கேள்வி: மாணவ மாணவிகளை சோஷியல் மீடியா மிகவும் கவர்கிறது. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடங்கள் மாணவர்களைச் சுத்தமாக ஈர்ப்பதில்லை, ஏன்? -ஆசிரியர் வேலப்பன், அரசுப் பள்ளி, சேலம்
பதில்: சோஷியல் மீடியாவில் ஒரே நேரத்தில் பலவிதமான ரசனைகள் மனிதனுக்குக் கிடைக்கின்றன. கண்ணை ஈர்க்கும் கலர் கலரான காட்சிகள்; காதை இழுக்கும் பலவித இசைகள்; கருத்தை ஈர்க்கும் விதவிதமான செய்திகள், சிந்தனைகள், கதைகள்; குறைவான நேரத்தில் இளம் மனங்களைக் கொள்ளையடிக்கும் அம்சங்கள் அதில் நிறைந்துள்ளன. தான் அனுபவித்ததைப் பிறருடன் சொல்லிக் கொள்வதற்கும் மாணவன் பெருமைப் படுகிறான்.
மாணவர்களின் கண், காது, தொடுவது போன்ற எல்லா இந்திரியங்களையும் சோஷியல் மீடியா இழுக்கின்றன. மாணவனைக் கவரும் மேற்கூறிய எல்லா அம்சங்களும் ஆசிரியர்களால் செய்ய முடிவதில்லை.
ஆனாலும் சில ஆசிரியர்கள் ஸ்மார்ட் கிளாஸ், பி.பி.டி. பிரசன்டேஷன், வீடியோ செஷன், ஆன்லைன் டீச்சிங், வாட்ஸ் அப் குழு மூலம் கற்பிப்பது போன்ற பல வகையிலும் மாணவர்களை ஈர்ப்பதற்காக உழைப்பதையும் காணலாம். தொழில்நுட்பம் தெரிந்த மாணவ- மாணவிகளைத் தங்களது கற்பித்தலில் ஆசிரியர்கள் சேர்த்துக்கொண்டால் ஆசிரியர்களின் வேலைப் பளு குறையும்.
இன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு வெற்றிட உணர்ச்சியற்ற இடைவெளி தெரிகிறது. நமது சமயப் பண்பாடு கூறிய குரு - சிஷ்ய உறவுமுறையில் இருந்த பரஸ்பர நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தில் ஈடுபாடு போன்றவை குறைந்து விட்டன.
இன்று பல சட்ட திட்டங்கள் ஆசிரியர்களின் கைகளைக் கட்டி வைத்துள்ளன. கண்களை மூடிக் கொள்ளச் சொல்கின்றன. கண்டிப்பு கூடாது என்று கூறிவிட்டதால் கனிவும் ஏற்படாமல் போய்விடுகிறது. ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்ற உணர்வு சமுதாயத்தில் குறைந்து வருகிறது. அதன் தாக்கம்தான் இன்றைய மாணவர்களின் பாராமுகம்.
அதற்காக இந்தப் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டுவிட முடியாது. மாணவனிடத்தில் உள்ள எதைக் கவர்ந்தால் அவனைக் கவர முடியும் என்று சிறந்த ஆசிரியர்கள் யோசிப்பார்கள்.
பணத்துக்காக மட்டுமே பணி செய்யும் ஆசிரியர்கள் சாமானியர்களாக அதிக அளவில் இருந்து விட்டுப் போகட்டும்.
ஆனால் கல்வியையும் மாணவர்களையும் சமுதாயத்தையும் நேசிக்கும் ஆசிரியர்கள் இந்த நிலைமையை இப்படியே விட்டுவிட முடியாது. இதனை வாசிக்கும் நீங்கள் அப்படிப்பட்ட ஆசிரியர் என்பதால் ஒரு வேண்டுகோளாக உங்களிடம் சிலவற்றைக் கூறுகிறோம்.
எதுவெல்லாம் உங்களை அமுக்குகிறதோ, அதை மீறி நீங்கள் மேலே வருவதே ஒரு யோகமாகும். அதுதான் நீங்கள் பார்க்கும் உத்தியோகம். அந்த யோகத்தில் நீங்கள் வளர வேண்டாமா? வெளி பலத்தை விட மனிதனின் மனோபலம் வலுவானது.
தடைகள், சங்கடங்கள், புறக்கணிப்புகள் போன்றவற்றை மீறி ஆசிரியர்கள் மாணவனின் நலத்தை நாடினால்...,
நான் மாணவனின் நலம்விரும்பி, என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் புரிய வைத்தால்...,
அதற்காக ஆசிரியர்கள் லட்சியதாகமும் சேவை வீரியமும் கொண்டு செயல்பட முடிந்தால்...,
சோஷியல் மீடியா தரும் அற்ப சுகங்கள் எல்லாம் சொற்ப காலத்திற்கே என்பதை ஆசிரியர்கள் நம்ப முடிந்தால்..., அதனை மாணவர்களுக்கு உணர்த்த முடிந்தால்...,
ஆசிரியர்கள், தங்கள் மனதின் ஆற்றலைப் பயன்படுத்தி ஈடுபாட்டு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் மாணவர்களின் மனங்களைப் பிடிக்கக் கற்றுக்கொண்டால்...,
மாணவனின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பது நல்லாசிரியர்களின் அனுபவம். அவ்வாறு செய்ய முடிந்தால் மீடியாக்கள் காட்டுவதைவிட அதிகமான ஈர்ப்பினை மாணவன் ஆசிரியரிடமிருந்து பெறுவான்.
அப்படிப்பட்ட ஆசிரியர்கள் பலர் இன்றும் உள்ளனர். அது போன்ற சில நல்லாசிரியர்களை நம்பித்தான் நம் சமுதாயம் இருக்கிறது. அந்த ஆசிரியர்களுள் ஒரு முத்தாக நீங்கள் வளர வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை.
கேள்வி: சோஷியல் மீடியா மூலம் பலவற்றைக் கற்க முடியும்போது பள்ளிப் பாடங்கள் தேவையா? மாணவி பரிமளா சற்குணம், திருப்பூர்.
பதில்: தங்கையே, ஐஸ்கிரீம் பிடிக்கும் என்பதற்காக அதையே ஆயுள் முழுதும் உண்ண முடியுமா? ஐஸ்கிரீம்களில் பல நச்சுப் பொருட்கள் toxins உள்ளன என்பது உனக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருப்பவன், சிறிது காலத்தில் பரபரப்பாகி மன உளைச்சலுக்கு ஆளாகி மருந்து சாப்பிடுவதை நீ பார்த்ததில்லையா?
உலகிலுள்ள எல்லாவற்றையும் சோஷியல் மீடியா உனக்குக் காட்டலாம். ஆனால் உன்னை உனக்கு அது காட்டாது. உன் திறமை என்ன? உன் பொறுப்பு என்ன? எதிர்காலத்தில் எப்படி வாழ்வது போன்ற உனது அடிப்படைக் கேள்விகளுக்கு நீதான் பதில் காண வேண்டும். அதற்காகப் பள்ளிப் பாடங்களைப் படி.
பாடங்கள் உன்னைக் கவரவில்லை என்பதற்காக உன்னை ஒரு மெஷினாக்கும் ஒன்றினால் நீ கவரப்படுவது சரியா? யோசி தங்கையே.
அமுல் பால் கிட்டாவிட்டால் ஆல்கஹாலின் பால் செல்வதை அறிவுள்ளவன் செய்வானா? சோஷியல் மீடியாவில் மூழ்கி Mediocre -சராசரி மனிதனாக மாறிவிடாதே. ஐஸ்கிரீம் போன்ற junk foodகளை அளவுடன் நிறுத்து. சோஷியல் மீடியா அதிக வம்பைத் தரும். உன் மன ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
ஆனால் கல்விப்பாடம் என்பது உன் அம்மாவின் சமையல் போன்றது என்பதை மறவாதே. அது அன்பைத் தரும். ஆரோக்கியத்தை உருவாக்கும்.
கேள்வி: மாணவர்களுக்கு தியானப் பயிற்சி தேவையா? - மாணவன் ரஞ்சித், எண்ணூர், சென்னை.
நீ ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறாய். அதில் முழுவதுமாக கவனத்துடன் ஈடுபட்டிருக்கிறாய். அப்போது யார் உன்னைத் தொந்தரவு செய்தாலும் உன்னை அசைத்துக் கொள்ள முடியாது. இது போன்ற ஒரு மனநிலையை தியானப் பயிற்சி உனக்கு வழங்குகிறது.
உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க மூச்சுப் பயிற்சி தேவை. சுவாசம் முறையாக இருந்தால் மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.
வீட்டில் உன் அப்பாவும் அம்மாவும் ஒற்றுமையுடன் இருந்தால்தான் நீ நன்றாக இருப்பாய், அல்லவா? அதுபோல் உனது உடலுக்கும் மனதிற்கும் உள்ள இணக்கமான உறவை உனக்குள் தருவது தியானப் பயிற்சி.
தம்பி, நீ வெளியில் இருந்து வரும் சத்தங்கள், பிறர் செய்யும் தொந்தரவுகள் போன்றவற்றில் இருந்து கவனச்சிதைவு இன்றி படிக்க வேண்டுமா?
ஆர்வத்துடனும் உயர்நோக்கத்துடனும் புத்தகங்களைப் படிக்க வேண்டுமா?
படித்தது நினைவில் இருக்க வேண்டுமா?
நினைவில் உள்ளதைத் தேர்வில் வேகமாக நீ எழுத வேண்டுமா?
நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா?
வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற தாகத்துடன் நீ படிக்க வேண்டுமா?
இவையெல்லாம் மாணவனுக்கு வேண்டும் என்றால் தியானப் பயிற்சியும் அவனுக்கு வேண்டும்.
கேள்வி: எனது மனம் எங்கு உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி? -மாணவி விஷாலினி, பிளஸ் 2, திருநெல்வேலி.
பதில்: உனது ஆர்வமும் கவனமும் உள்ள இடத்தில் உனது மனமும் உள்ளது.
கேள்வி: இப்போதெல்லாம் எனக்குப் படிப்பதில் மட்டுமல்ல, எதிலும் கவனம் செல்வதில்லை. காரணம் என்ன? மாணவன் வின்சென்ட், பெரம்பலூர்.
பதில்: வகுப்பில் உட்கார்ந்து படிக்கப் பிடிக்காத பல மாணவர்களுக்கு ஸ்டேடியத்தில் கிரிக்கெட் பார்ப்பதற்கு மட்டும் எப்படி ஆர்வம் வருகிறது?
இரண்டு இடத்திலும் உட்கார்பவன் ஒருவன்தான். கிரிக்கெட்டில் ஆர்வத்தை அவனாக வளர்த்துக் கொண்டான். படிப்பதிலும் அந்த ஆர்வத்தை அவன் ஏன் வளர்த்துக் கொள்ள முடியாது?
உனது கவனம் ஓரிடத்தில் குறைந்தால் அது வேறு இடத்தில் எங்கோ இருக்கிறது என்று புரிந்து கொள். படிப்பதில் உனக்கு ஆர்வம் குறைகிறது என்றால் வேறு ஏதோ ஒன்றைப் பார்ப்பதிலும், அதனுடன் பழகுவதிலும் உனது ஆர்வம் கூடி இருக்கிறது என்று அர்த்தம்.
அது உனது கையைக் கைதாக்கி இருக்கும் செல்போனாக இருக்கலாம். உன் கழுத்தைக் கவ்வியிருக்கும் பேஸ்புக் ஆக இருக்கலாம்.
எவையெவை உனது கவனத்தைச் சிதைக்கின்றன என்பதைக் கண்டுபிடி; அதை மட்டும் நீ செய்தால் நல்லவர்கள் உன்னைத் தேடி வந்து கண்டுபிடித்துப் பாராட்டுவார்கள்.
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
பிப்ரவரி, 2023