எனது இந்த ஒரு வாயால் மட்டுந்தான் நான் சாப்பிடுகிறேனா? - அன்னை ஸ்ரீசாரதாதேவி எல்லா உயிர்களின் தாயாக இருந்து அருளிய வாக்கியம் இது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் அந்திம காலத்தில் தமது ஆன்மிக உச்ச நிலையை உணர்த்துவதற்கு இதே வாக்கியத்தைப் பயன்படுத்தினார்.
கீதையும் உபநிஷதமும் இது போன்ற வெளிப்பாடுகளை தெய்வ வாக்கியங்களாக மொழிகின்றன.
ஸ்ரீதேவீ மஹாத்மியத்தில் ஸ்ரீதுர்க்காதேவி சும்பன் என்ற அரக்கனிடத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதமும் இவ்வாறு உள்ளது.
ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தேவியை பூமரூபா என்று அழைப்பதை ஸ்ரீசாரதாதேவியாரும் ஸ்ரீராமகிருஷ்ணரும் இவ்வாறு உரைத்தார்களோ!
இப்படிப் பல சாஸ்திர பிரமாணங்கள் கொண்ட ஒன்றை அன்னை உரைத்த சம்பவம் என்ன?
அன்னை ஸ்ரீசாரதாதேவி வங்காள மக்கள் இயல்பாக உண்ணும் சில உணவுகளைத் தவிர்த்து வந்தார். அதைப் பார்த்து ஒரு பக்தர் அன்னை செய்யாத ஒன்றை அவரும் செய்ய விரும்பவில்லை. அன்னை அவரிடம் அந்த உணவை உண்ணுமாறு வலியுறுத்தினார். அவர் பக்தியால் மறுத்தார்.
அன்னையோ, மகனே, நீ அதைச் சாப்பிடு. நானென்ன எனது இந்த ஒரு வாயால் மட்டும் சாப்பிடுகிறேன் என்று நினைத்தாயா...? என்று கேட்டுவிட்டு ஆழமாகப் புன்னகைத்தார்.
ஸ்ரீசாரதாதேவியின் சரிதத்தை எழுதிய புகழ்பெற்ற ரா.கணபதி, ... அன்னை அவ்வளவு பெரிய பேச்சை அலேக்காக அப்படியே சொல்லிவிட்டார் என்று எழுதி வியப்பார்.
இந்த வாக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்தால் நம்மிடம் பக்தி முகிழ்க்கும்.
ஸ்ரீராமகிருஷ்ணரால் தமது அந்திம காலத்தில் உண்ண முடியவில்லை. அதை அவர் பொருட்படுத்தவும் இல்லை. ஆனால் பக்தர்களோ, பவதாரிணிதேவியிடம் சென்று பிரார்த்தனை செய்தால் அன்னை உங்களை உண்ணச் செய்வார் என்று கூறினர்.
குழந்தைபோல் குருதேவரும் தேவியிடம் சென்று அதைக் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் அசல் நிலையை அகிலத்திற்கு அறிவிக்க, மகனே, நீ உனது இந்த ஒரு வாயினால் மட்டும் உண்கிறாயா என்ன? நீ உலக உயிர்கள் ஒவ்வொருவரின் வாயின் மூலமாகவும் அல்லவா உண்டு வருகிறாய்? என்று கூறி தேவி பரிகசித்தார்.
அதைக் கேட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களிடம், நீங்கள் கேட்டதை நான் கூறியதால் அல்லவா தேவி என்னைக் கேலி செய்தார்! தேவி அவ்வாறு என்னிடம் கேட்டதும் எனக்கு வெட்கமாகிவிட்டது என்று கூறி வருந்தினார்.
உயிர்களின் உடலிலுள்ள ஜீரணசக்தி நானே - ஸ்ரீ கிருஷ்ணர்
சூரியனிலும் சந்திரனிலும் தமது சக்தியே ஒளியாக விளங்குகிறது என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார். மனிதர்களுக்குள் பகவான் எவ்வாறு வீற்றிருந்து விளங்குகிறார் என்பதைத் தொடர்ந்து கூறும்போது
अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥
நான் உயிர்களின் உடம்பில் வைச்வானர அக்னியாக இருந்து கொண்டு பிராணன் மற்றும் அபானனுடன் கூடி நான்கு விதமான உணவை ஜீரணம் செய்கிறேன் (15.14) என்று விளக்கினார்.
இறைவனே உணவைப் படைக்கிறார். உணவை உண்கிறார். உண்டதைச் செரிப்பதற்கான சக்தியும் அவரே என்பதை பரந்தாமன் வெளிப்படுத்தினார்.
உயிரினங்கள் உணவை ஜீரணிக்கச் செய்யும் வயிற்றில் உள்ள நெருப்பே கடவுள் என்று பிருஹதாரண்யக உபநிஷதமும் பகர்கிறது.
இந்த தெய்விக உண்மையை ஸ்ரீசாரதாதேவியும் ஸ்ரீராமகிருஷ்ணரும் தங்களது எளிய நடையில் கூறியது ஆச்சரியத்தைத் தருகிறது அல்லவா!
உலகில் தேவி மட்டுமே இருக்கிறாள்!
அசுர சக்திகளுடன் அறிவற்ற எல்லா அரக்கர்களும் செய்வதையே அரக்கனான சும்பனும் செய்து வந்தான். தேவர்கள் துர்க்கா தேவியிடம் முறையிட்டார்கள். தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவனை வதைக்கத் தோன்றினாள்.
போரின்போது துர்க்கையின் பல்வேறு வெளிப்பாடுகளான தேவிகளைக் கண்டு சும்பன் பயந்தான். அம்பிகையைச் சாடினான். தன்னிடம் தனியாகப் போர் செய்யுமாறு கூவினான். அம்பிகை உடனே தனது மற்ற தேவிமார்களைத் தமக்குள்ளேயே ஏற்றுக் கொண்டார். அப்போது தேவி (10.4),
एकैवाहंजगत्यत्रद्वितीयाकाममापरा।
पश्यैतादुष्टमय्येवविशन्त्योमद्विभूतयः॥१०.५॥
இவர்களெல்லாம் எனது அம்சாவதாரமானவர்கள் என்னைத் தவிர வேறல்லர். அவர்கள் அனைவரும் என்னிடமே புகுவதைப் பார். சும்பா, நான் தனித்தே நிற்கிறேன்; யுத்தத்திற்கு வா என்று அழைத்தாள்..
தேவைப்படும்போது பிற உயிர்களை தேவி தோற்றுவிக்கிறார். நேரம் வரும்போது தனக்குள்ளேயே ஈர்த்துக் கொள்கிறார். ஆக, இருப்பது தேவி மட்டுமே என்பதை தேவி மஹாத்மியம் நமக்குப் புரிய வைக்கிறது.
அந்தப் பேருண்மையை ஸ்ரீசாரதையும், நான் ஒரு வாயால் மட்டுமே உண்கிறேனா? என்று கூறித் தமது விச்வாத்ம நிலையை வெளிப்படுத்தினார் போலும்.
ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் பூமாதேவியின் திருநாமங்களில் ஏகாக்னி, பூமரூபா - ஆகிய திருநாமங்கள் தேவி ஒருத்தியாக இருந்தாலும் அனைத்துமாக விளங்கும் தன்மை அவளுடையது என்பதைத் தெளிவாக்குகின்றன. பூமா எனில் பெரியது.
இவ்வாறு சாஸ்திரங்கள் பரம்பொருளின், பராசக்தியின் மற்றும் அவதாரங்களின் லட்சணங்களை மேற்கூறியவாறு உரைக்கின்றன. மூன்று உதாரணங்களை அவதாரபுருஷர்களின் வாழ்க்கையிலிருந்து அறியலாம்.
பகவான் உண்டால் பக்தனின் பசி தீருமா?
பாண்டவர்கள் வனவாசத்தில் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வந்தார்கள். தெய்விகப் பரிசாக திரௌபதிக்கு அக்ஷயபாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் தினமும் எத்தனை ஆயிரம் பேருக்கு வேண்டுமானாலும் திரௌபதி உணவு வழங்க முடியும். ஆனால் அவள் உணவருந்திய பின் அன்று அக்ஷயபாத்திரம் மேற்கொண்டு உணவு வழங்காது.
துரியோதனன் கோபக்கார துர்வாச முனிவரையும் அவரது 12000 சீடர்களையும் பாண்டவர்களிடம் வஞ்சகமாக அனுப்பினான். முனிவர் வனத்திற்குச் சென்று பாண்டவர்களை ஆசீர்வதித்தார். நீராடிய பிறகு உணவருந்த வருவதாக உரைத்து நதிக்குச் சென்றார்.
பாண்டவர்கள் திகைத்து நின்றனர். திரௌபதி அப்போதுதான் உண்டு முடித்திருந்தாள். தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அமுது படைத்த ராணி, இப்போது தர்ம சங்கடத்தில்...
உடனே கிருஷ்ணரை வேண்டினாள். மாயக்காரன் அங்கு வந்து அவனும் பசிக்கிறது என்றான். திரௌபதிக்கு அழுகையே வந்திருக்கும் அல்லவா?
ஏதாவது ஒரு பருக்கையாவது இருக்கிறதா என்று அக்ஷயபாத்திரத்தில் தேடினார் கண்ணன். ஆஹா, கண்ணனின் கண்களில் ஒரு பருக்கை தென்பட்டது. அதை அவர் தன் திருவாயில் இட்டார்.
பகவான் உண்டதும் நதியில் நீராடிக் கொண்டிருந்த முனிவருக்கும் சீடர்களுக்கும் வயிறும் மனதும் நிறைந்தன. அவர்கள் பாண்டவர் களுக்குச் சிரமம் தர வேண்டாம் என்று அங்கிருந்து சொல்லிக் கொள்ளாமலேயே சென்று விட்டார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ண பாகவதத்தில் ஒரு நிகழ்வுஸ்ரீராமகிருஷ்ணர் தமது தொண்டைப்புண் நோயால் உண்ண முடியாமல் உடல் மெலிந்து வந்தார். அதனால் அவரது சிஷ்யை கோலாப்மா அவரை கொல்கத்தாவிலுள்ள ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். குருதேவர், கோலாப், சீடர்களான லாட்டு மற்றும் காளி ஆகியோர் படகில் கொல்கத்தா புறப்பட்டனர்.
காலையில் எதுவும் உண்ணாமல் கிளம்பினர். மருந்து வாங்கித் திரும்பும்போது பகல் மணி 1.30 ஆகிவிட்டது. கடும்பசி.
கோலாப்மாவிடம் நான்கு பைசாக்கள் மட்டும் இருந்தன. குருதேவர் அதைக் கொண்டு சில இனிப்புகளை வாங்கி வருமாறு காளியிடம் கூறினார். காளி இனிப்பை குருதேவரிடம் கொடுத்தார். பொதுவாக குருதேவர் தமக்கு வரும் உணவுப் பொருட்களைச் சிறிது வாயிலிடுவார். பிறகு அதைப் பிரசாதமாகச் சீடர்கள் ஏற்பார்கள்.
ஆனால் இன்று ஸ்ரீராமகிருஷ்ணர் ஒவ்வோர் இனிப்புத் துண்டமாக உண்ண ஆரம்பித்தார். கடும்பசியில் இருந்த மூன்று சீடர்களும் ஆச்சரியமாக அவரது செயலைக் கண்டார்கள். குருதேவர் மொத்த இனிப்பையும் உண்டு விட்டு கங்கை நீரை அள்ளிக் குடித்து ஏப்பம் விட்டதும் மூன்று சீடர்களுக்கும் பசி பறந்து போனது. உண்ட திருப்தி உடம்பெங்கும் நிறைந்தது.
சீடர்கள் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டனர். தங்களது பசி எப்படி மாயமாய் மறைந்தது என்று அதிசயித்த அவர்கள் குருநாதரை வணங்கினர்.
காளி பிற்காலத்தில் சுவாமி அபேதானந்தராக மலர்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வந்து அருள் பெற்ற பிறகு தமக்கு பல பிறவிப் பிணிகள் இல்லாமல் போனது என்று பதிவு செய்துள்ளார்.
சீடன் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளை குருவே ஏற்றுக்கொண்ட உத்தம நிலை அது. சீடன் உண்ண வேண்டிய இனிப்பை குருவே உண்டு சீடனின் பசியாற்றிய விதம் போல!
இன்னும் ஓர் ஆனந்தமான நிகழ்ச்சி. சுவாமி அகண்டானந்தர் சார்காச்சியில் இருந்த ஏழைகளுக்கு அன்பு, அறிவு, உணவு, உணர்வு ஆகியவற்றை அபமிதமாக வழங்கி வந்த காலம் அது.
அன்று ஸ்ரீராமகிருஷ்ணன் ஜயந்தி விழா அன்னதானத்துடன் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான ஏழைகள் பசியில் வாடியபடி காத்திருந்தார்கள். அனைவருக்கும் கிச்சடி என்ற உணவு பமாறப்பட இருந்தது. கிச்சடி சமைக்க நேரமானது. பிறகு அது ஸ்ரீராமகிருஷ்ணருக்கு நிவேதிக்கப்பட வேண்டும். அதன் பிறகே பரிமாறப்படும். நேரம் கடந்து கொண்டிருந்தது. மக்கள் பசியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அகண்டானந்தருக்கு ஓர் உணர்வு நிலை அனுபவம் ஏற்பட்டது. திடீரென்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அகண்டானந்தர் முன் தோன்றி, பொறுமை இழந்தவர்போல் அவடம் சொன்னார்:
கங்கா, என்ன இது, என் பிள்ளைகள் எப்போது பமாறுவார்கள் என எதிர்பார்த்தபடி பசியோடு அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு இங்கே நிவேதனம் செய்வதை விட்டுவிட்டு நேராக அவர்களுக்குப் பமாறு. அவர்களின் வாய்மூலமாக நான் உண்பேன்.
அகண்டானந்தரும் அப்படியே செய்தார். அனைவரும் மகிழ்ச்சியோடு உண்டனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் நான்கு சீடர்களுக்கும் இவ்வாறு தமது பேருணர்வு நிலையை வெளிப்படுத்தி வியக்க வைத்தது ஓர் உன்னத வரலாறு என்றால்...,
இன்னொரு சீடர் மூலம் பகவான் அன்புக்கு அடிபணிகிறார் என்பதைப் புரிய வைக்கிறார். பாபுராம் தனது குருவும் தெய்வமுமான ஸ்ரீராமகிருஷ்ணர் அந்திமக் காலத்தில் உணவு உண்ண முடியாமல் இருந்தபோது அவரை உண்ணும்படி வலியுறுத்தினார்.
அப்போது குருதேவர், ...நான் என் சூட்சுமமான உடல் மூலமாக கோடிக்கணக்கான வாய்கள் வழியாக உண்கிறேன் என்றார் பெருமிதமாக.
பகவானின் மகிமையில் கவனம் செலுத்தாமல் அவரது சேவையில் மட்டும் ஈர்ப்பு கொண்டிருந்தவர் பாபுராம். அவர் குருதேவரிடம் செல்லக் கண்டிப்புடன், உங்கள் கோடிக்கணக்கான வாய்களையோ அல்லது சூக்ஷ்மமான உடலையோ பற்றி எனக்குத் தெரியாது. நான் விரும்புவதெல்லாம், நீங்கள் உங்களது இந்த வாய் வழியாகச் சாப்பிட வேண்டும். தங்களது இந்தத் திருமேனிக்கு நான் தொண்டு புரிய வேண்டும் என்று கூறினார்.
உடனே குருதேவர் வாய் நிறைய உண்டார். அன்பெனும் பிடியில் அகப்படும் மலையான குருதேவரை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதை பாபுராம் மகராஜ் (சுவாமி பிரேமானந்தர்) நமக்குக் காட்டித் தந்தார்.
கலியுகத்தில் உயிர் உணவையே பெரிதும் சார்ந்து இருக்கிறது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார். ஆதலால் உணவை மதிப்போம். உணவை எல்லோர் மூலமாகவும் ஏற்கும் உணர்வாளனைத் துதிப்போம். உணவைச் செரிக்கும் சக்தியையும் காப்போம். அதற்கு இந்த மந்திரத்தைக் கூறி ஒவ்வொரு நாளும் உண்போம்.
ஹரியே தானம் செய்பவர், ஹரியே உணவை உண்பவர், ஹரியே அன்னம், பிரஜாபதியாக உள்ளவர். ஹரியே பிராமணர், உடல் என்பதும் ஹரிதான், உணவை உண்டு உணவு வழங்குகிறவரும் ஹரியே. v
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
டிசம்பர், 2024