உலகின் லட்சக்கணக்கான மக்களுக்குத் தெய்வீக அன்பைத் தந்து வருபவர் அவர். அவரை நினைத்ததும் நமக்குள் ஆற்றலை நிறைப்பவர். அந்தத் திருமகன் அறிவை, ஆன்மீகப் பேரறிவை வாரி வாரி வழங்குபவர். உலக மக்கள் அனைவரும் ஒரு குலமாக வாழ்ந்து அனைவரும் முன்னேற வேண்டும் என்று தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் அந்த மகான்.
அன்பு, அறிவு, ஆற்றல், அமைதி, ஆன்மீகம் என்று அனைவருக்கும் வழங்கிய அந்த உலகளாவிய மாமனிதர் தான் சுவாமி விவேகானந்தர்.
உலகிற்கு அமைதியைக் கொடுத்துக் கொண்டிருப்பவர், அப்படிப்பட்ட அவரது உடலுக்கும் உள்ளத்திற்கும் அப்போது அவசியம் தேவைப்பட்ட தாற்காலிக ஓய்வினை ஒரு நபர் தந்திருந்தால் பாராட்டலாம், ஆனால் ஒரு நகரமே அந்த ஓய்வைத் தந்ததென்றால், அதைக் கொண்டாடத்தானே வேண்டும்!
சுவாமிஜி மேலைநாட்டிற்குச் செல்வதற்கு முன்பு பரிவ்ராஜகராக நாடெங்கும் சுற்றி நாட்டைப் பற்றிய விவரங்களைத் திரட்டினார். அவரை நாடி வந்தவர்களுக்குத் தனது ஆன்மீகச் செல்வங்களை நல்கிக் கொண்டிருந்தார்.
1893- இல் சென்னையில் தங்கியிருந்தபோது சுவாமிஜிக்கு ஒரு நாள் கனவு ஒன்று வந்தது. அதில் தான் மிகவும் நேசித்து வந்த தனது அன்னை காலமாகிவிட்டதாக கண்டார். அந்தக் கனவு சுவாமிஜியைச் சற்று கலங்க வைத்தது. அதைப் புரிந்து கொண்ட அவரது சீடர் அளசிங்கர் தன் குருவின் மனதிற்குச் சாந்தம் ஏற்படும் வகையில் அவரை கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் என்ற ஊருக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பக்தர், ஜோசியர் மற்றும் குறி சொல்பவரான கோவிந்த செட்டி என்பவரை சுவாமிஜி சந்திக்க ஏற்பாடு செய்தார்.
அப்போது கோவிந்த செட்டி கூறிய அருள் வாக்குகளைக் கேட்ட பின்புதான் சுவாமிஜிக்குப் பெரும் நிம்மதியும் ஊக்கமும் ஏற்பட்டது. கோவிந்த செட்டி சுவாமிஜிக்கு அவரது வாழ்க்கை சம்பந்தமான மூன்று முக்கியமான உண்மைகளை உரைத்தார்.
1. சுவாமிஜியின் தாய் உயிரோடுதான் இருக்கிறார்.
2. சுவாமிஜியின் குருவான ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை எப்போதும் பாதுகாத்து வருகிறார்.
3. மேலை நாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் சென்று பாரதப் பாரம்பரியப் பெருமையை முழங்கப் போகிறார்.
ஆனந்தமும் அமைதியும் ஆற்றலும் தந்த இந்த மூன்று செய்தியை கோவிந்த செட்டி சுவாமிஜிக்குக் கூறியது அவருக்குப் பெரும் உத்வேகத்தைத் தந்தது. இந்த மூன்றும் விவேகானந்தருக்குக் கிடைத்தது கும்பகோணம் சார்ந்த மண்ணில்தான்.
மேலைநாட்டில் பாரதப் பெருமையைப் பறைசாற்றி விட்டு சுவாமிஜி மீண்டும் 1897 -இல் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் கும்பகோணம் அடைந்தார். அதற்கு முன்பு அவர் பல நாட்கள் கடற்பயணம் மேற்கொண்டு இலங்கை அடைந்தார். அங்கிருந்து தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகப் பல பேருரைகளைப் பல நகரங்களில் அவர் ஆற்றிக் கொண்டே வந்தார்.
சுவாமிஜி தெய்வீக மனிதர் என்றாலும் அவருக்கும் உடல் சம்பந்தமான சிரமங்கள் வந்தன. அதோடு ஓயாத கடும் உழைப்பும் சேர்ந்ததால் அவருக்குக் கட்டாய ஓய்வு தேவைப்பட்டது.
மக்கள் மீதிருந்த அன்பினால் தனது சிரமங்களை அவர் பொருட்படுத்தவில்லை. மேலும் கும்பகோணத்தைத் தாண்டிய பிறகு சென்னையில் அவர் ஆற்ற வேண்டிய உரைகள் மற்றும் பெரும் பணிகள் அவருக்காக ஆவலுடன் காத்திருந்தன.
பாரதத்தின் பெருமை, ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த அன்றைய அவல நிலை, சோம்பித் திரிந்த மக்களிடம் சுதந்திர தாகத்தைத் தூண்டி விடுவது, சுதந்திரத்திற்குப் பின் நாட்டை எவ்வாறு நிர்மாணம் செய்வது, அதற்காக மக்களையும் தலைவர்களையும் தயார் செய்வது போன்ற மகத்தான காரியங்களை எல்லாம் சென்னை சென்ற பிறகு அவர் மக்களுக்கு எடுத்து விளக்க வேண்டி இருந்தது.
அதனால் நிச்சயமாக அங்கு அவருக்கு ஓய்வுக்கு வாய்ப்பு இருக்கவே இருக்காது. கும்பகோணத்திற்கு முன்பு வரையிலும் அவருக்கு ஓய்வுக்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற கும்பகோணத்து அன்பர்கள் பொருத்தமான ஒரு காரியம் செய்தார்கள். சுவாமிஜியைத் தங்கள் நகரத்திலேயே தங்க வைத்து ஓய்வு கொடுத்து கும்பகோணத்திற்குப் பெருமை சேர்த்தார்கள். சுவாமிஜியின் சரீரத்திற்குச் சக்தியைச் சேர்த்தார்கள்.
கும்பகோணத்துப் பெருமக்களும் மாணவர்களும் சுவாமிஜிக்கு போர்ட்டர் டவுன் ஹாலில் பெரும் வரவேற்பு கொடுத்தார்கள். அந்தச் சமயத்தில் திரளாக மக்கள் கூடியிருந்தார்கள். அப்போது அந்தக் கூட்டத்தில் சுவாமிஜி ஒருவரைக் கண்டு அவரைத் தான் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அவர் யார்?
நான்காண்டுகளுக்கு முன்பு வலங்கைமானில் சுவாமிஜிக்கு அமைதியை நல்கிய கோவிந்த செட்டிதான் அவர். சுவாமிஜி பிரதி உபகாரமாக ஆன்மீக வாழ்க்கைக்கு முழுவதுமாகத் திரும்புவதற்கு கோவிந்த செட்டியை ஆசிர்வதித்தார்.
கும்பகோணத்து மக்களின் சமயப் பற்று பற்றி ஓர் அருமையான தகவல் உண்டு. கும்பகோணத்து மக்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நன்கு யோசிப்பவர்கள். சுதந்திரத்திற்கு முன்பு ICS படித்துவிட்டுப் பணியாற்றிய முதல் தமிழ் மக்களுள் கும்பகோணத்துக்காரர்கள் அதிகமாக இருந்தார்கள்.
அப்படிப்பட்ட அந்த மக்களை அயோக்கியர்கள் என்று ஆங்கிலேயர்கள் தங்களது அகராதியிலேயே குறித்து வைத்தனர். அந்த அவச்சொல் எவ்வாறு வந்தது?
18-ஆம் நூற்றாண்டில் திருச்சி திருவாரூர், மாயவரம், கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்த மேட்டுக்குடி மக்கள் சிலரை கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றினார்கள். இன்றும் தஞ்சை பகுதியில் உள்ள பழமையான சி.எஸ்.ஐ. சர்ச்சுகளில் பாதிரியார்களை ஐயர் என்றே அழைக்கிறார்கள்.
மதம் மாற்றுவதற்கு வேண்டிய படிப்பு, மருத்துவ வசதி, சத்துணவு, துணிமணிகள், கௌரவம், பட்டம் பதவி என்றெல்லாம் அந்தச் சிலருக்குக் கொடுத்தார்கள். அவர்களும் அவற்றை ஏற்றுக் கொண்டார்கள்.
காலப்போக்கில் அவர்களை சர்ச்சுக்கு அழைத்தார்கள். சர்ச்சில் அவர்களைப் பேச வைத்தார்கள், கௌரவப்படுத்தினார்கள். இவை போன்ற நடவடிக்கைகளால் சிலருக்குப் பிடித்தும் பிடிக்காமலும் அரை மனதுடன் மதம் மாறினர்.
பாதிரியார்களால் மற்ற ஊர்க்காரர்களை ஓரளவிற்கு வசியப்படுத்த முடிந்தது. ஆனால் கும்பகோணத்துக்காரர்கள் மட்டும் மதம் மாற்றும் பாதிரிகளிடம் நேரடியாக,"நீங்கள் சலுகைகள் கொடுங்கள், ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் நாட்டிலிருந்து எடுத்து எங்களுக்கே கொடுக்கிறீர்கள், அவ்வளவுதானே! அதற்காக நாங்கள் ஏன் மதம் மாற வேண்டும்?" என்று கேட்டார்கள் தைரியமாக.
கும்பகோணத்து மேட்டுக்குடி மக்களை மதம் மாற்றிவிட்டால் தங்கள் மதத்திற்குப் பலம் கூடும் என்று நம்பி ஏமாந்த பாதிரிகளுக்கு இது ஒரு மோசடியாக தெரிந்தது. அதனால் அவர்கள் கூற ஆங்கில அகராதியில் he is doing Kumbakonam என்றாலே ஒருவர் ஏமாற்றுகிறார் என்று குறிக்கப்பட்டது.
மதம் மாறாமல் தாய் மதத்தில் பற்றுடன் இருப்பது மோசடி வேலையா?
"இந்துவானவன் புத்தி கூர்மையுள்ளவன். தன்னைக் கவர்ந்து செல்வதற்காக வைக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துக் கொள்வான். ஆனால் தன்னைப் பிடிக்க வைக்கப்பட்டிருக்கும் கொக்கியில் மாட்டிக்கொள்ள மாட்டான்" என்று சுவாமி விவேகானந்தர் ஒரு முறை கூறியது கும்பகோணத்து அன்பர்கள் விஷயத்தில் உண்மையானது.
புத்தி கூர்மையும் துணிச்சலும் கொண்ட மக்கள் மிகுந்துள்ள கும்பகோணத்தில் சுவாமிஜி இரண்டு முறை விஜயம் செய்தது நாம் அனைவரும் செய்த புண்ணியமே.
தனது புனிதத்தால் கும்பகோணத்தில் பெருமையைக் கூட்டிய சுவாமிஜிக்கு 2022 -ஆம் ஆண்டு பாரத தேசத்தின் 75 ஆவது சுதந்திர தின நிறைவு விழாவில் அவரது திருவுருவச் சிலை கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நிறுவப்பட உள்ளது.
அந்தத் தெய்வீக மாமனிதரின் சிலை வைக்கப்படும்போது நமது சமுதாயத்தின் நிலை மேம்படுவது திண்ணமே.
சுவாமி விமூர்த்தானந்தர்
09.08.2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்