்.
ஐந்தாவது நிலை, வாய் திறவாமல் தொண்டைப் பகுதியிலிருந்து ஓசையின்றி ஜபிப்பது. இவ்வாறு செய்யும்போது உடலெங்கும் மந்திர அதிர்வுகள் பரவும். மனம் ஆனந்தமடையும். நாமருசி நன்கு விளங்கும். மனமும் உடலும் இயல்பாக ஜபத்திற்கு ஒத்துழைக்கும்.
ஸ்ரீராமரும், லட்சுமணரும் வனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு காகம் நதிக் கரையில் நீர் குடிக்காமல் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தது.
லட்சுமணர் ராமரிடம் காரணம் கேட்டார். அதற்கு ராமர், “தம்பி, இந்தக் காகம் ராமநாமத்தை ஜபிக்கிறது. தாகத்திற்காக நீரைக் குடித்தால் நீரின் ருசி, ராமநாம ருசியைக் குறைத்துவிடுமோ என்று பயந்து நீரை அருந்தாமல் இருக்கிறது” என்றார்.
நிறைய ஜபிப்பதைவிட நன்கு ஜபிப்பது முக்கியம். கவனம் சிதறும்போது வாசிக ஜபத்தின் இந்த ஐந்து நிலைகளை இதே வரிசையில் முன்பின் நிலைகளுக்குத் தக்கபடி முயன்றால், இறையருளால் ஜபம் சித்திக்கும்.
இந்நிலை நீடித்தால் ‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயமே’ என்று சுந்தரரின் தேவாரம் கூறும் நிலையான ‘அஜபா ஜபம்’ அமையும்.
இந்நிலை ஏழைக் கவிஞனின் குறைகளைக் கேட்டறிந்து அரசன் பேச ஆரம்பித்து, கவிஞன் மௌனமானதைப் போல!
சுவாமி நிரஞ்ஜனானந்தருக்கு ஒரு சமயம் பேய், பிசாசுகளிடம் அதிக ஈடுபாடு இருந்தது. அதை நீக்குவதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் அவருக்கு நாமஜபம் வழங்கி ஆசிர்வதித்தார்.
அதனால் நிரஞ்ஜனானந்தரிடம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஜபம் தானாகவே உதித்துக் கொண்டே இருந்தது.
நம் இஷ்டதெய்வம் நம் முன்னே ஆவலுடன் நம் ஜபத்தை ஏற்றுக் கொள்ள அமர்ந்திருப்பதாகக் கருதினால், அப்போது நாம் ஒரு தாய் போலாகிவிடுவோம்.
தாய்ப்பாலைக் குழந்தைக்கு ஊட்ட முடியாத தாய் தவிப்பதுபோல், ஜபிக்காதபோது பக்தன் தவிப்பான்; அவன் ஜபிக்கும்போது இறைவன் ஆனந்தத்தில் குதிப்பான்.
சிறுவயதில் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது நண்பர்களில் ஒருவரான சீனு சங்காரியிடம், “உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். இறைநாமத்தை ஒருமுறையாவது சொல்” என்று கெஞ்சுவார்.
நாம் ஜபிக்கும்போதும் நம்மிடமும் ஸ்ரீராமகிருஷ்ணர் இதைத்தானே எதிர்பார்ப்பார்!
ஸ்ரீராமகிருஷ்ண மடத்து குருமார்களின் பரம்பரையிலிருந்து தீக்ஷை பெற்றவர்கள், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தம் திருவாயிலிருந்து அருளிய மந்திரங்களையே பெறுகிறார்கள். அந்த உன்னத மந்திரங்களை ஓதுகிறோம் என்ற பெருமிதத்துடன் ஜபிக்க வேண்டும்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ❖
சுவாமி விமூர்த்தானந்தர்
18 அக்டோபர், 2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்