'கண் தியானம்'
'கண் தியானம்'
‘கண்ணைப் பார் சிரி’ என்று பல இடங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒருவரது கண்களை உற்றுக் கவனித்தால் அவருக்கு மகிழ்ச்சி வரும் என்பதைத்தான் இப்படிக் கூறுகிறார்கள் போலும்.
உங்களது கண்களை நீங்கள் கண்காணித்தால் மகிழ்ச்சி உங்களுடையதாகத்தான் இருக்கும்.
புறமுகமாக அலையும் கண்களை அகமுகமாக்கினால் பிரமுகர் ஒருவர் ஆவது நிச்சயம் என்கிறது கண் தியானம்.
அன்பர்களே! அதிக வெயிலிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க கூலிங் கிளாஸ் அணிகிறீர்கள்.
பயணத்தின்போது வெளிச்சம் வேண்டாம் என்பதற்காகக் கண்களைத் துணியால் கட்டிக் கொள்கிறீர்கள். இப்படிப் பல வகைகளிலும் கண்களைப் பாதுகாத்துக் கொள்கிறீர்கள்!
‘உள்ளத்தின் கதவுகள் கண்கள்’ என்பர். ஆனால் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்தக் கதவுகளுக்கு உள்ளே தாழ்ப்பாள் உண்டா? வெளியே பூட்டு உண்டா?
உயர்ந்த விஷயங்களைப் பார்த்த பிறகு அவற்றை உள்ளத்தில் நிறுத்தி, அதிலேயே நிலைத்திட புறக்கண்களுக்கு நாம் தாழ்ப்பாள் போடுகிறோமா?
கட்டாயம் நீங்கள் பார்த்தேயாக வேண்டும் என்ற நிலையிலிருந்து உங்கள் மனதையும் பார்வையையும் திசை திருப்புவதற்குக் கண்களுக்குப் பூட்டு போட முடிகிறதா?
இயற்கையின் முன்பு நாம் அடிமைகளாக நிற்கிறோம். ஏதோ ஓசை எழுந்தால் அதை யோசனையின்றிக் கேட்கத்தான் வேண்டியுள்ளது. நமக்குச் சம்பந்தமற்ற ஏதாவது நிகழ்ந்தாலும் அதைப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது. இவற்றைத் தடுப்பதற்கான சக்தியைத் தருவதுதான் தியானம்.
‘பராஞ்சிகானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ: ருணத் ஸ்வயம்பூ: ருணத் ஸ்வயம்பூ: ருணத் ஸ்வயம்பூ: ருணத் ஸ்வயம்பூ: ருணத் ஸ்வயம்பூ:
தஸ்மாத் பராங் பச்யதி’ – கண், காது போன்றவை வெளிமுகமாகச் செயல்படும்படி கடவுள் அமைத்துள்ளார் என்று கட உபநிஷதம் கூறும். ச்யதி’ – கண், காது போன்றவை வெளிமுகமாகச் செயல்படும்படி கடவுள் அமைத்துள்ளார் என்று கட உபநிஷதம் கூறும். ச்யதி’ – கண், காது போன்றவை வெளிமுகமாகச் செயல்படும்படி கடவுள் அமைத்துள்ளார் என்று கட உபநிஷதம் கூறும். ச்யதி’ – கண், காது போன்றவை வெளிமுகமாகச் செயல்படும்படி கடவுள் அமைத்துள்ளார் என்று கட உபநிஷதம் கூறும். ச்யதி’ – கண், காது போன்றவை வெளிமுகமாகச் செயல்படும்படி கடவுள் அமைத்துள்ளார் என்று கட உபநிஷதம் கூறும். ச்யதி’ – கண், காது போன்றவை வெளிமுகமாகச் செயல்படும்படி கடவுள் அமைத்துள்ளார் என்று கட உபநிஷதம் கூறும்.
அதைக் கூறியே, ஒருவர் வெளிமுகமாகவே கண்களால் அலைந்தால் அவரது மனதில் குழப்பங்கள் பொங்கும், சிறு சிறு சுனாமிகளாக!
கண்களைக் கூர்மையாக்குங்கள்!
கண்களுக்கு தியானப் பயிற்சி தருவதற்கு முன் சுவாமி விவேகானந்தரின் ஒரு முக்கியமான கருத்தைக் கவனியுங்கள்.
பயிற்சி: சுவாமிஜியின் இக்கருத்தை உரக்க வாசியுங்கள்:
‘வேதாந்தத்தின்படி, மனிதனுக்குள்ளேயே எல்லாம் உள்ளது. ஒரு சிறுவனிடம்கூட எல்லாம் உள்ளது. அதை விழிப்புணர்த்த வேண்டும் – இதுவே ஆசிரியரின் வேலை.
‘சொந்த அறிவைப் பயன்படுத்திக் கை, கால், கண், செவி முதலியவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சிறுவர்களுக்குக் கற்பித்தாலே போதும், எல்லாம் சரியாகிவிடும்.’
கண்டதை எல்லாம் காண்பதை விட்டு, எதையும் உயர் கண்ணோட்டத்துடன் காணச் செய்வதுதான் கண் தியானம்.
‘கண்ணுக்கு அழகு கண்ணோட்டம்’ என்பர். வாழ்க்கை பற்றிய ஒருவரது கண்ணோட்டமே அவரது சிறப்பு.
தருமபுத்திரரும் துரியோதனனும் மக்களைப் பார்த்து வந்த கதை உங்களுக்குத் தெரிந்ததே.
நல்லவன் எவனுமே இல்லை என்றானாம் துரியோதனன். நல்லவர்களைத் தவிர வேறு யாருமில்லை. இது தருமரின் கண்ணோட்டம்.
மனிதன் உயர் நோக்கத்தை இழக்கும்போது அவன் எதையும் வேடிக்கை மட்டுமே – பராக்கு மட்டுமே பார்க்கிறான். எதையும் அவனால் ஆழ்ந்து நோக்க முடிவதில்லை. அதனால் அவனது திறன்கள் வளர்வதுமில்லை. இருக்கும் திறன்களும் தேயத் தொடங்குகின்றன.
எதையும் ஆழ்ந்து நோக்குவதற்குக் கண்ணைப் பழக்க வேண்டும். கண்களைக் கூராக்கி, கால்களை நேராக்காத எந்தப் பறவையும் வானத்தில் சிறகடித்துப் பறப்பதில்லை.
பார்வைத் திறனைப் பெருக்குவதற்கான ஒரு பயிற்சி:
உங்களுக்குப் பிடித்த எதையாவது உற்று நோக்குங்கள். எத்தனை நொடிகள் வேறு சிந்தனையின்றி உங்களால் அதைப் பார்க்க முடிகிறது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, உங்கள் மனதை ஒரு பறவையாகக் கருதுங்கள். அந்தப் பறவை உயரத்தில் ஆனந்தமாகப் பறப்பது போல் கற்பனை செய்யுங்கள்.
பெரும்பாலான சமயங்களில் உங்கள் கவலைகளும் துக்கங்களும் வெறும் கற்பனையே. மனம் ஆனந்தமாக இருப்பதாகவே நம்புங்கள். நீங்கள் ஆனந்தமாகவே இருப்பீர்கள்.
உயர்ந்தவற்றைக் காணுங்கள்!
பகவானை அகத்தில் தொடர்ந்து கண்ணுற்று, தியானம் கைகூட கண்களுக்குச் சரியான பயிற்சி தேவை.
ஒருவன் எதையும் சரியாகப் பார்க்க வேண்டுமென்றால், அவனது மனதில் உயர் நோக்கம் இருக்க வேண்டும். அகத்தில் தெளிவு இருந்தால் புறத்தில் அவன் காண்பதெல்லாம் இறைவனின் இனிய படைப்புகளையே.
‘உலகில் பலரும் ஒரே நாளை ஆயுள் முழுவதும் வாழ்கின்றனர்’ என்றார் ஓர் அறிஞர். இதன் பொருள் என்ன?
மனிதர்கள் தாங்கள் ஒவ்வொரு நாளும் எப்படி சாதாரணமாகப் பொழுதைப் போக்குகிறார்களோ, அது போன்றே மொத்த ஆயுள் காலத்தையும் போக்குகின்றனர்.
நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் இதையே பட்டினத்தாரும் கூறுவார்:
‘உண்டதே உண்டு,
உடுத்தியதே உடுத்தி,
கண்டதே கண்டு,
கேட்டதே கேட்டு,
கழிந்தன கடவுள் நாளெல்லாம்!’
ஆம், இப்படியான பயனற்ற, படைப்பாற்றல் இல்லாத உலகியல் வாழ்க்கை வாழ்ந்து இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்நாளை வீணடிக்கிறோமா?
பயிற்சி: இந்தக் கேள்விக்கான உங்களது பதிலைப் பற்றி யோசியுங்கள்.
வெளிப்பக்கம் பார்க்காமல் குகைகளின் சுவற்றையே பார்த்து பிக்குகள் தியானம் செய்ததெல்லாம் அவர்கள் தங்கள் கண்களையும் கண்ணோட்டத்தையும் அகமுகமாக்கத்தான்.
பகவத் கீதையும் இதற்கான தியானப் பயிற்சியாகப் ‘புறத்தில் பார்ப்பதிலிருந்து கண்களைத் திசை திருப்பி உன் மூக்கின் நுனியில் முழு கவனம் கொள்’ என்று கூறுகிறது.
ஒரு துறவி உலகின் புறத் தோற்ற மயக்கங்களில் சிக்காது இருப்பதற்கு ‘கலைடாஸ்கோப்’பைத் திரும்பத் திரும்பப் பார்த்தார். அதில் உள்ள வர்ண கண்ணாடித் துண்டுகள் காட்டும் ஜாலங்களை ரசித்தார்.
பிரபஞ்சமும் இப்படித்தான் பலவித மாயா ஜாலங்களைக் காட்டி மனிதனை மாயைக்குள் முடக்குகிறது என அவர் ஆன்ம விசாரம் செய்தார். ஆண்டவன் தரிசனம் பெற்றார்.
பயிற்சி: உங்களுக்கு வேண்டியது, வேண்டாததைப் பகுத்தாய்வதற்கு முன் அதை ஒரு தாளில் எழுதி ஆராயுங்கள்.
வந்து போகும் விஷயங்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தால் உலகில் வந்து கொண்டே, போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். அதாவது ஜனன – மரணச் சுழலில் சிக்க வேண்டியதுதான்.
ஒளி படைத்த கண்ணினாய்...
அன்பர்களே, தியானம் செய்வதற்கு மனதை ஒருமைப்படுத்துகிறீர்கள். அப்போது உலகத்திலுள்ள எல்லாக் குழப்பங்களும் ஆசைகளும், வெற்றி – தோல்வி பற்றிய நினைவுகளும் வந்து உங்களைத் திணறடிக்கின்றன.
அந்த எண்ணப் பதிவுகளைச் சமாளிப்பது எப்படி?
ஜப–தியானம் செய்யும்போது முதலில் சில கணங்கள் எண்ணங்களுடன் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள். நல்லதோ, மோசமானதோ அவற்றைப் பார்க்காதீர்கள், புறக்கணியுங்கள்.
பிறகு எந்த எண்ணங்களாக இருந்தாலும் அவற்றை சாக்ஷியாக இருந்து கவனியுங்கள்.
எண்ணங்கள் எழுப்பும் உணர்ச்சிகளில் சிக்காதிருப்பதே ஒரு சிறந்த தியானம்தான். அவ்வாறு செய்தால் அந்த எண்ணங்களும் ஆசைகளும் தியானத்திற்குத் தடையாக வராது.
அவை நினைவுகளாக நமக்குள் குவிந்துவிடும். வேண்டும்போது நாம் அவற்றை வரவழைத்துச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘தியான காலத்தில் மாத்திரம் பகவானை நினைத்துக் கொண்டு பிற நேரங்களில் பகவானை மறந்திட வேண்டுமா? துர்க்கா பூஜா காலங்களில் பிரதிமைக்கு அருகில் சதா விளக்கெரிந்து கொண்டிருப்பதைக் காணவில்லையா? அது எப்போதும் எரிய வேண்டும். அது ஒரு முறை அணைந்து விட்டால் அந்த வீட்டுக்காரருக்கு ஏதாவது துன்பம் ஏற்படும்.
‘அது போல உனது இருதய கமலத்தில் பகவானை எழுந்தருளச் செய்த பிறகு எண்ணமாகிய விளக்கு எப்போதும் அங்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும். லௌகிக கருமங்களில் ஈடுபட்டிருக்கும் போதும் அடிக்கடி உள்நாட்டம் கொண்டு அந்த விளக்கு எரிகின்றதா என்பதைப் பார்.’
இது பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சாதகர்களுக்கும் பக்தர்களுக்கும் கூறும் ஓர் அருமையான வழிகாட்டுதல்.
இவ்வாறு நீங்கள் வாழ்க்கையில் கண்களைச் சரியாகப் பயன்படுத்தும்போது வாழ்க்கையில் நல்லவற்றைக் காணும் பேறு பெற முடிகிறது.
ஆனால் நடைமுறையில் நம்மால் ஏன் மற்ற விஷயங்களையே காண முடிகிறது?
உயர்ந்தவற்றைப் பார்க்க முடியாதது ஏன்?
கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் அடிக்கடி தமது படகு வீட்டிற்குச் சென்று தங்குவதுண்டு. அது ஓர் அழகான ஏரி. ஒரு பௌர்ணமி இரவில் அழகியல் தத்துவம் பற்றி கிரோஸ் என்ற அறிஞரின் நூலைப் படித்துக் கொண்டிருந்தார் தாகூர்.
அழகு என்பது என்ன? அது மனதில் உள்ளதா?
வெளியில் உள்ளதா? பார்ப்பவரின் கண்ணில் உள்ளதா?
என்றெல்லாம் அவர் சிந்தித்தார். சிக்கலான தர்க்கத்தைப் படித்ததால் களைப்படைந்தார்.
புத்தகத்தை மூடி விட்டு, விளக்கை அணைத்தார்.
விளக்கை அணைத்ததும் இருள்தானே வரும்? ஆனால் அந்த அறை முன்பைவிட அதிக பிரகாசத்துடன் இருந்தது.
சிறிய சுடர் அணைந்ததும், அந்தப் படகு வீட்டின் ஜன்னல்களின் வழியாகவும், கதவு வழியாகவும் நிலவு தன் முழு ஒளியுடன் உள்ளே நுழைந்திருப்பதை அவர் கண்டார்.
அவரிடம் பேரமைதி, உயர் சிந்தனை போன்றவை நிலவின. ஏரிக்கரையில் நிலா அற்புத அழகோடு தோன்றியது. இவ்வளவு அற்புதமான அழகை நான் புத்தகத்தில் அல்லவா தேடிக் கொண்டிருந்தேன் என்று தாகூர் சிந்தித்தார்.
பின் அவர், ‘என்னைச் சுற்றிலும் அழகு முழுவதுமாக விரிந்திருந்தது. ஆனால், சிறிய விளக்கின் சுடர் அதைத் தடுத்துக் கொண்டிருந்தது. விளக்கொளி இருந்ததால், நிலவொளி நுழைய முடியவில்லை’ என்று தமது டைரியில் எழுதினார்.
அன்பர்களே, உங்கள் அகங்காரம், அறியாமை போன்ற சிறுவிளக்குகள் அணைந்து உங்கள் பேரறிவு நிலவொளியாகப் பிரகாசிப்பதாக எண்ணுங்கள்.
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் சூரியனைக் காலை முதல் மாலை வரை காண்பது என்று முடிவெடுத்தார். உதயசூரியனையும் அஸ்தமன சூரியனையும் கண்ணால் காணலாம். நாள் முழுக்க சூரியனைப் பார்ப்பது இயலாத காரியம்.
ஆனால் சூரியன் திரும்பிய திசையெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரும் திரும்பினார், பார்வையைச் சற்றும் மாற்றாமல்.
நாமும் அது போன்று ‘ஒளி படைத்த கண்ணினாய்.... உறுதி கொண்ட நெஞ்சினாய்...’ என்றபடி நமது லட்சியத்தில் பார்வையை மாற்றாத பேற்றினைப் பெற தியானிப்போம்.
பார்ப்பது தெளிவாக இருக்கும்போது அதன் தொடர்ச்சி தியானத்திலும் தொடர்வது உங்களது அனுபவமாகிவிடும்.
‘பத்ரம் பச்யேமாக்ஷபிர்: யஜத்ரா:’ – ‘என் கண்கள் மங்களமானவற்றையே காணட்டும்’ என்று உபநிஷதம் இறைவனிடம் பிரார்த்திக்கப் பணிக்கும்.
கண்ணை மூடி இந்தப் பிரார்த்தனையில் மூழ்குங்கள்;
உங்கள் அகக்கண் திறக்கட்டும் ஆண்டவன் அருளால்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ❖
சுவாமி விமூர்த்தானந்தர்
22 மே, 2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்