RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

எளிய தியானப் பயிற்சி - 12

22.07.22 08:32 PM By thanjavur

எளிய தியானப் பயிற்சி - 12

'விமர்சன தியானம்'

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பர்களே, நிம்மதியாக இருப்பதற்காகத் தியானக்கிறோம். ஆனால் ஒரு நாளில் ஏதோ ஒரு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மட்டும் நமக்கு நிம்மதி பிறந்து விடாது.

        

‘ஒரு நாளில் ஒரு மணி நேரம் தியானம் செய்வதற்கு அந்த நாளில் மீதமுள்ள 23 மணி நேரம் அந்த தியானத்திற்கான தயார் நிலையில் இருப்பதற்காக முயற்சிக்க வேண்டும்’ என்றார் தவத்திரு சுவாமி வீரேஸ்வரானந்தர்.

        

அந்த வகையில், நாம் பிறருடன் பழகும்போது நம்மைப் பற்றி நல்லதும் கெட்டதுமான பேச்சுகள் வரத்தான் செய்யும். அந்த விமர்சனங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக மாற்றலாம் என்பதற்கான பயிற்சியே விமர்சன தியானம் ஆகும்.

        

ஒரு முறை வயல் வரப்பு ஒன்றில் சதாசிவ பிரம்மேந்திரர் கையைத் தலையணையாக வைத்துப் படுத்திருந்தார்.

        

அந்தப் பக்கமாகச் சென்ற இரு பெண்கள், “இந்தத் துறவிக்குத் தலையணை கேட்கிறது, பார்” என்று கூறி கேலி செய்தபடி சென்றார்கள்.

        

அதைக் கேட்ட பிரம்மேந்திரர் கையை எடுத்துவிட்டு அமர்ந்தார். அப்பெண்கள் மீண்டும் அங்கே வந்தார்கள். 

        

“ம்..., பிறர் பேசுவதை எல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தும் இவர் என்ன சாமியாரோ?” என்று கூறி அப்போதும் சிரித்தனர்.

        

வார்த்தைகள் எப்படி வாழவும் தாழவும் வைக்கின்றன என்று சதாசிவ பிரம்மேந்திரர் யோசித்தார்.

ஆம், நமது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் வார்த்தைகளே முக்கிய இடம் பெறுகின்றன.

வார்த்தைகள்தானே வாழ்க்கை!

        

சிவபுராணம், பகவத்கீதை போன்றவை மந்திர வாக்கியங்கள். குருவானவர் இவை போன்ற அபய வாக்குகளை, அமுதமொழிகளை, அன்புமொழிகளை மந்திரத்தில் திரட்டி, சீடனுக்குத் தீட்சையின்போது வழங்குகிறார்.

        

அவை கூறும் உன்னத வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, நாமும் நமது ஆன்மிக முன்னேற்றத்திற்காக தியானிக்கிறோம்.

        

இந்த தியானம் முறையாக, எப்படி நடக்க வேண்டுமோ, அப்படி நடந்தால் நலமே.

ஆனால் சம்சாரக் கடலில், இன்ப–துன்ப, மான – அவமான, லாப – நஷ்டங்களில் சிக்கித் தவிக்கும்போது மேற்கூறிய அபயவாக்குகளின் தொடர்புக்கு வெளியே, எட்டாத தொலைவில் நாம் இருக்கிறோம்.

        

தொடர்பு எல்லைக்கு வெளியே நமது அலைபேசி இருக்கும்போது நமக்கு வரும் பரபரப்பை நினைத்துப் பாருங்கள். இதே பரபரப்பு இறைவனுக்கு அந்நியமாக – தொலைவில் நாம் இருக்கிறோம் எனும்போது வருகிறதா?

நமது விழிப்புணர்வற்ற தற்போதைய தியானத்திற்கும் நமது ஞாயிற்றுக்கிழமையில் உள்ள வேலையற்ற ஓய்விற்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை.

                                                                

அருளாளர்களின் அபய வாக்குகள் மீது ஒருவரால் ஏன் ஆழ்ந்த தியானம் செய்ய முடிவதில்லை?

குறைந்தபட்சம் அவற்றை அவரால் நம்பவாவது முடிகிறதா?

                                                                

காரணங்கள் பல. நமது பூர்வ ஜன்ம கர்மவினைப் பயன்களாக இருக்கலாம்; குருவருள் கூடாதிருக்கலாம் அல்லது குருவருளும் தெய்வ அனுக்ரகமும் கிடைத்திருந்தும் சொந்த மனதின் அருள் இல்லாது போயிருக்கலாம்.

                                                                

அருளாளர்கள் நமக்கு வழங்கியுள்ள ஆசீர்வாதங்களை, அருளாசிகளை, அபய வாக்குகளை உணர முடியாததற்கான பல காரணங்களுள் ஒன்று, நம் மனதிற்குள் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் பிறர் நம்மைப் பற்றிக் குறை கூறிய வார்த்தைகள்தான் – விமர்சனங்கள்தான்!

தியானத்திற்கு அமரும்போது பிறர் நம்மைத் தூற்றியதும், போற்றியதுமான விமர்சனங்கள், நாம் பிறரை விமர்சனம் செய்ததுமான எண்ணங்களை ஆலோசிப்பதிலேயே முழு நேரமும் சரியாகிவிடுகிறது அல்லவா?

                                                                

விமர்சனங்கள் நெறிப்பட்டால் தியானம் நெஞ்சத்தின் வசப்படும்.

                                                                

‘நீ அயோக்கியன்’ என்று யாரோ கூறியதும் உடனே ஒருவருக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. அயோக்கியன் என்ற ஒரு பதம் அவனுக்குள் இருக்கும் மூர்க்க சக்தியை முடுக்கிவிடுகிறது. ‘நான் அயோக்கியன்தான்’ என்று நம்பிவிடுவதால் அவ்வாறு அவன் நடந்து கொள்கிறான்.

                                                                

மாறாக, ‘நீ நல்லவன், பக்தன்’ என யாராவது கூறினால், முகம் மலர்ந்தாலும், ஒருவனின் அகத்தில் அதை முழுமையாக நம்புவதில்லை. பொய்யைச் சுலபமாக ஏற்கும் அவன் உண்மையை ஏற்கத் தயங்குவது ஏன்?

                                                                

எத்தனை காலம்தான் ஒருவர் பிறரது விமர்சனத்தை ஏற்றுக் கொண்டும், தூற்றிக் கொண்டும் அல்லது தியான நேரத்தில் அதையே அசை போட்டுக் கொண்டும் அதன் பின் உணர்ச்சிகளின் கோப தாபங்களின் பிடியில் நாயாக, பேயாக அலைவது?

                                                                

தியானத்தில் நாம் மூழ்க,

நம் மனச்சஞ்சலம் நீங்க,

பேரமைதியைச் சில கணங்களாவது உணர

முதலில் செய்ய வேண்டியது என்ன? பிறரது வீண் வார்த்தைகள் உங்கள் மனதை வீணாக அலைக்கழிக்காமலிருக்க புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

                                                                

உங்களைப் பற்றிய விமர்சனம் உண்மை எனில்?

                                                                

உங்களைப் பற்றிய விமர்சனம் கசப்பான உண்மை என்றால், அதைத் திருத்திக் கொள்ளத் துணிவு கொள்ளுங்கள்.

                                                                

அந்த வீரம் தியானத்தில் நீண்ட நேரம் உங்களை அமர வைக்கும். மற்ற நேரங்களில் கம்பீரமாக நடக்க வைக்கும்.

                                                                

அதற்கான பயிற்சி: நீங்கள் தவறு செய்தபோது யாராவது உங்களை அக்கறையுடன் கண்டித்ததை நினைவுகூருங்கள். மானசீகமாக ஒருமுறை அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

வீண் விமர்சனங்களை எப்படிச் சமாளிப்பது?

                                                                

உங்களைப் பற்றி வேண்டாத வகையில் உங்கள் முன்பே பிறர் பேசும்போது, அங்கிருந்து அகன்று விடுங்கள். அல்லது, அச்சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று சிந்தியுங்கள்.

        

எல்லாவற்றுக்கும் வழிகாட்டும் ஸ்ரீராமகிருஷ்ணரே இந்தப் பிரச்னைக்கும் வழிகாட்டுவதைப் பாருங்கள்.

        

பவநாத் என்ற பக்தர், “சுவாமி, பிறருடன் மனஸ்தாபம் ஏற்பட்டால் மனம் அமைதியை இழந்த நிலையில் என்னால் எல்லோரையும் நேசிக்க முடிவதில்லையே, என்ன செய்வது?” என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார்.

        

“முதலில் அவர்களுடன் பேசி சமரசமாகப் போக முயற்சி செய். முயன்றும் முடியாவிட்டால் அது பற்றிக் கவலைப்படாதே. இறைவனிடம் சரணடை, அவரைச் சிந்தனை செய், அவரைத் தவிர வேறு யாருக்காகவும் மனம் கலங்கத் தேவையில்லை” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

        

பயிற்சி: பக்தர்களே, ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்....’ என்ற அப்பர் பெருமானின் பாடலை நினைவுகூர்ந்து அதை ஓதிப் பாருங்கள்.

உங்கள் மீதான விமர்சனம் பொய் என்றால்...?

        

உங்களைப் பற்றிப் பிறர் கூறியது அபவாதம், வெட்டிப் பேச்சு எனில், தைரியமாக, அமைதியாக எதிர்த்து நில்லுங்கள்.

        

பயிற்சி: யாராவது உங்களைத் தூற்றிவிட்டால், உடனே உயிரே போய்விட்டதாக எண்ணுவதை நிறுத்துங்கள்.

        

‘வாழ்க்கையில் எதை எதையோ பொருட்படுத்தாத நான் இந்த ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஏன் அலைய வேண்டும்?’ என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

        

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோது அவர் அடைந்த புகழால் பலருக்குப் பொறாமை ஏற்பட்டது. மஜும்தார் சுவாமிஜியின் பால்ய நண்பராக, வங்காளியாக இருந்தும் அவரும் அந்தப் பொறாமைக்காரர்களுடன் சேர்ந்து கொண்டார். சுவாமிஜியைப் பற்றிப் பல அவதூறுகளை வாய்க்கு வந்தபடி உமிழ்ந்தார்.

        

ஆனாலும் சுவாமிஜி அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்தார்.

        

மஜும்தாரின் மலினமான குணத்தை அறிந்த சுவாமிஜியின் சீடர்கள், “சுவாமிஜி, உங்களைப் பற்றிக் கோள்மூட்டும் மஜும்தாருடன் நீங்கள் ஏன் தங்க வேண்டும்?” என்று கேட்டார்கள்.

        

அதற்கு சுவாமிஜி, “அவருடன் நான் தங்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் நான் எப்படி சுயக் கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்வது?” என்று கேட்டார் சிரித்தபடி.

        

சுவாமிஜி ஏன் அப்படிச் செய்தார்?

ஒருவரது ஆன்மிக வாழ்க்கைக்குப் பெரும் தடை அகங்காரமே. அந்த அகங்காரத்திற்குச் சரியான பயிற்சி தந்தால் அது அவரது உற்ற நண்பனாகிவிடும்.

        

அதற்கான பயிற்சியை சுவாமிஜியே கூறுகிறார்:

‘அகங்காரமான அந்தப் போக்கிரியை ஒழித்துவிட வேண்டும். உன்னை ஏசுபவர்களை வாழ்த்து. அவர்கள் உனக்கு எவ்வளவு நன்மை செய்கிறார்கள், அதை நினைத்துக்கொள். உன்னை ஏசுவதால் ஏதாவது தீமை விளையுமானால் அது அவர்களுக்குத்தான் விளைகிறது. உன்னை வெறுக்கும் மக்களிடம் செல். உன் அகந்தையை அவர்கள் அடித்து வெளியேற்றட்டும்; அதனால் நீ கடவுளுக்கு அருகில் செல்ல முடியும்’.

        

ஆஹா, என்ன ஒரு வீரமிக்கத் தீரமான பயிற்சி இது!!

        

சிறிது கண்மூடி அந்த வீரத்துறவியின் திருமுகத்தை மனத்திரையில் பாருங்கள்.

விமர்சனத்திற்கு அஞ்சாதே!

        

நீங்கள் சில சமயங்களில், குடும்பத்திலும், அலுவலகத்திலும், சமுதாயத்திலும் வீண் விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். ஓடி ஒளிய முடியாது. உறவினர்களின் விமர்சனங்கள் பலவும் உங்களைச் சீர்திருத்தலாம். அவற்றைப் பற்றிய சரியான புரிதல் இருந்தால் உங்களுக்குப் பிரச்னை இருக்காது.

        

ஸ்ரீராமகிருஷ்ணர் தீவிரமாகத் தவத்தில் ஈடுபட்டபோது அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக ஊரார் கதை கட்டினர். அந்த விமர்சனங்களையெல்லாம் தொலைதூரத்தில் கிராமத்தில் இருந்து கேட்டு வந்தார் அவரது இளம் மனைவியான ஸ்ரீசாரதாதேவி.

        

‘லோக் மானே போக் – மக்கள் பூச்சிகளுக்குச் சமம்’ என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியது அவருக்கு நினைவிற்கு வந்திருக்கலாம். ‘Man, vain insect’ என்று ஆங்கிலக் கவிஞர் பைரனும் கூறினார் அல்லவா!

        

யாரையாவது பற்றிப் பேசினால்தான் தனக்குச் சுகம் என நினைத்த வெட்டி ஜனங்கள் விமர்சிப்பதை ஸ்ரீசாரதாதேவி கேட்டு முதலில் கவலைப்பட்டார்.

        

அந்தக் கவலை தன் கணவருக்காகக் கடவுளிடம் பிரார்த்திக்கத் தூண்டியது; தான் சென்று அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஏங்க வைத்தது. அவ்வாறே செய்து ஊர் வாயைத் தமது சேவையால் அடைத்தார் ஸ்ரீசாரதாதேவி.

        

விமர்சனத்தைக் கடந்து நின்றவர்கள்

        

தெய்விக வாழ்வை வாழும் சான்றோர் எவரும் பிறரது அவதூறுகளைப் பொருட்படுத்த மாட்டார்கள்;

        

அதில் சிக்காதிருப்பார்கள்; அதைக் கடந்தும் நிற்பார்கள்.

        

அப்படிப்பட்டவர்கள் தங்களைப் பண்படுத்திக் கொள்வதற்காகத் தங்களைத் தாங்களே விமர்சித்துக்கொள்வதும் உண்டு. திருவாசகம் பாடிய மணிவாசகர், தம்மைத் தாமே நாய் எனவும், பேய் எனவும் கூறிக் கொள்கிறார்:

        

‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்

பேயென துள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை...’

நம்மைப் பற்றி ஒரு சொல் குறை கூறிவிட்டால் சிதறு தேங்காய் ஆகிவிடுகிறது நம் மனம்.

        

ஆனால் ‘தெய்வம் தெளிந்தார்’ எவ்வாறு இருப்பார்கள் என்று பட்டினத்தார் பாடுகிறார் பாருங்கள்.

        

‘பேய் போல் திரிந்து பிணம்போல்

கிடந்திட்ட பிச்சை எல்லாம்

நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று... ‘

ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு கேசவ சந்திரசென் சற்று புகழை விரும்பினார். கேசவரை, சைதன்யரின் மறு உரு என்று யாரோ பாராட்ட, அதை ரசித்த அவர், “நான் சைதன்யர் என்றால் ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ?” என மெல்லக் கேட்டார்.

        

உடனே ஸ்ரீராமகிருஷ்ணர், “நான் தங்கள் பாததூளியின் தூளி, தாசானுதாசன்” என்றார் கைகூப்பி.

        

கேசவர் சிரித்தபடி, “இவரை யாரும் எதனாலும் கட்டிவிட முடியாது” என்று மனமுருகிப் பாராட்டினார்.

        

இவ்வாறு மகான்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டு ஆன்மிகத்தில் முன்னேறுகின்றனர்.

        

பயிற்சி: ஆன்மிகச் சாதகர்களே, நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேற எல்லா நேரத்திலும் மனதில் சத்தான, வீர்யமான சிந்தனைகளை வைத்திருங்கள்.

        

நாம ஜபத்தை, இறைவனின் கல்யாண குணங்களோடு எண்ணிக் கொண்டிருந்தால் கடவுளின் அபயவாக்குகள் நம்முள் நிலை பெறும். நம் தியானம் மேலும் பண்படும்.

        

இந்தக் கணத்தில் உங்களுக்கு அடியார்களின் அருள்வாக்குகள் எது நினைவிற்கு வருகிறதோ, அதைத் தனியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

        

ஈசான் என்பவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர். நிறைய ஜபமும் புரச்சரணமும் செய்வார். அவ்வாறு செய்தும் தெய்வத்தைச் சார்ந்திருக்கிற துணிவும், தான் தெய்விகமானவன்தான் என்ற நம்பிக்கையும் அவருக்கு உதிக்கவில்லை.

        

இதைக் கவனித்த குருதேவர், “ஈசான் இவ்வளவு ஜபம் செய்தும் அவனிடம் நல்ல மாற்றங்கள் ஒன்றும் ஏற்படவில்லையே?” என்று அதர் என்ற பக்தரிடம் அக்கறையுடன் குறைபட்டுக் கொண்டார்.

        

அதற்கு அதர், “சுவாமி, ஈசான் பற்றிப் பலர் முன்பு இப்படிப் பேசலாமா?” என்று கேட்டதும் குருதேவர் கேட்ட கேள்வி கவனிக்கத்தக்கது:

        

“அவன்தான் நிறைய ஜபம் செய்பவனாயிற்றே! பிறரது வார்த்தைகள் அவனை எப்படிப் பாதிக்கும்?”

        

ஆக, ஜபம் செய்பவனைப் பிறரது விமர்சனங்கள் எதுவும் செய்யாது என்றார் குருதேவர். ஜபத்தைப் பக்தன் சரியாகச் செய்தால் மற்ற யாவும் அவனுக்கு அனுகூலமாகவே அமையும். ஜபமே ஜயம்!

        

விநாயகருக்கு கஜகர்ணன், சூர்ப்பகர்ணன் என்ற இரண்டு திருநாமங்கள் உள்ளன. அதைப் போலவே நாமும் வளர வேண்டும்.

        

கஜம் என்றால் யானை. கஜகர்ணன், யானையின் காதுகளைப் போன்று ஒருவர் பெரிய விஷயங்கள் எதையும் நன்கு கேட்க வேண்டும்.

        

சூர்ப்பம் என்றால் முறம். சூர்ப்பகர்ணன், அதாவது எதைக் கேட்டாலும் முறத்தால் புடைத்து, வேண்டாதவற்றை விலக்கி, வேண்டிய நல்லதை மட்டும் ஏற்க வேண்டும்.

        

இந்த அறிவின் மூலம் எந்த விமர்சனத்தையும் பண்படுத்தி ஏற்றால் நாம் செய்யும் தியானத்திற்காக விநாயகப் பெருமானே ஏங்கி நிற்பார்.

        

இல்லையேல் நம் மனம் தியானத்திலும் தூங்கி வழியும்.

அந்த அவலநிலை நமக்கு வேண்டாமே அன்பர்களே!


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:  ❖

சுவாமி விமூர்த்தானந்தர்

22 ஜூலை, 2022

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இந்த தியானத்தை கேட்க:

thanjavur