சனாதனமான இந்து தர்மத்தில் குருவிடம் சீடன் தன் சந்தேகங்களைக் கேட்பான். அதற்கு குரு நேரடியாக எளிமையாகக் கூறுவதும் உண்டு. பல சமயங்களில் சீடனை முதலில் உணர்வு ரீதியாக, ஆழமாகச் சிந்திக்க வைத்துப் பதிலைச் சீடனே உணரும்படி செய்யும் குருமார்களும் உண்டு.
பரம்பொருளைப் பற்றிய அருளாளர்களின் உபதேசங்கள் மறைபொருளாக இருக்கும். சீடனுக்கான பதிலை கூடார்த்தமாகக் குருமார்கள் கூறுவார்கள்.
குழந்தை பசிக்கிறது என்றால் உடனே தின்பண்டங்களைத் தரச் சொல்லும் நமது காலத்துக் கல்வி அல்ல அது. மாறாக, பசியை அதிகரித்த பின் சத்தான உணவைப் பரிமாறும் பரிவுடையவர்களே சனாதன குருமார்கள். மகான்கள் உடலின் வெளிப்புறச் சேஷ்டைகளைக் காணாமல், உயிரின் உயர்நோக்கு யாத்திரையைத் துரிதப்படுத்துவார்கள்.
போர்க்களத்தில் அர்ஜுனன் தாத்தாவையும் குருவையும் அண்ணன் தம்பிகளையும் எப்படிக் கொல்வது என்று குழம்பினான். அந்தக் குழப்பத்திற்குத் தீர்வாக ஸ்ரீ கிருஷ்ணர், ‘‘இது தர்மத்தை நிலை நாட்டும் தர்மயுத்தம். நீ உறவினர்களுடன் போராடவில்லை; அதர்மத்தை முறியடிக்கப் போராடுகிறாய் என்று விளக்கம் கூறி அர்ஜுனனைத் தெளிவித்தார்.
அதாவது சீடனின் கவனத்தை மேம்படுத்தி உயர்ந்த நோக்கத்தைக் காண்பித்துத் தருவது சனாதன குருமார்களின் சீரிய பண்புகளுள் ஒன்று.
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் என்கிறது திருக்குறள்.
நோயின் தன்மை, நோய் வந்ததற்கான அடிப்படைக் காரணம், நோயாளியின் உடல் தகுதி போன்றவற்றைத் தெரிந்து கொண்ட பின்னரே சிறந்த மருத்துவர்கள் நோய்க்கு மருத்துவம் செய்வார்கள்.
கதைகளில் வரும் சில அரக்கர்களை ஒழிக்க ஏழு கடலைத் தாண்டி அங்கு ஒரு காட்டில் குறிப்பிட்ட மரத்தின் பொந்தில் வசிக்கும் ஒரு பறவையைப் பிடித்து நசுக்கிவிட்டால் அரக்கன் ஓய்ந்து விடுவான் என்று படித்திருக்கிறோம்.
சீடர்களைச்சோம்பேறிஆக்காதகுருமார்கள்!
அதுபோல், சனாதன குருமார்கள் பிரச்னைக்குத் தாற்காலிகமான தீர்வு சொல்வதில்லை. முதலில் பிரச்னையைப் பற்றிய தெளிவினைத் தருகிறார்கள். பிரச்னைகளின் அடியாழத்திற்குச் சென்று அதைச் சரி செய்வது உன்னத குருமார்களின் பணி.
சிறந்த குருமார்களின் உபதேசிக்கும் முறை என்பது வாயில் கொண்டு வந்து உணவூட்டும் முறையன்று. மீன் உண்ண ஆசைப்படுபவனுக்கு மீனைப் பிடிக்க கற்றுத் தருவதில் அவர்கள் அதிக கவனம் கொண்டிருந்தார்கள். மீனைச் சமைத்து வாயில் ஊட்டி, சீடர்களைச் சோம்பேறிகள் ஆக்குவதை அவர்கள் செய்வதில்லை.
சுவாமிவிவேகானந்தர்தமதுசீடர்
களுடன் மேலைநாட்டில் இருந்தார். ஒரு நாள் அவர் ஓர் ஓடையைத் தாண்டிப் போக வேண்டி இருந்தது. சீடர்களுள் வயதான ஒரு பெண்மணி இருந்தார். அவர் அந்த ஓடையைத் தாண்டுவதற்கு சுவாமிஜி உதவினார்.
அதே சமயம் இளம்பெண்ணான மற்றொரு சிஷ்யை சகோதரி கிறிஸ்டீன், தனக்கும் சுவாமிஜி அவ்வாறு உதவ வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சுவாமிஜி அவரிடம், ‘‘உன்னால் இந்த ஓடையைத் தாண்ட முடியும். நீ தாண்டி வா என்று கூறிவிட்டார்.
உத்தமமான குருமார்கள் தங்களது சீடர்கள் தாங்களாகவே முன்னேறி, குருவை விஞ்சிய சீடர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆதலால்தான் சாந்தோக்ய உபநிஷத்தில் குரு சீடனுக்கு ‘தத்துவமஸி - சீடனே, நீ அந்தப் பரம்பொருள் என்று உபதேசிப்பார். குரு கூறியதைக் கிளிப்பிள்ளை போல் சீடன் திருப்பிக் கூறாமல் ‘அஹம் பிரம்மாஸ்மி என்று உணர்வார். குருவின் உபதேசம் சத்தியத்தை உணர்த்தியது. விதை ஒன்று; முளை வேறு.
பலத்தினைப்பலவீனமாதுரத்துவது?
1888-ஆம் ஆண்டு. சுவாமி விவேகானந்தர் காசியில் இருந்த காலம். ஒரு நாள் அவர் துர்கா மந்திருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அவரிடம் சில பழங்கள் இருந்திருக்க வேண்டும். அதைக் கவனித்த ஒரு குரங்கு அவரைப் பின்தொடர்ந்தது. அடுத்து மெல்ல மெல்ல இன்னும் இரண்டு குரங்குகள் சேர்ந்து கொண்டன. சுவாமிஜி அவற்றைப் பொருட்படுத்தாமல் போய்க் கொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் ஒரு பெரிய குரங்குப் பட்டாளமே அவரைத் துரத்தியது. குரங்குப் படை துரத்தும்போது யார் தான் என்ன செய்ய முடியும்?
சுவாமிஜி ஓட ஆரம்பித்தார். குரங்குகள் அவரை ஓட்ட ஆரம்பித்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு துறவி அங்கு வந்தார். சுவாமிஜி ஓடுவதையும் குரங்குகள் துரத்துவதையும் கண்டார். உடனே அந்தத் துறவி, ‘‘நில், பலவீனத்தை எதிர்த்து நில்; அஞ்சாதே என்று கூவினார்.
சுவாமிஜி திரும்பிப் பார்த்தார். கையில் உள்ள தண்டத்துடன் குரங்குகளைப் பார்த்தார் தீர்க்கமாக; தெறித்து ஓடின அவையெல்லாம்.
‘இந்தச் சம்பவத்திலிருந்து நான் மிகப் பெரிய பாடத்தைக் கற்றேன் என்று சுவாமிஜி கூறினார்.
‘‘பலவீனத்திற்கான பரிகாரம் ஓயாது பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதல்ல. மாறாக, பலத்தைச் சிந்தித்திடு என்றும் கூறியவர் அல்லவா சுவாமிஜி!
சுவாமிஜிக்குச் சரியான நேரத்தில், சரியான அறிவுரையை வழங்கிய அந்தத் துறவி யார் என்று தெரியாது. ஆனாலும் அவரது உபதேசம் மிகவும் முக்கியமானது. குரங்குகள் துரத்தியபோது சுவாமிஜியின் கையில் தண்டம் இருந்தது. ‘‘அதைக் கொண்டு குரங்குகளைத் தாக்குங்கள் என்று அந்தத் துறவி கூறவில்லை.
‘நான் பாதுகாப்பாக இருக்கும் இந்த இடத்திற்கு வந்து விடுங்கள் என்றும் அவர் கூறவில்லை.
‘உங்களிடம் இருக்கும் பழங்களைத் தூக்கி எறிந்து விடுங்கள், குரங்குகள் அதை எடுத்துக்கொண்டு உங்களை விட்டு விடும் என்றும் கூறவில்லை.
மாறாக, முற்றிலும் வித்தியாசமாக அந்தத் துறவி சுவாமிஜிக்கு உபதேசித்தார். ‘பலவீனத்தைக் கண்டு ஓடாதே; எதிர்த்து நில் என்று கூறியது ஆழ்ந்த பொருள் கொண்டது.
அந்த சனாதன துறவி குரங்குகளைப் பார்க்கவில்லை. பயந்து ஓடுபவரைக் காணவில்லை. அதைவிட நுணுக்கமாக ஒன்றைக் கவனித்தார். எதிலும் ஆழ்ந்த பார்வையைப் பார்க்கும் நுண்ணிய அறிவு கொண்டவரின் பார்வை அது.
கண்களால் காணும் கர்மங்களில், அகர்மத்தைப் பார்க்கும் திருஷ்டி அது. ஆற்றலின் ஊற்றான ஆன்மா, தேகத்தில் சிக்கித் தவிப்பது போன்ற ஒரு நிலையை அந்தத் துறவி கண்டாரோ!
சீதையை வனத்தில் இழந்த ராமர் கலங்கி நின்றார். பஞ்சபூதங்களில் சிக்கி, பிரம்மமே அழுகிறது என்று அதை ஒரு ரிஷி குறிப்பிட்டார். அந்த ரிஷியின் திருஷ்டியில் பிரம்மமும் தெரிகிறது; சம்சார வலையில் சிக்கித் தவிக்கும் ஓர் அவதாரபுருஷரின் அருமையும் புரிகிறது.
ஒரு பெரும் பலத்தைத் துரத்துவது பலவீனமா என்று கண்டு அதிசயித்தார்; அதற்கு ஏற்றபடி உபதேசித்தார்.
எண்ணிக்கை சிறிது என்று சோம்பியிருந்து விடாதே!
மேற்கூறிய குரங்கு துரத்திய நிகழ்விலிருந்து நாம் இன்னொரு பாடத்தையும் கற்க வேண்டும். ஒரு நாட்டில் எதிரிகள் - வந்தேறிகள்- ஒட்டுண்ணிகள் - தேசவிரோதிகள், நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறாக மாறிவிடும் முன்பு அவர்களிடம் ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கையால் கிள்ளி எறியும் நிலை இருக்கும்போதே அதைச் செய்யாமல், கோடரியால் அதை வெட்டியெடுக்கும் தவறை மனிதன் செய்யக் கூடாது.
எண்ணிக்கை சிறியதுதானே என்று விட்டு விடாமல் அவர்களுடைய செயல்களைக் கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சிறுகச் சிறுக வலுத்து ஒரு நாட்டையும் அதன் கலாச்சாரத்தையும் சமயத்தையும் ஏன், மக்களையும் சீரழித்து விடுவார்கள் என்ற ஒரு செய்தியும் இந்தக் குரங்குகள் சம்பவம் நமக்குக் காட்டுகிறது அல்லவா?
அதனால்தான் சனாதன குருமார்கள் ‘மனிதா, முதலில் உன்னைப் புரிந்து கொள்; உன் பிரச்னைகளைப் புரிந்து கொள். இரண்டையும் ஆழமாகப் புரிந்து கொள்ளும்போது உனது சீரிய சிந்தனையால், அந்த ஞானாக்னி என்ற தீயினில் பிரச்னைகள் தூசாகிவிடும் என்கின்றனர்.
உன் பிரச்னையைவிட நீ வலுவானவன் என்பது தானே எந்தப் பிரச்னைக்கும் நிரந்தர ஒரு தீர்வாக இருக்க முடியும்! அதைத்தான் சனாதன குருமார்களின் பரம்பரையில் வந்த சுவாமி விவேகானந்தரும் கூறினார். *
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
ஜனவரி, 2023