ஆங்கிலப் புத்தாண்டில் அகிலத்திற்கு ஓர் ஆசீர்வாதம் 

03.01.26 07:42 PM - By thanjavur

"ஆங்கிலப் புத்தாண்டில் அகிலத்திற்கு ஓர் ஆசீர்வாதம்" என்ற கட்டுரை 'ஓம் சக்தி' பத்திரிகையில் சுவாமி விமூர்த்தானந்தர் எழுதியுள்ளதை நீங்கள் வாசிக்க வழங்கி உள்ளோம்.

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டில் பலரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வர். இப்படிப்பட்ட வாழ்த்துக்களில் 90 சதவிகிதம் ஃபார்வேர்ட் செய்யப்படுவதுதான், அதுவும் எந்திர கதியில்.

 

இது போன்ற வாழ்த்துக்களைப் பலரும் படிப்பதேயில்லை என்று தோன்றுகிறது. ஏன் படிக்க வேண்டும்? எல்லாமே.... எழுதியது யாரோ! இதயத்திலிருந்து வரும் எண்ணங்களோ, ஆசிகளோ, வாழ்த்தோ இருப்பதாகத் தெரியவில்லை.

 

புத்தாண்டு போன்ற ஒரு நன்னாளில் நமக்கு யாராவது நல்ல ஆசீர்வாதம் தருவார்களா என்று ஏங்குகிறோம். அந்த ஆசீர்வாதத்தின் மூலம் நாம் அன்றாட வாழ்க்கை முதல் ஆன்மீக வாழ்க்கை வரை செம்மையாக வளர முடியுமா என்று தவிக்கிறோம். அந்தக் குறையை யாராவது நமக்குத் தீர்த்து வைப்பாரா?

 

நான் இருக்கிறேன் என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் அனைவருக்கும் சிறப்பு ஆசீர்வாதம் தருகிறார், அதுவும் புத்தாண்டு நாளிலேயே.

 

ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசியைப் பெறத்தான் அல்லது சிறிதளவாவது பெற்று வருவதால்தான் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் ஜனவரி 1 - இல் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் எங்கு ஆசி பொழிந்தாரோ அந்த இடத்தில், மேற்கு வங்காளத்தில் காசிப்பூர் என்ற இடத்தில் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள்; அவரைத் தரிசிக்கிறார்கள். அருள் பெறுகிறார்கள்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் அன்று எவ்வாறு பக்தர்களை ஆசீர்வதித்தார்? அவரது ஆசீர்வாதம் எப்படிப்பட்டது? அந்த ஆசி அங்கிருந்த ஒரு சிலருக்கு மட்டுந்தானா? அந்த அருளாசி நமக்கும் கிட்டுமா?

 

ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் லட்சக்கணக்கில் மேற்கு வங்காளத்தில் உள்ள காசிப்பூரில் காத்திருக்கிறார்கள். ஆண்டில் ஒருமுறை அந்தப் பக்தர்கள் இதோ இந்த அருளை ஆசியாகப் பெற்றுச் செல்கிறார்கள்:

 

'மக்களே, முதலில் ஆண்டவனின் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் எதைப் பெற்றாலும் அது நன்றாகவே அமையும். மாறாக, ஆண்டவனின் அருள் இல்லாமல் எதைப் பெற்றாலும் மனிதனுக்கு அது நன்கு அமைவதில்லை. நீங்கள் விரும்பிய எதைப் பெற வேண்டுமானாலும் கடவுளிடம் வேண்டி அவரது அருளால் பெறுங்கள்.'

 

'முதலில் இறைவன், பிறகு உலகம்' - அதாவது 'முதலில் தெய்வ அருளைப் பெறு; பிறகு உலக காரியங்களில் ஈடுபடு' என்பது ஆன்மீகத்தின் சாரமான ஒரு கருத்து.

 

மூல முதல்வன் இறைவனாகிய 1 என்ற இலக்கத்தைப் போடுங்கள். பிறகு அந்த ஒன்றுடன் எவ்வளவு பூஜ்யங்கள் சேர்த்தாலும் பூஜ்யங்களுக்கும் மதிப்பு; 1 என்ற இறைவனுக்கும் மகிமை கூடும். அருள் நிறைந்த இந்த ஒரு செய்தியை ஆசியாக ஸ்ரீராமகிருஷ்ணர் அகிலத்திற்கு அறிவிக்க ஜனவரி 1-ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தாரோ!

 

 

ஸ்ரீராமகிருஷ்ணர் கல்பதருவாக மாறிய நிகழ்வு

 

மேற்கு வங்காளத்திலுள்ள காசிப்பூர் தோட்ட வீட்டில் தொண்டைப் புண் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். 1886, ஜனவரி 1. பிற்பகல் 3 மணி. தோட்டத்தில் சற்று உலாவி வர வெளியே வந்தார். ஆங்காங்கிருந்த பக்தர்கள் ஓடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டு வணங்கினர். பிரேமைக் கண்ணீருடன் அவரைத் தரிசித்தனர்.

 

பிரபல நாடக ஆசிரியரும் தேர்ந்த பக்தருமான கிரீஷ்பாபுவிடம் ஸ்ரீராமகிருஷ்ணர்," 'நான் ஓர் அவதாரபுருஷர்', என்று நீ என்னைப் பற்றி எல்லோரிடமும் கூறி வருகிறாயே, அப்படி என்ன அதிசயத்தை என்னிடம் கண்டுவிட்டாய்?" என்று கேட்டார்.

 

கிரீஷ்பாபு பலவிதமான பாவங்களைச் செய்த பிறகு பகவானிடம் அடைக்கலம் அடைந்தவர்; பாவம் நீங்கப் பெற்று அருள் நிரம்பப் பெற்றவர். அப்படிப்பட்ட கிரீஷ்பாபு குருதேவரின் திருமுன்பு மண்டியிட்டுக் கரம் கூப்பி, "சுவாமி, நான் என்ன கூறுவேன்? ராமாயணம் தொகுத்த வால்மீகியும் மகாபாரதம் யாத்த வியாசருமே யாருடைய பெருமையைக் கூற வார்த்தைகள் அற்றுப் போனார்களோ, அப்படிப்பட்டவரைப் பற்றி நான் என்ன கூற முடியும்?" என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.

 

அவ்வாறு கிரீஷ்பாபு கூறியதும் ஸ்ரீராமகிருஷ்ணர் பரவசநிலை அடைந்தார். மிகுந்த பக்தியுடன் கூறப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் குருதேவர் அருள் சொரிய, "நான் இன்னும் கூற என்ன உள்ளது? உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன்; நீங்கள் எல்லோரும் ஆன்மீக விழிப்பு பெறுங்கள்" என்று ஆசீர்வதித்தார்.

 

ஸ்ரீராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் விபீஷணனையும் அர்ஜுனனையும் நிமித்தமாகக் கொண்டு எல்லா காலத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் அபயமும் வழங்கினர். அருள் வழங்கியபோது ஸ்ரீராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் இருந்தது போன்ற அந்த ஆன்மிகப் பெருநிலையில் நிலைத்திருந்துதான் ஸ்ரீராமகிருஷ்ணரும் ‘ஆன்மிக விழிப்பு பெறுங்கள்’ என அன்று ஆசீர்வதித்தார்!

 

'யார் ஸ்ரீராமராகவும் ஸ்ரீகிருஷ்ண ராகவும் அவதரித்தாரோ, அவரே இப்போது ராமகிருஷ்ணராக வந்திருக்கிறார்' என்று ஸ்ரீராமகிருஷ்ணரே பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அவதார நினைவூட்டலைத் தூண்டும் வகையில் கிரீஷ்பாபுவின் பக்தி அமைந்திருந்தது. அதனால்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் முந்தைய அவதாரங்களில் எவ்வாறு கல்பதருவாக விளங்கி அருளாசி வழங்கினாரோ, அவ்வாறே ராமகிருஷ்ண அவதாரத்திலும் கல்பதருவாக மாறி அருள்புரிந்தார்!

 

பரவச நிலையில் இருந்தவாறு ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய இந்தப் புனிதமான வார்த்தைகளைக் கேட்டு, பக்தர்கள் ஆனந்தப் பெருக்குடன் அவர் முன் வீழ்ந்து வணங்கினார்கள்; ஒவ்வொருவரையும் குருதேவர் தொட்டு ஆசீர்வதித்தார்.

குருதேவரது தெய்வீக ஸ்பரிசத்தால் அன்று பக்தர்களின் மனங்களிலிருந்த பல வருடத்து சஞ்சலங்களும் கர்மவினைகளும் நீங்கின. நிறைவேறாத ஆன்மீக ஆவல்கள் அனைத்தும் அவர்களுக்குப் பூர்த்தியாயின. சிலருக்குத் தங்களின் இஷ்டதெய்வ தரிசனங்கள் கிடைத்தன. இறைவன் மட்டுமே சத்தியம் என்று ஒவ்வொருவருக்கும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

 

மங்கல வாக்கியம் அல்ல, மந்திர வாக்கியம்

 

138 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் ஒவ்வொரு புத்தாண்டிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் ஈர்க்கப்படுவதற்குக் காரணம் என்ன?

 

நீங்கள் எந்தக் குறையும் இன்றி நன்றாக இருங்கள்- பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள்- வாழ்க வளமுடன் என்றெல்லாம் பலரும் உங்களையும் வாழ்த்தி இருப்பார்கள். அந்த வாழ்த்துச் செய்திகள் எல்லாம் உங்களுக்குப் புரிகின்றன.

 

ஆனால் ''உங்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படட்டும்" என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றால் என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் வருகிறது.

 

குருதேவர் கல்பதரு ஆசியாக அன்று கூறியது, பக்தர்களின் நன்மைக்கான மங்கள வாக்கியம் மட்டுமல்ல, அது உலகம் முழுவதிலும் உள்ள எல்லா சமயத்தின் பக்தர்களும் நினைந்து நினைந்து உருக வேண்டிய மந்திர வாக்கியமும் ஆகும்.

 

குருதேவரின் இந்த ஆசியை அனுபவத்தில் புரிந்து கொண்டாலோ அல்லது உணர்வுரீதியான அனுபவம் பெற்றாலோ, குறைந்தபட்சம் நேர்மையாக, எளிமையாக நம்பினால்கூட பெரும் பயன் கிடைக்கும்.

 

இந்த உலகம் நமக்குக் கற்றுத் தருவதெல்லாம், நாமே உடல், நாமே மனம், நாமே பெரிய ஆள், என்னை விட்டால் வேறு ஆளே இல்லை என்று நம்ப வைத்து நம்மைக் குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விடுகிறது. நமது உண்மையான இயல்பு தெய்வீகமானது; நாம் ஆன்ம சொரூபீகள். இந்த நமது மெய்யான இயல்பை தெய்வீக புருஷர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். ஆன்ம அறிவை அள்ளி வழங்குகிறார்கள்.

இந்த ஞானமும் போதமும் நமக்குக் கிடைக்கும்போது நாம் நமது மேலான நிலையை அடைகின்றோம்.

 

எங்கோ காட்டில் சுற்றிக் கொண்டிருந்தவன், உண்மையில் தான் காணாமல் போன இளவரசன் என்பதைப் புரிந்து கொண்டு இழந்த தனது ஆட்சியைப் பிடித்த கதைதான் நமக்குள் நடக்கிறது. அந்த தெய்வீக நினைவூட்டலைப் புனிதமான சக்தியுடன் நமக்கு அருளியவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

 

இருக்கும் சொர்க்கமும் இல்லாத நரகமும்

 

இப்படி அவதாரங்கள் அபயமளிக்கும் வாக்குறுதிகளைப் பல அருளியிருந்தாலும், தற்கால மனிதன் சென்றதையே எண்ணிச் சோகம் பிடித்துத் திரிகிறான். இருக்கும் சொர்க்கத்தை நழுவ விட்டு இவனாகவே நரகத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

 

ஜென் குரு ஒருவர் வாழத் தெரியாதவர்களின் நிலை பற்றி, ‘எப்போதும் யாரிடமாவது தனது குறைகளைக் கூறி அழுவதில் பெரும் திருப்தி காண்பவன் மனிதன்’ என்று கூறுகிறார். தான் அழுவதைப் பிறர் காது கொடுத்துக் கேட்க அவன் பணம்கூடத் தருகிறான். மனோதத்துவ நிபுணர்களிடம் பலர் செல்வது இது போலத்தானோ?

 

மகாகவி பாரதியார் இப்படிப்பட்ட மனிதர்களைப் பாவி என்று அழைக்கிறார். 'எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி' என்று வரையறுக்கிறார்.

 

மன அழுத்தம், மன உளைச்சல், சம்சார பந்தம், பலவீனம், சோகம், மோகம் என்று ஏதோ சில பிரச்னைகள் எல்லோரிடமும் இருக்கவே செய்யும். இவற்றை எதிர்கொள்ள, நிரந்தரத் தீர்வு தர முடியாத வேறொரு சாதாரண மனிதனிடம் செல்வது சரியான பயனளிக்குமா?

 

மாறாக, அருளாளர்களிடம் மற்றும் அவதாரபுருஷர்களிடம் பக்தி கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர்கள் நம் சோகங்களை மட்டுமன்றி, அவற்றின் மூல காரணங்களையும் நீக்கி நம்மை உயர் வாழ்க்கை வாழ வைக்கின்றனர்.

 

நமக்குத் தெய்வீக விழிப்புணர்வு ஏற்பட்டால்.... விவேகானந்தர் என்ன கூறுகிறார்?

 

சுவாமி விவேகானந்தர் நம்மிடம் இருக்கும் தடைகளைப் பட்டியலிடுகிறார்: "...‌அளவுக்கதிகமான சோம்பல், அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் -இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது. படிந்தவண்ணமே உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள்."

 

'நாம் தெய்வீகமானவர்கள்' என்பதை உணரும்போது தூங்கிக் கொண்டிருக்கின்ற நமது ஆன்மசக்தி விழித்தெழும். அதன் பின் என்ன நடக்கும் என்பதை சுவாமி விவேகானந்தருடைய வார்த்தைகளில் கவனியுங்கள்:

 

"ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மையான இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும்; பெருமை வரும்; நன்மை வரும்; தூய்மை வரும்; எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்." (-சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் ஆற்றிய உரையிலிருந்து.)

 

இவ்வாறு சுவாமி விவேகானந்தர் தமது தவத்தாலும் உரைகளாலும் தனிமனிதனுக்கு மட்டுமல்லாமல் நம் நாட்டிற்கே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

ஏசுபிரானின் சிஷ்யை மேரி தன் சகோதரர் லெஸாரஸை இழந்து மிகுந்த துக்கத்திற்கு உள்ளானார். அவள் ஏசுவிடம் சென்று தன் துயரத்தைக் கொட்டி அழுதாள். தன் சகோதரனை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என்று மன்றாடினாள். மேரியின் துயர் கண்டு மனம் உருகிய கருணையே உருவான ஏசுபிரான் லெஸாரஸின் சமாதிக்குச் சென்றார்.

 

அவரின் உடலுக்கு முன்பு அழுதார். கண்ணீருடன் இரு கைகளையும் நீட்டி 'எழுந்து வா, லெஸாரஸ்' என்றார். உடனே அவர் உயிர் பெற்று எழுந்து வந்தார் என்று பைபிள் கூறுகிறது.

 

விவேகானந்தரின் வரலாற்றை எழுதிய நோபல் பரிசு பெற்ற ரொமா ரோலா என்ற பிரெஞ்சு அறிஞர், 'அன்று மகான் ஏசு, லெஸாரஸுக்குச் செய்ததுபோல், உறங்கிக் கொண்டிருந்த இந்தியாவைப் பார்த்து சுவாமி விவேகானந்தர், 'பாரதமே! எழுந்திடு, விழித்திடு' என்றார். அதன் பிறகுதான் பாரதம் மெல்ல எழுந்தது. அரசியல் இயக்கங்கள் தோன்ற தேசம் விடுதலை பெற்றது. சுவாமி ரங்கநாதானந்தர் தமது சொற்பொழிவில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

 

தலையெழுத்தையே மாற்றுபவர்

 

பொதுவாக, ஸ்ரீராமகிருஷ்ணர், தம்மை இறைவனின் பக்தனாக, தாசனாகக் கருதியவர். அவருக்குப் தம்மைப் பற்றிப் பிறர் கூறும் குரு, பாபா, கர்த்தா ஆகிய வார்த்தைகள் பிடிப்பதில்லை. என்றாலும் அவர் ஒருமுறை தாமே ‘அமி கர்மநாசா’ என்று கூறினார். அதாவது 'நான் கர்மபந்தங்களை வேரறுப்பவன்' என்று பொருள்.

 

இந்த உத்தரவாதம் பகவத் கீதையில் ‘பக்தனே! உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்- ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ என்ற ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தைகளின் வங்க மொழியாக்கம் போலுள்ளது.

 

மேலும், ஸ்ரீராமகிருஷ்ணரை 'கபால மோசனர்' - ‘தலையெழுத்தையே மாற்றி எழுத வல்லவர்’ என்றும் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். அப்படிப்பட்டவர் அருளிய ஆசீர்வாதம் நமக்கும் நற்கதியை நிச்சயம் வழங்கும்.

 

சாரமாக, ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்கு அளிக்கும் அபய வார்த்தை "மனிதா! நீ உன் கர்மவினைகளைப் பார்க்காதே. கடவுளின் கருணையைப் பார்" என்பதுதான்.

 

குருதேவரின் இந்த அருளில் திட நம்பிக்கை கொள்ளாது, பலரும் தங்கள் பாவங்களையும் பலவீனங்களையும் பற்றி மட்டுமே எண்ணி மருகுகின்றனர். தாயினும் சாலப் பரிந்தூட்டும் குருதேவரின் அருளிருக்க, நிம்மதியைத் தேடி அங்குமிங்கும் அலைய வேண்டாம்.

 

தூசி தீயில் விழுந்தால் பொசுங்கும்; அதை நாமே மெனக்கெட்டுக் கண்ணில் விழும்படி வைத்துக் கொண்டால் கலங்கடிக்கும். பாவச்சுமையை மனதில் நாமாகவே தக்கவைத்துக் கொண்டால் பெரும் துன்பம் தரும். பாவச் சுமைகளையும், பாவ நினைவுகளையும், வறுமையையும், பலவீனங்களையும், எவையெல்லாம் உங்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறதோ, அவற்றை இந்த கல்பதரு நன்னாளில் பகவானின் திருவடியில் இறக்கி வைத்து விடுங்கள்.

 

இறைவனின் கருணை முன்பு நம் குற்றங்கள் அனைத்தும், ஆண்டாளம்மா கூறுவது போல ‘தீயினில் தூசு’ ஆகிவிடும்; மகாகவி பாரதி கூறுவது போல ‘பரிதி முன் பனித்துளி’ ஆகிவிடும்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் இன்றும் நம்மிடையே நமக்குத் தம்மையே தரும் கற்பகமாக விளங்குகிறார். அவரது கல்பதரு வாக்குறுதியைப் இறைபக்தி மற்றும் மக்கள் தொண்டின் மூலம் நாம் விரைவில் உணரலாம்.

 

' ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற நித்திய கல்பதருவின் அடியில் இளைப்பாற எனக்கும் ஓர் இடத்தை அவரே எனக்குத் தந்துள்ளார்' என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பக்தரும் உறுதியுடன் நிற்க வேண்டும்.

'தெய்வம் நமக்குத் துணை பாப்பா -

ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா' என்பதே நமக்கு இந்தப் புத்தாண்டுச் செய்தியாக அமையட்டும்.

 

'உங்கள் அனைவருக்கும் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படட்டும்' என்று அன்றைய பக்தர்களிடம் கூறிய ஸ்ரீராமகிருஷ்ணர், இன்று நம்மிடமும் அதையே கூறி நம்மை ஆசீர்வதிக்க மாட்டாரா என்று ஏங்குவோம்!

அந்த ஏக்கம் ஜென்ம ஜென்மாந்திர மாகத் தூங்கிக்கொண்டிருக்கும் நம் ஆன்மாவைத் தட்டி எழுப்பும். அந்த இறை ஏக்கம் நமக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது ஊக்கத்தைப் பெருக்கும். அந்த ஏக்கமே நமது தொடர் பிரார்த்தனையாக இருக்கட்டும். இந்தப் பயிற்சியிலேயே நம் வாழ்க்கை செம்மை ஆகட்டும்.


சுவாமி விமூர்த்தானந்தர்,

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur