(சென்ற இதழ் தொடர்ச்சி)
மதமாற்றம் மிகப் பெரிய ஆபத்து என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. மதமாற்றம் நிகழாமல் இருக்க ராமகிருஷ்ண மடம் செய்திருக்கும் பணிகள் என்ன?
மதமாற்றம் என்பது அதிக முதலீடு இல்லாத பாமர மக்களை எளிதில் ஏமாற்றும் ஒரு வியாபாரம்.
‘நெல் செய்ய புல் தேயுமாப் போலே’ என்று ஒரு வாசகம் இருக்கிறது. ஓரிடத்தில் நிறைய புல் வளர்ந்திருக்கிறது. அதை வெட்டிக்கொண்டே இருந்தால் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் அதே இடத்தில் நெல் சாகுபடி செய்தால் அந்தப் புல்லே நெல்லுக்கு எருவாகிவிடும்.
மதமாற்றத்தின் பல காரணங்களுள் ஒன்று, மதமாற்றம் செய்பவர்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருவது. அந்தப் பணத்தால் பாமர இந்து மக்களை ஈர்க்கிறார்கள். கால்நடைகள் போல் மாற்றுமதப் பட்டிகளில் அவர்களை அடைக்கிறார்கள். தாங்களாகவே சிந்திப்பதற்கும் அதன்படி செயலாற்றுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. தாய் மதத்தை எதிர்ப்பதுதான் மதம் மாறியவர்களின் முக்கிய வேலையாகக் கற்றுத் தரப்படுவது ஒரு நல்ல செயலாக இருக்க முடியுமா? அரசாங்கம் இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இதுவே அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனை நாம் இப்போது இங்கிலாந்தில் காண்கிறோம். அந்த நிலை இந்தியாவிற்கு வரக்கூடாது.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் நல்ல மனிதர்களை, ஆன்மிகவாதிகளை உருவாக்கும் பணியை அமைதியாகச் செய்து வருகிறது. (சாதாரண) மனிதனைப் புனிதன் ஆக்குவதுதான் சிறந்த சமயப் பணி. பக்தர்கள் உருவானால் பதர்கள் தானாக மறைந்துவிடும். எந்தவித பாகுபாடுமற்ற சமுதாயத்தை நோக்கி நாம் அனைவரும் முன்னேறும்போது மதமாற்றம் என்ற வியாதி ஒழிந்துவிடும்.
சைவ மற்றும் வைணவ ஆதீனங்களும் ஜீயர்களும் இதைக் கருத்தில் கொண்டு இந்த மாபெரும் பணியில் தொடர்ந்து பாடுபட வேண்டும். இன்றைய இந்து மதத்திற்குத் தேவை அனைத்துச் சமய பிரிவினைகளும் ஒன்று சேர்ந்த முன்னேற்றம்தான்.
சமய சமரசம் என்பதைப் பற்றி இந்துக்கள்தான் அதிகம் பேசுகிறார்கள். இன்றைக்கு வேண்டியது எல்லா சமயங்களுக்கும் சம உரிமை மற்றும் இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற சிந்தனைகள்தான். பிற மதங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்கள் பலத்தைக் காட்டுகின்றன. இந்து மதமோ நம்பிக்கை அடிப்படையில் தொன்று தொட்டு வாழ்ந்து வருகிறது. இந்து சமயத்தலைவர்களும் தங்கள் எண்ணிக்கைக் குறைவதை அல்ல, அல்ல, குறைக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
இந்து மதத்தில் உள்ள மேன்மைகளை சுவாமி விவேகானந்தர் பெரிதும் போற்றுகிறார். அதே சமயம் அதிலுள்ள சிறுமைகளையும் களைந்திட பல சீர்திருத்த கருத்துகளையும் கூறியுள்ளார். சமய குருமார்கள் உபதேசங்கள் மட்டும் செய்துவிட்டுச் செல்லாமல் மக்களின் சமுதாய மேம்பாட்டிற்குமான தர்மப் பிரச்சாரம் செய்து வழிகாட்ட வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளுள் ஒன்று.
ஆனால், கல்வி கற்ற பலரும்கூட மதம் மாறுகிறார்களே, ஏன்?
படித்தவர்கள் என்றால் எதைப் படித்துவிட்டார்கள்? நமது இந்தியாவின் உண்மையான வரலாற்றை நாம் படித்தோமா? பொய்யாக, திரித்துக் கூறப்பட்டதைத்தான் நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். இரண்டு பட்டங்கள் வாங்கிவிட்டுப் பாடம் நடத்த ஆரம்பித்தாலேயே அவர்கள் படிப்பாளிகள் ஆகி விடுவதில்லை.
இந்து மதம் மிகவும் பரந்துபட்டது. அதில் ஆச்சாரங்களும் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களும் அதிகம். இந்து மதத்தின் சிறப்பம்சமான அதன் உயர்தரச் சிந்தனைகளை இழிவுபடுத்தி மதமாற்றிகள் திரித்துக் கூறுவதால் வெறும் பட்டம் வாங்கிய படித்தவர்கள்கூட இந்த வலையில் சிக்கி விடுகிறார்கள். இலங்கை அரசு செய்வது போல், நமது தமிழக அரசே இந்து சமய சிந்தனைகளைப் பள்ளிகளிலேயே கற்றுத் தர வேண்டும். எல்லா மதங்களைப் பற்றியும் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஓர் அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
மதம் மாறுபவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இந்து மதம் Religious Conversion அல்ல, Spiritual Transformation என்பதில் கவனம் கொள்ளச் சொல்கிறது.
ஒரு காலத்தில் கும்பகோணத்திற்கு ஓர் அவப்பெயர் மதமாற்றிகளால் ஏற்பட்டது. கும்பகோணத்துக்காரர்கள் நேர்மையற்றவர்கள் என்று சொன்னார்கள். ஓர் அருமையான சம்பவம் இருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் டெல்டா மாவட்ட பகுதிகளை மையமாக வைத்து மதமாற்ற வியாபாரத்தைத் தொடங்கினார்கள். முதலில் பிராமணர்களை மாற்ற முயன்றார்கள். அவர்களைத் தங்களுடைய தேவாலயத்திற்கு அழைத்து உரையாற்ற வைத்தார்கள்.
நீங்கள் வெளியில் சொல்கிற விஷயங்களை எங்கள் தேவாலயத்திற்கு வருபவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறு பேசியவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள். ஆங்கிலேயர்களுடன் அமர்ந்து இவர்களும் உணவு உண்டார்கள். மருத்துவ உதவி செய்து கொடுத்தார்கள். அது இவர்களுக்குப் பிடித்திருந்தது. மதமாற்றிகள் மேல்தட்டு மக்களைக் குறி வைத்து மாற்றினார்கள். சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களில் உரை நிகழ்த்தினார்கள். பிறகு மெல்ல மெல்ல உங்கள் பெயருக்கு முன்னால் ஏன் ஒரு கிறிஸ்தவ பெயரைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றார்கள். ஆங்கிலேயரிடம் அங்கீகாரமும் பணமும் பெற்றுக்கொண்ட அறிவு ஜீவிகள் சிலர் அவர்கள் சொல்வதைக் கேட்டு பயத்துடன் பெயரை மாற்றிக் கொண்டார்கள்.
ஆனால், கும்பகோணத்துக்காரர்கள் மட்டும் இந்து மதத்தில் உண்மையான பற்று கொண்டு நாங்கள் மதம் மாற மாட்டோம் என்று அஞ்சாமல் சொன்னார்கள். அதனால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், கும்பகோணத்துக்காரர்கள் தங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களது அகராதியில் 'he is doing Kumbakonam' என்று பதிவு செய்தார்கள்.
இப்போது அந்தப் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுவிட்டது. அன்றைய கும்பகோணத்துக்காரர்களுடைய உறுதி பாராட்டத்தக்கது. இந்தச் சமயப்பற்றை ஆங்கிலேயர்கள் தவறாகத் திரித்துப் பேசினார்கள். இப்படித்தான் நமது சமய உண்மைகளையும் வரலாறுகளையும் மாற்றி சரித்திரங்கள் எழுதப்பட்டன. நம்மை வென்றவன் நம்மைப் பற்றிய பெருமித வரலாற்றை எழுதுவானா? நமது பாரம்பரியப் பெருமை நம் மக்களுக்குப் புரிந்துவிடக்கூடாது என்று அன்றைய ஆங்கிலேயர்களும், இன்று ஆங்கிலத்தனத்தில் ஊறியவர்களும் நம் வரலாற்றை எழுதினால் எப்படி இருக்கும்? பொய்களின் திரட்சியாகத்தானே இருக்கும். அதனை நாம் இன்றும் படிக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். நமது வரலாற்றை நமது சான்றோர்கள் எழுத வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார்.
சுவாமி விவேகானந்தருக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அல்லவா?
ஆம், தமிழகத்தால் சுவாமிஜிக்குப் பெரும் புகழ் கிடைத்தது; சுவாமிஜியால் தமிழகம் மேலும் மெருகடைந்தது.
தனிமனிதனை உயர்த்தும், நாட்டை நிர்மாணம் செய்யும் சுவாமி விவேகானந்தரின் மிகச் சிறந்த கருத்துகள் யாவும் தமிழகத்தில் கூறப்பட்டவையே. 'எழுந்திருங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல்லுங்கள்" என்பது சுவாமி விவேகானந்தரின் ஒரு மந்திர வாக்கியம். அது உரைக்கப்பட்டது கும்பகோணத்தில்தான்.
அண்மையில் 125 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கு சுவாமிஜி இந்த மந்திரவாக்கியத்தை உலகிற்காக மொழிந்தாரோ, அதே இடத்தில் - கும்பகோணம் தி போர்ட்டர் டவுன்ஹாலில் 2022- ஆம் ஆண்டு அவரது ஏழு அடி திருவுருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம் சமய வாழ்க்கைக்குப் பொருந்துமா?
நுட்பம் எங்கிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நுணுக்கம் வேண்டியதுதான். தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்க்கையின் உயர்ந்த விஷயங்களைச் சாதிக்க முடிகிறது என்றால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தொழில்நுட்பத்தின் மூலம் இன்று நாம் நாட்டின் எந்தப் பகுதியில் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டாலும் அங்குள்ள சூழ்நிலையை உடனே ஆராய்ந்து மக்களுக்கு விரைவாகச் சேவையாற்ற முடிகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியைச் சரியாகப் பயன்படுத்துவதில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் முன்னணியில் பணி செய்து வருகிறது. சமீபத்தில் சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ரோபோ பற்றிய தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, சிறப்பாக ஒரு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ரோபோ பற்றிய அறிவு, கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது.
தமிழில் நூற்றாண்டு கண்ட பத்திரிகைகள் வெகு சில. அவற்றுள் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் முக்கியமான ஒன்று. அதன் ஆசிரியராக நீங்கள் 15 வருடங்கள் இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்!
2000 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியராக அடியேன் பணிபுரிந்தேன். அப்போது பத்திரிகையின் சர்குலேஷன் ஒரு லட்சத்து 75 ஆயிரம் (1,75,000) வரை சென்றது. லட்சத்தைக் கடந்த லட்சிய பத்திரிகையாக ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் விளங்கியது. அதற்கு முக்கிய காரணம், தெய்வத் திருமூவர்களாக விளங்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக கருத்துகள், அன்னை ஸ்ரீசாரதா தேவியின் அன்புமிக்கச் சிந்தனைகள், பிறர் நலம் போற்றும் சுவாமி விவேகானந்தரின் எழுச்சிமிக்க கருத்துகள் ஆகியவை விஜயத்தில் எல்லோரும் விரும்பும் வகையில் வெளிவந்ததுதான். அதனால் விஜயம் வளர்ந்தது.
கொரோனா காலத்திற்கு முன்பு தமிழில் சமய பத்திரிகைகள் சுமார் 200 இருந்தன. சமய பத்திரிகைகள் அதிகமாக விற்பனை ஆவதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் வெற்றியும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
இன்றும் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தாய்மார்கள், பக்தர்கள் என்று எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் கருத்துகளையும், தத்துவங்களையும், கதைகளையும் சுவாரஸ்யமாக ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் வழங்கி வருகிறது. இதனாலேயே ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகைத் துறைக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறது. நல்ல செய்திகளை, சிந்தனைகளை நல்ல விதத்தில் வழங்கினால் அதை ஏற்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
குமுதம் பக்தி ஸ்பெஷல் வாசகர்களுக்கு நீங்கள் வழங்கும் ஆசி என்ன?
அன்பான வாசகர்களே, உங்கள் இஷ்டதெய்வத்திடம் பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்; எதைச் செய்தாலும் ஸ்பெஷல் கவனத்துடன் ஸ்பெஷலாக சிறப்பாகச் செய்யுங்கள்; உங்களது இதயம் எனும் குமுதம் விரைவில் மலரும். இது என் பிரார்த்தனை.