விவேகானந்தர் நம்மிடம் வேண்டுவது இரும்பு தசையும் எஃகு நரம்பும்

13.08.22 05:56 PM - By thanjavur


உடலாலும் உள்ளத்தாலும் அடிமையாகிப் போயிருந்த நம் மக்கள் மத்தியில் சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் 1897-ஆம் ஆண்டில் இவ்வாறு முழங்கினார்:

     

"....நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல. இது ஆனந்தக் கண்ணீர் வடிப்பதற்கான நேரமும் அல்ல. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்கள் ஆவதற்கு இது தருணம் அல்ல. மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம். பிணங்களாக மாறிவிட்டோம்.

     

"நமது நாட்டிற்கு இப்போது தேவை இரும்பாலான தசையும் எஃகாலான நரம்புகளும். அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால் அதற்காக கடலின் அடி ஆழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேர் சந்திக்கும் மகத்தான சக்தி வாய்ந்த, யாராலும் தடுக்க முடியாததான சங்கல்பம்தான் நமக்கு இப்போது தேவை."

     

நண்பர்களே, மின்சாரம் போன்ற இந்தக் கருத்தினை சுவாமிஜி முதன் முதலில் கும்பகோணத்தில் மொழிந்தார். சுவாமி விவேகானந்தரால்தான் இப்படி ஒரு வீர மொழியை நமது இளைஞர்களின் மனதில் புகுத்த முடியும். அவர் வீரமாகப் பேசினார் என்பதை விட, பலம் எனும் தத்துவமே அவர் மூலம் பேசியது எனலாம்.

     

விவேகானந்தர் எதிர்பார்க்கும் உடல் வலிமை என்பது என்ன? ஜிம்முவிற்குச் சென்று மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் மிஸ் இந்தியா ஆவது மட்டும்தான் பலமா?சுவாமிஜியின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர் எதை விரும்புகிறார் என்பதை நாம் அறியலாம்.

சுவாமி சங்கரானந்தர் என்ற மகான் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷினின் ஏழாவது பொதுத் தலைவராக மிளிர்ந்தவர்.

அவர் இளைஞராக இருந்தபோது கம்பீரமாகவும் தோற்றப்பொலிவுடனும் ஆஜானுபாகுவாகவும் இருந்தார். சுவாமி விவேகானந்தரே ஒரு முறை அவரைப் பார்த்து வியந்ததுண்டு. புறத்தில் அவருக்கிருந்த காம்பீர்யத்தை அகத்திலும் அவர் பெற்றிருந்ததைக் கண்டு சுவாமிஜி வியந்திருப்பார்.

     

ஆங்கிலேயக் கொடுங்கோல் ஆட்சி கொல்கத்தாவில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. குறிப்பாக ஓர் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி இந்தியர்களை எங்கு கண்டாலும் தனது தேக்கு மரக் கைத்தடியால் குத்துவார் அல்லது அடிப்பார், மக்களை இகழ்வார்.

இளைஞராக இருந்த சுவாமி சங்கரானந்தர் ஒரு முறை அவரது பாதையில் குறுக்கிட்டார். வழக்கம் போல் அந்த அதிகாரி சங்கரானந்தரை அடிக்க வந்தார். உடனே சங்கரானந்தர் அவரது கைத்தடியைப் பிடுங்கி தனது தொடையில் தட்டி உடைத்துத் தனது தேக பலத்தைக் காண்பித்தார்.

     

முரட்டு அதிகாரியின் முன்பு சங்கரானந்தர் தனது வலிமையைக் காட்டியது பலரையும் வியக்க வைத்தது. அது மட்டுமல்லாமல், அந்த அதிகாரியைத் தள்ளிவிட்டுப் பதற்றமில்லாமல் அங்கிருந்து தப்பியதும் அவரது எஃகு போன்ற நரம்பைக் காட்டியது.

     

சீறுவோர் சீறு, சிறுமை கண்டு பொங்கு என்பதெல்லாம் சுவாமிஜி விரும்பும் வலிமை என்பதன் விரிவாக்கங்கள். விவேகானந்தர் விரும்பும் உடல் வலிமை என்பது போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வெறும் சிக்ஸ் பேக்ஸ் அல்ல.

உடல் வலிமை என்பது  பிறருக்காகப் பாடுபடுவதும், கொடுங்கோன்மையைக் கண்டு தோள் நிமிர்த்துவதும்தான்.

     

உடலினை உறுதி செய் என்று பாரதியார் பாடுவதற்கு அடி எடுத்துக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். சுவாமிஜி தமது அந்திமக்காலத்தில்கூட டம்பள்ஸ் எடுத்துப் பயிற்சி செய்து கைகளை வலுப்படுத்திக் கொள்வார். அப்படிப்பட்டவர் இளமையில் எவ்வாறு இருந்தார் தெரியுமா?

     

ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் ட்ரபீஸ் என்ற எடை அதிகமுள்ள ஒரு வகை உடற்பயிற்சி கருவியை நரேந்திரனும் அவரது இளம் நண்பர்களும் பொருத்திக் கொண்டிருந்தனர்.

அவர்கள் சிரமத்துடன் அந்தக் கருவியைத் தூக்கி நிறுத்துவதைப் பலர் வேடிக்கை பார்த்தார்கள். அப்போது அங்கு வந்த ஆங்கிலேய கப்பல் மாலுமி ஒருவர் அந்த இளைஞர்களுக்கு உதவ முன் வந்தார். எல்லோரும் சேர்ந்து ட்ரபீஸ் கருவியைத் தூக்கினர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்தக் கருவி ஆங்கில மாலுமி மீது விழுந்துவிட்டது. ஆங்கிலேய அதிகாரி ஒருவர் இந்தியர்களின் கவனக்குறைவினால் கீழே விழுந்து அடிபட்டு விட்டார் என்று தெரிந்ததும் கோழைக் கூட்டம் ஓடிவிட்டது. விவேகானந்தருடன் இருந்த இளைஞர்களும் ஓடப் பார்த்தார்கள்.

     

அந்தச் சிக்கலான நேரத்தில் தான் ஒரு தலைவன் என்பதை நிரூபித்தார் சுவாமிஜி. ஓடுபவர்களைப் பற்றி கவலைப்படாது, இருப்பவர்களைத் தைரியப்படுத்தித் தக்க வைத்துக் கொண்டார். ஆங்கிலேய அதிகாரிக்கு முதலுதவி செய்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். சில நாட்கள் அவருக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்து அவர் குணமடைந்ததும் அவருக்கு ஒரு சிறு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தும் அனுப்பினார். சிக்கலான நேரத்தில் செம்மையாகச் செயல்பட வலுவான நரம்புகள் ஒருவருக்கு வேண்டும்.

     

சுமார் பன்னிரண்டு வயது இருக்கும்போது சுவாமிஜி தன்னைவிட 10 வயது பெரியவனான ஒருவரைச் சிலம்பாட்டம் ஆடியே சாய்த்தார் என்று அவரது வரலாற்றில் படிக்கிறோம்.

     

பெரும் எண்ணிக்கையில் இருந்த இஸ்லாமிய கொள்ளைக்காரப்  படையை, அளவில் குறைவாக இருந்தாலும் நம்பிக்கையில் திடமாக இருந்த சத்ரபதி சிவாஜியின் படை தோற்கடித்த வரலாற்றை சுவாமிஜி சிலாகித்து பேசுவார். விவேகானந்தர் விரும்புவது வெறும் எண்ணிக்கையை அல்ல, நம்பிக்கையை..., நாம் பலசாலி என்ற நம்பிக்கையை.

     

சாந்தோக்கிய உபநிஷத்தில் சனத்குமாரர் கூறுகிறார்: நாம் புரிந்து கொள்வதை விட வலிமை மிக மேலானது.  ஒரு வலிமையான மனிதன் நூறு பேரைக் கூட நடுங்க வைப்பான்.  ஒருவன் நல்ல விதத்தில் வலிமையுடையவனாக இருந்தால், அவன் உற்சாகமாகவும், உயர்வாகவும் இருப்பான்.

     

சனத்குமாரர் மேலும் கூறுகிறார்:

இந்தப் பூமியைத் தாங்கி நிற்பது எது தெரியுமா? வலிமைதான், பலம்தான்.  ஆகாசம், சொர்க்கம், மலைகள், தெய்வங்கள் மற்றும் மனிதர்கள், கால்நடைகள், பறவைகள், கொடிகள் மற்றும் மரங்களை எல்லாம் வலிமைதான் தாங்கி நிற்கிறது.  ...... பலம் உலகம் முழுவதையும் தாங்கி நிற்கிறது. அதனால் பலத்தை வழிபடுங்கள்.

बलेन लोकस्तिष्ठति बलमुपास्स्वेति ॥

     

-சாந்தோக்கிய உபநிஷதம் -7:8:1

     

உபநிஷதங்கள் என்ற வனத்தில் வலிமை என்ற அமுதத்தை நமக்காகத் திரட்டிக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

     

இவ்வாறு பல வகையிலும் சுவாமிஜி உடல் வலிமையையும் மன வலிமையையும் போற்றி வந்தார், பலம் இல்லாதவர்களையும் பலத்தை வளர்த்துக் கொள்ள தவறுபவர்களையும் கண்டித்தும் வந்தார்.

     

அதிலும் குறிப்பாக மென்மையாக இருப்பது என்ற போர்வையில் பேடித்தனமாக நடந்து கொள்வதை அவர் வெறுத்தார். இன்று மெலடிஸ் பாட்டுகளைக் கேட்டுக் கேட்டு மனிதன் வீரத்தை மறந்து மலட்டுத்தன்மையை அடைகிறான். பேரிகைகள் முழங்கட்டும் என்று சுவாமிஜி கூவியதைக் கேட்ட மகாகவி பாரதியார் 'ஜயபேரிகை கொட்டடா....' என்று அவருடன் சேர்ந்து முழங்கினார்.

     

பொதுவாக இந்து சமயத்தில் துறவிகள் உடலைத் துச்சமாக நினைத்துக் கொள்வார்கள். அதையே உபதேசிப்பார்கள். ஆனால் சமுதாயத்தையும் சமயத்தையும், தேசத்தையும் தெய்வீகத்தையும், அறிவியலையும் ஆன்மீகத்தையும் தமது இரண்டு கண்களாகக் கண்டவர் சுவாமிஜி.

நாட்டையும், சமயத்தையும், இந்து பாரம்பரியத்தையும், கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தேகத்தில் திடமாகவும் தைரியத்தில் நிமிர்ந்தும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நண்பர்களே, இந்தச் செய்தி இன்றைக்கு மிக மிக அவசியமாகத் தேவைப்படுகிறது அல்லவா?

     

உடலை உறுதியாக்கி, மனதை வலுவாக்கி, இரண்டையும் முறையாக பேணுவதற்கு அறிவை ஆற்றலுள்ளதாக்க வேண்டும். இந்த மூன்று பலத்தையும் தேச சேவைக்கும் தெய்வீகப் பணிக்கும் ஒப்படைக்கும்போதுதான் நம் உடல் தேகாலயம் ஆகிறது.

     

சுவாமிஜியின் வலிமை மிக்க உபதேசத்தை ஏற்றுக் கொண்டவர்களால்தான் நாம் இன்றாவது நமது பாரம்பரிய சொத்துக்களைக் காப்பாற்ற முடிகிறது. யாரெல்லாம் சுவாமிஜியின் இந்த உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்களோ, அவர்களால் பாரதம் பயனடைந்து வருகிறது. அவர்களால் மட்டுமே எதிர்காலத்திலும் பயன்கள் பல்கிப் பெருகும்.

     

முத்தாய்ப்பாக மொழிவதென்றால், வலிமை இல்லாதவன் விவேகானந்தருக்கு ஒவ்வாதவன்.

சுவாமி விமூர்த்தானந்தர்

10.08.2022

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இதனைக் கேட்க


thanjavur