RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

குமுதம் பக்தி ஸ்பெஷல் - சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கிய கேள்விகளும் பதில்களும் - 2

01.04.23 01:09 PM By thanjavur

குமுதம் பக்தி ஸ்பெஷல் ஏப்ரல், 2023 மாத இதழில்  வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கிய கேள்வி பதில்கள். 

(சென்ற இதழ் தொடர்ச்சி)

இந்து சமயம் இல்லற தர்மத்தை வலியுறுத்துகிறது. ஸ்ரீராமகிருஷ்ண மடம் துறவறத்தை வலியுறுத்துகிறதா?


இல்லறம், துறவறம் இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி கொண்டு போனால்தான் உன்னத நிலையை நமது இந்து மதம் அடைய முடியும். இந்து மதத்தின் சிறப்பம்சமே இரண்டிற்கும் உரிய முக்கியத்துவத்தைத் தந்ததுதான்.

        

எல்லோரும் துறக்க வேண்டியது அவசியமல்ல; முடியவும் முடியாது. ஆனால் இல்லறவாசியோ, துறவியோ யாராக இருந்தாலும் எல்லோரிடத்திலும் துறக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது. அதுதான் சுயநலம் மிக்க வாழ்க்கை. 'ஆத்மனோ மோக்ஷார்த்தம், ஜகத் ஹிதாய ச' - அதாவது தனிமனித முன்னேற்றத்திற்காகவும் முக்திக்காகவும்,  சமுதாயத்தின் நலத்திற்காகவும் வாழ்வதைத்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் லட்சியமாக முன்வைத்தார்.


இல்லறமா? துறவறமா? என்ற பட்டிமன்றத்தில் நாங்கள் ஈடுபடுவதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் சுட்டிக்காட்டுவது அறம் சார்ந்த வாழ்க்கை; தெய்வத்தை மையப்படுத்திய வாழ்க்கை. அவரே ஒரு சிறந்த இல்லறத்தார்; மிகச் சிறந்த துறவியும்கூட. ஆண்டவன் ஒருவரை எங்கு வைக்கிறானோ அந்த இடத்தில் இறைபக்தி மிக்க வாழ்க்கையை வாழும் முறையைத்தான் அவர் போதித்தார். ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களின் இல்லறத்தில் மானசீகமான துறவறம் உள்ளது. மடத்துத் துறவிகளின் வாழ்க்கையில் இல்லறப் பண்பான பிறரை அரவணைத்து, அனுசரித்துச் செல்லும் அம்சங்களும் நிறைந்து இருக்கும். துறவறத்தில் இல்லறத்தானுக்குரிய கடமை உணர்வும் வேண்டும். 'எல்லாம் மாயை; எதுவுமே நிலை இல்லை' என்று வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு போகும் துறவிகள் அல்ல நாங்கள்.


துறவிகளாகிய நாங்கள் பொருள்களையும் பணத்தையும் திரட்டுகிறோம். காரணம், அந்தப் பொருள்களைக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்யலாம் என்பதற்காகத்தான். 'திரட்டு, விநியோகம் செய்ய' என்பது சுவாமி விவேகானந்தரின் சித்தாந்தம்.

        

ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்காகப் பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதைப் பற்றி?

        

இந்த ஆண்டு (2023) தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பள்ளிகளின் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடத்தினோம். அதனைப் போட்டியாக அல்லாமல் 'சுவாமி விவேகானந்தர் ஓவியத் திருவிழா' என்ற பெயரில் நடத்தினோம். போட்டி என்று கூறும்போது திறமைசாலிகள் மட்டுமே கலந்துகொள்வார்கள். ஆனால் திருவிழா என்று கூறி, அதன் மூலம் எல்லோரது திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதுதான் நமது நோக்கம்.

        

சுவாமி விவேகானந்தரின் 40 பொன்மொழிகளை 2012 -ஆம் ஆண்டில் சுமார் 12 லட்சம் பேர் தினமும் பள்ளி பிரார்த்தனை நேரத்தில் உச்சரித்துப் புது தெம்பு பெற்றார்கள்.

2009 - ஆம் ஆண்டில் 'Draw Swamiji; Draw Energy' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தினோம். அதில் 36000 ஓவியங்கள் நாடு முழுவதிலிருந்தும் வந்தன.

            

2010-ஆம் ஆண்டு கரூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றார். போட்டிக்கான தலைப்பு: 'நீ செய்த ஒரு நல்ல காரியத்தை ஆதாரத்துடன் உண்மையாக எழுது'. இந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அந்த மாணவர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் நடந்த ஒரு நேர்முகத் தேர்வில் சிறப்பாகத் தேறினார். பல கட்டத் தேர்வுக்குப் பிறகு இறுதிப்பட்டியலில் மூன்று பேரை வடிகட்ட வேண்டும். ஒருவருக்கு மட்டுமே வேலை கிடைக்கும். நான்கு பேருமே சம தகுதி உள்ளவர்கள். உயர் அதிகாரிகளுக்கு யாரை ஏற்பது என்று கஷ்டமாகிவிட்டது. அப்போது அவர்களுடைய சான்றிதழ்களை அலசியபோது இந்த மாணவர் ராமகிருஷ்ண மடத்தில் வழங்கப்பட்ட சான்றிதழை வைத்திருந்தார்.

'சுவாமி விவேகானந்தரால் உந்துதல் பெற்று சேவை செய்திருக்கும் உங்களால் நமது கம்பெனியின் பணியைச் சிறப்பாகச் செய்யமுடியும்' என்று சொல்லி அவரையே பணியில் அமர்த்திக்கொண்டார்கள். ராமகிருஷ்ண மடம் ஒரு போட்டி நடத்தினால் அது எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

            

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அத்வைத மடம் என்று சொல்லப்படுகிறது. அந்த அத்வைதத்தின் சிறப்பம்சம் என்ன?

            

உயர்ந்த ஆன்மிக விஷயங்களை நாடுவதில் ஸ்ரீராமகிருஷ்ணர் மிகச் சிறந்த தேனீயாக சுறுசுறுப்பாக இருந்தவர்.  ஸ்ரீராமகிருஷ்ணரின் அத்வைதம் என்பது அனைத்து வழிபாடுகளையும் அனைத்து சம்பிரதாயங்களையும் ஏற்றுக்கொள்வது. அவற்றோடு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் அத்வைதம் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சித்தாந்தங்களைப் பரப்பிய சுவாமி விவேகானந்தருடைய சமயச் சிந்தனைகள் திண்ணை வேதாந்தமன்று; அது செயல்முறை வேதாந்தம். அதனால் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் காட்டும் தரிசனத்தில் மாயையும் உள்ளது; மாயா ரஹிதமான பிரம்மத்தைக் காட்டும் அத்வைதமும் உண்டு. விசிஷ்டாத்வைதத்தின் சிறப்பான கோட்பாடுகளும் அதில் உண்டு. துவைத நிலை பக்தியின் சிறப்பம்சங்களும் அங்குள்ளன. "ஆடைநுனியில் அத்வைதத்தை முடிந்து கொண்டு அனைத்துக் காரியங்களையும் செய்!" என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

            

எந்த நோக்கங்களுக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கங்கள் நிறைவேறி இருக்கிறதா?


'வாழும் வரை கற்றுக்கொண்டே இருப்பேன்' என்றார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

'வாழும் வரை பிறருக்குத் தொண்டாற்று' என்றார் சுவாமி விவேகானந்தர். 

'மூச்சு உள்ளவரை இறைவனோடு இணக்கமாக இரு; அவரது தியானத்திலேயே இரு' என்றார் அன்னை ஸ்ரீசாரதா தேவி. இந்த மூன்று நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடம் இந்தச் சேவையைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. இது ஐந்தாண்டு திட்டமல்ல, ஆயுட்காலத் திட்டம். ஒவ்வொரு துறவியின், பக்தரின் ஆயுள் இருக்கும்வரை இது நடந்துகொண்டே இருக்கும். 

ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இருந்தாலும் நம் நாட்டில் தொடர்ந்து ஏழைகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதைவிட ஏழ்மையை விரட்டுவதுதானே ஆக்கபூர்வமான காரியமாக இருக்கும்?

                

நீங்கள் சொல்வது பொருளாதார ஏழ்மை. அதற்குச் சமுதாயமும் நாடும் சேர்ந்து பாடுபட்டு ஏழ்மையை விரட்ட வேண்டும். அந்தப் பணியில் ஸ்ரீராமகிருஷ்ண மடமும் தனது பங்கை ஆற்றி வருகிறது. பொருளாதார ஏழ்மையைவிட மிக பயங்கரமான ஏழ்மைகள் பல உள்ளன. அவை கலாசார ஏழ்மை, பண்பாட்டு - சமயச் சிந்தனைகளில் ஏழ்மை, பரமனை நம்ப முடியாத பரம ஏழ்மைதன்மை, தன்னம்பிக்கையின்மை, நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்ற தைரியமின்மை, நல்ல பண்புகளில் ஏழ்மை, சேவை உள்ளம் இல்லாத ஏழ்மை, இவை போன்ற ஏழ்மைகளை அகற்றுவதில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் தனி கவனம் கொண்டுள்ளது. "ஒளியைக் கொண்டு வா ஆயிரம் காலத்து இருட்டுகூட அக்கணமே அகன்றுவிடும்" என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இந்தப் பணியை நாம் அனைவரும் செய்ய வேண்டி இருக்கிறது.

                

அரசாங்கத்தைப் போல் நீங்களும் கல்வி நிலையங்கள் நடத்துகிறீர்கள். மருத்துவ உதவிகளும் செய்கிறீர்கள். அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்?

                

அரசாங்கம் போல் வேறு யார் செய்ய முடியும்? அது தனி. மக்களின் வரிப்பணத்தால் அரசாங்கம் காரியங்களைச் செய்கிறது. மக்களின் நன்கொடையால் நம் மடங்கள் இயங்குகின்றன. ஆனால் மடத்தின் முக்கிய கவனம் எதில் என்றால், பணம் வழங்கிய அனைவரும் பாராட்டும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கிளைகள் செயல்படுகின்றன. மக்களின் தேவை அறிந்து சேவை செய்வது நமது மடத்தின் சிறப்பம்சமாகும்.

                

சென்ற ஆண்டு நம்முடைய பிரதம மந்திரி நரேந்திர மோடி, 'ஒரு குற்றமும் காண முடியாத மடம் ஒன்று உண்டென்றால், அது ராமகிருஷ்ண மடம் தான்' என்று பதிவு செய்து இருக்கிறார்.

(பேட்டி தொடரும்)

thanjavur