ஸ்ரீராமகிருஷ்ண நேத்ர தியானம்
பக்தர்களே, உங்களது தியானமும் ஜபமும் சிறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்கள் தியானத்திற்கான தடைகளுள் ஒன்று ‘கண் திருஷ்டி’யாக இருக்கலாம். பொறாமையாலும், உங்கள் வளர்ச்சியைச் சகிக்க முடியாததாலும் பல ‘’
‘கண் திருஷ்டி’ மறைமுகமாக உங்களது மனதைப் பாதிக்கலாம். உங்கள் நிம்மதியைக் கெடுக்கலாம். தீய பார்வை உங்கள் மீது படாதிருக்க, ‘நல்லோரைக் காண்பதுவும் நன்றே’ என்ற மூத்தோர் வாக்குப்படி வாழ்வது மிக அவசியம்.
“ஸ்ரீராமகிருஷ்ணரைப் பூஜிக்கும் இடத்தில் அவரது பார்வை இருக்கும்” என்கிறார் அன்னை ஸ்ரீசாரதாதேவி.
அதன்படி, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஞானதிருஷ்டியை - அருட்கடாட்சத்தைப் பெறுவதற்கு குருதேவரின் அருட்பார்வை கொண்ட ஒரு திருவுருவப் படத்தை அலங்கரித்து, அவர் முன் அமருங்கள்.
இப்போது ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன்பு நீங்கள் அமர்ந்திருப்பதால் பக்தர்களே, உங்களது உடலும் மனதும் ஓடாமல் இருக்கிறது.
ஒருமுறை ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்ளுங்கள். அதனால் வரும் சூட்டினை உங்கள் கண்கள் மீது வைத்துக் கொள்ளுங்கள்.
கண்களின் வழியேதான் ஒருவரது சக்தி அதிகம் விரயமாகிறது. ஆகவே கண்களின் சோர்வு நீங்குவதற்காக ஐந்து முறை உங்கள் கண்களை மூடி மூடித் திறந்து பாருங்கள்.
பிறகு கண்களை இடது புறத்திலிருந்து வலது புறமாகவும், வலது புறத்திலிருந்து இடது புறமாகவும் திருப்பிப் பாருங்கள். பிறகு கண்களை மேலும் கீழுமாகத் திருப்புங்கள். இதன் மூலம் உங்கள் கண்கள் எல்லாவற்றையும் பார்க்கும் வல்லமை பெறும்; சோர்வு நீங்கும்.
சில இல்லங்களில் கெட்ட மக்களின் திருஷ்டி படாமலிருக்க ‘கண்ணைப் பார் சிரி’ என்று எழுதி வைத்திருப்பார்கள். நீங்கள் அகமுகமாகி, ஆனந்தமாகச் சிரிக்க வேண்டுமானால் கண்ணைப் பார்க்கத்தான் வேண்டும். யாருடைய கண்களைக் காண்பது?
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநயனம் எப்படிப்பட்டது?
சுவாமி விவேகானந்தர் தாம் எழுதிய ஆரதிப் பாடலில் இவ்வாறு கூறுகிறார்:
‘பகவானே ஸ்ரீராமகிருஷ்ணா,...அன்பர்களைக் காப்பதற்காகக் குணங்களைத் தங்கி அருள்பவனே! பாவக் கறையை மாய்ப்பவனே! உலகின் அணியாக, பூஷணமாக விளங்குபவனே! தெய்வீகப் பேருணர்வு வடிவினனே! ஞானாஞ்ஜனம் - ஞானமை தீட்டிய உனது அருள் விழிகளின் கடைக்கண் பார்வை ஒன்று போதும், எங்கள் அஞ்ஞான மயக்கம் மறைந்துவிடும்’.
இது ஸ்ரீராமகிருஷ்ணரின் நயனதீட்சை பெற்ற சுவாமி விவேகானந்தர் அனுபவம். அப்படிப்பட்ட பகவானை உங்கள் நெஞ்சுக்குள் வரவழைக்க, அவருக்கு வரவேற்பு நல்குங்கள்.
உங்கள் பார்வையைத் திரட்டி, ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவைப் பாருங்கள்.
உலகிற்கே ஞான ஒளியான பகவானே நம் அகத்திலும் அறியாமை இருளை அகற்றுவதற்காக நம்மை நோக்குகிறார் என்று நம்பி அவரது திருக்கண்களை நோக்குங்கள்.
உள்ளம் உருகி வேண்டினால் ஓடோடி வரும் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது பிரேமைக் கண்களால் உங்களைப் பார்த்துப் புன்னகைப்பதைப் பாருங்கள்.
பிறகு கீழ்க்கண்டவற்றைக் கண் கலங்கும்படி வாய் திறந்து வாசியுங்கள்:
பகவானே, தங்களது பக்திமிகு நயனங்கள் சீதாதேவியைக் கண்டவை;
தங்களது வியாகுலக் கண்கள் பவதாரிணி தேவியைத் தரிசித்தவை;
தங்களது ஞானக்கண்கள் ரிஷி, முனிவர்களைத் தரிசித்தவை;
தங்களது சாந்தமான கண்கள் ஸ்ரீசாரதம்மாவை ஷோடசியாகப் பூஜித்தவை;
உலகிலுள்ள சாதகர்களையும் பக்தர்களையும் தேடித் தேடிக் காண்பது உங்கள் நேத்திரங்கள்.
எல்லாப் பெண்களிடமும் தேவியையே கண்டது தங்கள் நயனங்கள். அதே சமயம் எந்த தேவ, தேவியைத் தரிசித்த போதிலும், மக்கள் நலனுக்காக, பக்தர்களின் உன்னதத்திற்காக வேண்டிக் கண்ணீர் சொரிந்ததும் தங்களது நயமிகு நேத்திரங்கள்தானே!
கதாதரக் கடவுளே, ஞான வடிவான விரிந்த நெற்றிக்கும், அன்பு ஒழுகும் திருவதனத்திற்கும் நடுவே விளங்குபவை தங்களது திருக்கண்கள். ஞானமிச்ரிதா பக்தி - ஞானமும் பக்தியும் கலந்த அற்புதக் கலவை அல்லவா அக்கண்கள்!
சூரியனையும் சந்திரனையும் நேத்திரங்களாகக் கொண்ட பகவான் தாங்கள்.
‘அருள் ஞானம் பெற்றோர்க்கு அநந்தம் விழி’ என்று உரைத்ததுபோல், பகவானே தாங்கள் அனைத்தையும் காண்பவர்.
பிரபோ, தேவி பாவத்தில் விளங்கும்போது தாங்கள் விசாலாக்ஷிதேவியாக மாறுகிறீர்கள். விசாலாக்ஷி அதாவது அனைத்தையும் பார்க்கும் விசாலமான பார்வை மட்டுமல்ல, எதையும் ஆழமாகவும் பெருந்தன்மையுடனும், பூரணமாகவும் பார்க்கிறீர்கள்.
‘ஒரு துளி நீரில் கடலையே காணும்’ தன்மை உங்களுடையது. எதைக் கண்டால் எல்லாம் கண்டதற்குச் சமமோ அதைக் காணும் உபநிஷதம் போற்றும் அம்சம் அது.
பிரபுவே! தங்களது சீடர்களான நரேன், ராக்காலைப் போன்ற நித்திய சித்தர்களைக் கண்டு கண்ணின் காதோரத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தீர்களே!
தங்களது பிரேமைக் கண்கள் முரடனாக இருந்த மன்மத் என்பவனை முனிவனாகவே மாற்றியதல்லவா!
அப்படிப்பட்ட கருணை கண்ணா, எங்கோ கிடந்த என் போன்றோர் மீதும் இன்று கடைக்கண் காட்டுகிறீர்களே! ஆழமான பக்தியற்ற என்னைப் பார்த்தும் உங்கள் கண் கசிகிறதே! ஆனால் அது கண்ணின் மூக்கோரத்தில் வழியும் துன்பக் கண்ணீர் அன்றோ!
பாவிகளைப் பார்க்காத, பாவங்களை மட்டுமே பார்க்கும் திருநயனங்களைக் கொண்டவரே, என்னிடமும் உங்கள் பிரேமையைப் பெருக்குங்கள்.
தேவிக்காகக் கண்ணீர் சிந்திய கண்கள், பிறகு பக்தர்களின் வளர்ச்சிக்காக விழிநீர் வடித்தது, உலக அருளாளர் வரலாற்றில் ஓர் அற்புதக் கண்ணீர்க் காவியம்.
பகவானே, தாங்கள் பக்தர்களுக்காகக் கூவிக் கூவி பவதாரிணி தேவியின் முன்பு அழுத அந்தச் சம்பவம், அகிலத்தில் எந்த தெய்வீகப் புருஷரும் இதுவரை செய்திடாதது!
பெருமானே, உங்களது கண்களில் பக்தர்கள் மீதான கருணை எனும் அஞ்சனம் பூசியுள்ளீர்கள். அதனாலன்றோ, என் குற்றங்குறைகளைத் தாங்கள் காண்பதில்லை.
ஜன்ம ஜன்மமாக என் அகத்தில் சேர்ந்துள்ள அஞ்ஞானம் உங்கள் ஒரு பார்வையால் அகலுமல்லவா! தங்கள் கருணையைப் பெறுவதற்கும், பெற்றதைப் போற்றுவதற்கும் நான் என் கண்களில் விசுவாசம் என்ற அஞ்சனத்தைப் பூசிக் கொள்ள அருளுங்கள்.
சிறுவிலங்குகளின் சல்லாபத்திலும் சிவ-சக்தி சங்கமத்தைச் பார்த்த புனிதரே! மோகத்துடன் நான் பார்க்கும் பொருட்களை எல்லாம், துப்பிய எச்சில் போன்று தாங்கள் காண்பீர்கள்! அடடா, உங்கள் திருவாயிலிருந்து வந்த எச்சிலை உண்ட எறும்புகள்கூட பக்தியும் முக்தியும் பெறும் என்று நம்பினாரே உங்கள் பக்தர் கிரீஷ்பாபு!
அந்த நம்பிக்கையை அடியேனுக்கும் அருளுங்கள்.
பக்தர்களே, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு மாபெரும் சிற்பி. களிமண்ணிலிருந்தும்கூட அவர் கடவுளர்களைப் படைக்கக்கூடிய மகிமை பொருந்தியவர்.
இப்போது ஒரு கணம், பெரிய கருங்கல்லாக உங்களை நீங்கள் எண்ணிக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் வேண்டாததை எல்லாம் வெட்டிவிட்டால், வெளிப்படுமே உங்களுக்குள் விளங்கும் தெய்வத் திருவுருவம்!
அந்த அற்புதத்தை நிகழ்த்த வேண்டி, கதாதரப் பெருமான் முன்பு நீங்கள் கல்லாகக் காத்துக் கிடப்பதாகக் கற்பனை செய்யுங்கள்.
நாம் மெல்ல மெல்ல கடவுளின் திருநாமத்தை ஜபிப்பதுபோல, கடவுளும் மெல்ல மெல்ல நம்மைச் செதுக்குகிறார். பக்தர்களே, மன ஏக்கத்துடன் நீங்கள் புரியும் ஜப ஒலிதான், கடவுளான சிற்பி உங்களைச் செதுக்கும் உளியின் ஒலி.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பூஜையில் ‘திவ்ய விக்ன நிவாரணம்’ என்ற சடங்கு செய்வது போல் தலையிலிருந்து பாதம் வரை கைகளை மெல்ல கொண்டு சென்று ‘ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய’ என்ற மந்திரத்தை 5 முறை உங்கள் பக்தி மலர்ந்திட உற்சாகமாக ஓதுங்கள்.
இந்த ஒரு சடங்கால் ஸ்ரீராமகிருஷ்ண சக்தி, ஸ்ரீராமகிருஷ்ண சிரத்தை, ஸ்ரீராமகிருஷ்ண சிந்தனை, ஸ்ரீராமகிருஷ்ண நம்பிக்கை ஆகியவை உங்களுக்குள் புகுந்துள்ளதாக பாவனை செய்யுங்கள்.
அன்பர்களே, இதனால் உங்களுக்குள் இருக்கும் வீணான எண்ணங்கள், கவலைகள், அல்லல்கள் யாவும் உதிர்ந்துவிடும். உங்களிடம் சேர்ந்துவிட்ட சோம்பல், சோர்வு, தளர்வு, வலி, நோய், பலவீனம் போன்றவையும் உதிர்ந்துவிடும்.
இப்போது கண்களை மெல்ல மூடுங்கள்.
உங்களைப் பற்றி இதுவரை பிறர் சொன்ன விமர்சனங்களை எல்லாம் வீசிவிடுங்கள்.
நீங்களே உங்களைப் பற்றிக் கர்வத்துடன் மிகையாகவோ, தாழ்வு மனப்பான்மையுடன் குறைவாகவோ எண்ணி வந்ததையும் தூர எறிந்து விடுங்கள். இதன்மூலம் உங்களுக்குள் இருந்த மனபாரம் இறங்கி ஓடிவிட்டது.
இப்போது நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற சிற்பியின் முன்பு செதுக்கப்பட்டு வரும் ஒரு கற்சிலை.
அற்பமாகப் போகவிருந்த நம் வாழ்க்கையை அற்புதமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் மகாதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். சிற்பியான அவரது திருக்கரத்தின் புனிதத் தீண்டலுக்காகப் பக்தியுடன் காத்திருங்கள்.
ஆஹா, என்னவோர் அரிய வாய்ப்பு இது. சிலையாக நாம்; தேவச் சிற்பியாக ஸ்ரீராமகிருஷ்ணர்! பக்தர்களே! இந்தப் பூரிப்பிலேயே சில கணங்கள் தியானியுங்கள்.
‘ஸ்ரீராமகிருஷ்ணரது ஆன்மிக வாழ்வு எனும் நிறைகடலிலிருந்து ஒரு துளியைப் பெற்றிருந்தால்கூட, அதனால் அந்தக் கணமே மக்கள் தேவர்கள் ஆகிவிடுவார்கள்’ என்றார் சுவாமி விவேகானந்தர்.
‘பூஜையின்போது நிவேதனம் செய்யப்பட்ட பொருள் மீது குருதேவரது பார்வை பட்டு, அந்தப் பொருள் அவரால் கிரகிக்கப்படும்’ என்று அன்னை ஸ்ரீசாரதாதேவி கூறுவார்.
பக்தர்களே! நீங்களும் பகவானுக்குப் படைக்கப்பட்டவர்கள் அல்லவா! அதை மனதில் கொண்டு, அந்த நிலையிலேயே கதாதரப் பெருமானிடம் இவ்வாறு வேண்டுங்கள்:
“உலகிற்கே கண்ணான கருணைக் கடலே ஸ்ரீராமகிருஷ்ணா, இன்று தங்களது கரம் தீண்டப்பட்டுப் புனிதம் அடைந்துவிட்டேன். கல்லும் மண்ணும் போன்று இருந்த என்னை, நடமாடும் ஒரு தெய்வீகச் சிலையாக நீங்கள் மாற்றிவிட்டீர்கள். இனி நான் இந்த உலகில் பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும், தாங்கள் இன்றும் உலகில் புரிந்து வரும் லீலைகளைக் காணவும், தேவசிற்பியே, அடியேனின் கண்களைத் திறந்து வையுங்கள்”.
“ஐயனே, தாங்களே என் கண்ணைத் திறந்துள்ளீர்கள் என்று நம்பி, இப்போது என் கண்களைத் திறக்கிறேன்”.
பக்தர்களே, இவ்வாறு பிரார்த்தனை செய்தபடி கண்களைத் திறந்து குருதேவரின் நயனங்களை விநயத்துடன் பாருங்கள்.
‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்று உவகை கொள்ளுங்கள்.
இனி, நீங்கள் கதாதரப் பெருமானின் கண்காணிப்பில் இருக்கிறீர்கள்; அவரது கருணை கடாட்சத்தில் விளங்குகிறீர்கள். இனி எல்லாமே உங்களுக்கு மங்கலமாகவும் நிறைவாகவும் நடக்கட்டும்.
‘பத்ரம் பச்யேமாக்ஷபிர்: யஜத்ரா:’ - ‘என் கண்கள் மங்களமானவற்றையே காணட்டும்’ என்று உபநிஷதம் இறைவனிடம் பிரார்த்திக்கப் பணிக்கும். கண்ணை மூடி இந்தப் பிரார்த்தனையில் மூழ்குங்கள்; உங்கள் அகக்கண் திறக்கட்டும் ஆண்டவன் அருளால்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
சுவாமி விமூர்த்தானந்தர்
19 மார்ச், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்