

வாழ்க்கையின் சாரத்தை எங்களுக்குத் தரும் சாரதாம்மா! உங்களை ஆழ்ந்து தியானிக்க வேண்டும் என்பது எனது பல நாள் ஆசை. இன்று அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
யோகிகள் தங்களைத் தியானிக்கிறார்கள். அன்றைய முனிவர்களும் இன்றைய துறவிகளும் உங்களது கடைக்கண் பார்வைக்காகக் கடுந்தவம் புரிகிறார்கள். ஆனால் வேலைப் பளுவும் பல விதமான இன்னல்களும், தாபமும் தளர்ச்சியும், மோகமும் முதிர்வில்லாத அறிவும் கொண்டுள்ள நான் தங்களைத் தியானிக்க ஆசைப்படுகிறேன்.
அகிலம் ஈன்ற தூய அன்னையே, உங்களையே நம்பியுள்ள நான் உங்கள் குழந்தை அல்லவா! இந்தப் பிள்ளைப்பூச்சியையும் தங்கள் திருமடியில் ஏந்திக்கொள்ளுங்கள்.
தாயே, உங்களது திருமுகத்தைக் காண்கின்றேன். மதுரமான குரலில் என்னை அந்தத் திருமுகம் ‘வா, குழந்தாய் வா’ என்று அழைப்பதைக் கேட்கிறேன். தெய்விக மலரான தங்களது கருணையைப் பற்றிச் சிந்திக்கும்போது, தங்கள் அன்பைச் சுவைக்கும்போது நானும் ஒரு வேலைக்காரத் தேனீ என்பதை உணர்கிறேன். நீங்கள் ராணித் தேனீயாக இருந்து உங்கள் தலைமையின் கீழ் வேலைக்காரத் தேனீயாக இருப்பது ஸ்ரீராமகிருஷ்ணர் அடியேனுக்கு அருளிய சொர்க்க நிலை அல்லவா!
உண்பதும் உறங்குவதும் உணர்வின்றித் திரிவதும் என்ற இந்த உலகியல் வாழ்வு எனக்குப் போதும். ‘போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம்’ என்று மகாகவி பாரதியார் பாடியது மெல்ல மெல்ல எனக்குப் புரிகிறது.
நான் இதுவரை உலகக் கடமை என்று எங்கெங்கோ சுற்றிச் சோர்ந்துவிட்டேன் தாயே. என்னை என்றும் உங்கள் பக்கத்தில் அல்ல, உங்கள் அகத்திலேயே வைத்திருங்கள்.
குழப்பங்கள் எனக்கு வரும்போது, ‘என்னை நீ ஏன் படைத்தாய் அம்மா?’ என்று புலம்புகிறேன்.
தங்கள் திருக்கடாக்ஷம் என் மீது பட்டாலோ, ‘நீங்கள் என்னை ஏன் படைத்துள்ளீர்கள்? அதன் உயர்ந்த நோக்கம் என்ன? நான் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்?’ போன்ற உயர்ந்த உண்மைகள் எனக்கு விளங்குகின்றன.
சாரதாம்மா, ‘ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தில் நான் வந்தவுடன் என் அகத்தில் ஓர் அமுதகலசம் வைக்கப்பட்டது’ என்று நீங்கள் கூறினீர்கள். அம்மா, அந்த அமுதகலசத்திலிருந்து ஒரு துளியாவது எனக்கும் தந்தருளுங்கள்.
தாயே, பொருட்பற்று சார்ந்த வாழ்க்கை எனக்குப் போதுமம்மா. உங்கள் அருள் நிறைந்த வாழ்க்கையை எனக்கும் அருளுங்கள். உங்கள் திருக்கண்கள் காட்டும் வழிகாட்டுதலுக்காக நான் கண் விழித்துக் காத்திருக்க அருள மாட்டீர்களா? உங்கள் வழிகாட்டுதலின்படி எனது வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் செல்ல எனக்கு அருளக் கூடாதா தாயே?
ஓய்வின்றி உயர்ந்த லட்சியத்துடன் வேலை செய்வதும், தொய்வின்றித் தெய்வத்தின் இணக்கத்துடன் வாழ்வதும்தான் உங்கள் வாழ்க்கையின் சாரம் என்று நீங்கள் உபதேசிக்கும் இந்த உத்தம நிலையை எனக்கும் வழங்குங்கள்.
ஸ்ரீசாரதைத் தாயே! சந்திரனைக் கண்டும் அதிலும் களங்கம் காணாதவர் நீங்கள். உங்களைச் சுற்றிலும் பணப் பைத்தியங்களும் குழப்பவாதிகளும் உங்கள் குடும்ப அங்கத்தினர்களாக இருந்தபோதும் அவர்களிடத்திலும் குற்றம் காணாதவர் நீங்கள். ஆனால் நானோ ஒவ்வொருவரிடத்திலும் ஓராயிரம் குற்றங்களைக் காண்கிறேன். பிறர் குற்றம் பற்றிப் பேசவும் செய்கிறேன். அந்த நிலை மாற்றிக் குற்றம் காணாத குணத்தை எனக்கும் அருளுங்கள்.
ஸ்ரீசாரதைத் தாயே, இளம்வயதில் நீங்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஸ்நானத்திற்குச் செல்லும்போது அஷ்டதேவியர்கள் உங்களுக்கு முன்னும் பின்னும் சென்றார்களே.... இனி ஒரு முறை அவ்வாறு நீங்கள் செல்வதற்கு முன் அந்த வீதியைச் சுத்தம் செய்யும் கைங்கரியத்தை எனக்கு அருள்வீர்களா?
எங்கு எப்படியோ அங்கு அப்படி! யாருக்கு எப்படியோ அவருக்கு அப்படி! எப்போது எப்படியோ, அப்போது அப்படி! என்று குருதேவர் உங்களுக்குச் செயல்முறை ஞானம் வழங்கினார். அந்தச் செயல்முறை, அத்திறமை எனக்கில்லை. ஆகவே என்னை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டு என்னை வழிநடத்தவும்.
அதனால் நான் விரைவில் நல்ல மனிதப் பிறவி என்ற ஆசியை உங்களிடமிருந்து பெறுவேன்.
யாருக்கு எது தேவையோ, அதைத் தரும் பக்குவத்தை, தைரியத்தை, அறிவாற்றலை எனக்குத் தந்தருளுங்கள்.
என்னைச் சுற்றியுள்ளவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக நடந்துகொண்டாலும் நான் பொறுப்புள்ளவராகத் திகழ்ந்து என் கடமையைச் சீராகவும் சிறப்பாகவும் செய்திட எனக்கு வலிமையைத் தாருங்கள்.
ஸ்ரீசாரதைத் தாயே! காட்டின் நடுவே கொள்ளைக்காரன் உங்களைக் கண்டான். உங்களுடன் வந்திருந்தவர்கள் உங்களைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்போது நீங்கள் அந்தக் கொள்ளைக்காரனிடம் உங்களது மதுரமான குரலில் அவனது மகளாக, ‘அப்பா, நீங்கள் வந்துவிட்டதால் எனக்குப் பயம் எல்லாம் போய்விட்டது’ என்று கூறினீர்கள். உங்களது அன்பை உணர்ந்த கொடூரமான அந்தக் கொள்ளைக்காரன் எப்படி உங்களுக்கு அப்பாவானார்.... ஆச்சரியம் தூய அன்னையே.
ஸ்ரீசாரதைத் தாயே! என்னைச் சுற்றிலும் பல கொள்ளையர்கள் உண்டு. என் பக்தி, என் புத்தி, என் கவனம், என் நேரம், என் திறமை போன்றவற்றைப் பறித்துச் செல்லும் கொள்ளையர்கள் பலரும் இருக்கிறார்கள். பல சங்கடங்களும் சோதனைகளும் இன்னல்களும் துன்பங்களும் வருகின்றன.
நீங்கள் கொள்ளையனை அன்புக் கள்வன் ஆக்கியதுபோல், என் பிரச்சினைகளைச் சவால்களாகப் பார்க்கும் சாமர்த்தியத்தை எனக்கும் தந்தருளுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் மகிமையை முற்றிலும் உணர்ந்த சாரதாம்மா, எனது வாழ்க்கைப் படகு ஏதோ தன் போக்கில் திசை மாறிப் போய்க்கொண்டிருக்க, என் மனம் எனும் பாய்மரத்தை விரித்துக்கொண்டேன். தங்கள் அருள் எனும் அன்புக்காற்று புத்துணர்வாக எனக்குள் புகுந்துள்ளது.
இனி ஸ்ரீராமகிருஷ்ண அருளில் தோய்ந்த அந்தப் புதுப்பிறவியை வாழ்வதற்கு உங்களது ஆசீர்வாதத்தை என்றும் நாடுகிறேன்.
ஆகவே, நாங்கள் இனி வாழும் ஒவ்வொரு கணமும் இகத்திலும் பரத்திலும் எங்களுக்கு வழிகாட்டுங்கள். எங்களது வழியில் உள்ள தடைகளை நீக்குங்கள் என்று உங்களையே சரணடைகின்றோம்.
ஓம் ஐம் ஹ்ரீம் சர்வதேவ தேவீ ஸ்வரூபிண்யை ஸ்ரீசாரதா தேவ்யை நம:
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
டிசம்பர், 2025
