RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை

22.01.21 06:37 PM By thanjavur

கேள்வி - 5

கேள்வி 5: முருக பக்தனாகிய நான் ஒரு கோவில் கும்பாபிஷேகப் பணியில் ஈடுபட்டேன்.  ஆனால் அதன் தர்மகர்த்தாக்கள் அதர்மமாக நடந்து கொண்டார்கள். முடிவில், அந்தப் பணியை மிகவும் சிரமத்தோடு நல்லவிதமாக முடித்துவிட்டோம். இறைவனின் பணி செய்தபோது எனக்கு ஏன் இப்படி இடைஞ்சல் வந்தது? -திரு சுதாகர், அண்ணா நகர், சென்னை.


பதில்: ஒரு நல்ல காரியம் செய்யும்போது அதிக இடைஞ்சல்கள் வந்தால் அது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை நாம் உடனே புரிந்து கொள்ள வேண்டும். 


பக்தர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய அரக்கர்கள்தான் தாரகாசூரனும் அவனது சகோதரர்களும். முருகப்பெருமானுக்கு நாம் சேவையாற்றுவதை அந்த அரக்கர்கள் தடுப்பார்கள். அப்படிப்பட்ட அரக்கர்கள் இன்றும் இருக்கிறார்கள். தங்களை மட்டுமே எல்லோரும் மதிக்க வேண்டும் என்று அலையும் கூட்டத்தை நீங்கள் கும்பாபிஷேகச் சமயத்தில் கண்டிருப்பீர்கள்.


 சுயநல விரும்பிகள், அகங்கார அற்பர்கள், தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று அலைபவர்கள், தன்னை முன்னிலைப்படுத்தியே எதையும் யோசிப்பவர்கள்- இவர்கள் போன்றவர்கள்தான் அரக்கர்கள். இது போன்ற மலினம் இல்லாதவர்களே உண்மையான முருக பக்தர்கள்.


    இந்த அரக்கர்களை முருகன் ஏன் தமது திருப்பணிகளில் சேர்த்துக்கொண்டார் என்ற ஒரு கேள்வி இங்கு உங்களுக்கு வரலாம்.


     ஆறுமுகப் பெருமான் தன்னைப் போரில் எதிர்க்க முடியாமல் மாமரமாகி நின்ற சூரனை வதைத்து அவனை இரண்டாகப் பிளந்தார்; பிளந்த ஒரு பகுதி சேவலாகவும் மற்றொரு மயிலாகவும் மாற்றினார். அந்த அசுர சக்திகளை வெளியில் விட்டால் ஆபத்து என்பதாலோ தமது அருகிலேயே அமர்த்திக் கொண்டார் ஐயன்!
        

    நீங்கள் சந்திக்க வேண்டிய உங்களுக்கான சூர சகோதரர்களைக் கண்டு நீங்கள் ஓடி விடவில்லை. உங்களுக்குரிய அளவில் நீங்களும் சூர சம்ஹாரம் செய்து முருகப்பெருமானின் சம்ஹாரப் பிரதிநிதியாக மாறி விட்டீர்கள். ஆம், முருகன் பெருமளவில் செய்த ஒரு பணியைச் சிறிய அளவில் உங்களையும் செய்ய வைத்தது அவரது திருவருள். அசுர சக்திகளை எதிர்த்து நின்று ஐயனது சேவையில் ஈடுபடும் அற்புத வாய்ப்பை உங்களுக்கும் ஆறுமுகப்பெருமான் வழங்கினார். 


    நல்ல காரியங்கள் செய்யும்போது பொறுமை, விடாமுயற்சி போன்ற குணங்களுடன், தாங்கள் செய்யும் காரியத்தில் தீவிர நம்பிக்கை, எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் பண்பு போன்றவை மிகவும் அவசியம் என்பார் சுவாமி விவேகானந்தர்.

    கும்பாபிஷேகப் பணியினால் இந்த நல்ல பண்புகள் ஓரளவிற்காவது உங்களுக்கு வந்திருக்கிறது என்றால், அது முருகப்பெருமானின் கருணை என்றே கொள்ளுங்கள்.  வெற்றிவேல் வீரவேல்.

சுவாமி விமூர்த்தானந்தர்

22 ஜனவரி, 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur