கேள்வி: ஒரு மாணவன் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து கற்க வேண்டியது என்ன?
பதில்: ஒவ்வொரு மாணவ மாணவியும் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து மூன்று முக்கிய பாடங்களைப் படிக்க வேண்டும்.
1. யோகத்தில் ஒரு மிக முக்கிய நிலை நிர்விகல்ப சமாதி எனப்படும். அதை அடைவதற்குப் பலருக்கும் ஒரு முழு வாழ்க்கை தேவைப்படும். ஸ்ரீராமகிருஷ்ணரின் குருவான தோதாபுரிக்கு அந்த நிலையை அடைய 40 ஆண்டுகள் ஆயின.
ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அபாரமான மன ஒருமைப்பாட்டினாலும், சிரத்தையினாலும் மூன்றே தினங்களில் அந்தப் பெருநிலையை அடைந்தார்.
தான் கொண்ட லட்சியத்தைச் சீக்கிரம் சாதிப்பது என்ற மனோதிடத்தை மாணவன் அவரது வாழ்வில் இருந்து கற்க வேண்டும்.
2. பலர் ஓரிரு டிகிரிகளை வாங்கியவுடன் நான் படித்து முடித்துவிட்டேன் என்பார்கள்.
ஆனால் வாழும் வரை கற்றுக் கொண்டே இருப்பேன் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்.
இதுவும் மாணவனே, உனக்கு அவசியமில்லையா?
3. ஸ்ரீராமகிருஷ்ணர் முதலில் ஹிந்து சமய முறைகளைப் பின்பற்றி அதன் அனுபவ உச்சத்தைத் தொட்டார். அதன் பின் அவர் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மற்ற சமய உண்மைகளையும் அனுபவத்தில் கண்டார்.
ஒவ்வோர் அனுபவத்தையும் பெறுவதற்கு அவரது இறை ஏக்கமே மிக முக்கியமான கற்பதற்கான கருவியாக அவருக்கு இருந்தது.
மாணவர்களே, நீங்கள் கற்க வேண்டிய பாடங்களை ஆழமாகவும் வேகமாகவும் கற்க வேண்டும். ஒரு சார்பு அறிவு என்று இல்லாமல் எல்லாவற்றையும் கற்றுத் தேற வேண்டும் என்பது குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் மாணவர்களுக்கான அறிவுரை.
கேள்வி: ஒருவரது கவனச்சிதைவினால் (Distraction of Mind) என்ன நடக்கிறது?
பதில்: ஒருவன் சாப்பிட அமர்கிறான். சாப்பிடும்போது டிவி பார்க்கிறான். பார்த்தபடி செல்போன்.... பேசிக்கொண்டே படுக்கிறான். படுத்தபடி சாப்பிடுவதைப் புறக்கணிக்கிறான். அவன் பாதி சாப்பிட்ட எச்சில் உணவு வீணாகிறது.
ஏன் செய்கிறோம்? எதற்காகச் செய்கிறோம்? எப்படிச் செய்ய வேண்டும் என்ற லட்சியம் இல்லாமல் அவன் தனது வேலைகளைத் தண்டமாகச் செய்கிறான். அதனால் அலட்சியம் அவனைத் தொற்றிக் கொள்கிறது. கவனச்சிதைவு எவ்வளவு விஷயங்களை உருவாக்குகிறது என்று கவனி.
மேலே சொன்ன எந்தக் காரியத்தையும் அவன் உருப்படியாகச் செய்யவில்லை. வேஸ்டானது சாப்பாடு மட்டுமல்ல, அவன் நேரமும் வாழ்வும்தான்.
கேள்வி: எனக்கு மனஒருமைப்பாடு இருக்கிறது; கவனச்சிதைவு எனக்கில்லை என்று நானே எவ்வாறு கண்டுபிடிப்பது?
பதில்: மிகவும் சுலபம். தூக்கம் இல்லாத ஒருவன் உன் பக்கத்தில் அமர்ந்து கொட்டாவி விட்டால்..... அதைப் பார்த்து நீயும் அவனுடன் சேர்ந்து விட்டால்.... கவனச்சிதைவு உன்னைக் கவ்விக் கொள்ளத் தயார் என்று அறி.
கேள்வி: எனக்கு இரவில் நிறைய சம்பந்தமற்ற கனவுகள் வருகின்றன. காலையில் எழும்போது மனதில் குழப்பங்கள் நிறைய இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?
பதில்: ஒரு வார காலம் இரவில் அதிக நேரம் செல்போனில் பார்க்காதே, கேட்காதே, பேசாதே. நல்ல தூக்கம் உனக்கு வரும். விழித்ததும் ஊக்கம் உனக்காகக் காத்திருக்கும்.
கேள்வி: மனிதன் செய்யும் பாவங்களில் அவனையே அழித்துவிடக்கூடிய பாவம் எது?
பதில்: அகம்பாவம்தான். நான் நான் என்று மார்தட்டிக் கொண்டு சொந்த வாழ்க்கையை மயானமாக்கிக் கொள்ளச் செய்வது இந்த பாவம்தான்.
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
ஏப்ரல், 2023