ஆண்மை உருக்கொண்ட அந்தணன் - எங்கள்
அண்ணல் விவேகானந்தனின்
மாண்பை அளந்திட எண்ணினால் - இந்த
மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்
வீரத்துறவறம் நாட்டினான் - திண்ணை
வீணர் வேதாந்தத்தை ஓட்டினான்
தீரச் செயல்களை நாட்டினான் - இந்த
தேச நிலைகண்டு வாடினான்
பெண்ணின் பெருமையை போற்றினான்
ஆண்கள் பேடித்தனங்களை தூற்றினான்
மண்ணின் சுகங்களை விட்டவன் - ஏழை
மக்களுக்காய் கண்ணீர் கொட்டினான்
அடிமை மனதை அகற்றினான் - உயர்
அன்பின் உறுதி புகட்டினான்
கொடுமை அகன்றிட முந்திடும் - தவக்
கூட்டத்தை நாட்டுக்குத் தந்தவன்
- நாமக்கல் கவிஞர்