சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை 29.11.2020 அன்று பிற்பகல். தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து புறப்பட்டு 32 கிலோ மீட்டரில் உள்ள புதுக்குடி பகுதியை அடைந்தோம். அங்கு சுமார் 75 நரிக்குறவர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மாலைகளையும் மணிகளையும் விற்பதில்தான் அவர்களது வாழ்வாதாரம். இந்த கொரோனா காலத்தில் கோவில்களில் கூட்டம் இல்லை. மக்கள் கூடும் விழாக்கள் இல்லை. இவை போதாதென்று கடும் புயலும் வெள்ளமும் வந்து அந்த மக்களைத் திணறடித்தது.
அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் பல வீடுகளில் டிஷ் ஆண்டனா அசிங்கமாக ஆடிக்கொண்டிருந்தது.
‘கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்’ என்று பாரதியார் இவர்களைப் பார்த்தால் மீண்டும் ஒரு முறை பாடுவார்.
முதல் நாள் அங்கு சென்று சமைத்த உணவு கொடுத்ததில் லேசான சலசலப்பு இருந்தது. அங்கே பொதுவான ஓர் இடத்தில் மக்களைக் கூட்ட வேண்டும், அவர்களிடம் ஆறுதலாகவும் தைரியம் ஊட்டும் வகையிலும் பேசிய பிறகு நிவாரணப் பொருட்களை வழங்கத் திட்டமிட்டிருந்தோம்.
தஞ்சை சேவாபாரதி பொறுப்பாளர் திரு கேசவன், தமிழ்நாடு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற திரு கோவிந்தராஜன் ஆகியோருடன் அங்கு சென்று சேவைகளைத் துவக்கினோம்.
கூட்டம் கசகச என்று பரபரப்புடன் இருந்தது. உடனே கோவிந்தன் இறைவனின் நாமாவளியைச் சொல்ல ஆரம்பித்தார். மக்கள் மக்கள் சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள்.
திடீரென பொட்டு இல்லாத, லட்சணம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய ஒரு பெண் வந்து கேசவன்ஜியிடம் காதைக் கடித்தார்:
“இது சர்ச். இங்கு இந்து கடவுளின் நாமங்களைக் கூறினால் எங்கள் பாதிரியார்கள் எங்களைக் கடிந்து கொள்வார்கள்”.
சமயோசிதமாகச் செயல்படும் கேசவன் சிரித்துக்கொண்டே அந்தப் பெண்ணிடம், “நீ எந்த சாமியைக் கும்பிடுகிறாயோ, அதே சாமியின் வேறு பெயர்களை நாங்கள் கூறுகிறோம். நாங்கள் சொல்வது உனக்கும் நன்மை செய்யும். வேண்டுமென்றால் பாதிரியாரின் தொலைபேசி எண்ணைக் கொடு. நான் பேசுகிறேன்” என்று சொன்னதும் மதம் மாறியிருந்த அவள் தள்ளி நின்றாள்.
தினமலர் ராமநாதன் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைப் பற்றிக் கூறினார். பிறகு சுவாமி விமூர்த்தானந்தர் ஆசியுரை வழங்கினார்.
‘நரிக்குறவர் இனம் தனது பொன் மகளான வள்ளி தேவியை முருகப்பெருமானுக்கு மணமுடித்து வைத்து அவரையே தங்களது மருமகனாக்கிக் கொண்ட பெரும் குடி’ என்று அவர் கூறியதும் எல்லோரும் கைதட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள்.
விடலைப் பையன்கள் விசில் அடித்தார்கள். இதில் அதிகம் சந்தோஷப்பட்டதில் ஒரு முக்கிய நபர், மக்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுபவர் என்பது முக்கியம்.
நிவாரணப் பொருள்களைக் கொடுக்க ஆரம்பிக்கும் முன்பு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் தீபாராதனை செய்தோம். மக்களுக்கு வழங்கும் பொருள்களை முதலில் அவருக்கு நிவேதனம் செய்தோம். பகவானின் பிரசாதமாக அந்தப் பொருட்களை ஏழை மக்களுக்கு விநியோகம் செய்தோம்.
நிவாரணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு ஓரிருவர் எங்கள் முன் வந்து துளசிமாலை, படிகமாலை, பாசிமணி மாலை போன்ற பல அழகான, அவர்கள் தயாரிக்கும் மாலைகளை எங்கள் ஒவ்வொருவருக்கும் அணிவித்தார்கள்.
ஆஹா, தாழ்த்தப்பட்ட அந்த இனத்து மக்கள் பிறரிடமிருந்து ஒன்றைப் பெறுவதற்கு முன்பு முதலில் தாங்கள் தங்களிடம் இருப்பதை வழங்க வேண்டும் என்ற நல்ல மனதிற்குச் சொந்தக்காரர்களாக இருந்ததைக் கண்டோம்.
அந்த மக்களுள் சிலர் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். ஓரிருவர் நகரங்களுக்குச் சென்று டாட்டூ போட்டுச் சம்பாதிக்கிறார்கள்.
நடுத்தர வயதுடைய ஒருவர், குங்குமப்பொட்டு வைத்திருந்த ஒரு தாத்தாவுடன் வந்து எங்களிடம் பேசினார். ஒரு சிமெண்ட் தரையைக் காட்டினார். அங்கே மூன்று சூலங்கள், அவர்களது குலதெய்வங்களாக அங்குதான் வீற்றிருக்கிறார்கள். அந்த இடத்தில் அவர்களுக்கு ஒரு கோவில் கட்டித் தர வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.
அது எவ்வாறு சாத்தியம் என்று யோசித்தபடி அங்கிருந்து கிளம்பினோம். நீங்கள் கோவில் கட்டித் தராவிட்டால் விரைவில் அங்கு சர்ச் எழும்பும் என்று உடன் வந்தவர் கூறியது உள்ளத்தை அழுத்தியது.