கேள்வி1: 158 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த சுவாமி விவேகானந்தரை இன்று நாம் கொண்டாடுவதில் என்ன பயன்? என்று என் நண்பர்கள் என்னைக் கேட்கிறார்கள். விவேகானந்த சுவாமியின் பக்தனாகிய நான் அவர்களுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?- க. புருஷோத்தமன், புதுக்கோட்டை.
பதில்: எத்தனையோ பேர் ஏன் பிறந்தோம்? எதற்குப் பிறந்தோம்? போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாது சாக்கடைப் புழுக்கள் போல் வாழ்வில் நெளிகிறார்கள்.
பொதுவாக, ஒருவன் தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதால் அவன் மட்டுமே திருப்தி பெறுகிறான். ஆனால் லட்சியவாதிகள் தங்களுக்கு ஓர் உடல் கிடைத்த தினத்தைக் கொண்டாடுவதைவிட தனது வாழ்க்கைக்கு ஓர் லட்சியம் கிடைத்ததை - அந்த லட்சியத்தைக் கொடுத்தவரது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள். விவேகானந்தரின் சிந்தனைகள், தியாகங்கள், அவரது வரலாறு ஆகியவை லட்சியவாதிகளுக்குப் புதிய பிறவியையே கொடுக்கிறது.
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் மக்களுக்கு சுவாமிஜி லட்சிய வாழ்க்கை முறையை வழங்குகிறார். அதைப் பெற்றதற்கான நன்றிக்கடனைத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் அவரது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். தாங்கள் பிறந்ததைவிட தங்கள் உள்ளத்திற்குள் விவேகானந்தர் பிறந்திருக்கிறார் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.
ஜனவரி 12, 2021. தேசிய இளைஞர் தினத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். இன்றைய பொறுப்பற்ற இளைஞர்கள் சிலர் தங்களது பிறந்த தினத்தை ஐஸ்கிரீமை முகத்தில் பூசிக் கொண்டோ, சாஃப்ட் ட்ரிங்க்ஸை நண்பர்களின் முகத்தில் அடித்துக் கொண்டோ, பைக்கில் பைத்தியமாகச் சுற்றிக்கொண்டோ கொண்டாடுகிறார்கள்.
ஆனால் விவேகானந்தவரது கருத்துகளைச் சுவாசித்தவர்கள் தங்களது பிறந்த தினத்தைச் சிலருக்காவது பயன்படும் வகையில் ஏதாவது நல்லது செய்வார்கள் என்று சொற்பொழிவில் கூறினேன்.
அடுத்த நாள் தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வரும் தினேஷ் என்ற சிறுவன் என்னிடம் வந்து, "மகராஜ், நா இப்போலேர்ந்து காசு சேத்து வரேன். மார்ச் 22-ஆம் தேதி என்னோட பொறந்த நாள்ல நா பத்து ஏழைகளுக்குச் சாப்பாடு போடுவேன்" என்றானே பார்க்கலாம். அந்தச் சிறுவனின் சிந்தனையுள் உதித்த நல்லெண்ணம், விவேகானந்தர் இன்றும் நம்மோடு வாழத் துடிக்கிறார் என்பதை நிரூபித்த தருணம். அது. சுவாமிஜியைக் கொண்டாடினால் நாமும் கொண்டாடப்படுவது நிச்சயம்.
தம்பி, இந்தச் சம்பவத்தையே நீ உன் நண்பனிடம் சொல். அவன் அதை ஒழுங்காகக் கேட்டால், அவன் நல்ல நண்பன் என்பதை உணர்.
சுவாமி விமூர்த்தானந்தர்
18 ஜனவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்