எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! - இதனை இப்படியும் புரிந்து கொள்ளலாமே?
சிவ பக்தர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஒரு வாசகம் இது: தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
மாணிக்கவாசகர் அருளிய இந்த மந்திர வாக்கியம் சைவ நெறியைக் காலம் காலமாகத் தழைத்தோங்கச் செய்து வருகிறது.
அருளாளர் அருளிய வாக்கியங்களைப் பற்றி சிந்திக்கச் சிந்திக்க அதன் வீச்சு, அதன் உயர் பொருள் ஆழமாக விளங்கும்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்றால் தென்பூமியான தமிழகத்தின் சிவனே, நீ வாழி என்று ஒரு பொருள்.
உயர்ந்த திசை தென் திசை என்று வில்லிபுத்தூர் ஆழ்வார் சித்திக்கொரு விதையாகிய தென்னாடு என்று கொண்டாடுகிறார். சித்தி என்றால் ஞானம், பக்தி என்று பொருள்.
அடுத்து, எந்நாட்டவர்க்கும் இறைவா என்றால் உலகிலுள்ள எல்லா நாட்டினருக்கும் ஓர் இறைவன் உண்டென்றால் அவர் நம் சிவபெருமான்தான்.
இரண்டாவது வாக்கியம் பற்றிச் சிறிது அவதானிக்கலாம். உலகமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வம் எங்கள் தென்னாடான தமிழகத்து தெய்வம் என்று முதல் பொருளாகக் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் சைவம் உலகமெல்லாம் செழித்து வளர்ந்திருந்தது. சோழர்கள் வென்ற நாடுகளில் சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது ஜெனீவா நகரில் உள்ள CERN என்ற அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் பிரதானமான இடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் நடராஜ தத்துவம் விஞ்ஞான ரீதியாக அங்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
மேற்கூறிய இரண்டு வாக்கியங்களும் நிலத்தை மட்டுமே பிரதானமாகக் கூறுகின்றன.
அதனால் எந்நாட்டவர்க்கும் என்பதை பக்தியோடு உரைத்த பிறகு ஆழமாகச் சிந்திப்பது அவசியமாகிறது.
கீதா என்ற பதத்தைப் பலமுறை உச்சரித்தால் தாகீ தாகீ என்று வரும். கீதையின் சாரமாக, இறைவனுக்காக ஏனைய எல்லாவற்றையும் தியாகம் செய் என்று பக்தனுக்குக் கூறப்படுகிறது என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அதுபோல், எந்நாட்டவர்க்கும் என்பதைப் பலமுறை கவனத்துடன் உச்சரித்தால் எந்நாட்டவர்க்கும் அதாவது எந்த நாட்டத்தையும் உடையவருக்கும் என்ற பொருள் மிளிர்கிறது. எந்நாட்டவர் - எந்நாட்டத்தவர், எப்படிப்பட்ட நாட்டமும் உடையவர் என்று பொருள் விரிகிறது.
சிவபெருமானை அணுகியவர்களது நாட்டம் எத்தன்மை வாய்ந்திருந்தாலும் இறைவன் அவர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்கிறார்.
இறைவன் காட்டில் தன்னந்தனியே தவிக்கிறார் என்று பாசத்தில் நாட்டம் வைத்துப் பரிதவித்தவர் கண்ணப்ப நாயனார்.
பாலுக்காக நாட்டம் கொண்டவர் திருஞானசம்பந்தர்.
போகத்தில் சிறிது நாட்டம் இருந்த சுந்தரப் பெருமானை சிவபோகத்தில் ஆழ்த்தினார் எம்பெருமான். அடியார்களின் சேவையில் நாட்டம் கொண்டவர் திருக்குறிப்புத் தொண்டர்.
இவ்வாறு நாட்டங்கள் - விருப்பங்கள் - தேவைகள் எப்படி இருந்தாலும் அவர்களது அந்தராத்மா நாடியதை ஆண்டவன் அவர்களுக்கு அருளினார். உலகியல் நாட்டம் மட்டுமல்ல, வேறு எந்த தெய்வ நாட்டம் இருந்தாலும் அங்கு தோன்றுவது சிவபெருமானே என்கிறது சிவஞான சித்தியார்.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் ......
சர்வதேவ நமஸ்காரம் கேசவம் ப்ரதி கச்சதி...-எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அந்த நமஸ்காரம் கேசவனைத்தான் சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.
பாலூட்டுவதற்குத் தாய் தவிப்புடன் இருக்கும்போது குழந்தை மிட்டாய்க்காக - தனி நாட்டத்துடன் - அழுவதுபோல் இருப்பது இந்த நிலை.
உறங்காவில்லிதாசர் என்ற மல்லர் தன் காதலியின் கண்களில் சொக்கிக் கிடந்தார். ஸ்ரீராமானுஜர் அவரிடம் பெருமாளின் திரு நயனங்களின் காருண்யத்தைக் காட்டினார். உடனே தாசரை, தேகக் காதலிலிருந்து தெய்வக் காதலுக்கு ஏங்க வைத்தது ஸ்ரீராமானுஜரின் ஆச்சாரிய மகிமை.
அடியார்கள் எந்த நாட்டத்தைக் கொண்டிருந்தாலும் முடிவில், அந்த நாட்டத்தின் மூலமாக அவர்களைத் தம்மையே நாடும்படி திருத்திப் பணி கொள்கிறார் இறைவன். இது ஸ்ரீராமகிருஷ்ண அவதாரத்தில் தெளிவாகத் தெரிகிறது.
இனி பள்ளி செல்ல வேண்டாம். பரீட்சையின்றி நிம்மதியாக இருக்கலாம் என்ற நிம்மதி நாட்டத்துடன் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வந்தவர் சுவாமி பிரேமானந்தர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் தெய்விக போதையில் இருப்பதைப் பார்த்தார் காளிபதகோஷ் என்ற குடிகார பக்தர். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்றால் அதிக போதை தரும் மது கிடைக்கும் என்ற மது நாட்டத்தில் வந்தவர் அவர். அவருக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் தெய்விகப் போதையைத் தமது போதனைகளின் மூலம் காட்டியருளினார்.
இவ்வாறு பக்தர்களும் துறவிகளும் தாங்கள் எந்த நாட்டம் கொண்டிருந்தாலும் அதனை இறைவனோடு தொடர்புபடுத்திக் கொண்டார்கள். அதனால் இறைவன் அவர்களது நாட்டத்தையும் நிறைவேற்றினார். அதோடு அவர்களது அந்தக் குறுகிய நாட்டத்தின் முழு பரிமாணத்தையும் காட்டி தம்மோடு இணைத்துக் கொண்டார்.
ஆதலால் இனி பக்தர்கள் எந்நாட்டவர்க்கும் இறைவா என்று கூவி அழைக்கும்போது எந்த நாட்டம் உடையவர்க்கும் இறைவா, நீதான் எங்களது மலினமான நாட்டத்தை மடைமாற்றம் செய்து திருத்திப் பணிக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
மே, 2023