'பகவான் விரும்பும் மலர்கள்'
'பகவான் விரும்பும் மலர்கள்'
- சுவாமி விமூர்த்தானந்தர்
அன்பர்களே, இறைவனுக்கு எந்தப் பூ பிடிக்கும்?
மல்லியா? அல்லியா? முல்லையா? தாமரையா? எந்தப் பூ இறைவனுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பக்தர்களே! இதனைப் புரிந்து கொள்வதற்கு பகவான் விரும்பும் பூக்கள் தியானத்தைக் கற்போம்.
முதலில் மனதை ஈர்க்கும் வகையில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் திருவுருவப் படங்களின் முன்பு அமருங்கள்.
பத்து மலர்களைச் சேகரித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஊதுபத்தியின் மணம் நாலா பக்கத்திலும் பரவட்டும்.
பூஜையறையில் மங்கலமான கோலம் சிறியதாக இருந்தாலும் அது உங்கள் மனதை மேலெழுப்புகிறது.
பகவானை அன்புடன் நோக்குங்கள். அவரது புன்னகை உங்களது எல்லாக் கவலைகளையும் நீக்கிவிடும்.
திருவிளக்கின் மேல்நோக்கிச் செல்லும் சுடர்போல் உங்கள் மனமும் உயர்ந்த, புனிதமான சிந்தனைகளைச் சிந்திக்கட்டும். அதனால் மனம் ஒருமுகப்பட்டு அமைதியாகிறது.
நித்ய பூஜையில் பத்துவித மலர்களை மானசீகமாக இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்று ‘தந்த்ர சாஸ்திரம்’ கூறும்.
இந்தப் பூக்கள் உங்களுக்கும் உங்கள் இஷ்டதெய்வத்திற்கும் நடுவிலுள்ள தடைகளை நீக்குபவை.
நிமிர்ந்து அமர்ந்து ஒரு முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் உங்கள் இதயத்தில் உயிருணர்வுடன் வீற்றிருக்கிறார்; உங்கள் பூஜையையும் அன்பையும் ஏற்றுக் கொள்பவராக மலர்ந்த முகத்துடன் உங்களை வரவேற்பதாக பாவித்துக் கொள்ளுங்கள். அந்த பாவனையே தியானமாக மலரட்டும்.
பத்துவித, பூக்களால் பகவானைப் பூஜிக்கும் முன்பு 'மஹாநிர்வாண தந்திரம்' கூறும் மானச பூஜையைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் இந்த மானச பூஜை ஆர்வத்துடன் கூடிய கற்பனையாக இருக்கும்; பின் ஆனந்தத்துடன் கூடிய பாவனை பூஜையாக மாறும்;
காலப்போக்கில் பக்தி முதிர முதிர ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் மானசமானது மெய்யானதாகவே மாறிவிடும்.
உங்கள் இதயத் தாமரையில் ஓர் அமுதக் கடல்; அந்தக் கடலின் மத்தியில் ஒளியோடு பிரகாசிக்கும் ஒரு மணித் தீவு. அங்கே நீங்கள் கேட்டதை எல்லாம் அருளும் கல்பதரு, அதன் அடியில் ஒளி பொருந்திய ரத்தின சிம்மாசனம்.
அதன் மீது ஸ்ரீராமகிருஷ்ணர் மிக்க பிரகாசத்துடன் வீற்றிருக்கிறார் என்று பாவித்துக் கொள்ளுங்கள்.
மானசீகமாக, இதயத் தாமரையை ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஆசனமாக அர்ப்பணியுங்கள். பிறகு அவரை வரவேற்று எழுந்தருளச் செய்யுங்கள் (ஆவாஹனம் செய்தல்).
தலையில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையிலிருந்து (ஸஹஸ்ராரம்) பொங்கும் அமுதத்தால் அவரது திருவடிகளைக் கழுவுங்கள் (பாத்யம்).
பிறகு மனமாகிய அர்க்கியத்தை அர்ப்பணியுங்கள்.
பகவானின் திருவாயினை அலம்ப அமுதத்தை (ஆசமனீயம்) அர்ப்பியுங்கள்.
பிறகு அதனாலேயே (ஸ்நானீயம்) அவரை நீராட்டவும்.
ஆகாச தத்துவத்தை ஆடையாக அர்ப்பணிக்கவும்.
பூமி தத்துவத்தைச் சந்தனமாகவும் (க்ஷிதி தத்துவம்)
சித்தத்தை இறைவனுக்கு மலர்களாகவும்,
பிராணனைத் தெய்வத்திற்குத் தூபமாகவும்,
ஒளித் தத்துவத்தைத் (தேஜஸ்) தீபமாகவும்,
அமுதக்கடலை நைவேத்தியமாகவும் அர்ப்பிக்கவும்.
யோகியர் உணரும் எழுப்பப்படாத ஒலியான ‘அனாஹத த்வனி’யை மணியின் ஒலியாகவும், வாயு தத்துவத்தை ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சாமரமாகவும் வீசுங்கள்.
புலன்களின் எல்லாச் செயல்பாடுகளும், மனதின் பரபரப்புகள் யாவும் அவர் முன் செய்யும் நடனமாகட்டும்.
இப்படிப்பட்ட மானச பூஜையைச் செய்த பின் அந்த மனநிலையிலேயே சில கணங்கள் இருங்கள்.
கீழ்க்கண்டவற்றைச் சிந்தித்தும் கூறியும் பூக்களை ஒவ்வொன்றாக ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சமர்ப்பியுங்கள்.
1) அறியாமையின்மை
2) அகங்காரமின்மை
3) பற்றின்மை
4) ஆடம்பரமின்மை
5) மோகமின்மை
6) கர்வமின்மை
7) வெறுப்பின்மை
8) அமைதி குலையாமை
9) பகைமையின்மை
10) லோபமின்மை
ஆகிய மலர்களைத்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் நம்மிடமிருந்து பெறுவதற்கு ஏங்கி நிற்கிறார்.
அத்துடன் அஹிம்சை, புலனடக்கம், தயை, பொறுமை, ஞானம் ஆகிய ஐந்து பண்புகளையும் மலர்களாக பாவித்து அந்த மலர்களையும் அர்ப்பணம் செய்யுங்கள்.
பிறகு முதல் மலரை எடுத்துக் கொள்ளுங்கள்.
முதல் பூ – அறியாமையின்மை – அமாயம்
‘அறிவின் திறவுகோல் மன ஒருமைப்பாடு’ என்றார் சுவாமி விவேகானந்தர். அதன்படி, உங்கள் மனதை ஸ்ரீராமகிருஷ்ணர் மீது குவியுங்கள்.
அதனால் உங்கள் அறிவு விரியும். அறியாமை மறையும். மாயையில் சிக்காத, பந்தமற்ற நிலை உங்களுக்குக் கைகூடும்.
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் அறியாமையைப் பற்றி அறிந்து கொள்வதே அறிவின் முதல்படி.
பகவத் கீதையில் உள்ளுணர்வின் ஆற்றலானது ‘திவ்ய சக்ஷூ’ – ‘தெய்வீகக் கண்’ என்று அழைக்கப்படுகிறது.
தெய்வீகக் கண் வளராமல் போவதற்கு அறியாமைதான் காரணம் என்று வேதாந்த தத்துவ ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
கடவுளின் தெய்வீகக் காட்சியை மறைப்பதே அறியாமை என்று பதஞ்சலியும் கூறுகிறார். யோக சூத்திரத்தில் அவர், ‘நிலையற்றதை நிலையானதாகவும், தூய்மையற்றதைத் தூய்மையானதாகவும், தூய்மையானதைத் தூய்மையற்றதாகவும், துன்பத்தை இன்பமாகவும், ஆன்மா அல்லாததை ஆன்மாவாகவும் கொள்வதே அறியாமை’ என்றார்.
அறியாமையை வென்று உயர்ந்த விழிப்புணர்வு நிலையை அடைவது எப்படி? அறியாமை பல வழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எல்லாவற்றிற்கும் முதலில் ‘நான்’ எனும் எண்ணம் அறியாமையால் வருகிறது.
இது ஆத்மாவை மறைத்து விடுகிறது.
பிறகு ஆசை வருகிறது, பந்தம் வருகிறது.
இவை தடுக்கப்பட்டால் சினமும், பயமும் வருகிறது.
இப்படிப்பட்ட அவல நிலையைக் களைவதற்காக முதல் பூவான அறியாமையின்மை – அமாயம் என்ற மலர் என் நெஞ்சுக்குள் உதித்துள்ளது. அந்த மலர்தான் என் கைகளில் உள்ளது. அதை ஞானவடிவான ஸ்ரீராமகிருஷ்ணரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் என்ற எண்ணத்தில் பூஜியுங்கள்.இரண்டாம் பூ – அகங்காரமின்மை –அநகங்காரம்
அடுத்து, இரண்டாவது பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
மனிதனை அலைக்கழிக்கும் அற்பமான அகங்காரம் தியானத்துக்கு மிகப் பெரும் தடை. மனிதனுக்கு அகந்தை இருக்குமானால், எவ்வளவு தவம் செய்தாலும் அல்லது சாதனை புரிந்தாலும் அவற்றால் எந்தப் பயனும் இருக்காது.
‘அகங்காரம் மறையும்போது மனிதனின் எல்லாத் தொல்லைகளும் முடிவிற்கு வந்துவிடும். மனிதனுக்கு அகங்காரம் இருக்கும் வரை ஞானமோ, முக்தியோ பெற முடியாது’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
‘நான், நான்’ என்று ஓயாமல் நெஞ்சில் ஓலமிடும் அகங்காரத்தைத் துறந்தால் ஆண்டவன் நம்மோடு உறவாடுவான். அந்த உறவின் மூலம், நமக்குள் வினயம் மலரும். வினயம் பல நயங்களை நம் வாழ்வில் பெருக்கும்.
‘அப்படி மலர்ந்த அநகங்காரம் – அகங்காரமின்மை என்ற நம் கையிலுள்ள மலரை, எள்ளளவும் அகங்காரமற்ற என் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்’ என்று கூறி இரண்டாம் மலரை அர்ப்பணியுங்கள்.மூன்றாம் பூ – பற்றின்மை– அராகம்
மூன்றாம் பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
30 வருடங்கள் தக்ஷிணேஸ்வரக் கோயிலில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ணரிடம் ஒருமுறை யாரோ செய்த தவறுக்காக, “நீங்கள் வெளியே போங்கள்” என்று கோவில் காவலாளி கூறியதும் மறுகணம் காற்றாக குருதேவர் புறப்பட்டுவிட்டார்.
போகச் சொன்னது அவரை அல்ல என்று கோயில் அதிகாரி மன்னிப்பு கோரியதும், மறுகணம் எந்தச் சலனமுமின்றி உள்ளே வந்தார், பற்றின்மையின் உருவான பகவான்.
‘பற்றுக பற்றற்றானை’ என்று பறைசாற்ற வந்த அப்படிப்பட்ட பகவானின் பாதங்களில், என் கையிலுள்ள அராகம்–பற்றின்மை என்ற பூவை அர்ப்பிக்கிறேன்’.
நான்காம் பூ – செருக்கின்மை –அமதம்
பிறகு நான்காம் பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
ஒருவனுக்குள்ள அழகு, அறிவு, திறமை, பேச்சாற்றல், பணம், பதவி போன்றவை யாவும் இறைவன் தந்தவை.
அவற்றைப் பெற்ற ஒருவன், ‘இவை எல்லாம் என்னால்தான் வந்தன, நானே இவை எல்லாவற்றுக்கும் காரணம்’ என இறுமாந்தால், அவன் கடவுளை இகழ்கிறான்.
‘இறைவா, இறுமாப்பு இல்லாத, அமதம் என்ற பூவை புனிதா, நின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன், என்னைச் செருக்கற்றவனாக்கு’ என்று வேண்டி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு பூவைச் சமர்ப்பியுங்கள்.
ஐந்தாம் பூ – மோகமின்மை – அமோஹகம்
பிறகு ஐந்தாம் பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு’ என்று பராசக்தியிடம் வேண்டினார் பாரதி.
எதன் மீதும் அல்லது யார் மீதும் கட்டுப்பாடற்று ஆசைப்படுவது மோகம். மோகம் இல்லாவிட்டால் மனதில் ஆற்றலும் அமைதியும் நிலைக்கும்.
‘எதன் மீதும் நான் மோகம் கொள்ளாதிருக்க எனக்கு ஆண்டவன் அருளட்டும். அதற்காக மோகமின்மை – அமோஹகம் என்ற இந்த மலரை ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’.
ஆறாம் பூ – கர்வமின்மை – அதம்பம்
பிறகு ஆறாம் பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
கடவுள் மீது ஆர்வம் இருப்பவருக்கு ஆடம்பரம் வராது.
பிரபஞ்சத்திலுள்ள மாபெரும் சக்திகளான நீர், நிலம், வாயு, அக்னி, ஆகாசம் ஆகிய யாவுமே கடவுளின் கட்டளைக்கு அடங்கித் தங்கள் பணிகளைச் செய்கின்றன.
கடவுளின் சக்தியை நம்மிடம் திரட்டி வைத்துக் கொள்ளவே நாம் வாழ்கிறோம். அந்த நிலையைப் பெற்றிட இவ்வாறு வேண்டுங்கள்:
‘இறைவா, நானே பெரியவன், மற்றவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற கர்வம் என்னிடத்தில் சிறிதும் இல்லாதபடி என்னை உன் குழந்தையாக்கு. அந்த நிலையைப் பெற வேண்டி, கர்வமின்மை –அதம்பம் என்ற இந்தப் பூவைக் காணிக்கையாக்குகிறேன்’.
ஏழாம் பூ – வெறுப்பின்மை– அத்வேஷம்
பிறகு ஏழாம் பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
வெறுப்பு சாதகனின் கொடுமையான எதிரி. நிந்தனை, ஏளனம், பரிகாசம், அலட்சியம், சுயநலம், பொறாமை, பேராசை ஆகிய யாவும் வெறுப்பின் பல்வேறு வடிவங்கள்.
வெறுப்பினை நம்முள் நீக்கிக் கொள்ள கடவுளிடம் இவ்வாறு வேண்டுங்கள்:
‘பகவானே, தவறு செய்துவிட்டார்கள் என்று நான் இதுவரை யாரையெல்லாம் வெறுத்தேனோ, அவர்களை நான் இன்று மன்னித்துவிடுகிறேன்.
‘யாரெல்லாம் தவறாகப் புரிந்துகொண்டு என்னை வெறுக்கிறார்களோ, அவர்களிடம் நான் நல்ல உறவை வளர்த்துக் கொள்வேன்.
‘ஏனெனில் இறைவா, அனைவரும் உன் பிள்ளைகள். உன் குழந்தைகளை வெறுத்துவிட்டு அனைவரையும் பெற்றெடுத்த உனது அன்பை நான் பெற முடியாது.
‘ஆகவே என் கையில் உள்ள வெறுப்பின்மை – அத்வேஷம் என்ற இந்தப் பூவை, அன்பின் திரட்சியான அன்னை ஸ்ரீசாரதைக்கு அர்ப்பணிக்கிறேன்.’
எட்டாவது பூ – அமைதிகுலையாமை – அக்ஷோபகம்
பிறகு எட்டாவது பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் மறைந்த பின் ஒரு வேளை உணவுகூட இல்லாதபோதும் அன்னை ஸ்ரீசாரதை தமது அக அமைதியை இழக்கவில்லை. பிற்காலத்தில் எண்ணற்றோர் ‘தாயே, தேவியே, அன்னபூரணியே’ என்று அவரை ஆராதித்தபோதும் அவர் பெருமையால் சிறிதும் நிலைகுலையவில்லை.
ஆனால், ‘என்னைப் பற்றி யாராவது ஒரு சிறு வார்த்தை சொல்லிவிட்டாலோ, என் அமைதி குலைந்துவிடுகிறது. அந்தப் பலவீன நிலை மாறிட இதோ அமைதி குலையாமை – அக்ஷோபகம் என்ற பூவை அமைதியே வடிவான அன்னை ஸ்ரீசாரதையின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’.
ஒன்பதாம் பூ – பகையின்மை – அமாத்சர்யம்
பிறகு ஒன்பதாம் பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
பகை எனப்படுவது மனிதனின் மனம் எனும் ஈர விறகில் எழும் புகை. அது அவனுக்குள் இருக்கும் பக்தி அக்னியைக் கொழுந்து விட்டெரியச் செய்யாது.
‘நான் இனி யார் மீதும் பகை கொள்ள மாட்டேன்; யாரும் என் மீது பகை கொள்ளும்படியும் நான் இருக்க மாட்டேன் என்ற சங்கல்பத்தை ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன் நான் ஏற்கிறேன்.
‘இதோ, அந்த உறுதிமொழியின் வெளிப்பாடாக என் கையிலுள்ள அமாத்சர்ய மலரை, அன்பின் பிடியில் அகப்படும் மலையான ஆண்டவா, உனக்கே அர்ப்பணம்.’
பத்தாம் பூ – லோபமின்மை –அலோபம்
பிறகு பத்தாம் பூவைக் கையில் ஏந்திக் கொள்ளுங்கள்.
(உரக்கக் கூறவும்) என் உண்மையான சொரூபம் தெய்விகமானது; தெய்வத்தின் குழந்தை நான். சோகம், மோகம் இல்லாத ஆன்ம சாம்ராஜ்யம் என்னுடையது.
அப்படிப்பட்ட நான் உலக ஆசைகள், சிற்றின்பங்கள், பெயர், புகழ், பணம், பதவி போன்றவற்றில் இனி என் கவனத்தைச் சிதறடிக்க மாட்டேன்.
இவற்றால் பாதிக்கப்படவும் மாட்டேன் என்ற என் மனதின் அலையாத தன்மையான அலோபம் –லோபமின்மை என்ற இந்தப் பூவை என் ஆன்மாவின் நாயகனான ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சமர்ப்பிக்கிறேன்.
(எழுந்து நின்று உச்சரியுங்கள்) ‘பகவானே, இந்தப் பத்து மானசீக மலர்களையும் உன் திருவடியில் சமர்ப்பித்துள்ளேன். இவற்றை ஏற்று என்னை உன்னுடையவனாக்கு; உத்தமனாக்கு!’
பக்தர்களே, முடிவில், பகவானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குங்கள். உங்களது பக்திக்குத் தக்கபடி பகவானின் அருளை நீங்கள் பெறுவீர்கள்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ❖
சுவாமி விமூர்த்தானந்தர்
05 ஜூலை, 2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்