





‘தேகம் உன்னை விடும் முன்பு, நீ தேகத்தை விடு!
அதாவது உடல் பற்றை விட்டு
உள்ளே இருக்கும் உத்தமனைப் பிடி.’
கடவுளைக் கணந்தோறும் நம்பி, வரும் சிரமங்களைச் சந்தித்து வாழ்வதுதான் சுவாமி பக்தானந்தர் அறிந்த ஆ‘சிரம’ வாழ்க்கை.
சுவாமி பக்தானந்தர்! பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செல்வது, மக்களுக்கு நல்ல உணர்வை ஊட்டப் பிரசங்கம் செய்வது, உற்ற துணையான திருமூலர் திருமந்திரத்தையும், ஸ்ரீராமகிருஷ்ண அமுதமொழிக
ளையும் படிப்பது போன்றவையே அவரது 40 வருடத் துறவற வாழ்வின் சாரம்.
கோயிலிலோ, மக்களிடமோ பிச்சை. உள்ள ஒரே பாத்திரம் உள்ளங்கையே! அதில் பக்தானந்தர் பிச்சை உணவை ஏற்று சிவபெருமானுக்கு மானசீகமாகப் படைப்பார்; அதை உண்டுவிட்டு மிடுக்காக நடப்பதில்
அவருக்குத்தான் என்ன ஓர் ஆனந்தம்!
குருவிற்கு மௌனம் பிடிக்கும். ஆனால் மாதவ சாமிதான் விட மாட்டாரே! நீண்ட தூரம் நடந்து கொண்
டிருந்த மாதவசாமி சோர்வுடன், குருவே, கால் வலிக்கிறது" என்று பேச்சை ஆரம்பித்தார்.
நடக்கும்போது காலில் கவனம் வைக்காதே" என்றார் குரு.
உங்களுக்கென்ன! ‘வானமே கூரை; பூமியே படுக்கை’ என்று விவேகானந்தரின் ‘சந்நியாசி கீதம்’ பாடிக் கொண்டே நடந்துவிடுவீர்கள். ஆனால் எனக்கு அது முடியாதே...?"
சீடனின் சிரமத்தைக் குறைக்கச் சில சமயம் குரு பாடுவார். அப்போது அவரது கண்களில் பக்தியும் ஞானமும் பிரகாசிக்கும்.
குருவே, போன வாரம் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை பற்றிக் கேட்டேன். அதை எனக்கு இன்றாவது சொல்லுங்கள்" என்று சீடர் கேட்டார்.
இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் சுவாமி பக்தானந்தரின் ஒரே பதில் புன்னகைதான்.
ஆனால் இன்று, கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை உனக்கு வேண்டுமா? ஓர் உடலிலிருந்து இன்னோர் உடலுக்குள் உயிர் புகுந்து ஆட்டுவிப்பது கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை.
மகனே, இந்த உடலே பாரமான ஒரு கூடுதான்; அப்படி இருக்கும்போது நாம் ஏன் இன்னொரு கூட்டில் புக வேண்டும்? திருமூலர் பற்றிக் கூறினேனே மாதவா...?" என்றார்.
மாடு மேய்க்கும் மூலன் இறந்துவிடவே, பசுக்கள் பரிதவித்தன. அதைப் பார்த்து கைலாயத்திலிருந்து வந்த சுந்தரர் என்ற அடியார், மூலனின் இறந்த உடலில் புகுந்து பசுக்களின் துயர் தீர்த்தார். அதுதானே சுவாமி?" பக்தானந்தர் திருமூலரை தியானித்தார் போலும்.
அப்போது இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் அவரது அடர்ந்த தலைமுடியைத் தொட்டுச் சென்றன. உடனே அவர் ஸ்ரீராமகிருஷ்ணரை நினைத்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் ஆறு மாதம் தொடர்ச்சியாக தியானத்தில் இருந்தார். அவரது தலைமுடி சடையாகிவிட்டது. அதில் பறவைகள் கூடே கட்டிவிட்டன!
அதை எண்ணிப் பார்த்த பக்தானந்த சுவாமி, ‘அந்த அளவிற்கு தியானத்தில் மூழ்கும் உயர் நிலை எல்லாம் நமக்கு வாய்க்குமா?’ என்று ஏங்கினார்.
சுவாமி, நான் கேட்டதற்கு...?" சொல்கிறேன். திருமூலர் பரகாய பிரவேசம் தெரிந்தவர். தன் காயத்தையே பெரிதாகப் போற்றாத அவர் மூலனின் காயத்திற்குள் ஏன் புகுந்தார்?" என்று கேட்டபடி குரு கோவில் சுவரில் சற்று சாய்ந்தார்.
மாதவன் குருவின் பாதங்களைப் பிடித்துவிட்ட படி, கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை இவருக்குத் தெரியாது போல..." என்று நினைத்தார்.
‘சித்திகள் இல்லாத சாமியார், என்ன சாமியார்!’ என்று வேலூரில் ஒருவர் மாதவ சாமியிடம் ஒருமுறை கேலியாகக் கேட்டதை அவர் அடிக்கடி நினைப்பார்.
குரு ஐந்து நிமிடங்களில் விழித்துக் கொண்டார். அவருக்கு எப்போதும் அறிதுயில்தான்.
திருமூலர் மூலனின் உடலில் புகுந்ததின் மூலமாகச் சிற்றுயிர்களைப் பேருயிர்களாக மாற்றும் திரு மந்திரம் படைத்தார். ‘...உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என அவரே கூறுவார்" என்றார் குரு.
சில தினங்களாக எந்தக் கேள்வி கேட்டாலும் முடிவில் சித்திகளிலேயே சீடனின் கவனம் செல்வதை குரு கவனித்தார்.
மாதவசாமி ஐந்து வருடமாக குருவிற்குச் சேவை செய்து வருகிறார். தியானமும் அவருக்குக் கைகூடி வருகிறது. அது போன்ற சமயங்களில் சித்து விளையாட்டுகள் சாதகனின் மனதில் வந்து சஞ்சலப்படுத்துவது இயல்புதானே!
சீடனின் சஞ்சலமான மனதைத் தெய்வத்தின்பால் எப்படித் திருப்புவது என்று எண்ணியபடி குரு நடக்க ஆரம்பித்தார்.
மாலைப் பொழுதானது. பசுமை நிறைந்த வயல் வெளிகளின் வழியாகப் பயணம் தொடர்ந்தது. சிறிது நடந்தபின், ஓரிடத்தில் ஜன நடமாட்டம் இல்லை. நிறைய மரங்கள். அதனடியில், எண்ணெய் கண்டு பல மாதங்கள் ஆகியிருந்த ஒரு சிறிய பெருமாள் சிலை.
அங்கே அதென்ன? ஓ, பெரிய கொட்டகையில் கோழிப் பண்ணை. அதற்கு வெளியே ஒரு நாட்டுச் சேவலும் சில கோழிகளும் திரிந்து கொண்டிருந்தன.
இதையெல்லாம் பார்த்த குரு, மாதவா" என்றார். குரு அவ்வாறு அழைத்தால், ‘இங்கு தியானிக்கலாம், ஏற்பாடு செய்வாயா?’ என்று பொருள்.
சுவாமி, இங்கேயா? அங்கு கோழிப் பண்ணை இருக்கு! இங்கு வேண்டாமே!" என்றார் மாதவசாமி. கோழிகள் என்றால் உனக்குப் பிடிக்காதா?"
ஆமாம். தீனி தின்று, மேனி கொழுத்து, மனிதனுக்குத் தீனியாகவே போகும் தரித்திர ஜென்மங்கள் அவை" என்றார் சற்று வேகமாக!
‘தரித்திர தேவோ பவ’ -தரித்திரர்கள் உனது தெய்வம் ஆகட்டும்’ என்று சுவாமி விவேகானந்தர் முழங்கியது உனக்கு ஞாபகம் இல்லையா? சரி மகனே, உன்னை ஒன்று கேட்கிறேன். இவை அடிமைகள் என்றால் நீ எப்படி?" என்று குரு தீர்க்கமாகக் கேட்டார்.
குருவின் வார்த்தைகளின் வேகம் சீடனின் வாயை அடைத்தது.
கூண்டில் கிடக்கும் கோழிகள் அடிமைகள் என்று உனக்குப் புரிகிறது. ஆனால் நாம் பார்க்கும் பலரும் ஆடம்பர வாழ்விற்கு, ஆசைக்கு, அகங்காரத்திற்கு, பணத்திற்கு, பதவிக்கு, புகழுக்கு என்று எத்தனை எத்தனை கூண்டுகளில் அடிமைகளாய், அதில் ஆனந்தமாயும் உள்ளார்களே. யார் இது பற்றியெல்லாம் சிந்திக்கிறார்கள்?" என்று குரு பெருமூச்சு விட்டுக் கூறியதும் அங்கு ஒரு பேரமைதி நிலவியது.
மாதவசாமியிடம் குரு நீண்ட நாட்களுக்குப் பிறகு அவ்வாறு கடிந்து கொண்டார்.
‘ஆமாம், குரு கூறுவது சரிதானே! நான் அறியாமைக்கு அடிமை, மாயைக்கு மீண்டும் மீண்டும் அடிமையாகிறேன். ‘நான் எதற்கும் அடிமை இல்லை’ என்று உணர்ந்துவிட்டேனா?’ என்று அந்தச் சீடனின் துறவற மனம் தனக்குள் கேட்டுக் கொண்டது.
யோசித்தவாறே மாதவசாமி, குருவின் ஆசனத்தை மூட்டையிலிருந்து வெளியே எடுத்துப் பரப்பினார்; ஜபமாலையையும், ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் நூலையும் அவருக்கு முன் வைத்தார்.
தியானம் முடிந்த பின் குரு அந்த நூலிலிருந்து ஏதோ ஒரு பக்கத்தைத் திறப்பார். அடுத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெய்வம் அவருக்குக் காட்டும் வழிமுறை அதுதான்.
பக்தானந்த சுவாமி உட்கார்ந்ததும், இன்று என்னோடு சேர்ந்து நீயும் தியானம் செய்" என்றார். இல்லை சுவாமி, உங்களுக்குச் சமமாக மட்டுமல்ல, சிரமமாகவும் அமர மாட்டேன்" என்றார்.
ஏனப்பா?"
நீண்ட தூரம் நடந்ததால் சோர்வாக உள்ளது; தியானம் செய்ய உட்கார்ந்தால் தூங்கிவிடுவேன்". பரவாயில்லை, தியானம் செய். உன் உடல் மற்றும் உள்ளத்து அசதிகள் எல்லாம் அகன்றுவிடும்...."
மாதவசாமி அமர்ந்தார். அவரது மனம் ‘ஏதாவது சித்தி பெறும் சக்தியை இன்று தருவாரோ?’ என ஏங்கியது. குரு பிரசன்னமாகச் சீடனைப் பார்த்துச் சிரித்தார். குருவின் அன்பு சீடரை அக உலகிற்கு அழைத்தது.
இருவரும் சிலையாக அமர்ந்து தியானித்தனர். சில நிமிடத் துளிகளில் குரு தமது சங்கல்பத்தால் சீடனின் மனதை ஈர்த்துக் கொண்டார்.
தான் அப்போது சிந்திப்பதை, சொல்வதை எல்லாம் சீடன் உணரும்படி செய்தார்!
சிறந்த யோகியான அந்த குரு யோகசக்தியால் தமது மனதை அங்கிருந்த சேவலிடம் செலுத்தினார்.
ஆச்சரியம், உடனே அந்தச் சேவல் புத்துணர்வு பெற்று கம்பீரமாக நின்றது. சற்று முன்பு வரை புழுக்களைத் தேடி வந்த சேவல் சட்டென ஒரு வீரச் சேவலாக மாறிவிட்டதைப் பார்த்த உடனிருந்த கோழிகள் விக்கித்து நின்றன.
‘குருசேவல்’ சுற்றும் முற்றும் பார்த்தது. ஆம், அதன் மூலமாக பக்தானந்த சுவாமியே அனைத்தையும் கண்டார்; பேசினார்.
பண்ணையின் அருகே குருசேவல் சென்றது. ஒரே கணத்தில் அடிமைக் கோழிகளின் அவல நிலையை உணர்ந்தது.
இவை இன்னும் 45 நாட்களிலேயே மனித மாமிசப் பேராசைக்கு மலினமாக மடியப் போகின்றனவே என எண்ணிய குருவுக்கு இரக்கம் பிறந்தது; வீராவேசமும் பீறிட்டது.
உடனே கோழிகளின் மொழியிலேயே அறைகூவல் விடுத்தது: சகோதரிகளே! எத்தனை காலம்தான் நீங்கள் இப்படி அடிமையாக வாழ்வீர்கள்? எந்திரத்தால் பொறிக்கப்பட்டு, எடை ஏறியதும் வெட்டப்படும் அவல நிலை உங்களுக்கு வேண்டுமா?
வேண்டாம் சகோதரிகளே, பரந்த இந்த பூமியில் சுதந்திரமாகத் திரிந்து வாழலாம், வாருங்கள். கலங்க வேண்டாம். நீங்கள் உங்கள் உள் வலிமையை உணர்ந்தால் இக்கூண்டை உடைத்தெறிந்துவிடலாம்.
‘உங்களுக்குள் உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள்; உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை யாவும் வரும்" என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.’
இவ்வாறு குருசேவலின் அறைகூவலைக் கேட்டதும், கூண்டுக்குள் ஒரே கோலாகலம்.
கோழிகள் தலைநிமிர்ந்து ‘யார் இவர்? இவர் கூறுவதைக் கேட்கும்போது நமக்குள் ஒரு புது சக்தி பாய்கிறதே!’ என்று பார்த்தன.
உடனே அவை படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டன. சில கோழிகள் உயர உயரக் குதித்தன. ஆஹா, பறப்பது எவ்வளவு ஆனந்தம் என்று அன்றுதான் முதன்முதலில் அவை உணர்ந்தன.
விடுதலை, விடுதலை, இனி நாங்கள் அடிமைகள் அல்ல" என்று அவை கோஷமிட்டன.
திடீர் பரபரப்பை அங்கிருந்த மனிதக் காவலாளி கவனித்தான். சேவலைத் துரத்தினான்.
குருசேவல் ஓடிக் கொண்டே, எழுந்திரு; விழித்துக்கொள். விடுதலை அடையும் வரை ஓயாது போராடு" என்று முழங்கியது.
கோழிகளின் படபடப்பினால் கூண்டே லேசாக அசைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் காவலாளி விளக்கை அணைத்துவிட்டான்.
இருட்டியதும் கோழிகள் பயந்துவிட்டன. அட, அவற்றுள் பலவற்றை இருள் உடனே உறங்க வைத்து விட்டதே!
ஆனால் இரண்டொரு கோழிகள் மட்டும் தங்களுக்குள், ‘எங்கே அவர்? நமக்குச் சுதந்திர வாழ்வின் சுவையைக் காட்டி, நம் அடிமை விலங்கை உடைக்க முதல் அடி அடித்த குரு எங்கே?’ என்று தேடின.
காவலாளி டார்ச் அடித்துப் பார்த்தான். பல கோழிகள் தூங்குவதைக் கண்டு குருசேவல் சோர்வானது.
இறைவா, உடலாலும் மனதாலும் அடிமையாகிக் கிடக்கிற இந்த பத்தஜீவர்களைக் காப்பாற்று" என்று கண்ணீருடன் வேண்டியது.
அப்போது ஓர் அதிசயம். திடீரென்று அந்த இருளில் ஒரு வீராங்கனையின் கோஷம் கேட்டது: குருவே, எங்களைக் கரையேற்ற வந்தவரே, மலினமாக மடிவதுதான் எங்கள் வாழ்க்கை என்று இருந்துவிட்டோம். எங்களுக்குச் சுதந்திர வாழ்வைப் பற்றி யாரும் இதுவரை சொன்னதில்லை. அதைச் சொன்ன தெய்வமே! உங்களது வீர முழக்கத்தைக் கேட்டபின் இனியும் நாங்கள் இப்படியே இருக்கமாட்டோம்.
ஐயனே, நாளையே நான் சாகலாம். ஆனால், அடுத்து நான் பிறந்தால் எனக்கு அல்பப் பிறவி இருக் காமல் இருக்க ஆசி கூறுங்கள்" என்று முழங்கியது.
ஒரு சில கோழிகளும் சத்தமாக ஆமாம், அதுதான் தேவை" என்று கூவின.
அந்தச் சில கோழிகளின் சிந்தனைகளில் விடிவு காலம் பிறந்ததால், இருளிலும் குருசேவல் ‘கொக்கரக்கோ’ என்று கம்பீரமாகக் கூவியது!
பக்தானந்தரிடமிருந்து நீண்ட மூச்சு வெளிப்பட்டது. ‘ஓம்’ என்று கூறி, கைகளால் நெஞ்சில் அஞ்சலி செய்து, ‘ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா! பகவானே, எல்லாம் தங்கள் இச்சைப்படி நடக்கட்டும். நீங்கள் இயக்குபவர், நான் வெறும் எந்திரம்’ என்று கூறியபடி கண்ணைத் திறந்தார் குரு.
அருகில் மாதவசாமி சிலையாக அமர்ந்திருந்தார். அதுவரை அகத்தில் நடந்ததை அவதானித்துக் கொண்டிருந்த சீடருக்குக் கண்ணீர் பெருகியது.
மாதவா, மகனே!" என்று அன்புடன் அழைத்தார் குரு. தியானம் கலைந்து பக்திக் கண்ணீருடன், என் தெய்வமே!" குருவின் பாதங்களில் விழுந்தார்.
சீடனுக்குப் பருக நீர் தந்தார் குரு. பிறகு அமைதியாக, மகனே, இப்போது புரிந்ததா?" என்று கேட்டார்.
குருவே, உங்கள் யோக சக்தியால், உங்கள் உள்ளத்தைச் சேவலின் உள்ளத்தில் புகுத்தி, அடிமைக் கோழிகளுக்கும் உங்கள் கருணையைப் பாய்ச்சி விட்டீர்களே...!" என்றார் மாதவன்.
தெய்விகச் சிந்தனைகள் உணர்வில் சென்றுவிட்டால் எந்தச் சிற்றுயிரும் பேருயிராவது திண்ணம்" என்றார் குரு. பிறகு அவர் புன்னகையுடன், மாதவா, கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையைப் பற்றி உனக்கு தெரிந்துகொள்ள இனியும் ஆவலா?" என்று கேட்டார்.
மன்னித்துவிடுங்கள் சுவாமி. சாதாரண உயிர்களான கோழிகளுக்கு உயர்ந்த விஷயங்கள் ஓதப்படும் போது அவை வாழ்வின் மேன்மையைத் தேடுகின்றன..." என மாதவசாமி கூறுவதற்குள் குரு, ஆமாம் மாதவா! வடலூர் வள்ளல் பெருமான் திருவாசகத்தைப் பற்றி உரைக்கும்போது, ‘மணிவாசகப் பெருமானே! தங்கள் வாசகத்தைக் கேட்கும் கீழ்சாதிப் பறவைகளும் கொடும் விலங்குகளும்கூட மெய்ஞ்ஞான நாட்டமுறும்போது நான் அந்த நாட்டம் அடைவதில் வியப்பு என்ன?’ எனக் கேட்பார்" என்றார்.
ஆ, சத்தியமான வார்த்தைகள் சுவாமி. அடிமைக் கோழிகளே மேன்மை அடையும்போது, உங்களுடன் இருக்கும் நான் இனியும் சாதாரண விஷயங்களில் எப்படிச் சிந்தனையை வீணடிக்க முடியும்?"..."
குருவே, உடலெனும் கூட்டில் என் உயிர் இருக்கும்போதே அது இறைவனை அடைவதற்கு ஆசி கூறுங்கள் சுவாமி" என்றார் மாதவசாமி.
பிறகு கண்ணீருடன் அந்தக் கடைசி வரியைத் திரும்பத் திரும்பக் கூறிக் கதற ஆரம்பித்தார்.
* * *
தியானித்துக் கொண்டிருந்த பக்தானந்தர் பதறியவாறு கண் விழித்து, மகனே, என்ன ஆயிற்று? கண்ணைத் திறந்துபார்...... ஓ, தியானிக்காமல் தூங்கிவிட்டாயா?" என்று கேட்டுச் சீடரை எழுப்பினார்.
சீடரின் கனவு கலைந்தது. குரு யோகசக்தியால் குருசேவலாக மாறியதும், பண்ணைக் கோழிகள் பேசியதும்.... அட, நடந்ததெல்லாம் கனவா? என்று அப்போது தான் சீடர் உணர்ந்தார்.
சில நிமிடங்கள் அவரால் பேச முடியவில்லை. என்ன கனவு?" என்று குரு கேட்டார் சிரித்தபடி. சீடன் கனவில் கண்டதை அப்படியே கூறினார்.
குரு அமைதியாகக் கண்மூடி கேட்டார். பிறகு அமுதமொழிகளைத் திறந்து பார்த்தார். ‘பெறுதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்ற ஒருவன் இப்பிறவியிலேயே கடவுளை அறிய முயலாது போனால் அவன் பிறந்தது வீண்தான்’ என ஸ்ரீராமகிருஷ்ணர் அதில் கூறியிருந்தார்.
பார்த்தாயா மகனே, குருதேவர் எப்படி நமக்கு வழிகாட்டுகிறார் என்று!" பின் சீடனின் சிரசில் கை வைத்து, கூடுவிட்டுக் கூடு பாய்வது பெரிதல்ல; தேகக்கூட்டை விட்டு, தெய்வத்தைக் கூடும் வித்தைதான் உண்மையான ஆன்மிகம்.
தேகம் உன்னை விடும் முன்பு, நீ தேகத்தை விடு. அதாவது உடல் பற்றை விட்டு உள்ளே இருக்கும் உத்தமனைப் பிடி. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் அது உனக்கு வாய்க்கட்டும்" என ஆசீர்வதித்தார் குரு.