கேள்வி 4: பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுக்கும் அன்பர்களுக்கும் ஒரு கருணைக்கடல் என்கிறார்களே, அது உண்மையா? அதை எவ்வாறு புரிந்துகொள்வது? - திருமதி கங்கா, தஞ்சாவூர்.
பதில்: ஸ்ரீராமகிருஷ்ணர் கருணைக்கடலா என்ற கேள்வி உங்களுக்கு வந்திருப்பது அவரது கருணைதான். அந்தக் கருணைக் கடல் பற்றிய நூல்களை வாசித்து, ஓரிரு துளிகளைச் சுவைத்ததால்தான் இந்தச் சிந்தனையே உங்களுக்கு வந்திருக்கும்.
ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களிடம் விசாரியுங்கள். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பத்து சொந்த அனுபவங்களையாவது வைத்திருப்பார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களுக்கு எவ்வாறெல்லாம் வழிகாட்டி வருகிறார்; பிரச்னைகளிலிருந்து எவ்வாறு அவர் அவர்களை மீட்கிறார்; மோசமான விதிவசத்திடமிருந்து எவ்வாறு பாதுகாத்து வருகிறார் என்பதைக் கதை கதையாக அவர்கள் கூற முடியும்.
ஸ்ரீராமகிருஷ்ணர் கருணைக்கடல் என்பதைப் புராணங்களின் மூலம் புரிந்து கொள்வோமா?
பகவான் ஸ்ரீராமர் உலகில் மனித உடலெடுத்து அவதரித்தார். அவர் அவ்வாறு வருவதற்கு, ராவணன் போன்ற அரக்கர்களை வதைக்க வேண்டும் என்று தேவர்கள் பெருமாளிடம் பல காலம் வேண்டினர். ஸ்துதி செய்தனர். அதனால் ஸ்ரீராமர் மக்கள் மீதான கருணையால் அவதரித்தார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த போதும் அரக்கர்களை வதைக்க வேண்டி தேவர்கள் பல காலம் பிரார்த்தித்தார்கள். அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் கருணையினால் அவதரித்தார்.
அதே ஸ்ரீராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் சேர்ந்து பகவான் ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்தபோதும் எண்ணற்ற அரக்கத்தனங்கள் உலகில் மலிந்துள்ளன. ஆனால் எந்த தேவரும் அவரிடம் சென்று வேண்டியதாகத் தெரியவில்லை. நம் துன்பங்களைப் பரம்பொருளிடம் யார் கூறினார்கள்? நம் துன்பங்களை யார் பொருட்படுத்தினார்கள்?
நம்மையும் ஒரு பொருட்டாக மதித்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அதனால்தான் 'உயிர்களின் துன்பங்களைத் தாங்க முடியாதவரான ஸ்ரீராமகிருஷ்ணர்' நம் மீதுள்ள எல்லையற்ற கருணையினால் அவராகவே நம்மிடையே, நம்மைக் கரை சேர்க்க, நமக்காகவே தோன்றினார். அதோடு, சப்தரிஷிகளுள் ஒருவரான சுவாமி விவேகானந்தரையும் தம்மோடு அழைத்து வந்தார், அதுவும் நமக்காகவே.
இவ்வாறு அவதாரமெடுத்த வகையிலும் ஸ்ரீராமகிருஷ்ணர் கருணைக்கடலாகவே விளங்குகிறார். அந்தக் கடலிலிருந்து சுனாமி வராது, நிறைய சுவாமிகள் வருவார்கள்....., மக்களும் மகேசனுக்கும் சேவை செய்ய!
சுவாமி விமூர்த்தானந்தர்
21 ஜனவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்