எம்பெருமானே, நீங்கள் உலக நன்மைக்காகவே வந்தீர்கள். சில நாட்கள் ஆனந்தக் கடலில் மக்களை ஆழ்த்தினீர்கள். திடீரென மறைந்து விட்டீர்கள். அதனுடன் எல்லாம் முடிந்துவிட வேண்டியதுதானா....?
அன்னை ஸ்ரீசாரதாதேவியின் இந்தப் பிரார்த்தனையின் பலனாக, ஸ்ரீராமகிருஷ்ணர் தொடர்ந்து நமக்கு அருளி வருவதை நாம் அனுபவிக்கிறோம்.
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சசி மகராஜுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் அருளியதெல்லாம் அதிசயமானது. சிவபெருமான் நாயன்மார்களுக்கு அருளிய விதம், ஸ்ரீமந் நாராயணன் ஆழ்வார்களுக்கு அனுக்கிரஹித்த விதம் போன்றவை அவை.
ஒரு முறை குருதேவரின் ஜயந்தியன்று 5000 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று சசி மகராஜ் இறைவனிடம் வேண்டினார். ஆனால் முதல் நாள் சமையலுக்கான ஒரு பொருள்கூட இல்லை. ஆனால் திடீரென்று ஒரு பக்தர் அன்னதானத்திற்கான அனைத்துப் பொருட்களையும் கொண்டு வந்த நிகழ்ச்சி..... ஸ்ரீராமகிருஷ்ணர் நிகழ்த்திய இவை போன்ற பல அற்புதங்கள் பக்தர்கள் அறிந்ததே.
ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளிச்செயல்கள் அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல, இன்றும் அவை அமைதியாகத் தொடர்கின்றன.
முப்பத்து முக்கோடி தேவர்கள் அருளினர்.
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாகப் பல்வேறு சமுதாய மற்றும் சமயப் பணிகளையும், பேரிடர் காலச் சேவைகளையும் செய்து வருகிறது. வளர்ச்சியில் தொய்வு என்பதும் ஒரு தேவைதானோ!
மடத்தில் 2012-13 -ஆம் வருடங்களில் சில கட்டடப் பணிகளும் விரிவாக்கப் பணிகளும் நடந்தன. சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டது..... போதிய நிதி திரட்டப்படாமல்!
இன்னும் சில காரணங்களால் மடத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர மடத்துத் துறவிகள் சிலர் நிதி ஆதாரங்களைப் பலப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். மடத்தின் தலைவர் தவத்திரு சுவாமி கௌதமானந்த மகராஜ் அனுதினமும் குருதேவரை வேண்டி வந்தார்.
கருணைக்கடலான குருதேவரின் அருள் வரவே செய்தது, அதுவும் கல்பதரு தினத்தில்!
அது 2016 -ஆம் ஆண்டு. கீழ்ப்பாக்கத்தில் இருந்த திருமதி ராஜம் ஸ்ரீனிவாசன் அவர்கள் தனது சொத்துக்களை மடத்திற்கு எழுதி வைத்தார். அவர் எழுதிய கையெழுத்துப் பிரதியை அவரது உறவினர் ஒருவர் கல்பதரு தினத்தன்று கொண்டு வந்து தலைவர் சுவாமிகளிடம் வழங்கினார்.
அந்தச் சொத்தினை மடத்தின் பணிக்காகவும் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அந்தச் சொத்திற்கு உரிமை கோருபவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதற்காக நோட்டீஸ் விடப்பட்டது. அந்தச் சொத்தில் தங்களுக்கும் பங்குண்டு என்று கூறி யாரும் வராதது ஆச்சரியமே!
மடத்தின் பணப்பரிவர்த்தனை வெள்ளையாகவும் நேரடியாகவும் இருப்பதால் பலரும் அந்தச் சொத்தை வாங்க வரவில்லை.
முடிவில், ஒரு நிறுவனம் அந்தச் சொத்தினை வாங்கியது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சென்னை மடத்தை ஆசிர்வதித்தது போலிருந்தது அந்த நிகழ்வு.
இந்தப் பரிவர்த்தனையில் ஓரிடத்திலும் எந்த ஒரு தடங்கலும் இல்லை. இந்த அருளிச் செயலை அவதானித்த மடத்தின் முன்னாள் மேலாளரான சுவாமி அபிராமானந்தர் இவ்வாறு குறிப்பிட்டார்:
ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்தப் பேரருளுக்கு மூன்று காரணங்கள் உள்ளன. 1. ஸ்ரீராமகிருஷ்ணரின் பரம கருணை, 2. தவத்திரு சுவாமி கௌதமானந்த மகராஜின் பிரார்த்தனை, 3. அன்றைய மேலாளரின் கடும் உழைப்பு.
கோவிலின்புனரமைப்பு
மடத்தின் பழைய கோவில் 115 வருடத்துப் பாரம்பரியம் மிக்கது. பல துறவிகளுக்கு குருதேவர் காட்சி தந்ததும், எத்தனையோ பக்தர்களுக்கு குருமார்கள் தீக்ஷை வழங்கியதும் இங்குதான்.
2015 -இல், நூறு வருடத்து மரத்தாலான பீம்கள் பலவீனமாகிவிட்டிருந்தன. மொத்த பீம்களையும் எடுத்துச் சீரமைக்க பல லட்சங்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. ஏற்கனவே மடத்தின் நிதி ஆதாரம் சிரமத்தில் இருந்ததால், இந்தப் பெரிய நிதியை எவ்வாறு திரட்டுவது என்பதை யோசித்து மேலாளர் திணறினார்.
நிதிக்காக வேண்டுகோள் விடுத்து அப்பீல் தயாரானது. அதன் ப்ரூப் மேலாளரின் மேஜைக்கு வந்தது. அப்போது மடத்திற்கு நன்கொடை வழங்க இருவர் வந்தனர். அவர்களை மேலாளர் வரவேற்றார். அதற்குள் அவருக்கு ஓர் அலைபேசி வரவே நன்கொடை ப்ரூப்பை மேலாளர் வந்தவரிடம் படித்துப் பார்க்குமாறு கூறினார்.
மேலாளர் அலைபேசியில் பேசி முடித்ததும், வந்த அன்பர் அமைதியாக, சுவாமிஜி, கோவில் புனரமைப்பிற்கான மொத்த நிதியையும் நானே வழங்குகிறேன் என்று கூறி வயிற்றில் பாலை வார்த்தார். மேலாளரின் நெஞ்சு விம்மியது. ஸ்ரீராமகிருஷ்ணா சரணம்.... சரணம்!
அடுத்த நான்கு மாதங்களில் பழைய கோவில் புனரமைக்கப்பட்டது.
சென்னை மடத்தின் மேலாளராக (2014 -2020) ஆறு ஆண்டுகள் சேவை செய்யும் வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது. அதற்கு முன்பு ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியராக 15 ஆண்டு காலம் (2001-2015) சேவையாற்றும் பாக்கியத்தையும் பகவான் வழங்கினார்.
பத்திரிகைத் துறை முன் அனுபவமும், அதற்கான படிப்பும் இல்லாத அடியேனைக் கொண்டு ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தை சுமார் 2 லட்சம் பிரதிகள் சர்குலேஷனுக்கு உயர்த்திக் காண்பித்தார்.
2001 -ஆம் ஆண்டு. மகான் போதேந்திராளின் படக்கதை ஒன்றைத் தயார் செய்து ஓவியருக்கு அனுப்பினேன். போதேந்திராளின் திருவுருவப் படத்தை ஓவியருக்கு அனுப்ப வேண்டும்.
இணையதள வசதி இல்லாத காலத்தில் போதேந்திராளின் படம் கிடைக்கவில்லை. பிறகு என்ன?
பிரயத்தனம் பிரார்த்தனையானது. ஒரு நாள் கோவிந்தபுரத்து மடத்திலிருந்து ஒரு கவர் வந்தது. அதில் விபூதி, குங்கும பிரசாதங்கள், மங்கள அட்சதை, போதேந்திராளின் இரண்டு திருவுருவப்படங்கள் இருந்தன.
அனுப்பியது யாராக இருக்கும்? குருதேவா, குருதேவா என்று மனம் கொண்டாடியது.
லட்சத்தைக்கடந்தலட்சியப்பத்திரிகை
2007 -ஆம் ஆண்டு விஜயத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல். ஆம், தமிழகத்தில் ஓர் ஆன்மிகப் பத்திரிகை லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகிறது என்பதே வியப்பல்லவா! ஆகஸ்ட், 22 -ஆம் தேதி அந்த வெற்றியைப் பதிவு செய்ய விழா ஒன்று எடுக்கப்பட்டது. லட்சத்தைக் கடந்த லட்சியப் பத்திரிகை என்ற சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
அதற்கு முந்தைய மாதம் வரை 96 ஆயிரம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகி வந்தன. ஆகஸ்ட் மாதம் பல ஏஜென்ட்டுகள் அவர்கள் வாங்கும் விஜயம் பிரதிகளை அதிகரிப்பதாகக் கூறியிருந்தனர். அதை நம்பி விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் அவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.
சர்குலேஷனை உயர்த்தப் போராடிக் கொண்டே பத்திரிகை விழாவை நடத்துவதற்கும் பகீரதப் பிரயத்தனம் பட வேண்டி இருந்தது.
சிறப்பு மலருக்கான கட்டுரைகளைச் சேகரிப்பது, விளம்பரங்கள் வாங்குவது, மலருக்கான கூடுதல் செலவினங்கள், பத்தாயிரம் பேர் கலந்து கொள்ளும் அரங்க ஏற்பாடு போன்ற பல பணிகளுக்கு நடுவே திக்குமுக்காடிக் கொண்டிருந்த நேரம்.
விஜயம் லட்சம் பிரதிகளைக் கடக்காதபோது கடந்துவிட்டது என்று கூறிப் போலியான விழாவாகப் போய்விடுமோ என்ற அச்சம் என்னைக் கவ்வியிருந்தது. இறைவா, இந்த விழா உன் மகிமையைக் கூறத்தான் என்று இதயம் ஏங்கி ஏங்கித் துடித்தது.
ஒரு நாள் சர்குலேஷன் அலுவலக ஊழியர், முன்பின் தெரியாத பலர் நிறைய பிரதிகளை வாங்குவதாகப் பணம் செலுத்தியதைக் கூறினார்.... அது ஸ்ரீராமகிருஷ்ண அருளிச் செயல்தானே!
ஒரு லட்சத்து 400 பிரதிகளாக அந்த மலர் வெளியானது வெற்றி விழா அல்ல, ஸ்ரீராமகிருஷ்ணரின் மகிமை வெளிப்பட்ட விழா அது.
அப்போதும் ஓர் அதிர்ச்சி. விழா சென்னையில் லேடி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு இரண்டு நாள் முதல் கடும் மழை.
அருமை நண்பர் திரு தென்கச்சி சுவாமிநாதன் தொலைபேசியில் என்னை அழைத்தார். சாமி, இந்த மழையில் நாளை நிகழ்ச்சி இருக்குமா? என்று கேட்டார். அதற்கு நான் அமைதியாக, நாளை மழை வராது என்ற நம்பிக்கை; மழை வர வேண்டாம் என்பது பிரார்த்தனை என்றேன்.
ஆகஸ்ட் 22. காலை 4.30 மணிக்கு ஓர் இளம் துறவி என்னிடம், இந்த மழையில் என்ன செய்யப் போகிறோம், மகராஜ்? என்றார். நாம் நமது பணியைச் செய்வோம்; குருதேவர் அவரது பணியைச் செய்வார் என்றேன் பிரார்த்தனையுடன்.
அன்று காலையில் உள்ளும் புறமும் ஒரே மேகமூட்டம். எல்லாக் கவலைகளையும் குருதேவரிடம் விட்டுவிட்டு குருதேவருக்குக் கோவிலில் நித்திய பூஜை செய்யச் சென்றேன்.
பிற்பகல் 2.30 வரை மழை தொடர்ந்தது. மூன்று மணிக்கு மெல்ல மெல்ல வானம் பளிச் சிட்டது. ஆஹா, ஐந்து மணிக்கு மேடையில் குருதேவருக்கு ஆரதி நடத்தப்பட்டதும் விழா மேடையில் வெயில் அடித்தது ஒரு பரவச அனுபவம்.
தமிழகத்தின் பத்திரிகைத் துறையில் பலராலும் பாராட்டப் பெற்ற ஒரு நிகழ்வு அது. அன்றைய முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கி இருந்தார். விஜயத்திற்குக் கிடைத்த செல்வாக்கினால் பலரும் ஆன்மிகப் பத்திரிகைகளை ஆரம்பித்தார்கள். குறிப்பாக, குமுதம் பத்திரிகை பக்தி ஸ்பெஷலையும், விகடன் பத்திரிகை சக்தி விகடனையும் கொண்டு வந்தன.
பிறகு விழா பற்றிய வரவு - செலவுக் கணக்கு சரி பார்க்கப்பட்டது. இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு அதிகமாகி இருந்தது.
அன்று ஒரு நாள் ஈரோட்டிலிருந்து ஓர் அன்பர் ஒரு மஞ்சள் பையுடன் விஜயம் அலுவலகத்திற்கு வந்தார். விழா பற்றியும், வரவு செலவு பற்றியும்கூட அவரிடம் கூறிக் கொண்டிருந்தோம்.
உடனே அவர் கண்கள் பனிக்க மகிழ்ச்சியாகக் கூவினார்: இப்போதான் புரியுது மகராஜ். இதனாலதான் ஸ்ரீராமகிருஷ்ணர் எனக்கு இன்செண்டிவாக இவ்வளவு அதிக பணத்தைக் கொடுத்திருக்கிறார்..... அது அவரது சேவைக்கே பயன்படட்டும் என்று கூறிப் பணக்கட்டுகளை மேஜையின் மீது வைத்தார்.
அந்தத் தொகையினை எண்ணிப் பார்த்தபோதுதான் அருளிச்செயலின் ஓர் உச்சம் தெரிந்தது. ஆம், 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அந்தப் பக்தர் மூலமாக வழங்கியது வேறு யாராக இருக்க முடியும்!
நமது பக்தியை அதிகப்படுத்திக் கொண்டால் குருதேவரது அருளை அதிகமாக உணரலாம்.
மேற்கூறிய நிகழ்வுகள் யாவும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளிச் செயல்களாக இங்கு பதிவு செய்யப்படுகின்றன, அதிசயச் செயல்களாக அல்ல!
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
மார்ச், 2023