சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125 -ஆம் ஆண்டு நிறைவு விழாவில் 26.03.2023 அன்று சுவாமி விமூர்த்தானந்தர் ஆற்றிய உரையிலிருந்து....
தமிழகத்திற்கும் சுவாமிஜிக்கும் உள்ள தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டினால் விவேகானந்தருக்குப் பெருமை பெருகியதா? விவேகானந்தர் விஜயம் செய்ததால் தமிழ்நாட்டிற்கு மகிமை கூடியதா? இது ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒரு விஷயம்.
வங்காளத்தில் அவர் பிறந்திருந்தாலும் தமிழகம்தான் அவரைக் கண்டுபிடித்தது. அதனால்தான் விவேகானந்தரைப் பெற்றெடுத்தது வங்காளம்; அவரைத் தத்தெடுத்தது தமிழகம்! என்று பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஒருமுறை கூறினார்.
எந்தப் பிறவிப் பணியோடு சுவாமிஜி உலகிற்கு வந்தாரோ, அதற்கான களம் அவருக்குக் கிடைத்தது தமிழகத்தில்தான். அவருக்குத் தேவியின் தரிசனம் கிடைத்ததும் இங்குதான்.
எல்லோரும் சொந்த முக்திக்காக, நிம்மதிக்காக தியானம் செய்வார்கள். ஆனால் தமது நாட்டின் முன்னேற்றத்திற்காக கடலில் கன்னியாகுமரிப் பாறை மீது தியானம் செய்த ஒரே துறவி சுவாமி விவேகானந்தர்தான்.
அமெரிக்கா முன்னேறினால் அமெரிக்காதான் பயனடையும். பாகிஸ்தான், ஒருவேளை முன்னேறினால், பாகிஸ்தான் மட்டுமே பயன் பெறலாம். ஆனால் பாரதம் முன்னேறினால் பாரெங்கும் முன்னேற்றம் இருக்கும். இந்த மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்து சுவாமி விவேகானந்தர் உரைத்தது தமிழ்நாட்டில்தான்.
அமெரிக்கா செல்வதற்கு முன்பு தமிழகத்தில் சுவாமிஜி இருந்தபோது இங்கிருந்த பின்னணி என்ன தெரியுமா?
1892-ல் இந்து நாளிதழில் சிகாகோவில் சர்வ சமயப் பேரவை நடக்க உள்ளது என்ற அறிவிப்பும் தலையங்கமும் வெளிவந்தன. அதில் இந்து மதம் இன்றைய சமுதாயத்தின் நடைமுறைப் பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாக இல்லை. இந்து மதத்திற்கு எதிர்காலம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்து சமயத்தைப் புனரமைப்பது சாத்தியமே இல்லை. இந்து மதம் உயிரில்லாமல் நிற்கிறது, அதன் காலம் முடிவடைந்துவிட்டது.
உலகிற்கு வழங்க எங்களிடம் எதுவுமே இல்லை என்று அங்கு போய்ச் சொல்ல வேண்டும். அதற்கு வேண்டுமானால் ஒருவரை அனுப்புங்கள் என்று பத்திரிகைகளில் கிண்டலடித்தார்கள்.
இம்மாதிரியான வாத, பிரதிவாதங்கள் நடந்தபோது யாரையாவது சர்வ சமயப் பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆவல் சில சென்னை இளைஞர்களுக்குத் தோன்றியது. அவர்கள் நம் சமயத்திலிருந்து சிகாகோவிற்குச் செல்ல யாருமே இல்லையா? என்று எண்ணி வருந்தினார்கள்.
அந்தச் சமயத்தில் சுவாமி விவேகானந்தர் சென்னையில் இருந்தார். அளசிங்கப் பெருமாளும் அவரைச் சேர்ந்த இளைஞர்களும் சுவாமி விவேகானந்தரே சர்வ சமயப் பேரவையில் கலந்துகொள்ள தகுதியானவர் என்று தீர்மானித்தனர். சுவாமிஜியிடம் அவ்வாறே கேட்டுக் கொண்டனர்.
ஆனால் சுவாமி விவேகானந்தர் உடனே கிளம்பி விடவில்லை. தூய அன்னை ஸ்ரீசாரதாதேவியின் ஆசியையும் அனுமதியையும் வேண்டிக் கடிதம் எழுதினார். அதோடு, மேற்கத்திய நாடு செல்லும் திட்டத்தில் இறைவனின் கட்டளை என்னவென்று உணர்ந்து கொள்ள கன்னியாகுமரி சென்றார். 1892-ஆம் ஆண்டு டிசம்பர் 24, 25, 26 ஆகிய நாட்களில் பாறையின் மீது அமர்ந்து தவம் செய்தார்.
சுவாமிஜி கன்னியாகுமரியில் பெற்ற ஆன்மிக அனுபவம் ஆழமானது. அதனை அவரே பதிவு செய்துள்ளார்: அகத்திலும் புறத்திலும் எதைத் தேடி அலைந்தேனோ, அது இந்த இடத்தில் எனக்குக் கிடைத்தது..... மேலை நாட்டிற்குச் சென்றாக வேண்டும். இப்போது நான் தயாராகிவிட்டேன். இதயபூர்வமாக வேலை செய்வோம். பலனை தேவி தருவாள். அவள் என்னிடம் பேசினாள்.
சுவாமி விவேகானந்தர் வரலாற்றை எழுதிய சிறந்த அறிஞரும் பக்தருமான திரு. ரா.கணபதி இவ்வாறு கூறுகிறார்: மேலைநாடுகளுக்கு சுவாமிஜி தனியாகவா சென்றார்? அவருடன் ஆழ்வார்கள், நாயன்மார்கள், மீராபாய், ஆண்டாள் போன்றோரும் சென்றனர். மேலும் சைவம், வைணவம், சாக்தம் என்று என்னென்ன பிரிவுகள் இந்து தர்மத்தில் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் சுவாமிஜிக்குப் பக்க பலமாகச் சென்றன. இந்தியப் பாரம்பரியம் அவருடனேயே சென்றது. பலப் பல துறவிகள், மகான்கள், அருளாளர்கள் என்று யாரெல்லாம் பாரத பூமி நன்றாக விளங்க வேண்டும் என்று சிந்தித்தார்களோ, உழைத்தார்களோ, நினைத்தார்களோ, தியானித்தார்களோ, பிரார்த்தித்தார்களோ அவர்களுடைய ஆன்மிகச் சக்தியும் திரண்டு சுவாமி விவேகானந்தருடன் சென்றது.
சர்வ சமயப் பேரவையில் 23-வது நபராக சுவாமி விவேகானந்தர் பேசினார். காலையிலிருந்து அமர்ந்திருந்த அக்கூட்டமானது களைத்திருந்தது. சுவாமி விவேகானந்தர் பேசிய நேரம் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் Sisters and Brothers of America என்ற வாக்கியத்தை சுவாமிஜி தமது ஆன்ம பலத்தால் உரைத்தபோது 4000 பேரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
அது நம் பாரதத் தாய்க்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. ஒற்றை வரியால் பாரதத்தின் ஆன்மிகம் உலகையே வென்ற வரலாற்றுப் பதிவு அது.
1897, ஜனவரி 23-இல் சுவாமிஜி தாயகத்திற்கு வரும் முன்பு இலங்கை வழியே வந்தார். யாழ்ப்பாணத்தில் வேதாந்தம் பற்றிப் பேசினார். பெரும் கூட்டம். ஒலிபெருக்கி கிடையாது. மைக் இல்லாததால் உரக்கப் பேச வேண்டும். சுவாமி விவேகானந்தர் மிக விரைவில் மகாசமாதி அடைந்ததற்குப் பல காரணங்களுள் ஒரு காரணம், அவர் தன் நுரையீரல் சக்தியை (lungs power) அதிகம் உபயோகப்படுத்தியதுதான்.
அன்று அவர் The subject is vast; time is short - பேச வேண்டிய பொருளோ மிகப் பெரிது, நேரமோ குறைவு என்று உரையைத் தொடங்கினார். மக்கள் கை தட்டினார்கள்.
ஆனால் ஓர் இளைஞர் மட்டும் இந்த வாக்கியத்தின் தாக்கத்தை உணர்ந்தார். ஆம், உண்மைதானே! நம் வாழ்வும் இப்படித்தானே இருக்கிறது. அடைய வேண்டிய பொருள் பிரம்மம் - பரம்பொருளான இறைவன் - பரந்துபட்டதாக இருக்கிறது. நமது வாழ்நாளோ சில ஆண்டுகள்தான். இதற்குள் நாம் பரம்பொருளை எய்த வேண்டும்.
அவ்வாறு அந்த இளைஞர் யோசித்து அந்த மந்திர வாக்கியத்தையே தியானித்தார். சில வருடங்களுக்குப் பிறகு அந்த இளைஞர் இலங்கையில் முக்கியமான ஒரு மகானாக - யோகர் சுவாமிகளாக மலர்ந்தார். பிற்காலத்தில் இலங்கையிலுள்ள சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைத்துச் சமயத்தினரையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்ற மகானாக யோகர் சுவாமிகள் விளங்கினார்.
சுவாமி விவேகானந்தர் எப்படிப்பட்ட மந்திர சக்தி மிக்க வாக்கியங்களுடன் உரையாற்றினார் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தனிமனிதரும் சமுதாயமும் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். இதற்கு மேல், நாடே தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று விஸ்தாரமாகச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர். அந்த ஒரு சிந்தனையை இப்போது ஆத்மநிர்பர் பாரத் - தற்சார்பு மிக்க இந்தியா என்கிறார்கள். விவேகானந்தரிடமிருந்து வந்த அந்த வீரிய விதை இன்னும் சிறிது காலத்தில் விருக்ஷமாக மாறும் என்பது உறுதி.
சுவாமிஜி தமது மிக முக்கியமான செய்திகளை எல்லாம் தமிழ்நாட்டிலிருந்துதான் உரைத்தார். விக்கிரகத்தில் மட்டும் சிவனைக் காண்பவன் சாதாரண பக்தன்; உலக மக்கள் அனைவருள்ளும் சிவனைக் காண்பவன் உன்னத பக்தன் என்று ராமேஸ்வரம் கோவிலில் கூறினார்.
நமது பூமி யாருடையது என அரசியல் அரட்டை அரங்கில் சிலர் இன்று கொக்கரிக்கிறார்கள். ஆனால் 125 வருடங்களுக்கு முன்பே தமிழகம் மட்டுமல்ல, மொத்த இந்தியாவே ஆன்மிக பூமி என்பதை இந்தியாவின் முதுகெலும்பு சமயம்தான் என்று ஜனவரி 25-இல் ராமநாதபுரத்தில் சுவாமிஜி அடித்துச் சொன்னார்.
ராமேஸ்வரம், பாம்பன், ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை ஆகிய நகரங்களில் மக்களை வீறு கொண்டு எழச் செய்த வீரிய விதைகளை தமிழக ஊர்கள்தோறும் தூவிக் கொண்டே வந்தார் சுவாமிஜி.
மேலும், நம் இளைஞர்கள் மேலைநாட்டு முட்டாள்தனமான பல பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதை சுவாமிஜி கண்டித்தார். அந்த முட்டாள்தனம் இன்றும் தொடர்வதை நாம் வேதனையுடன் காண்கிறோம்.
ஆனால் சுவாமிஜி மேற்கத்திய நாட்டிலிருந்து நாம் எதைக் கற்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறினார்: உலகப் பொருட்களைப் பற்றிய அறிவு, நிறுவனங்களின் சக்தி, அதிகாரங்களைக் கையாளும் திறமை, குறைந்த சக்தியைப் பயன்படுத்தி நிறைந்த பலன்களைப் பெறும் திறமை - இவற்றையெல்லாம் நாம் மேற்கத்திய நாட்டிலிருந்து கற்க வேண்டும். நமது ஆன்மிகப் பாரம்பரியத்தை நாம் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். உலக குருவாக நமது நாடு மாற வேண்டும் என அடிமை நாட்டிலிருந்து கூறினார்.
உலக அரங்குகளில் அன்று இந்தியாவிற்கு மதிப்பு கிடையாது. நாய்களும் இந்தியர்களும் இங்கு வரக் கூடாது என்று போர்டு எழுதி வைத்திருந்த காலத்தில் சுவாமிஜி இதைக் கூறினார். அந்தச் சமயத்தில் சுவாமி விவேகானந்தர் தன்னம்பிக்கையோடு சென்று அங்கு வீர கர்ஜனை செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவரது ஆன்ம பலமே காரணம்.
ஒரு சிறந்த நிர்வாகத் திட்ட அலுவலர் போல் சுவாமிஜி செயல்பட்டார். நாம் முறையாகவும் கடுமையாகவும் உழைத்தால், 25 வருடங்களில் நம் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்; இந்தியாவில் வறுமையே இருக்காது என்று 1897-லேயே கூறினார்.
சுவாமிஜி சொன்னதை நாம் கடைப்பிடித்தோமா என்றால் இல்லை. சுதந்திரத்திற்குப் பின் நம் மக்களும், நம்முடைய அரசியல்வாதிகளும் தலைவர்களும் ஒரு தேனிலவு மூடிற்குப் போய்விட்டார்கள் என்று சுவாமி ரங்கநாதானந்தஜி மகராஜ் கூறுவார். விவேகானந்தரை, விடுதலைக்கு முன்பு நாம் எப்படி வைத்துக் கொண்டிருந்தோமோ, எப்படிப் படித்தோமோ அதே மாதிரி விடுதலைக்குப் பிறகும் அவ்வாறே செய்திருந்தால் இந்தியா மோசமான நிலைக்குச் சென்றிருக்காது.
இந்தியாவில் இன்று ஊழலும் அப்பட்டமான அரசியல் சீரழிவும், மத துவேஷமும், தகுதியற்ற பல அரசியல் தலைவர்களும், பொறுப்பற்ற பல அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கும் நாம் நல்லபடியாக வளர்வோம் என்ற நம்பிக்கையை நமக்குத் திரும்பத் திரும்பக் கூறுவது சுவாமி விவேகானந்தரின் கருத்துகளே.
அவரது உரைகள் அடங்கிய நூல்களின் ஆற்றலானது உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும். அவ்வாறு நடக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் காத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஊர் ஊராகச் சென்று ஆன்மிக விதைகளை விதைத்தார். அவற்றை யாரெல்லாம் உள்வாங்கிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் சத்தியமாக உண்டு.
பாம்பனில் தொடங்கி சென்னை வரையிலும் சுவாமிஜி தமிழகத்தில் பயணித்துச் சொற்பொழிவாற்றிய அதே ஊர்களில், அதே தினங்களில், வருடந்தோறும் அவரது நினைவையும் கருத்துகளையும் போற்றும்படி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் தமிழ்நாடு மீண்டும் தனது பழம்பெருமையைப் பெறும்; மகிமையை உணரும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
ஜூன், 2023