RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 5

21.06.21 04:15 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 5

பேசும் புல்லாங்குழல் 

இந்தக் கதை பற்றி முனைவர் கே.பாரதி சந்துரு கூறுகிறார்: பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கையில் இருக்கும் புல்லாங்குழல் கூறும் கதை இது. சுவாமி விவேகானந்தரின் கிருஷ்ண பக்தியை விவரிக்கிறது புல்லாங்குழல். முத்துமுத்தான சம்பவங்களை நூலில் கோர்த்து அளித்த சரம் போன்று இதை எழுதியுள்ளார் பாமதிமைந்தன்.

விவேகானந்தரின் கிருஷ்ண பக்தியின் தொடக்கம் எது?

ஸ்ரீராதையின் தரிசனத்தால் விளைந்த உன்னத பக்தி அது என்று குறிப்பிடும்போது ராதாகிருஷ்ண தத்துவப் புரிதலுடன் கதையை அனுபவிக்க முடிகிறது.

சுவாமிஜி பிருந்தாவனம் சென்றதையும், கோவர்த்தன மலையை வைராக்கியத்துடன் வலம் வந்ததையும், அவரது சங்கல்பம் நிறைவேறியதையும் நேர்த்தியுடன் காட்சிப்படுத்துகிறது கதை!

உருவக் கடவுளிடம் நம்பிக்கையற்ற ஹரிசிங் என்ற படைத்தளபதிக்கு ஸ்பரிச தீட்சை மூலம் கிருஷ்ண தரிசனத்தை உணர்த்தியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

‘இப்போது நமக்கு வேண்டியது குழலூதும் கண்ணன் அல்ல! சிங்கநாதம் முழங்கும் கீதை கண்ணனே’ என்று விவேகானந்தர் முழங்கியதைப் பெருமையுடன் சொன்ன புல்லாங்குழல், தன்னை ஒதுக்கிவிட்டாரே என்று ஒருபோதும் புலம்புவதில்லை.

சுவாமி விவேகானந்தரின் கிருஷ்ண பக்தி மேன்மையைக் குழலால் நுட்பமாக இசைக்கிறது இந்தக் கதை!

எனக்குள் ஊதப்படும் காற்றை இசையாக்கிவிட்டு, நான் இறைவசமாகிவிடுவது என் இயல்பு. அதனால்தான் கண்ணன் தனது அதரங்களிலேயே இந்த ஏழையை வைத்து இசை பாடுகிறான் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

எனது இந்தப் பண்பை உடைய ஒருவரை நான் கண்டுள்ளதால், அந்த மாமனிதரைப் பற்றி உங்களிடம் சொல்ல வந்தேன்.

பேரறிஞர், தத்துவமேதை, வேதாந்தி, மாமுனி, யோகி, தேசத் தலைவர், இந்து மதத்தைக் காப்பவர், சர்வதர்ம மர்மதரிசி, இளைஞர்களின் சக்தியூற்று, சுவாமிஜி என்றாலே இவர்தான் – என்றெல்லாம் உலகம் இவரைப்  போற்றுகிறது.

ஆனால், இவர் ஓர் அரிய கிருஷ்ண பக்தர் என்பது சிலருக்கே தெரியும்.

இவ்வளவு கூறும்போதே, நீங்கள் ஊகிக்கலாம், நான் உரைக்கப் போவது விவேகானந்தர் பற்றியே என்று!

அவர் எங்கு போனாலும் அங்கு வீற்றுள்ள தெய்வங்களின் ஆவிர்பாவம் அவருக்குள் ஊற்றெடுக்கும்.

சிவனைச் சிந்தித்தபடி, அமர்நாத் கடுங்குளிர் குகையில் கௌபீனதாரியாக இருந்தார். கடல் நடுவே தேவியின் கணமாகவே தியானத்தில் அமர்ந்தார்! ஏசுநாதர் பற்றிப் பேசியபோது ஏசுவே பேசியதாக மக்கள் உணர்ந்தார்கள்.

இவற்றுள், என்னை மிகவும் ஈர்த்தது ஒன்று உண்டு. சிறுவயதிலேயே பல நாட்கள் கிருஷ்ண தியானத்தில் லயித்திருந்தார் அவர். அதனால் அவரது குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவருளால், ஸ்ரீராதையின் தரிசனத்தைப் பெற்றார்! அவர் பெற்ற தரிசனம் பற்றி அவரே பக்தியோடு உரைத்தாரே, அடடா, அது அபாரம்.

ஸ்ரீராதை எவ்வளவு மென்மையானவள்!

‘அப்போது கறந்த பாலில் தோன்றும் நுரைபட்டால், ராதே, உன் விரல் வெட்டுப்பட்டுவிடுமா? ஒருவேளை அதுகூட சாத்தியமாகலாம். ஆனால், ராதையே, தாயே, உன் இதயமோ அதைவிட மென்மையானது’ என்று விவேகானந்தர் கூறி உருகிப் போகிறார்.

இப்படிப்பட்ட கவி, பக்தத் துறவி பிருந்தாவனம் வருவதை அறிந்தேன். என் இதயதெய்வம் கண்ணனே என்னிடம் கூறினார்:

‘புல்லாங்குழலே, எனக்காக விழிநீர் சிந்தும் பக்தர்களை லட்சக்கணக்கில் நீ பார்த்திருப்பாய்; ஆனால் என் படைப்புகளில் சிறந்ததான மனிதர்களின் முன்னேற்றத்திற்காக விழிநீரோடு, வியர்வையும் சிந்தும் ஒரு லட்சிய யுக பக்தனைக் கண்டு வா; உலகிற்குக் காட்ட வா.’ அப்படிப்பட்டவர் இன்று பிருந்தாவனம் வருகிறார், ஒரு யாத்திரிகராக.

அவர் தமது ஞானம், யோக சக்தி, பேச்சாற்றல் ஆகியவற்றால் இங்குள்ளவர்களைத் தம் வசப்படுத்துவார் என்று சிலர் எதிர்பார்த்தனர்.

ஆனால், அவரோ ஓர் ஆரம்ப நிலை பக்தனாக, காலாற பிருந்தாவனப் பூமியில், ஜபம் செய்து கொண்டே செல்கிறாரே!

கோகுலத்தில் கண்ணன் இருந்தபோது பாதுகையின்றி வெறும் காலோடுதான் நடந்தாராம். கோப, கோபியர்கள் ஏழைகள். அந்த ஏழைகளின் தெய்வமான கண்ணன் அன்று நடந்தது போலவே, ஏழைகளின் இதயநாயகனான விவேகானந்தரும் இன்று இப்படிச் செய்கிறாரோ!

அவர் கோயில்களில் தியானம், ஜபம், சங்கீர்த்தனம் செய்கிறார்; மலைகளை வலம் வந்து, கரதலங்களில் பிக்ஷை ஏற்று, சத்திரங்களில் உறங்கி, யமுனையில் நீராடி, அதன் கரையில் ஜபித்து, சூர்தாசர், மீரா கானங்களைக் கண்ணீருடன் பாடி....,

இவரா இப்படி? இன்னும் ஓரிரு வருடங்களில் உலகையே தமது ஆன்ம சக்தியால் வெல்லப் போகிறவர், இன்று இப்படி! மறைத்துக் கொள்வதில்தான் மகான்களுக்கு என்ன ஒரு மகிமை!

பிருந்தாவனத்தில் ஒரு நாள், விவேகானந்தருக்குத்  திடீரென ‘கண்ணனை நான் மனதார மட்டும் நம்புகிறேனா, அல்லது ஆத்மார்த்தமாக அவனைப் பற்றியுள்ளேனா!’ என்ற ஓர் கேள்வி பிறந்தது. ஒரு நாள், விவேகானந்தருக்குத்  திடீரென ‘கண்ணனை நான் மனதார மட்டும் நம்புகிறேனா, அல்லது ஆத்மார்த்தமாக அவனைப் பற்றியுள்ளேனா!’ என்ற ஓர் கேள்வி பிறந்தது. ஒரு நாள், விவேகானந்தருக்குத்  திடீரென ‘கண்ணனை நான் மனதார மட்டும் நம்புகிறேனா, அல்லது ஆத்மார்த்தமாக அவனைப் பற்றியுள்ளேனா!’ என்ற ஓர் கேள்வி பிறந்தது.

உடனே ‘இன்று கோவர்த்தன மலையை வலம் வருவேன். நானாகச் சென்று யாரிடமும் உணவு யாசிக்க மாட்டேன். தானாக வந்தால் அது கிருஷ்ண அருள். இல்லையேல் நானே இனி இல்லை என ஆகிவிடுவது’ என்ற ஒரு சங்கல்பம் உதித்தது!

இதை அறிந்து நான் இசையற்றுப் போனேன். என் குறும்புக் கண்ணன் வேறு இவருடன் விளையாட ஆரம்பித்தான். நாள் முழுவதும் உணவே தரவில்லை.

முதல் நாள் மதியம் செய்த சங்கல்பம் அடுத்த நாள் மாலை வரையிலும் தொடர்ந்தது.

இவர், விரதத்திலிருந்து விலகாமல் பக்தியைக் காட்டுகிறார்; அவரோ சோதனையை உக்கிரப்படுத்திச் சிரமப்படுத்துகிறார்.

வெளியில் மழை பொழிகிறது, அவரது வயிற்றிலோ, பசி எனும் ஜாடராக்னி எரிகிறது. கடும் மழையிலும் விவேகானந்தர் வீரநடை போட்டுச் செல்கிறார்.

அப்போது அந்த வான்மழையை, தன் அருள் மழையாக கார்வண்ணன் மாற்றியதை என் கண்ணாரக் கண்டேன். ஆம், அங்கே வந்தான் ஒரு பக்தன் சூடான உணவுடன். ‘‘சுவாமிஜி, சுவாமிஜி, நில்லுங்கள்’’ என்று கூவிக் கொண்டே அவரைத் துரத்தினான்.

‘இது பசிப்பிரமை. என் மனம் என்னை ஏமாற்றுகிறது’ என எண்ணி விவேகானந்தரும் விரைந்து சென்றார்.

முடிவில், அந்தப் பக்தன் அவரை அடைந்து, ‘‘சுவாமிஜி, தங்களுக்காகவே இதைத் தயாரித்துக் கொண்டு வந்தேன். உண்டு அருளுங்கள்’’ என்றான்.

விவேகானந்தர் வந்தவரையோ, வந்ததையோ காணாமல் – வந்தது யாரிடமிருந்து என்ற மூலத்தை அறிந்து கண்ணீர் பெருக்கினார். அப்போது அவர், ‘‘ஜெய் ராதே, ஜெய் ராதேகிருஷ்ணா’’ என்றே மொழிந்தார்.

அந்த சரணாகதியைக் கண்டதும் எனக்கு ஆழ்வார்களின், ஆச்சார்யார்களின் பக்திதான் நினைவிற்கு வந்தது.

இனி இவர் மூலம் என் கண்ணன் செய்யும் லீலைகளைக் காண அவரைப் பின்தொடர்ந்தேன்.

இன்னொரு நாள், விவேகானந்தர் ராதாகுண்டம்  குளத்தில் நீராடச் சென்றார்; அங்கு யாருமில்லை. தம்மிடமிருந்த ஒரே ஒரு கௌபீனத்தைத் துவைத்து, காய வைத்து, கரையில் வைத்தார். நாள், விவேகானந்தர் ராதாகுண்டம்  குளத்தில் நீராடச் சென்றார்; அங்கு யாருமில்லை. தம்மிடமிருந்த ஒரே ஒரு கௌபீனத்தைத் துவைத்து, காய வைத்து, கரையில் வைத்தார். நாள், விவேகானந்தர் ராதாகுண்டம்  குளத்தில் நீராடச் சென்றார்; அங்கு யாருமில்லை. தம்மிடமிருந்த ஒரே ஒரு கௌபீனத்தைத் துவைத்து, காய வைத்து, கரையில் வைத்தார்.

குழந்தை தாயை அணைவதுபோல் ராதா குண்டத்தில் குளித்தார். கரையேறப் பார்த்தார். கௌபீனம் காணவில்லை. எங்கே போனது? சுற்றுமுற்றும் பார்த்தார்.

பிருந்தாவனத்தில் வாழும் ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் கிருஷ்ணருடன் ஏதோ ஒரு வகையில் தங்களை பகவானுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வார்கள். இதோ, இங்கு ஓர் உத்தம பக்தர் குளத்தில் குளிக்கச் சென்றதை, மரத்திலிருந்த ஒரு குரங்கு பார்த்தது.

உடனே அதற்கு ஓர் எண்ணம் வந்தது - ‘கண்ணனும் நானும் ஒன்று’ என்று. கோபிகைகளின் ஆடைகளை கண்ணன் எடுத்துச் சென்றதுபோல், இந்தக் குரங்கும் அந்த ஒரு துணியை எடுத்துச் சென்று மரத்தின் மீது அமர்ந்துவிட்டது. குரங்கிடமும் கிருஷ்ண பக்தி!

விவேகானந்தர் பிருந்தாவனத்தின் ராணியான ராதையிடம் வருத்தத்துடன் முறையிட்டார். ‘தாயே, நான் துணியின்றி ஊருக்குள் போக முடியாது. எனவே இப்படியே நான் காட்டினுள் செல்கிறேன். பசியிலும் பட்டினியிலும் கிடந்து என் சரீரத்தை விட்டுவிடுகிறேன்’ என்றார்.

சொல்லிவிட்டு காடு நோக்கி விரைந்தார்.

திரௌபதியின் மானம் காத்த என் மாதவன் இந்தத் துணிவான துறவியை விட்டு விடுவானா?

அவன் ஆளை அனுப்பினானா?

அவனே மாறுவேடத்தில் வந்தானா?

தேகத்தை மறைக்கத் திக்குகளைத் துணியாக்கிக் கொண்டு திரியும் துறவியைத் தொடர்ந்து ஒருவன் பின்னே ஓடிவந்து, ‘‘சுவாமிஜி, இந்தப் புது காவித் துணியை அணிந்துகொள்ளுங்கள்’’ என்று தந்தான்.

அங்கும் அவர் வந்ததையோ, வந்தவரையோ பார்க்கவில்லை. ‘வந்தது கண்ணன் அருளே’ என்பதைக் கண்ட அவரது கண்களில் வந்தது யமுனையின் தூய துளிகளோ!

பிறகு ராதா குண்டத்தின் பக்கம் வந்தால், அவரது ஒற்றைத் துணி, விட்ட இடத்திலேயே இருந்தது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த, என் விட்டல்பிரபுவின் பக்தர்களிடம்தான் இப்படிப்பட்ட பக்திரசத்தைச் சுவைத்திருக்கிறேன்.

தன்னுள் பக்தியை வளர்த்துக்கொள்வது அருமை என்றால், அடுத்தவரிடம் அதை வளர்ப்பது மகிமை அல்லவா!

பக்தியில் அகலமாக வளர்ந்தவர்கள், அதில் ஆழமாக வளர்வதற்கு ஏனோ மறக்கிறார்கள். கோவிலில் மட்டும் பக்தியுடன் இருந்தால் போதும், சில சடங்குகள், பூஜைகள் புரிந்தால்போதும், கிருஷ்ணரையே பெற்றுவிட்டோம் என எண்ணிப் பக்தியில் வளராது தேங்கி நின்று விடுகிறார்கள்.

இதுவெல்லாம் பல நூற்றாண்டுகளாக நான் பார்த்து வந்தாலும் கிருஷ்ணனின் இசை பாடுவது மட்டும் என் பணி என்று விட்டுவிடுவேன்.

ஆனால், 150 - வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் இந்த விவேகானந்தர் அப்படி விட்டுவிட மாட்டாரே! பக்திப் போர்வையில் உள்ள பாசாங்குகளைப் பதம் பார்க்க வந்தவர் அல்லவா இந்த பரமஹம்சச் சீடர்!

‘‘இப்போது நமக்கு வேண்டியது குழலூதும் கண்ணன் அல்ல; சிங்கநாதம் முழங்கும் கீதை கிருஷ்ணனே’’ என்று கர்ஜித்தவர் அல்லவா அவர்.

நானோ புல்லாங்குழல் மட்டும்தான்; ஆனால் அவரோ இந்த யுகத்தின் தெய்விகக் குரல் அல்லவா!

விதைத்தவர்கள் சமைத்ததில்லை; சமைத்தவர்கள் சுவைத்ததில்லை; சுவைத்தவர்கள் பிறருக்கென எடுத்து வைத்ததில்லை என்பது ஆன்மிகத்தில் ஒரு குறை இருந்தது. அதைத் தீர்த்து வைத்தவர் விவேகானந்தர்.

ஆம், கிருஷ்ண பிரேமையில் அவர் திளைத்தார்; பிறரையும் திளைக்க வைத்ததை பதிவு செய்கிறேன்.

ஜெய்ப்பூர் சென்றார் விவேகானந்தர். அந்த நாட்டின் தளபதி ஹரிசிங் ஒரு தீவிர வேதாந்தி. சென்றார் விவேகானந்தர். அந்த நாட்டின் தளபதி ஹரிசிங் ஒரு தீவிர வேதாந்தி. சென்றார் விவேகானந்தர். அந்த நாட்டின் தளபதி ஹரிசிங் ஒரு தீவிர வேதாந்தி.

‘கடவுளுக்கு உருவமும் உண்டு; அருவமும் உண்டு’ என்று கூறி வந்த சுவாமிஜியுடன் தமது கூரிய வறட்டு அறிவால் கடவுளுக்கு உருவம் இல்லை என அவர் முரட்டு வாதம் செய்து வந்தார்.

அப்போது அந்த வழியே ஒரு பக்தர் குழாம், கண்ணனின் திருவுருவச் சிலையைச் சிறு பல்லக்கில் சுமந்தபடி பாடிச் சென்று கொண்டிருந்தது.

விவேகானந்தர் அவர்களின் பக்தியைப் பார்த்தார். பகவானைப் பார்த்தார். உடனே ‘பகவானே, இதோ இந்த ஹரிசிங்கின் மீது உங்கள் கடைக்கண் படட்டும்’ என்று வேண்டியதை நான் உணர்ந்தேன்.

இவ்வாறு வேண்டிவிட்டு, ஹரிசிங்கின் முதுகில் ஒரு தட்டு தட்டி, ‘‘அதோ பாருங்கள், கண்ணன் உயிருணர்வுடன் நிற்பதை...’’ என்றார்.

அது வெறும் தேகத் தீண்டுதல் அல்ல, ஆன்மிகத் தூண்டுதல், ஸ்பரிச தீக்ஷை.

அதனால்தான் கண்ணனின் தரிசனம் பெற்று ஹரிசிங் ‘ஜெய் ராதேகிருஷ்ணா’ என்று கூறி, பக்திக் கண்ணீர் வடித்தார். அறிவால் முடியாததைப் பக்தியால் சாதித்தார் விவேகானந்தர்.

இப்படி கிருஷ்ணர் பற்றி விவேகானந்தர் செல்லும் இடங்களிலெல்லாம் புகழ் பாடினார் மீராவாக, பெரியாழ்வாராக! நாடு விட்டு நாடு சென்றாலும் பக்தி அவரை விடவே இல்லை.

அமெரிக்காவில் ஒருமுறை கிருஷ்ணரின் லீலைகளையும் கீதையையும் பற்றிக் கண்ணீருடன் உரைத்துக் கொண்டிருந்தார் கிருஷ்ண பக்த விவேகானந்தர். அதைக் கேட்ட ஓர் அமெரிக்கப் பெண், அன்றே அனைத்தையும் துறந்தாள்; ‘மின்னின் நிலையில மண்ணுயிர் ஆக்கை’ என்ற நம்மாழ்வாரின் வாக்கை உணர்ந்தாள்.

உடனே ஏகாந்தத்தில் சென்று கிருஷ்ண தியானத்திலேயே எஞ்சிய நாளைக் கழித்தாள், ஒரு கோபிகையாக.

பக்தர்களே, இப்படி விவேகானந்தரின் கிருஷ்ண பக்தியைப் பற்றி உலகிற்குத் தெரிந்தவை ஒன்றிரண்டு மடடுந்தான். கிருஷ்ணருக்கு மட்டும் தெரிந்தவை எவ்வளவோ!

இங்கு உரைத்ததை என் கண்ணன் பாடச் செய்தான்; நான் பாடினேன். கிருஷ்ணார்ப்பணமஸ்து!     

சுவாமி விமூர்த்தானந்தர்

21 ஜூன், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இதனைக் கேட்க:

thanjavur