கேள்வி: மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கூறும் ஆத்ம நிர்பர் பாரத் - தற்சார்பு இந்தியா என்ற ஆக்கபூர்வமான சிந்தனையானது அடிப்படையில் சுவாமிவிவேகானந்தரின்கருத்துஎன்று கூறப்படுகிறதே, அது உண்மையா? - மாணவி மாலினி, திருவாரூர்.
பதில்: ஆம், தனிமனிதனுக்கு மட்டுமல்ல, நம் நாட்டுக்கே தன்னம்பிக்கை அவசியம் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.
தற்சார்பு இந்தியா என்ற ஒரு கருத்து மட்டுமல்ல, சுவாமிஜி ஆற்றிய தமிழகச் சொற்பொழிவுகளைப் படித்துப் பாருங்கள். அவற்றிலுள்ள விவேகானந்தரின் வீரிய விதைகள் சாதாரண மனிதனை லட்சிய மனிதனாக்கும்; அந்த லட்சிய மனிதனால் மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்; அடிமை நாட்டை உலகையே ஆளச் செய்யும் நாடாக மாற்றும் சக்தி அந்தச் சிந்தனைகளுக்கு உண்டு.
அவை எல்லாச் சமுதாய மற்றும் சமயங்களின் முன்னேற்றத்திற்காக அறிவுடனும் அக்கறையுடனும் அண்ணல் விவேகானந்தர் அருளியவை. ஓர் இந்தியன், விவேகானந்தரின் சிந்தனைகளுள் ஒரு முறையாவது மூழ்கினால்தான் அவன் முழு மனிதனாவான். சிறந்த இந்தியன் ஆவான்!
கேள்வி: இளைஞர்கள் என்றாலே குழம்பித் தவிப்பவர்கள் என்று பெரியவர்கள் குற்றம்சாட்டுவது, சரியா? - மாணவி அனுசுயா, நீலாங்கரை.
பதில்: இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் வயதில் மட்டும் வளர்ந்தவர்களா அல்லது அறிவிலும் வளர்ந்தவர்களா என்று பார். அறிவிலும் அனுபவத்
திலும் வளர்ந்தவர்கள் இளைஞர்களைத் தங்கக்கட்டிகளாகக் காண்பார்கள். அந்தத் தங்கக்கட்டிகள் நல்ல நகைகள் ஆக வேண்டும் என்று விரும்புவார்கள்.
அண்மையில் திருவாரூரில் உள்ள டிரினிட்டி அகடமி பள்ளியில் ஒரு மாணவியிடம், நீ வருங்காலத்தில் என்னவாக அதாவது என்ன பதவி வகிக்க விரும்புகிறாய் என்று கேட்டேன்.
அதற்கு அந்த மாணவி நிதானமாக, முதலில் நான் ஒரு நல்ல மனுஷியாகிறேன். அப்படி நான் மாறிவிட்டால் எந்தப் பதவியையும் என்னால் திறமையாகவும் பிறரது நன்மைக்காகவும் செய்யமுடியும், இல்லையா? என்றாள்.
இளைஞர்கள் தெளிவாக உள்ளார்கள்!
தெளிவுடன் இருந்தாலே அவர்கள் இளைஞர்கள்தான்!
கேள்வி:125 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் ராமகிருஷ்ண மிஷனின் முக்கியக் கோட்பாடு அல்லது செய்தி என்ன? அதை எனது இளம் நண்பர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகக் கூறுங்கள் சுவிர் அவர்களே! - மாணவன் பிராணதீஸ்வரன், நீலகிரி.
பதில்: பொதுவாக, வாழ்வின் ஆரம்பத்தில் நாம் மட்டும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் வாழ்வில் வளர வளர நாமும் முன்னேறி, பிறரையும் முன்னேற்றினால்தான் நமது வாழ்க்கை முழுமை பெறும் என்பது தெளிவாகும்.
தனிமனிதனின் தகுதியும் திறமையும் உயர்ந்தால் அந்த நாடும் உயரும். இது சுவாமி விவேகானந்தரின் ஒரு முக்கிய சிந்தனை. நான் முறையாக நல்லவனாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு என்னைச் சேர்ந்தவர்களையும் அவ்வாறு வைத்திருப்பது எனது கடமை ஆகிறது.
ஓர் எளிய உதாரணம். முன்பெல்லாம் ஹைவேஸில் காரில் போகும்
போது நமது டிரைவர் ஒழுங்காக ஓட்டிச் சென்றால் போதும், எந்த விபத்தும் நடக்காது.
ஆனால் இப்போதெல்லாம் நாம் நல்லபடி ஓட்டினால் மட்டும் போதாது. கண்டபடி எதிரே ஓட்டி வரும் அல்லது நமது முன்னோ, பின்னோ செல்லும் வாகன ஓட்டிகளும் மது குடித்திருக்காமல், மொபைலில் பேசிக் கொண்டு வராமல் கவனமாக ஓட்ட வேண்டும். தெருவில் வேகமாகப் போகிறேன் என எருமை வாகனம் உடையவரின் லோகத்திற்கு விரையக் கூடாது. இவ்வாறு நாம் நம்மோடு பயணிக்கும் மற்ற டிரைவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே பயணிப்போம். அந்தப் பிரார்த்தனையால் நமது பயணமும் பிறரது பயணமும் இனிதாகும்.
இந்த ஒரு முக்கியமான செய்தியை சுவாமி விவேகானந்தர் ஆத்மனோ மோக்ஷார்த்தம்; ஜகத் ஹிதாய ச - நீயும் முன்னேறி, பிறரையும் முன்னேற்று என்று ராமகிருஷ்ண மிஷனின் கோட்பாடாக வகுத்தார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
ஜூன், 2023