







1855-ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் தக்ஷிணேசுவரத்தில் பிரம்மாண்டமான காளி கோவில் கட்டி முடித்து, சில மாதங்கள் ஆகியிருந்தன. அங்கிருந்த இளம்பூஜாரி எனப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணரை வெளியுலகம் அறியாத காலம் அது.
அன்று ஓர் அசம்பாவிதம் நடந்தது. கோவிந்தஜி (பாலகிருஷ்ணன்) சிலையை க்ஷேத்ரநாத் என்ற பூஜாரி சயன அறைக்கு எடுத்துச் சென்றபோது விழுந்துவிட்டார். அதனால் சிலையின் பாதம் உடைந்தது. கோவிலின் உரிமையாளரான ராணி ராசமணிக்கும் அவரது மருமகனும் நிர்வாகியுமான மதுர்பாபுவிற்கும் பெரும் வருத்தம்; பூஜாரி மீது கடுங்கோபம்.
விக்னமான விக்கிரகத்தைப் பூஜிக்கலாமா என்பதை ஆராய, பண்டிதர் சபை கூடியது. அனைவரும் கூறியது ஒன்றுதான்: ‘உடைந்ததை கங்கையில் வீசிவிடு.’
நேற்றுவரை அச்சிலைக்குப் பூஜை செய்துவிட்டு, இன்று தள்ளிவைக்க அது என்ன வெறும் உருவமா? மனித உறவுகளில் அப்படி நடக்கலாம், தெய்வ உறவுகளிலும் அப்படியா? ராணியும் மதுர்பாபுவும் முடிவெடுக்க முடியாமல் திணறினார்கள்.
க்ஷேத்ரநாத் தவித்தார். சொர்ணமயி க்ஷேத்ரநாத்தின் மனைவி, பக்திமதி.
‘‘இப்படி ஒரு தெய்வக் குற்றம் வந்ததால் என்னை மதுர்பாபு சீக்கிரத்தில் உலகை விட்டே தூக்கிடுவார்...’’ என அழுதார் க்ஷேத்ரநாத். ஜமீன்தாரரான மதுர்பாபு இதுவரை அப்படி செய்யாததுதான் பலருக்கும் ஆச்சரியம்!
சொர்ணமயி கணவனின் கண்ணீரைத் துடைத்தபடி, ‘‘சுவாமி, பயப்படாதீர்கள். ஆமாம்..., உடைந்த சிலையைப் பூஜிக்கக் கூடாது என்று பண்டிதர்களா சொல்கிறார்கள்?’’ ஆச்சரியமாகக் கேட்டாள் சொர்ணமயி.
பாவம், அவளுக்குப் பண்டிதர்கள் எல்லோருமே அன்பான பக்தர்கள்தான்.
கிராமத்தைச் சேர்ந்தவள் சொர்ணமயி. அவள் ‘கைநாட்டுப்’ பேர்வழிதான். ஆனால் தான் நம்புவதை நிச்சயம் நிலைநாட்டுபவள் என்பதை அவளது கண்கள் கூறும்.
எளியவளான அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. தன் கணவன் ஏன் சின்னபூஜாரியிடம் போய் முறையிடக் கூடாது? என நினைத்தவள், இதைச் சொன்னால் இவர் கோபப்படுவாரே என்று தயங்கினாள்.
அவள் மெல்ல, ‘‘சுவாமி, உடைந்த சிலையை என்ன செய்வார்களோ தெரியாது...’’ என்பதற்குள், ‘‘பாபு என்னை என்ன செய்வார் என்பதுதானடி இப்போது பிரச்னை’’ என்று சிடுசிடுத்தார் க்ஷேத்ரநாத்.
‘‘நம் பிரச்னை தீர்ந்திட நீங்கள் சின்னப் பூஜாரியிடம் போய்க் கூறினால், அவர் நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவார்’’.
க்ஷேத்ரநாத், ‘‘அந்தப் பூஜாரியிடமா?’’ என இரைந்தார். சொர்ணமயி நிதானித்தாள்.
‘‘சுவாமி, உங்கள் எஜமானன் மதுர்பாபுவே சின்னப்பூஜாரி முன்பு அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்கிறாரே?’’ என்று சொர்ணமயி மடக்கினாள்.
ஸ்ரீராமகிருஷ்ணரை மதுர்பாபுவும் அவரது மனைவியும் தங்களது மாளிகையில் வரவழைத்துப் பாதசேவை செய்த காட்சி க்ஷேத்ரநாத்தின் மனத்திரையில் விரிந்தது.
ஆனாலும் க்ஷேத்ரநாத்தின் கர்வம் அவரைச் சரியாகச் சிந்திக்க விடவில்லை. “சின்னப்பூஜாரி பாபுவை ஏதோ மந்திர தந்திரம் செய்து தன் கைக்குள் போட்டிருக்கிறான்...’’ என்று புலம்பினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் கடுந்தவம், தெய்வ தரிசனங்கள், அவற்றை அறிந்து போற்றும் மதுர்பாபுவின் செயல்கள் - இவற்றைப் புரிந்து கொள்ளாத மற்ற பூஜாரிகள் சின்னப் பூஜாரியிடம் பொறாமை பிடித்தலைந்தனர்.
க்ஷேத்ரநாத், ஆளுக்குத் தகுந்தபடி வேடமிடுபவர். பணக்காரர் வந்தால் அதிக மந்திரங்கள் சொல்வார். அப்போது அவரது முகத்தில் பக்தி மாதிரி ஒன்று வழியுமே, விளக்கெண்ணெய் போல!
சின்னப்பூஜாரி தேவியுடன் பேசுவாராமே, தேவியும் அவருடன் பேசுவாளாமே என்பதை நம்பாதவர்கள் பலர் இருக்க, நம்பும் ஒரு சில நல்ல உள்ளங்களுள் சொர்ணமயியும் ஒருத்தி. ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டது, அவர் பக்தர்களைக் காக்கும் விதம் - இவை யாவும் அவளை அவரிடம் மதிப்பு கொள்ளச் செய்திருந்தன.
பிரச்னைகளுடன் பலர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் செல்லும்போது, அதற்கான தீர்வோடு பிரச்னையே காணாமல் போனது எத்தனையோ!
தன் கணவர் பூஜிக்கும்போது விக்கிரகத்தை, தெய்வ திருஷ்டியுடன் காணத் தவறுகிறார். ஐயோ, அதே தவற்றைத்தானே ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்க்கும்போதும் செய்கிறார் என அவள் அஞ்சினாள்.
உடலாலும், உள்ளத்தாலும் குப்புறக் கிடக்கிற கணவனை எப்படியாவது நிமிர்த்த முயன்றாள் சொர்ணமயி. க்ஷேத்ரநாத் பூணூலால் முதுகைத் தேய்த்தபடி அவளிடம் கோபப்பட்டார்.
க்ஷேத்ரநாத் தன்னைப் பார்க்க - இல்லை, துக்கம் விசாரிக்க வந்தவர்களுடன் சேர்ந்து பாபுவின் கோபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என ஆலோசனை கேட்டார். அதனால் அவருக்கு மரண பயமே கூடியது.
கையில் வெண்ணெயுடன் நெய்க்கு அலையும் இந்தச் ‘சடங்கர்கள்’ மீது சொர்ணமயிக்குப் பரிதாபமே வந்தது. திடீரென்று அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. அது வலுத்தது; சமையலை முடித்தாள்; கங்கைக்குச் சென்று மூழ்கினாள். ‘மா கங்கே, என் கணவரைக் காப்பாற்று’.
பிறகு சொம்பில் தீர்த்தம் கொண்டு வந்து அங்குள்ள 12 சிவலிங்கங்களுக்கும் ‘ஓம் நமசிவாய’ என்று கூறி அபிஷேகம் செய்தாள்.
சின்னபூஜாரியை நான் நேரில் பார்க்க முடியுமா? அவரைப் பார்ப்பது தன் கணவருக்குப் பிடிக்காதே. என் கணவர் சின்னபூஜாரியிடம் போக மாட்டார். நானும் போக முடியாது. ஆனால் என் மனதை அவருக்குத் திறந்து காட்ட முடியுமே!
‘சின்னபூஜாரி ஓர் அவதாரப் புருஷர் என்றால் என் அகத்தை அவர் நிச்சயம் அறிவார்’ என்று எண்ணி கோவிலுக்குச் சென்று விசாரித்தாள்.
பவதாரிணி கோவிலில் சின்னபூஜாரி பூஜை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்று தேவியை வணங்கி எதிரிலுள்ள நாட்டிய மண்டபத்தில் வந்து அமர்ந்தாள். ஜபம் செய்தாள். கணவன் தடுமாறினாலும் மனைவி சரியான இடத்தில் நின்றாள்!
ஓ, ஸ்ரீகிருஷ்ண லீலை ஒன்று மீண்டும் இங்கு அரங்கேறுகிறதோ!
வனத்தில் ரிஷிகள் யாகத்திற்கு வேண்டிய பல உணவுப் பண்டங்களை ஆஹுதியாக அளிக்க வைத்திருந்தனர். ‘எனக்குப் பசிக்கிறது, ஏதாவது வாங்கி வாருங்கள்’ என்று பாலகிருஷ்ணன் கூறித் தன் நண்பர்களை அவர்களிடம் அனுப்பினான்.
ரிஷிகள் யாருக்கு ஆஹுதி அளிக்கிறார்களோ, அந்த பரமாத்மாவே வந்து கை நீட்டுகிறான். ஆனால் அந்த ரிஷிகளோ அவரை அறிந்து கொள்ளாமல் ஆன்மிகத்தில் ஏமாந்துவிடுகிறார்கள்.
‘யாகமும் அதன் பலனுமே எங்களுக்கு முக்கியம்’ என எண்ணி கர்மகாண்டிகளான அந்த ரிஷிகள் கிருஷ்ணனுக்கு உணவு வழங்க மறுத்தார்கள்.
பிறகு கிருஷ்ணன் இடைச்சிறுவர்களிடம், ‘‘இப்போது கிருஷ்ணனுக்குப் பசிக்கிறது என ரிஷிபத்தினிகளிடம் போய்க் கூறுங்கள்’’ என்றான்.
சிறுவர்கள் சென்று சொன்னதும், ரிஷிபத்தினிகள் அனைத்தையும் கிருஷ்ணருக்காக வழங்கினர். அவர்களுக்கு யாக அறிவு குறைவாக இருந்தாலும், தெய்வம் வந்து கேட்டபோது தியாகத்தால் வந்த ஞானம் அவர்களிடத்தில் மிளிர்ந்ததே. அதனால் அவர்களுக்கு கிருஷ்ண அருள் கிடைத்தது.
அது போல் ராமகிருஷ்ண அருள் சொர்ணமயிக்குச் சித்திக்குமா?
கோவிலில் இரு விக்கிரகங்கள் இருப்பதாக சொர்ணமயி உணர்ந்தாள். ஒன்று, பவதாரிணி தேவியின் சிலை வடிவில், மற்றது ஸ்ரீராமகிருஷ்ண திருவுருவில்!
சொர்ணமயி, ‘ஓ டாகூர் (குருதேவா), நாங்கள் ஏழைகள். நீங்களே தெய்வம் என்று பலர் உங்களிடம் வருகிறார்கள். நான் அந்த ஞானமற்றவள். உங்களது மகிமை அறியாத என் கணவரை இக்கஷ்டத்திலிருந்து காப்பாற்றுங்கள்’ என்று கண்ணீருடன் வேண்டினாள்.
அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் தேவிக்குத் தீபாராதனை செய்ய ஆரம்பித்தார். மேளதாளங்கள் முழங்கின. பக்தர்கள் பரவசத்துடன் ‘ஜெய் மா’ என முழங்கினர். சொர்ணமயியும் தலைக்கு மேல் கைகூப்பி நின்றாள். பக்தி கண்ணீராக வழிந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர் சட்டென்று திரும்பினார். அவரது பார்வை நிலைத்த இடத்தில் கண்ணீருடன் சொர்ணமயி! பக்தையின் கண்ணீர், பகவானின் கருணையானது.
மறுநாள். ராசமணி மற்றும் மதுர்பாபுவின் முன்பு, பண்டிதர்கள் பலரும் மீண்டும் விதவிதமாகப் பேசினர். சாரமற்ற அந்த விவாதத்தின் சக்கை இது: ‘உடைந்ததை வீசிவிடு.’
நீதிபதி ஸ்தானத்தில் இருந்த ராசமணியின் மனது கொதித்தது: ‘சாஸ்திரங்கள் வறட்டு விஷயமல்லவே, வேதமாதா என்கிறார்களே! அதை இந்தப் பண்டிதர்கள் பாடம் பண்ணியிருக்கலாம்; ஆனால் அதன்படி பக்குவப்பட்டிருப்பார்களா?’
அதைப் புரிந்து கொண்டதுபோல் மதுர் அவரிடம், ‘‘மா, இவர்கள் சொல்வதை என் மனம் ஏற்கவில்லை’’ என்றார்.
ஒரு கணம் மௌனம். அவருள்ளே ஏதோ ஒன்று மலர்ந்தது. உடனே மதுர், ‘‘மா, இந்தப் பிரச்சினைப் பற்றி, சின்னபூஜாரியிடம் கேட்டாலென்ன?’’ என்றார்.
‘‘அட, இது எனக்குத் தோன்றவில்லையே! சரி, நாமே அவரிடம் செல்லலாம். இங்கு நாம் மூச்சுவிட முடியாதபடிக்கு வறட்டுத்தனமான ஏட்டறிவு குவிந்துள்ளது; சோட்டா பட்டாச்சாரியரிடமோ நெஞ்சை நெகிழ வைக்கும் இதயத்து அறிவு நிறைந்துள்ளது’’ என்று கூறி ராணி முன் நடந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் அறை. இந்திரிய நிக்கிரகமே ஒரு விக்கிரகமானது போல் அமர்ந்திருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். ராணியும் மதுரும் ஏனைய சிப்பந்திகளும் உள்ளே அமைதியாக வணங்கி அமர்ந்தனர்.
நடந்தது, நடப்பது, நடக்கப் போகும் அனைத்தையும் அறிந்தவரிடம் நான்கு வயது சிறுவனாகப் பேசினார் மதுர்பாபு.
‘‘கோவிந்தஜி உடைந்துவிட்டார் பாபா’’ என்று கூறுவதற்குள், ஸ்ரீராமகிருஷ்ணர் பலமாகச் சிரித்து, ‘‘ஓம் காளி, ஜெய் கோவிந்தா. சிதைக்க முடியாத முழுமையான பரம்பொருள் உடையுமா?’’ என்று கேட்டார்.
என்ன சொல்கிறார் இவர்? ராணியும் கவனமாகக் கேட்டார். பக்தர்கள் ஆவலானார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் கண்களை மூடினார். சிலை உடைந்தது, அதற்கான தீர்ப்பு, க்ஷேத்ரநாத்தின் அவலம், சொர்ணமயியின் பக்தி என எல்லாமே ஒரு கணம் அவரது கண்முன் விரிந்தது போலும்.
ஸ்ரீராமகிருஷ்ணர் புன்னகையுடன் அந்தர்முகமாக - அன்னை பராசக்தியிடம் பேசுவது போல், ‘‘சிலை உடைந்துவிட்டால் விட்டெறிந்து விடுவார்களா என்ன? ராணியின் மருமகன்களுள் ஒருவர் காலை ஒடித்துக் கொண்டால், அவரை ஒதுக்கிவிட்டுப் புது மருமகனை ஏற்பாடு செய்வார்களா? அல்லது காலுக்குச் சிகிச்சை செய்வார்களா? இங்கும் அதேதான். சிலையைச் செப்பனிட்டுப் பூஜையைத் தொடரலாம்” என ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதும் எல்லோரும் வாயடைத்து நெஞ்சம் திறந்து நின்றனர்.
ராணி தனது குழந்தை காப்பாற்றப்பட்டதுபோல் உணர்ந்தார்.
‘உண்மைதானே! இவ்வளவு எளிய வழி ஒருவருக்கும் உதிக்கவில்லையே! கோயில் விக்கிரகம் உயிருணர்வுடன் இருக்குமானால், அது பக்தர்களின் ஆழ்ந்த பக்தியாலும் இறைவனின் கருணையாலும்தான் உண்டாகிறது. ஆகவே உள்ளத்தில் பக்தியும் அன்பும் நம்பிக்கையும் இருக்கும்போது, உடைந்த சிலையில் ஏன் சைதன்யம் இருக்க முடியாது?
‘விக்னமான விக்கிரகத்திற்குப் பூஜை செய்யக் கூடாது என்று ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள நியதி, இறைவனிடம் அன்பு இல்லாதவர்களுக்கும், பக்தி மார்க்கத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும்தான்’ என்றெல்லாம் எண்ணி, ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவறச் சீடரான சுவாமி சாரதானந்தர் பிற்காலத்தில் எழுதினார். – (குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பாகம் 2 - பக்கம் 183)
எதையும் விமர்சிப்பவர்கள் இத்தீர்ப்பையும் சுக்கு நூறாக்கினர்; ஆனால் அதைப் பொறுக்கத்தான் ஆளில்லை.
வெளியில் வரும்போது ‘சின்னபூஜாரியே சிதைந்த சிலையைச் சரி செய்யக்கூடியவர்தான்’ என மதுர் ராணியிடம் கூறினார்.
வெளியில் பூஜாரிகள் கூடி நின்றிருந்தார்கள். உயிர் போகும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த க்ஷேத்ரநாத்தைக் கடந்து சென்றபோது மதுர் மிடுக்குடன், ‘‘ஓய் பூஜாரி, நீர் போட்டு உடைத்தது சிலை மட்டுமல்ல ஐயா, விக்ரக வழிபாடு பற்றிய எங்களது அல்ப கருத்துக்களையும் போட்டு உடைத்துவிட்டீர், சபாஷ்’’ என்று கூறி பலமாகச் சிரித்தார்.
தலை தப்பிய குஷியில் க்ஷேத்ரநாத் நன்றி கூறினார் கண்ணீருடன்.
பண்டிதர்கள் தட்சிணைகளைப் பெறப் பரபரத்தார்கள். பூஜாரிகள் நடந்ததைப் பற்றிக் கதையளக்க விரைந்தனர். ராணியின் பரிவாரம் அரண்மனைக்குத் திரும்பியது. எல்லோரும் அவரவர் பாதையில் போக...,
ஒருத்தி மட்டும் பிரேமைக்கண்ணீருடன் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிக்க விரைந்தாள். அவள் சொர்ணமயி!
(ஸ்ரீராமகிருஷ்ணரின் தெய்விக வரலாற்றின் இந்தச் சம்பவத்தில் வரும் சொர்ணமயி மட்டும் கற்பனைப் பாத்திரம் என்றாலும் அவள் ஒரு சத்பாத்திரம். இந்தக் கதாசிரியனின் எளிய பக்தி இவளாக உருவம் எடுத்தது! ஜெய் மா!)
சுவாமி விமூர்த்தானந்தர்,
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்
08.11.2026
