அலெக்சாண்டர் கற்ற பாடமும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கற்பித்த பாடமும்

26.05.26 05:59 PM - By thanjavur

ஓம்சக்தி மாத இதழில் மே, 2026-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. 

This Article written by Swami Vimurtananda appeared in Omsakthi on May, 2026. 

உலகை வென்றதாக நம்பியவர் அலெக்ஸாண்டர். அவர் உலகம் முழுவதையும் வென்று விட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி மக்களை நம்பச் செய்து விட்டார்கள். ஆனால் அவர் நம் சனாதன பூமியில் கற்ற பாடங்கள் பல. அவை அவரது வரலாற்றில் இடம் பெறவில்லை. வேண்டுமென்றே சேர்க்கப்படவில்லை.

 

ஆனாலும் உண்மைச் சரித்திரம் கூறும் ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.

 

அலெக்சாண்டரின் குரு அரிஸ்டாட்டில், இந்தியாவிலிருந்து ஒரு யோகியைத் தங்களது நாட்டிற்கு அழைத்து வரும்படி அன்புக் கட்டளை இட்டிருந்தார். அதன்படி, அலெக்சாண்டர் ஒரு யோகியைச் சந்தித்தார். முதலில் அன்பாகவும், பிறகு பொருள் காட்டியும் மயக்கி அவரைத் தம்மோடு அழைத்துச் செல்ல முயன்றார்.

 

பரம்பொருளில் லயித்திருந்த பாரத யோகி அலெக்சாண்டரைப் பொருட்படுத்த வில்லை. அரசர் மிரட்டினார், பயமுறுத்தினார்: "நான் உலகையே வென்றவன். யோகியே, நீ எனக்குத் துச்சம். உன்னை இப்போதே நசுக்கி விடுவேன்."

 

அலெக்சாண்டரின் தளபதிகள் நடுங்கினார்கள். அவர் யாரையும் இப்படி மிரட்டியதில்லை. அவர் கண் காட்டினாலே உயிரெடுக்கும் கொடூரமான தளபதிகள் அவர்கள். ஆனால் இந்திய யோகியோ புன்னகையுடன் அலெக்சாண்டரை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டார்: "ராஜாவே, நீ வென்றதாக நினைக்கும் இவ்வுலகத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? .....சரி, ஒரு கேள்வி கேட்கிறேன்."

 

அகங்காரத்தின் உச்சியில் இருந்த அலெக்சாண்டர், தன்னிடம் ஒருவர் இப்படி ஒரு கேள்வி கேட்க முடியும் என்பதை நம்பவே முடியவில்லை.

 

"கேள் யோகியே, கேள்வி கேட்ட பிறகு நீ உயிரோடு இருக்கப் போவதில்லை" என்று அலெக்ஸாண்டர் கோபத்துடன் கத்தினார்.

 

"மன்னா, நீ ஓர் அடர்ந்த காட்டிற்குள் தனியாகச் சிக்கிக் கொண்டாய். அங்கிருந்து வெளியே வருவதற்கு வழி தெரியவில்லை. கடும் வெயில். நீ தாகத்தில் தவிக்கிறாய். எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. ஒரு குவளை நீருக்காக நீ ஏங்குகிறாய். தாகத்தால் நீ செத்திடுவாய் என்று அஞ்சுகிறாய். அப்போது ஒருவர் ‘நான் நீர் தருகிறேன்; எனக்கு நீ என்ன தருவாய்?’ என்று உன்னிடம் கேட்கிறார்."

 

அலெக்சாண்டர் அலட்சியமாக, "அந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியில்லாதபோது, என் ராஜ்யத்தில் கால் பங்கினைத் தருகிறேன் என்பேன்" என்றார்.

 

"அப்போதும் அவர் நீர் தராவிட்டால்..., ராஜா?"

 

"அரைப் பங்கு ராஜ்யத்தைத் தருகிறேன் என்று அவருக்கு ஆசை காட்டுவேன்."

 

"அப்படியும் அவர் இணங்கவில்லை என்றால், என்ன செய்வாய், அரசே?"

 

"நீரின்றித் தவித்துச் சாவதை விட, என் மொத்த ராஜ்யத்தையும் அவருக்குத் தந்து நீர் கொடு என்று அவரிடம் கேட்பேன்" என்று அலெக்சாண்டர் சற்று ஆழ்ந்து யோசித்துக் கூறினார். இதைச் சொன்னபோது அலெக்சாண்டருக்கு உண்மையில் நாக்கு வறண்டுவிட்டது. யோகி மெல்லச் சிரித்தார்.

 

"அப்படி என்றால், நீ பெற்ற மொத்த ராஜ்யத்தின் மதிப்பு என்பது ஒரு குவளை நீருக்கான மதிப்புதான் இல்லையா?"

 

அலெக்சாண்டரின் அகங்காரம் கவிழ்ந்தது காலிப் பாத்திரமாக. உண்மையில் உலகை வென்றது தானா, அல்லது இந்த யோகியா என்ற சிந்தனை அவருக்கு உதித்தது.

 

பெரிதாகச் சாதித்துவிட்டதாக நினைக்கும் மனிதனின் சாதனைகள் பலவும் சாதாரணமானவை. இயற்கையாகக் கிடைக்கும் சக்திகளே நம்மை வாழ வைக்கின்றன. நாம் வாழ்வதற்கு உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும், அடிப்படையில் எது வேண்டுமோ அது இல்லாதபோது, எது இருந்தும் பயனில்லை. இந்த ஆழமான உண்மையை உணர்த்துவதற்கு பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு கதை கூறுவார்.

 

ஒரு குருவிடம் சீடன் ஒருவன் சென்று, தனக்கு இறைதரிசனம் பெற்றுத் தரும்படிக் கேட்டான். சீடன் திரும்பத் திரும்ப அதே கேள்வியை குருவிடம் கேட்டான். ஆன்மீகத்தில் சீடனுக்கு ஊக்கம் உள்ளதா? அந்த ஊக்கம் வலுப் பெற்று இறை ஏக்கமாக மாறி இருக்கிறதா? என்று குரு கவனித்து வந்தார்.

 

அவசரத்தைக் காட்டிய அளவிற்கு ஆர்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சீடன் உணரவில்லை. அதனால், சீடனின் கேள்விக்கு குரு வித்தியாசமாகப் பதில் தந்தார். குரு சீடனை அழைத்துக் கொண்டு ஒரு குளத்திற்குச் சென்றார். இருவரும் குளத்தில் இறங்கினர். சட்டென்று குரு சீடனது தலையை நீரில் அமுக்கினார். சீடன் திணறினான், கைகளை அடித்துக் கொண்டான், கத்தினான். குரு அவனை விடுவித்தார்.

 

"மகனே, நான் உன்னை நீரில் மூழ்கடித்தபோது உனக்கு என்ன தேவைப்பட்டது?"

 

மூச்சு திணறிக் கொண்டே சீடன், "உயிர் பிழைக்க மூச்சு இருந்தால் மட்டும் போதும்; வேறு ஒன்றுமே தேவைப்படவில்லை" என்றான்.

 

"நான் உனக்கு கோடி கோடியாகப் பணமும், செல்வமும், சொத்துக்களும் அந்தக் கணத்தில் கொடுத்திருந்தால், நீ அதை ஏற்றிருப்பாயா?"

 

"இது என்ன பேச்சு, குருவே! நீரில் மூழ்கியபோது மூச்சுதான் முக்கியம். உயிர் மட்டுமே எனக்கு வேண்டி இருந்தது. வேறு எது கிடைத்தாலும், உயிர் இல்லாமல் என்ன செய்ய முடியும்?"

 

"ஆம், செல்வா! இது போன்றுதான் இறைவனைத் தேடும்போது அவனை மட்டுமே நாம் நாட வேண்டும். அந்த நாட்டம் இருந்தால் தெய்வம் உன்னைத் தேடி வந்தடையும்" என்று கூறி ஆசீர்வதித்தார் குரு.

 

உலகில் பெரிதாக இருக்கும் எதுவும், சிறிதாக உள்ள சிற்றுயிரைக் காப்பாற்றும் அளவிற்குத்தான் அந்தப் பொருளும் பெரிதாகப் பயன்படும்.

சுவாமி விமூர்த்தானந்தர்,

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

26.05.2026

thanjavur