உமா ஏன் அழவில்லை?
அது அனைவருக்கும் ஒரு புதிர்.
பிரேம் அவளுக்குக் கணவராக மட்டுமல்ல, அவளுக்கு எல்லாமே அவர்தான். உமா அவருக்கு, ஓர் ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி மாணவி; சிறந்த மனிதரின் செல்லத் தோழி; கவிஞனின் கவிதையைக் கண்கள் பனிக்க ரசிக்கும் முதல் ரசிகை; உத்தம குருவின் பிரதம சிஷ்யை - என்று பலவாறாக விளங்கினாள்.
பிரேமும் உமாவும் இளம் தம்பதிகள். வயது 30: 26. குழந்தை இல்லை என்றாலும், இருவரும் சேர்ந்து வளர்க்க பரஸ்பர நம்பிக்கை, அன்பு, அறிவு போன்றவை அவர்களுக்குள் ஏராளமாக இருந்தன.
அப்படிப்பட்ட பிரேம் திடீரென மறைந்த பிறகு அவள் அழவில்லை.
கடந்த இரண்டே வாரங்களில் உமா தனது இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டாளே! எப்படி?
''பிள்ள போயிட்டான். இவளோ கொஞ்சமும் கவலப்படாம வரவங்ககிட்டே பேசுறதும், மெயில் பண்றதும், படிக்கிறதும் - என்ன கல் நெஞ்சம் பாரு" என்று மாமியார் தன் துக்கத்தை இப்படியாக எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.
துக்கத்தைச் சந்திக்கத் திராணியற்றவர்கள் புலம்பித்தான் பிழைத்தாக வேண்டும்.
வாழத் தெரிந்தவர்களுக்கு, வாழ்வின் சுகம் வளப்படுத்தும் என்றால், துக்கம் துணிவுபடுத்தும். அந்தத் துக்கங்கள் மென்மையான உணர்ச்சிகளை மெருகேற்றி உணர்வு நிலைக்கு ஏற்றிவிடும் என்ற உண்மையை உமா மௌனத்தால் உணர்த்தினாள்.
உமா வேதியியலில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்ததுகூட பிரேமுக்கு உதவத்தான். அவர்களது வாழ்க்கைதான் என்னவோர் ஆனந்தமாக இருந்தது!
டாக்டர் பிரேம் ஓர் அணு விஞ்ஞானி. அணுவைத் துளைத்து ஆராய்வதில் அவரது அறிவு அசாத்திய திறன் படைத்தது.
பிரேமுக்கு ஐன்ஸ்டீனைவிட ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற ஆன்ம விஞ்ஞானியைத்தான் அதிகம் பிடிக்கும். புரோட்டான் நியூட்ரானைப் பிளக்கும் அறிவியலைவிட மனங்களில் ஆழ்ந்து ஸ்ரீராமகிருஷ்ணர் செய்த ஆராய்ச்சி அவரைப் பரவசப்படுத்தும்.
பிரேமின் படிப்பறையில் மேடம் க்யூரி, பியரி க்யூரி படங்கள் இருந்தன. பூஜையறையிலோ, ஸ்ரீராமகிருஷ்ணர்-ஸ்ரீசாரதாதேவியின் திருவுருவங்கள் அலங்கரித்தன.
‘அறிவியலிலும் ஆன்மிகத்திலும் ஆழமாகச் செல்லச் செல்ல, அறிவும் ஆனந்தமும் அதிகமாகாமல் இருக்க முடியுமா!’ என்ற வியப்புதான் பிரேம் அடிக்கடி பெற்ற அனுபவம்.
பிரேமும் உமாவும் சேர்ந்து வாசிப்பு, ரசிப்பு, அறிவைத் தேடும் தவிப்பு என்று ஆரம்பித்து, நான்கே வருடங்களில் அவர்கள் எட்டியதோ வாழ்வில் இனிப்பு.
அப்போதுதான் அந்த இனிமையில் ஓர் இடி.
பீஜிங் சென்றிருந்தபோது பிரேம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த லேப் தீப்பிடித்துக் கருகிப்போனது மட்டுமல்ல. பிரேமோடு விஞ்ஞானிகள் சிலரும் அந்தப் பயங்கரத் தீயில் நீறாகிப் போயினர். எலும்புகூடக் கிடைக்கவில்லை என்பது உச்சகட்ட வேதனை.
செய்தி கேட்டு கல்பாக்கத்தில் உள்ள பிரேமின் அலுவலகத்திற்குக் குடும்பத்தோடு ஓடினாள் உமா. உறுதியானபோது உணர்வற்றுப் போனாள்.
எங்கும் ஒரே சூன்யம். இதயம் திடீரென வெடித்து, அந்த வேதனையுடனேயே உயிர் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவளுக்கு.
கார் செங்கல்பட்டு வழியாகச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. உடன் வந்தவர்களிடம் ஈனக் குரலில் ஏதோ கேட்டாள் உமா.
" போகணுங்கற?" அண்ணி கேட்டாள்.
"குருதேவரையும் பார்க்கணும்" என்றாள் உமா விம்மியபடி. அவள் குறிப்பிட்டது ஸ்ரீராமகிருஷ்ணர் - ஸ்ரீசாரதாதேவியைத்தான்.
அண்ணி அதிர்ந்து வேண்டாம் என்றாள். பிரேமின் அண்ணன் சந்திரசேகரோ தன் மனைவியைத் தடுத்தார்.
செங்கல்பட்டு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முன் கார் நின்றது. உமா வேகமாக இறங்கி உள்ளே ஓடினாள். ஒரு கணம் எதற்கோ தயங்கினாள்.
உடனே கோயிலின் பக்கத்தில் இருந்த குழாயடியில் கை, கால்களைக் கழுவிக் கொண்டாள்.
முகத்தைத் துடைத்துவிட்டு ‘மா கங்கே’ என்று கூறியவாறு தலையில் நீரைத் தெளித்துக் கொண்டாள்.
படியேறிக் கோயிலுக்குள் சென்றாள். ஒவ்வொரு படியிலும் அவளது உடல் எடை கூடியதாக உணர்ந்தாள்.
இதயத்துடிப்பு நெஞ்சைக் குத்தியது.
அடிவயிற்றில் அக்னி கொதித்தது.
கால்கள் தள்ளாடின. கண்களில் சூடான நீர் வீழ்ச்சி.
கோவிலுள் சென்று வீழ்ந்து வணங்கினாள்.
அன்னை ஸ்ரீசாரதையின் திருவுருவை மானசீகமாகக் கட்டிக்கொண்டு, அவரது மடியில் தலை சாய்த்து சூழ்நிலையை மறந்து துக்கத்தைக் கொட்டினாள்:
‘அம்மா, என்னைக் கைவிட்டுவிட்டாயே?’
‘ஒரே ஒருமுறைதான் நீ அழ முடியும்’ என்று கூறிவிட்டால், எப்படி அழ முடியுமோ, அப்படி அழுதாள். அன்னையும் அவளும் மட்டுமே இருப்பதாக உணர்ந்து நீண்ட நேரம் அழுதாள்.
அன்னையின் பக்கத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவரைப் பார்த்து, ‘குருதேவா, விதி அவரை அபகரித்துவிட்டதே....’ என அரற்றினாள்.
நான்கு புருஷார்த்தங்கள் பெற்றதுபோல் அவர்களது நான்கு வருட வாழ்க்கை உமாவின் கண் முன்னே அந்த நேரத்தில் விரிந்தது. ‘எல்லாமே சூன்யந்தானா?’
நீண்ட நேரம் அழுததால் நெஞ்சு காலியானது. அழவும் சக்தியில்லை. அருவியாகக் கண்ணீர் சிந்தியதால் சோகம் என்ற நெஞ்சக் கல் கரைந்து கொண்டிருந்தது.
அன்னையின் திருவுருவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவளின் அழுகை மெல்ல நின்றது.
திடீரென்று ‘என் நிலை போலவே உனக்கும் ஆகிவிட்டதே மகளே?’ என்று அன்னை கேட்பதாக உமாவிற்கு ஒரு பிரமை.
அவளின் அத்தனை துயரத்தையும் தாமே அனுபவிப்பது போன்ற வேதனையை அன்னையின் முகம் அவளுக்குப் பிரதிபலித்ததோ!
மௌனம். அது மயான அமைதியல்ல, தியான மௌனம்! அன்னையும் மகளும் மானசீகமாக உரையாடத் தொடங்கிவிட்டார்களோ!
உமாவின் உள்ளத்தில் அன்னையின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று அருளாக மெல்ல மலர்ந்தது.
ஆ, அதுபோல இங்கும் நடந்தால்...
ஓர் இளம்பெண், தன் ஒரே மகன் இறந்துவிட்ட துக்கத்தைக் கூற அன்னையிடம் வந்திருந்தாள்.
" மகன் போயிட்டானா...?" என்று அன்னை அவளை அணைத்தபடி கேட்டார்.
மகனை இழந்த தாயின் கண்ணீர் நதி, கரையை உடைத்துக் கொண்டது.
"மூத்த மகனாயிற்றே, எப்படிம்மா இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ளப் போகிறாய்...?" என்று கேட்ட அன்னை சாரதை தாமும் அழ ஆரம்பித்தார், ஓர் அருவி போல!
அன்னை அப்படி அழுது யாரும் பார்த்ததில்லை. புதிதாக வந்திருந்த பக்தர்கள் திகைத்தனர்.
‘யாருடைய குழந்தை இறந்துவிட்டது? அவளின் குழந்தையா? அல்லது அன்னையின் குழந்தையா!’ என அவர்களுக்குச் சந்தேகமே வந்துவிட்டது.
மகனை இழந்தவள் அழுது முடித்தாள். பிஞ்சை இழந்தவளின் நெஞ்சத்துச் சுமைகளை அன்னை சாரதை அள்ளிக்கொண்டு விட்டாரோ!
அன்பைப் பொழிய வேண்டிய மகனை இழந்ததால் வந்த கண்ணீரைவிட, அன்பைப் பொழியும் ஓர் அன்னை கிடைத்ததால் வந்த ஆனந்தக் கண்ணீர் அற்புத அனுபவமாக அவளுக்கு இருந்தது.
ஆம், அப்படித்தான் இருக்கும். அம்மாவின் பாதத்தைப் பிடித்தபடி, "மா, வாழ்வில கஷ்டம் வரும்,
போகும். அதுக்காக நீங்க இப்படி அழுதா என்னால தாங்க முடியாதம்மா" என்றாள்.
தமது சேலைத்தலைப்பால் அவளது கண்ணீரைத் துடைத்தார் அன்னை. பின் பிரசாதத்தை அவளுக்கு ஊட்டி, "மகளே, உனக்கு எப்போ முடிகிறதோ, அப்போ இங்கு வாம்மா" என்றார். அன்பின் மிகுதியால் அவள் திக்குமுக்காடினாள்.
" எப்போது கஷ்டம் வந்தாலும் தாய் நான் ஒருத்தி இருக்கிறேன் என்பதை நினைவில் வை" என அவளை முத்தமிட்டுக் கூறினார் அன்னை.
அன்னையின் பாததூளியைச் சிரசில் ஏந்திக்கொண்டு சென்றாள் அவள்.
அச்சம்பவம் உமாவிற்கு நினைவிற்கு வந்ததும் பிரேமின் உயிர் திரும்பி வந்தது போலவே உணர்ந்தாள் அவள்.
‘ஓ, மா’ என உமா ஈனக்குரலில் கடைசியாய் கூவியது அப்போது மட்டுந்தான்.
ஒரே முறைதான் அழுதாள். அவளது சோகம் மாறி ‘ஸோஹம்’ என்ற அனுபூதிக்கு வித்திடப்பட்டதோ?
உமா கண்ணைத் துடைத்தபடி எழுந்து குருதேவரை வணங்கினாள். அங்கு விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்தன. விபூதியை இட்டுக்கொண்டாள்.
புறப்பட்டாள் வெயிலில் தென்றலாக.
ஒவ்வொரு படி இறங்கும்போதும் அவளது நடையில் நிதானம் மலர்ந்தது.
அப்போது ஆசிரமத்திற்குள்ளிருந்து பிரம்மசாரிகள் கீதை பாராயணம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ‘வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய ....’ என்ற வரி அவளுக்கு இப்போது மிகவும் பிடித்தது.
‘பழைய உடைகளைக் களைந்துவிட்டுப் புதிய உடைகளை மனிதன் அணிவதுபோல், ஆன்மா பழைய உடல்களை விட்டுவிட்டுப் புதிய உடல்களை ஏற்றுக்கொள்கிறது’ என்பது அதன் பொருள்.
நேரமானதால் பிரேமின் அண்ணனும், அண்ணியும் உமாவைக் காணாமல் பரிதவித்தனர்.
அண்ணன், "வா, உமா போகலாம்" என்றார். அண்ணி அவளைத் தாங்கிக் கொண்டு அழுதாள்.
உமா அவளது கையைப் பிடித்து அழுத்தினாள், ‘அழாதீங்க’ என்ற தோரணையில்! உமா கம்பீரமான மௌனத்தில் இருந்தாள்.
" நிமிஷம் அண்ணா, ஒரு புக் வாங்கிட்டு வந்து விடுறேன்."
சந்திரசேகர் விழித்தார். இந்தச் சோகத்திலுமா படிப்பு...?
புத்தகசாலைக்குச் சென்ற உமா, ‘அன்னை ஸ்ரீசாரதாதேவி வரலாறு’ வாங்கி வந்தாள். காரில் அமர்ந்தபடி வாங்கிய நூலில் ஏதோ ஒரு பக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தாள். அது கிடைத்ததும் சந்திரசேகரிடம் அதைக் காட்டினாள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் மகாசமாதி அடைந்து உலகை விட்டு மறைந்ததும் அன்னை மிகவும் வருந்தினார். கதறி அழுதார். அப்போது குருதேவர் அன்னைக்குக் காட்சி தந்து கூறிய அற்புத வரிகள்தான் அவை:
‘ஏன் அழுகிறாய் சாரதா? நான் எங்கே போய்விட்டேன்? ஓர் அறையிலிருந்து இன்னொன்றுக்குப் போயிருக்கிறேன். அவ்வளவுதானே....’ என்று கூறி ‘ஒரு பெண்ணுக்குத் தன் கணவர் சின்மயமானவர் அதாவது உணர்வுமயமானவர், அழிவற்றவர்’ என்பதைப் புரிய வைத்தார்.
ஆஹா, புண்பட்ட நெஞ்சில் அமுதத் துளிகள் சிந்தியதுபோல் ஓர் ஆனந்த அனுபவம் அது.
அதை உணர்ந்தாள் உமா!
அப்பகுதியைக் காட்டியதும் சந்திரசேகரும் அழுதார்.
பிறகு உமாவின் தலையில் கை வைத்து, "கவலைப்படாதேம்மா. நாங்க எல்லோரும் இருக்கிறோம். இனி நீ எனக்கு மக மாதிரி...." என்றார் சந்திரசேகர்.
", சாரதாம்மா என் துக்கத்த ஏத்துகிட்டாங்க. பிரேம்ஜி எங்கேயும் போயிடலே... நா உணர்வாலே அவரோடதான் இருக்கேன்..."
சந்திரசேகர், "உன் ஃப்யூச்சரைப் பத்திக் கொஞ்சமும் கவலப்படாதே உமா" என்றார் மென்மையாக.
" மறைந்த பின் அவர் காட்டித் தந்த மார்க்கத்தில ஒர்க் பண்ணி அந்தத் துக்கத்தை சாரதாம்மா கடந்து போனாங்க... பிரேம்ஜி எனக்கு நிறைய ‘இன்புட்ஸ்’ தந்திருக்கார். அதன்படி நா என் ஆராய்ச்சிய தொடருவேண்ணா" என்றபோது உமாவின் நெற்றி பளபளத்தது.
உமாவின் உணர்வை உணர முடியாத அண்ணி, "வேணும்னா நீ உன் அம்மா வீட்டுக்குப் போய்ட்டு..." என்றாள்.
" அண்ணி, டாக்டர் பிரேம் சாதாரணமான விஞ்ஞானி கிடையாது. இனிமே நான், அவர் நோட்ஸுகளாகவும், குறிப்புகளாகவும் எழுதி முடிக்காம விட்டுப் போனதைத் தொகுத்து வழங்கப்போறேன்" என்றாள் நிதானமாக.
பிறகு கண்களை மூடி விரல்களால் ஜபம் செய்யத் தொடங்கினாள். சந்திரசேகர் அவளை வியப்புடன் பார்த்தார்..............
இப்போதெல்லாம் உமாவைச் சுற்றிப் பலரும் அவ்வப்போது அழுவார்கள். ஆனால் அவள் மட்டும் துக்கத்தைக் கடந்து அமைதியாக இருப்பாள்.
அவள்தான் இப்போது அன்னையின் செல்ல மகளாகிவிட்டாளே!
-பாமதிமைந்தன் என்ற புனைப்பெயரில் சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய சிறுகதை
சுவாமி விமூர்த்தானந்தர்
04 ஜனவரி, 2020
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்