கார்த்திகைத் தீபத்திருநாள் சிறப்புரை
பக்தர்களே! நமது அகத்திலும், புறத்திலும் திரண்டு இருக்கின்ற இருள் விலக வேண்டும். அறியாமை நீங்க வேண்டும். அக்ஞான, தாமஸ குணங்கள் நம்மிடமிருந்து, மறைய வேண்டும். நமது நோய்கள் குணமடையட்டும். நமது அவநம்பிக்கை நீங்கி, புதுநம்பிக்கை பிறப்பதற்கு உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.
சில தினங்களுக்கு முன்புதான், நமது பிரார்த்தனையின் பலனை நாம் அனுபவித்தோம். ஏற்கனவே கொரோனாவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் மேலும் நிவர் புயல் வீசி உணவிற்கும், இருப்பிடத்திற்கும் தவிக்கக் கூடாது; கஜா புயலின்போது இழந்த கோடிக்கணக்கான மரங்கள் போல், இந்தப் புயலின் போதும் எதுவும் நடந்துவிடக் கூடாது என்று அன்னை ஸ்ரீசாரதாதேவியாரிடமும், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடமும் வேண்டிக் கொண்டிருந்தோம்.
‘அன்னை துர்க்கையின் திருநாமம்
அக்கரை செல்லும் படகாக
முன்வந்து உதவுங்கால்
மோதும் புயல்தான் என் செய்யும்?’.
‘துர்க்கையின் பெயரை என்றன் நா
சொல்லியவண்ணம் இருக்கட்டும்.
துர்க்கையைத் தவிர துன்பத்தில்
துணைக்கு எவர் வந்து காத்திடுவார்?’.
இது பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி பாடிய அருமையான பாடல். தெய்வத்திருமூவரின் திருவருளால் நிவர் என்ற புயல் புருஷன் பெரிதாக ஆட்டம் போடாமல், நம்மைப் பயமுறுத்திவிட்டு மட்டும் சென்றுவிட்டான்.
அன்பர்களே, இந்த கார்த்திகைத் தீபத்திருநாளில் பூஜையறையில் உங்கள் இஷ்டதெய்வத்தின் முன்பு அமைதியாக அமருங்கள். பூக்களைக் கொண்டு தெய்வத் திருவுருவங்களை அலங்கரியுங்கள். ஊதுபத்தி மணக்கட்டும்.
இந்தத் திருநாளில் தீபத்தைப் பற்றி, ஒளியைப் பற்றி நாம் தியானிப்போம்.
நமக்குள் ஒளியை ஏற்றுக் கொள்வதற்காக, தீபத்தைப் பற்றிய தெளிவைப் பெறுவோம். நம் மனங்களில் மகிழ்ச்சியும், திருப்தியும் இல்லாமல் போவதற்கு மன இருளே காரணம். நற்சிந்தனையற்ற புத்தியின் இருளே காரணம். இருள் என்பது என்ன?
இருள் என்பது அன்பில்லாமை,
இருள் என்பது தன்னம்பிக்கையின்மை,
இருள் என்பது நம்மைப் பற்றிய உயர் ஞானம் இல்லாமை,
இருள் என்பது வறுமை,
இருள் என்பது ஆரோக்கியமின்மை.
இவ்வாறு பல விதங்களில் நம்மிடமும், நம்மைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள இருட்டினை அகற்றுவதற்கு, உங்களது பூஜையறையில் ஒரு சிறிய விளக்கை ஏற்றி வையுங்கள்.
‘ஆயிரம் ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த இருட்டில் ஒரு விளக்கை ஏற்றினால், அரைக் கணத்தில் அந்த ஆயிரமாண்டு இருட்டுமே ஓடிவிடும்’ என்று அபயம் அளிக்கிறார் நம் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அது போல், பல பிறவிகளில், பல அனுபவங்களில், துன்பங்களில், பலவிதமான போகம் நிறைந்த அக்ஞான இருளில் நம் வாழ்க்கை வசப்பட்டிருந்தாலும் ஒளி வடிவான ஆண்டவனின் ஒரு கிரணம் அந்த இருளையே நீக்கிவிடும் அல்லவா?
அதை நம்பி இந்த விளக்கை ஏற்றுங்கள். விளக்கை ஏற்றும்போது, எப்படி ஏற்ற வேண்டும்? நமது தர்ம சாஸ்திரம், ஒரு ஸ்லோகத்தைக் கூறிவிட்டு விளக்கு ஏற்றுங்கள் என்று கூறுகிறது.
கீடா பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா!!
பொருள்: புழுக்களோ, பறவைகளோ, கொசுக்களோ, மரங்களோ, இன்னும் நீரிலும் நிலத்திலும், எத்தனை வகையான ஜீவராசிகள் இருக்கின்றனவோ, அவற்றில் எதுவானாலும் சரி, பிராமணனோ பஞ்சமனோ யாரானாலும் சரி, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எதுவானாலும் சரி, இந்தத் தீபத்தைப் பார்த்து, அந்த ஜீவனின் சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும்; நித்தியானந்தத்தில் அவன் சேரட்டும்.
அன்பர்களே! மெல்ல கண்ணை மூடி, உங்களை நீங்களே கவனியுங்கள். நீங்கள் கீழே அமர்ந்திருக்கும் விதமே ஓர் அகல்விளக்கு போல் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் உடலின் அடிப்பகுதி விளக்கின் அடிப்பகுதி விளங்குவதாக பாவனை செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் ரத்தம், நீர், வியர்வை போன்ற திரவங்கள் விளக்கில் எண்ணை போன்று உள்ளதாக கற்பனை செய்யுங்கள். விளக்கு எரிவதற்குக் காற்று அவசியம். உங்களது அகமும் முகமும் சுடர் விட, உங்களது மூச்சுக் காற்றான பிராணன் விளங்கட்டும். உங்கள் உடலின் மேற்பகுதி விளக்கின் திரியாக இருக்கிறது.
விளக்கின் சுடரே உங்களது முகம். அந்த முகத்தில் ஒளி நிலைப்பதற்கு உங்களிடமுள்ள உள்ளொளி பற்றி உணர்ந்திடுங்கள்.
பகவான் புத்தரின் உபதேசம் சாரம் என்ன தெரியுமா? மனிதா உனக்கு நீயே ஒளியாக இரு – ‘ஆத்ம தீபோ பவ’ என்பதுதான். ஆம், அன்பர்களே! நீங்களே உங்களுக்கு ஒளியாக மாற வேண்டும், அதற்கான ஒரு பயிற்சிதான் இந்தத் தீப தியானப்பயிற்சி.
‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா!’ என்று மகாகவி பாரதியார் அருமையாகப் பாடினாரே! அவர் தன்னை ஒளியாகக் கண்டதால்தான் அவரது பாடல், அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது!
மாலும் பிரம்மாவும் அடிமுடி காண முடியாதவர் அண்ணாமலையார். படைப்பவனே பெரியவன் என்றார் பிரம்மா. இல்லை, பாதுகாப்பவனே பெரியவன் என்றார் திருமால். ‘படைப்பவனும், காப்பவனும் பெரிதென்று பரம்பொருளே பெரிது!’ என்று புரிய வைத்தார் பரம்பொருள் சொரூபத்தில் நிலைத்திருந்த சிவபெருமான் அண்ணாமலையராக!
அண்ணாமலை அக்னிமலை!. அந்த அக்னியின் ஓர் அம்சமாக உங்களுக்கு முன் இந்த விளக்கு சுடர் விடுகிறது. இந்தச் சுடர், உங்களது இடர்களைக் களையும் விளக்கு என்று நம்புங்கள்.
இனி, நான்தான் பெரியவன் என்ற இறுமாப்பு இல்லாதிருக்க, சுடர் வடிவில் உள்ள இந்த இறைவனை எண்ணி அண்ணாமலைக்கு அரோகரா! என்று மூன்று முறை உங்களுக்குள் ஓதிக் கொள்ளுங்கள்.
மூன்று முறை ஓதுவதன் மர்மம் என்ன? ஆணவம், கன்மம், மாயை ஆகிய நமது மும்மலங்களும் சிவனருளால் சாம்பலாக வேண்டும் என்பதால்தான்.
அன்பர்களே! இப்போது இந்த விளக்கினைப் பக்தியுடன் நோக்குங்கள். அங்கே முருகப்பெருமானின் திருமுகம் ஒளிரும். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து, ஆறு அக்னிக்குஞ்சுகள் வெளிவந்தன. கங்கை அன்னை அவற்றை ஏந்திக் கொண்டாள். ஆனால் அவற்றின் வெப்பம் தாங்க முடியாததால் சரவணப்பொய்கையில் அவற்றை விட்டு விட்டாள் கங்கா மாதா. அந்த ஆறு அக்னிக் குஞ்சுகளும், ஆறு குழந்தைகள் ஆயின. உமாதேவி அவர்களை ஒன்றாக அணைத்ததும் ஒளிவிடும் ஒரே திருமேனியாகி முருகன் ஆனார்.
நம் மனமும் ஒரு பொய்கைதான். அதில் கந்தக் கடவுள் மீதான பக்தி என்ற அக்னியை, அந்தப் பொய்கையில் விடுவோம். ஆறு, ஏழு விதமாகப் பிரிந்து கிடக்கும் நமது மனதை, அந்த ஆதிபராசக்தி ஒன்றிணைக்கட்டும். தெய்வ சக்தி திரண்டு வரட்டும், முருகப்பெருமானாக!
அதன் மூலம், நமக்குள் உள்ள தெய்வ சக்திகளை மதிக்காத தாரகாசுரன் போன்ற அசுர சக்திகள், அவர்கள் வீசும் மாய வலைகள், அவை நம்முள் ஏற்படுத்தும் ராக துவேஷங்கள் யாவும் மாய்க்கப்படட்டும்.
மங்கலம் யாவும் நம்மை வந்து அடையும் பொருட்டு அருணகிரிநாதர் திருப்புகழில் காட்டியருளிய ‘தீப மங்களஜோதி நமோ நம:’ என்ற மந்திரத்தை உணர்ந்து ஓதுவோம்.
அடுத்து, உங்கள் முன்னே உள்ள தீபத்தை தேவியாகக் காணுங்கள், அந்த தீபத்தைப் பக்தியுடன் நோக்கினால், தேவி தெரிவாள். ‘அகத்தில் ஞானதீபம் ஏற்றி, பிரம்மமயின் முகத்தைப் பார்’ என்று ஸ்ரீராமகிருஷ்ணர் ஆனந்தக் கூத்தாடுவார்.
லோகநாயகியான பார்வதிதேவி இறைவனைக் குறித்துத் தவம் இயற்றினாள். அதனால், மகிழ்ந்த இறைவன் மலைமீது காட்சி தந்தார். தமது திருமேனியில் இடது பாகத்தை பார்வதிதேவிக்கு தந்து, அர்த்தநாரீஸ்வரராக அவதரித்த, அந்த உமையொரு பாகனைத் தொழுவோம்; நம்மையும் தம்மோடு சேர்த்துக் கொள்ளுமாறு இறைஞ்சுவோம்.
அடுத்து, அதே தீபத்தைப் பக்தியுடன் பாருங்கள். தீபப் பிரகாசர் அதாவது, விளக்கொளி பெருமாள் என்ற திருநாமத்துடன், ஸ்ரீமன் நாராயணன் காஞ்சியில் சேவை சாதிக்கிறார். இவ்வாறு தீபத்தை வணங்கினால், பெருமாளின் அருளால், நமக்குள் ஞானமும் பக்தியும் சுடர்விடும்.
ஒரு சிவாலயத்தின் கருவறையில், ஓர் எலி, விளக்கின் மீது ஏறி, அது என்ன செய்கின்றது என்று அதற்கே தெரியாமல், விளக்கின் திரியை மெல்லத் தூண்டிவிட்டது. அணையும் நிலையில் இருந்த, அந்தச் சுடர் உடனே எரியத் தொடங்கியது. சுடரைத் தொடர்ந்து எரிய தூண்டிய சிவ புண்ணியத்தால், அந்த எலி மறுபிறவியில், மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பது வரலாறு.
பக்தர்களே! இனி, நீங்கள் விளக்கை ஏற்றும் போதும், தூண்டி விடும் போதும், குளிர்விக்கும் போதும் இந்தச் சம்பவத்தை நினைவில் கொள்ளுங்கள். ஓர் எலியின், எளிய சேவைக்கு சக்கரவர்த்தி பதவியே தந்த சிவபெருமானின் அருளை எண்ணிப் பார்ப்பதற்கு, சில கணங்கள் மெல்ல கண் மூடி, மனம் திறந்து, ‘ஓம் நமசிவாய’ என்று உச்சரித்தபடியே சிவபெருமானை தரிசனம் செய்யுங்கள்.
அக்னியானது, நமக்கு ஒவ்வொரு கணமும், நாம் வாழ்வதற்கு வேண்டிய சக்தியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சமைத்ததை நாம் உண்டு செரிக்கச் செய்வதற்கும், நம் வயிற்றில் உள்ள ஜடராக்னி என்ற அக்னி தான். அந்த ஜடராக்னியை எண்ணிப் பார்ப்போம்.
அதோடு நாம் உண்ணும் உணவை இயற்கையில் தாவரங்களில் பக்குவப்படுத்தித் தருவது சூரிய தேவன் என்ற மாபெரும் அக்னி. பிரபஞ்ச தீபம், ஒளியின் மிக உன்னத வெளிப்பாடுதான் சூரியன்.
அந்த சூரியனின் மகிமையைப் பற்றி பகவத்கீதை இவ்வாறு முழங்கும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: ‘சூரியனில் உள்ள எந்த ஒளி உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, எந்த ஒளி, சந்திரனிலும், அக்னியிலும் திகழ்கிறதோ, அந்த ஒளி என்னுடையது என்று அறிந்திடு‘.
சூரியனை வணங்கினால், நம் உடல், உள்ளம், அறிவு அனைத்தும் வலுவடையும். உங்கள் முன்னே எரியும் இந்தச் சுடரையே, சூரிய பகவானாக கருதி கைகளைக் கூப்பிக்கொண்டு இந்த பிரார்த்தனையைச் செய்யுங்கள்.
த்வரிதம் சக்ஷுரோகான் சமய சமய
மம ஜாத ரூபம் தேஜ: தர்சய தர்சய!!
யதா அஹம் அந்தோ ந ஸ்யாம்
ததா கல்பய கல்பய, கல்யாணம் குரு குரு
யானி மம பூர்வஜன்மோ பார்ஜிதானி சக்ஷு: ப்ரதிரோதக
துஷ்க்ருதானி ஸர்வாணி நிர்மூலய நிர்மூலய!!
-சாக்ஷஷ்மதீ வித்யா
சூரிய பகவானே, எனது கண்களின் ஒளி நிலையாக இருக்கட்டும். என்னை எப்போதும் காப்பாற்றுங்கள். எனது கண் நோய்கள் விரைவில் அகலட்டும். உங்களது ஒளி வடிவத்தை எனக்குக் காட்டியருளுங்கள். எனது கண் ஒளி விலகாது இருக்கட்டும். எனக்கு மங்களம் நல்குங்கள்.. எனது கண்ணொளி விலகாது இருக்க அருள் புரியுங்கள். அடியேனுக்கு அனைத்து மங்களங்களையும் தந்து அருளுங்கள். என் கண்ணொளிக்குப் பாதகமாக அமைகிற முற்பிறவி பாவங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை ஒரேடியாக நீக்கி விடுங்கள். எனக்குக் கண்ணொளி தாருங்கள்.
இந்தப் பிரார்த்தனை, நமது பாரம்பரியமான ஒரு பிரார்த்தனை. அதை சிரத்தையுடன் செய்யுங்கள்; தெய்வ சக்தியால் உங்களது கண் நோய்கள் அகலும்.
நமது கண் நோய்கள் போவது ஒரு புறம் இருக்கட்டும். நமது கண்ணோட்டத்தில் உள்ள நோய்களான பிறர் குற்றம் காண்பது, பேராசைப்படுவது, பொறாமை கொள்வது போன்றவையும் விட்டு விலகட்டும். அந்த நோய்களும், நம்மை விட்டு விலகட்டும் என்று இறைவனை வேண்டுங்கள்.
மின்சாரம் இல்லாத பழங்காலத்தில், விளக்கின் ஒளியில்தான் மேடை நாடகங்கள் நடத்தப்படும். தீபங்களே எல்லாவற்றையும் பிரகாசிக்கும். நாடகத்தின் எல்லா கதாபாத்திரங்களையும் ரசிகர்களுக்குக் காட்டுவது மேடையில் இருக்கும் நாடக தீபம் என்ற ஒரு பெரிய விளக்கு.
மேடையின் மேலே இருக்கும் விளக்கு அனைத்தையும் பிரகாசிக்கச் செய்தாலும், தான் சாட்சியாக இருந்து கவனிக்கும். அந்தத் தீபம் இல்லாவிட்டால் நாடகம் நடைபெறாது.
இந்த உலகமே ஒரு நாடக மேடைதானே! இதில் இறைவன் நாடகதீபம் போல், எல்லோரையும் பிரகாசிக்கிறார். எல்லாவற்றையும் நடத்துகிறார் என்கிறது ‘பஞ்சதசி’ என்ற வேதாந்த கிரந்தம்.
அந்த நாடக தீபம் போன்று, நம் அனைவரையும் நடத்தும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பேரொளி வெள்ளமாகப் பார்ப்போம். அவ்வாறு எண்ணி உங்கள் முன் உள்ள விளக்கை மீண்டும் உற்று நோக்குங்கள்.
அந்த ஒளியின் முன் உங்களது இஷ்ட தெய்வத்தை எண்ணி, இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள்.
அஸதோ மா ஸத் கமய!
தமஸோ மா ஜ்யோதிர் கமய!
ம்ருத்யோர் மா ம்ருதம் கமய!
‘பேரொளியான இறைவா! உண்மையற்றலிருந்து உண்மைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்; இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்; சாவிலிருந்து, சாகா நிலைக்கு என்னைக் கொண்டு செல்லுங்கள்.
இறைவனிடம் இவ்வாறு வேண்டிய பிறகு, தீபத்தை உற்று நோக்குங்கள். தீபம் அசையாமல் மேல் நோக்கிச் சுடர் விடுகிறது. அது போல், நமது மனமும் மேல் நோக்கிப் போக வேண்டும். இறைவன் நமக்குள் எழுந்தருள வேண்டும், அதற்காக ஞானதீபத்தை நமக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
‘அகத்தில் ஞானதீபம் ஏற்றி பிரம்மமயியின் முகத்தைப் பார்’ என்ற பகவானின் பிரார்த்தனையை நாமும் செய்வோம்.
மகாகவி பாரதி பாடியது போல் ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா’ என, நம் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அல்லது இஷ்டதெய்வம் என்று நம்மை அழைக்கிறாரோ, அன்றுதான் உண்மையில் நமக்கு கார்த்திகைத் தீபத்திருநாள்.
அந்த அற்புத வேளையை நெஞ்சிலும், நினைவிலும் ஏந்தி ஒளி வடிவான இறைவனுக்கு நாம் ஒவ்வொரு நாளும் மானசீகமாக தீபாராதனை செய்வோம்.
ஒளி பெறுவோம், ஒளி கொண்டு வருவோம். ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா!
01 டிசம்பர், 2020